வங்கதேசத்தில் வன்முறை- 25 பேர் பலி; பிரதமரின் பேச்சுக்கு பிறகு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைப்பு

இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரி வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 25 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேரின் உடல்கள் இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

வங்கதேச அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவையை முடக்கியுள்ளது. மெட்ரோ ரயில்கள் உட்பட போக்குவரத்து சேவை பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. டாக்கா-சிட்டகாங் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க 229 எல்லை பாதுகாப்பு வீரர் குழுக்கள் பணியில் உள்ளனர்.

அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

வியாழக்கிழமை முழுவதும் போராட்டங்கள் ஓயாமல் நடைபெற்று வந்ததால், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேச விடுதலைக்காக போரிட்ட வீரர்கள் ‘முக்தி யோதா’க்கள் என என்றழைக்கப்படுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தீ வைக்கப்பட்ட அரசு தொலைக்காட்சி நிலையம்

வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, அவர் என்ன கூறப் போகிறார் என நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், தவறு இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என்று உறுதி அளித்தார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், நீதித்துறையின் மூலம் அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்றும் கூறினார்.

அவரது பேச்சைக் கேட்ட பிறகு, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நாடு தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். பிரதமர் உரையை ஒளிபரப்பிய பி.டிவி என்ற அரசு நடத்தும் தொலைக்காட்சி நிலையத்தின் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

வியாழன் மாலை, பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பி.டிவி -க்குள் புகுந்து, அங்கிருந்த கருவிகளை சேதப்படுத்தினர், ஜன்னல்கள் மற்றும் விளக்குகளை உடைத்தனர், கட்டிடத்தின் சில பகுதிகளுக்கு தீ வைத்தனர்.

ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டதாகவும், பெரும்பாலான ஊழியர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் வங்கதேசத்தின் தகவல் அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் பி.டிவியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், "பலர்" உள்ளே சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பி.டிவி பத்திரிகையாளர் பிபிசியிடம் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், "நிலைமை மிகவும் மோசமாக இருந்தது, அந்த இடத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் நண்பர்கள் சிலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை" என்றார்.

தலைநகரான டாக்காவில் உள்ள டாக்கா பல்கலைகழகம் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஒரு வாரமாகவே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டர்கள், கூட்டங்கள், பேரணிகள் நடத்தி வந்தனர்.

ஏன் இப்படி போரட்டங்கள் தீவிரமாக நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள 3 காரணங்கள் என்ன?

1. நிலைமையை அமைதிப்படுத்த தவறிய பிரதமரின் உரை

பிரதமரின் நாட்டு மக்களுக்கான உரை வன்முறையை அமைதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. மாணவர்கள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

பல இடங்களில் கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர். இதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தனியார் பல்கலைக்கழக மாணவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஆலிம் கான், பிபிசி பங்களா நிருபர் அக்பர் ஹுசைனிடம் பிரதமரின் பேச்சு தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று கூறினார்.

ஆலிம் கான் கூறுகையில், "பிரதமர் ஒருபுறம் மாணவர்களை அமைதியாக இருக்கச் சொல்கிறார். அதே நேரத்தில் காவல்துறை, பிஜிபி (பங்களாதேஷ் எல்லைக் காவல்படை), சத்ரா லீக் (ஆளும் கட்சியின் மாணவர் பிரிவு) ஆகியவை மாணவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இது அரசின் இரட்டை வேடம்” என்றார்.

இணைய சேவை முடக்கப்பட்டு நாடு முழுவதும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாளில் , சட்ட அமைச்சர் அனிசுல் ஹக்கிடமிருந்து அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஒரு அறிக்கை வந்தது.

ஆனால் மாணவர்கள் இந்த அழைப்பு மிகவும் தாமதமாக வந்ததாக கருதினர். புதன்கிழமை பிரதமரின் உரையில் பேச்சுவார்த்தைக்கான எந்தவொரு முன்மொழிவும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காண காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இடஒதுக்கீடு சீர்திருத்த போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நஹித் இஸ்லாம் முகநூலில் எழுதிய பதிவில் "அமைதியான இயக்கத்தில் வன்முறையை நாடுவதன் மூலம் அரசாங்கம் நிலைமையை மோசமாக்கியுள்ளது. இது இப்போது அரசாங்கத்தின் பொறுப்பு. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கவில்லை."

