You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்வு - பொதுமக்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மின் கட்டண உயர்வு குறித்து சாமானியர் முதல் சிறு, குறு தொழில் முனைவோர் வரை என்ன சொல்கின்றனர்?
2 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கட்டண உயர்வு
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 26.73 சதவீதம் (ஒரு மாதக் கட்டணத்துக்கு) வரையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு வீட்டு உபயோக மின் கட்டணம் 2.18% அதிகரிக்கப்பட, அரசே அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதனால், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் மற்றும் இதர பயன்பாட்டுக்கான மின் கட்டணம் மட்டுமே அதிகரித்தது.
அதன் பிறகு, மூன்றாவது முறையாக ஜூலை 1 முதல் மின்சார கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 20 முதல் 55 காசுகள் வரை அதிகரிக்கும்.
மத்திய அரசு நிதியைப் பெற ஆண்டுக்கு ஒருமுறை மின் கட்டணம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்ற மத்திய மின்துறை வழிகாட்டுதலின்படியே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக இருப்பதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்து இருக்கிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'சாமானிய மக்களுக்கு கூடுதல் சுமை'
"தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வு என் போன்ற சாமானிய மக்களுக்கு சுமையை மேலும் அதிகரிக்கும்" என்கிறார் இல்லத்தரசி சசிகலா.
"இந்த மின் கட்டண உயர்வினால் மேலும் கூடுதலாக மின் கட்டணத்தை செலுத்துவதற்கு பணம் தேவைப்படும். அதற்கான கடன் வாங்க வேண்டிய சூழலும் கூட ஏற்படலாம்.
சாமானிய மக்கள் இதனால் கடுமையான பாதிப்பை சந்திப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தி விட்டு சிறிய அளவு என்று கூறுகின்றனர். ஆனால் இந்த சிறிய அளவுப் பெரிய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார்.
'மின் கட்டண உயர்வு வாழ்வாதாரத்தை சீரழிக்கும்'
'மின் கட்டண உயர்வு சிறு வியாபாரிகளை வெகுவாக பாதிக்கும், தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளும்', என கூறுகிறார் மதுரையில் மளிகைக் கடை நடத்தி வரும் ரசூல்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சிறு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். 50 யூனிட் வரை எனது கடையில் மின்சாரம் செலவாகும். முன்பு 400 ரூபாய் மின் கட்டணமாக செலுத்தி வந்த நிலையில் இப்போது 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த மின் கட்டண உயர்வு சிறு வியாபாரிகளை சீரழித்து விடும். இதனால் என்னை போன்ற சிறிய கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வியாபாரத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும்", என கூறுகிறார்.
'இரண்டு வருடத்தில் 800 ரூபாய் உயர்வு'
மின் கட்டணம் 2 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து இருப்பதாக கூறுகிறார் குடிசைத் தொழில் செய்து வரும் நாகலெட்சுமி.
இது குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், "எனது வீட்டின் சிறு பகுதியில் முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்து வருகிறேன். 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் 450 யூனிட்டிற்கு 980 ரூபாய் கட்டணமாக செலுத்திய நிலையில், 2024ம் ஆண்டு மே மாதம் 484 யூனிட்டுக்கு 1,629 ரூபாய் கட்டணமாக செலுத்தியிருக்கிறேன்" என்றார்.
தற்போதைய கட்டண உயர்வால் இன்னும் கூடுதலாக 100 முதல் 150 ரூபாய் வரை செலுத்த வேண்டி வரலாம் என்று அவர் கருதுகிறார். இந்த குடும்ப பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதால், மின் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
'மின் கட்டண உயர்வால் அரசுக்கு வருவாய் குறையும்'
தொழிற்சாலைகளுக்கான நிலையான கட்டணத்தால் சிறு, குறு தொழில்கள் பின்னடைவைச் சந்தித்து, அதிக அளவில் வேலையிழப்பு ஏற்படும் என்று கப்பலூர் தொழிலதிபர் சங்க தலைவர் பி.என். ரகுநாதராஜன் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "மின் கட்டணத்தை அரசு உயர்த்துவதால் எங்களுக்கு பிரச்னை கிடையாது. ஆனால் தொழிற்சாலைகளுக்கான நிலையானக் கட்டண உயர்வுதான் ( Fixed Charge) சிறு, குறு தொழில்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலையான கட்டணம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு படிநிலைகளாக அதிகரித்து இருக்கிறது. இதனால் பல மடங்கு மின் கட்டணம் உயர்ந்தது. தற்போதைய இந்த மின் கட்டண உயர்வு, இதை மேலும் அதிகரித்துள்ளது". என்றார்.
"நிலையான கட்டணம் என்பது தொழிற்சாலைகள் செயல்பட்டாலும் செயல்படாவிட்டாலும் செலுத்த வேண்டிய தொகையாக இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிலையான கட்டண அதிகரிப்பு மேலும் சிறு, குறு தொழில்கள் முடங்கி வேலை இழப்புகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
புதிய தொழில்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு, ஏற்கனவே இருக்கும் சிறு, குறு தொழில்களை காப்பாற்றுவதற்காக நிலையானக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அதற்காக, தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணத்தை அதிகரித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)