கனடா: இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்

    • எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கனடாவில் இருக்கும் சர்வதேச மாணவர்கள் அங்கு நிரந்தரமாகத் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது சவாலாகி வருவதாகக் கூறி அங்கு சமீபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டில், கனடா அரசு எடுத்துள்ள நான்கு முடிவுகள் இந்தியா உட்பட பல லட்ச சர்வதேச மாணவர்களின் கனடா கனவுக்கு சவாலாக மாறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் மார்க் மில்லர், “கனடாவால் எதிர்காலத்தில் சர்வதேச மாணவர்களைத் திறந்த மனதுடன் வரவேற்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

இளைஞர் ஆதரவு ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்று கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லரை டேக் செய்து, கனடாவின் பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு, கோவிட் பேரிடரின் போது அவர்கள் செய்த பணிகள், கனடிய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தது. அதிக சர்வதேச மாணவர்களை அழைத்துக் கொள்வது குறித்த கனடாவின் வாக்குறுதியையும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில்தான் அமைச்சர் மார்க் மில்லர் தனது எக்ஸ் பக்கத்தில் மேற்குறிப்பிட்ட வாதத்தை முன்வைத்துள்ளார்.

அவர்களுக்கு அளித்த பதிலில் அவர் மேலும், “மக்கள் இங்கு வந்து கல்வி கற்பதோடு, இங்கிருந்து திறமைகளை எடுத்துக்கொண்டு தங்கள் நாடுகளுக்குச் செல்கின்றனர்,” என்றும் மார்க் மில்லர் குறிப்பிட்டார்.

கனடிய அரசின் சமீபத்திய முடிவுகள் குறித்த விவாதம் புதிதல்ல. இதன் காரணமாக சர்வதேச மாணவர்கள் பலரும் வீதிகளில் இறங்கிப் போராடவும் தொடங்கியுள்ளனர்.

டொரன்டோ, வின்னிபெக், பிரிட்டிஷ் கொலம்பியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு உள்பட பல பகுதிகளில் சர்வதேச மாணவர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும்

கனடாவில் படித்த பிறகு, சர்வதேச மாணவர்கள் மூன்று ஆண்டுகாலம் அங்கு வேலை செய்வதற்கான பணி அனுமதியைப் பெறுகிறார்கள். இதன்போது மாணவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கும் விண்ணப்பிக்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் சர்வதேச மாணவர்களுக்கும் கனடிய குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்த மூன்று ஆண்டுகள் பணி அனுமதி கோவிட் காலத்தில் மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

ஆனால், தற்போது கனடா அரசு, முதுகலை பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கு அவர்களின் பணி அனுமதி காலத்தை நீட்டிக்க மறுத்துள்ளது. மேலும், அந்த மாணவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுப்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாகப் பல சர்வதேச மாணவர்கள் தங்கள் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

கனடிய ஊடகச் செய்திகளின்படி, அங்குள்ள தொழிலாளர் சந்தையில் இருக்கும் தேவைகளின்படி, சர்வதேச மாணவர்களில் யார் படிப்பை முடித்த பிறகு தங்கியிருக்க வேண்டும், யாரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதை அதிகாரிகள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.

“குடியுரிமை பெறுவதற்காகவே ஏதாவதொரு டிப்ளமோ படிப்பைத் தேர்ந்தெடுத்து மாணவர் விசாவில் வந்தவர்கள், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் இருக்கின்றனர். இதனால், ஒருவரது படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் குடியேற்றங்களுக்கான வழக்கறிஞர் நடராஜன் ஸ்ரீராம்.

அவரது கூற்றுப்படி, குடியுரிமை பெறுவதற்காக தொழில் திறன்களுடன் தொடர்பில்லாத ஏதாவதொரு டிப்ளமோ படிப்பைத் தேர்ந்தெடுத்து கனடாவுக்கு வந்து, பிறகு படிப்புடன் தொடர்பில்லாத பணிகளைச் செய்பவர்களுக்கு பணி அனுமதியை நீட்டிக்க கனடிய அரசு விரும்பவில்லை.