"காவலர்களை வீதிகளில் இருந்து அகற்றாவிட்டால், அரங்குகள், வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாவிட்டால், துப்பாக்கிச் சூடு தொடர்ந்தால், அரசு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

2. கல்வி வளாகங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்

இந்த வார தொடக்கத்தில், நாடு முழுவதும் நடந்த மோதல்களில் ஆறு பேர் இறந்த பின்னர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களை காலி செய்யுமாறு பல்கலைக்கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நடவடிக்கையை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

போலீசார் பல்கலைக்கழக வளாகங்களில் திடீர் சோதனையிட்டு, கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தி மாணவர்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். இந்த நடவடிக்கை பல மணி நேரம் நீடித்து நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.

டாக்கா பல்கலைக்கழக மாணவர் ஷஃபாத் ரஹ்மான் கூறுகையில், சோதனைகளின் போது என்ன நடந்தாலும் அதற்கு தாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்று பல்கலைகழக அதிகாரிகள் கூறியதாக கூறினார்.

"இதுபோன்ற மிரட்டல் காரணமாக அனைவரும் வளாகங்களை விட்டு வெளியேறினர். நேற்று மாலை, 6:30 மணியளவில், நேரம் முடிந்து விட்டதாக, பல்கலைகழக நிர்வாகிகள் கூறினர். இப்போது கீழே இறங்குங்கள், அல்லது போலீஸ் சோதனை நடத்தும் என்று அவர்கள் கூறினர்" இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆசிப் மஹ்மூத் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "இன்றைய போராட்டத்தில் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். அரசு பல்கலைகழக மாணவர்களால் முடியாது, ஏனென்றால் வளாகம் அவர்களின் (காவல்துறை) கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.

3. போராட்டங்கள் இப்போது இட ஒதுக்கீட்டுக்கானது மட்டுமல்ல

இந்த வன்முறை வெறும் இட ஒதுக்கீடுகள் பற்றியது மட்டுமல்ல என்றும், இது கடந்த சில தசாப்தங்களாக இளைஞர்களிடையே குவிந்துள்ள கோபத்தின் வெளிப்பாடு என்றும் பலர் நம்புகின்றனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ஏசியன் டெவலப்மண்ட் பேங்க்) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் 18.7% பேர் தேசிய வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாகவும், வேலைபார்க்கும் மக்களில் கிட்டத்தட்ட 6% பேர் ஒரு நாளைக்கு $2.15க்கும் குறைவான வாங்கும் சக்தியை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு சீர்திருத்தத்திற்கான போராட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு அமைதியான முறையில் தொடங்கியது.

அப்போது, ஆளும் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் இதில் சம்பந்தப்படவில்லை.

ஆனால் போராட்டக்காரர்கள் குறித்து பிரதமர் அவதூறாக பேசியதால் இந்த இயக்கம் திடீரென வன்முறையாக மாறியது.

புதன்கிழமை அவர் ஆற்றிய உரை எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றியது என்று சிலர் கருதுகின்றனர்

"ஒருபுறம், மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள், மறுபுறம், அவர் தனது பேச்சால் நிலைமையை சமாளிக்க முயற்சிக்கிறார். இது முரண்பாடாக உள்ளது" என்று அரசியல் விமர்சகர் மொஹியுதீன் அகமது கூறினார்.

எவ்வாறாயினும், அரசியல் ஆய்வாளரும் ஜகநாத் பல்கலைக்கழக துணைவேந்தருமான பேராசிரியர் சதேகா ஹலீம், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், பிரதமர் தனது உரையில் மேலும் எதுவும் கூறியிருக்க முடியாது என்று கருதுகிறார்.

"அரசின் தலைவர் என்ற முறையில், நீதிமன்ற வழக்கு மாணவர்களுக்கு எதிராக செல்லாது என்பதற்கான தெளிவான அறிகுறியை அவர் வழங்கியுள்ளார்," என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)