பணி அனுமதியோடு 1.3 லட்சம் பேர்

ஃபினான்ஷியல் போஸ்ட் நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, கனடாவின் குடிவரவு, அகதிகள், மற்றும் குடியுரிமைத் துறையின் அமைச்சர் மார்க் மில்லர், சர்வதேச மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு ஏற்ற வேலைகளைத் தேட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மார்க் மில்லரின் கூற்றுப்படி, சமீப காலமாக முதுகலை பட்டப்படிப்பு முடித்து பணி அனுமதி பெற்றவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

அரசாங்கத் தரவுகளின்படி, 2022-இல் கனடாவில் முதுகலைப் படிப்பு முடித்து பணி அனுமதி பெற்றவர்கள் 1.3 லட்சம் பேர் இருந்தனர். இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 78% அதிகம்.

இதைத்தொடர்ந்து கனடா அரசு கடந்த சில மாதங்களாகப் பல விதிமுறைகளை மாற்றியுள்ளது. இது கனடாவுக்குப் படிக்கச் செல்வதை சர்வதேச மாணவர்களுக்குக் கடினமாக்கியுள்ளதோடு, அங்கு குடியுரிமை பெறுவதையும் முன்பைவிடக் கடினமாக்கிவிட்டது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வீடு பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாதது ஆகியவற்றால் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்தப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு சர்வதேச மாணவர்களின் படிப்பு மற்றும் பணி அனுமதியை கனடா குறைத்திருந்தது.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மூன்று லட்சம் சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே படிப்பு மற்றும் பணிக்கான அனுமதியை வழங்குவதாகக் கனடா கூறியுள்ளது.

முதுகலைப் படிப்பு மற்றும் பணி அனுமதி

கனடா அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ள விதிகளில் முக்கியமான ஒன்று, முதுகலைப் படிப்பு மற்றும் பணி செய்வதற்கான அனுமதி தொடர்புடையது. இது ‘வொர்க் பெர்மிட்’ என்று அழைக்கப்படுகிறது.

கனடாவில் இரண்டு ஆண்டுகள் படிப்பைத் தொடரும் ஒருவர், அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் பணி செய்வதற்கான அனுமதியைப் பெறுவார்.

கோவிட் பேரிடர்க் காலத்தில், தொழிலாளர் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கனடா அரசு இந்தப் பணி அனுமதியைக் கூடுதலாக 18 மாதங்களுக்குத் தற்காலிகமாக நீட்டிக்கும் கொள்கையை அமல்படுத்தியது.

இந்நிலையில், தற்போது அந்தப் பணி அனுமதி காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று கனடா அரசு முடிவெடுத்துள்ளது.

உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ் தொகை அதிகரிப்பு

படிப்பு விசாவில் கனடாவுக்கு செல்லும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தங்குமிடச் செலவு ஜி.ஐ.சி (GIC) எனப்படுகிறது. அதாவது, உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ்.

இந்த ஜி.ஐ.சி தொகையில் மாணவர்களின் கல்விக்கான டியூஷன் ஃபீஸ் எனப்படும் தொகையும் அடக்கம். இது கிட்டத்தட்ட நிலையான வைப்புத் தொகையைப் போன்றதே. ஆனால், இது தவணை முறையில் மாணவர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படும்.

இந்தத் தொகையை கனடா அரசு சில மாதங்களுக்கு முன்பு அதிகரித்தது. ஜி.ஐ.சி தொடர்பான புதிய விதிகள் 2024-ஆம் ஆண்டு, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

அதன்படி, மாணவர்கள் 20,635 கனடிய டாலர்கள் செலுத்த வேண்டும். முன்னதாக இந்தத் தொகை 10,000 கனடிய டாலர்களாக இருந்தது.

இதுகுறித்துப் பேசிய கனடிய குடியேற்றம் தொடர்பான CANext நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞருமான நடராஜன் ஸ்ரீராம், “இந்தத் தொகை கிட்டத்தட்ட கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில், தற்போதுள்ள விலைவாசி உயர்வு, வீடு பற்றாக்குறை போன்ற பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு கனடிய அரசு இந்தத் தொகையை உயர்த்தியுள்ளது,” என்று கூறினார்.

வாழ்க்கைத் துணைக்கான விசா மாற்றங்கள்

கணவன்/மனைவியின் விசா தொடர்பான விதிகளிலும் கனடா அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. இனி, அங்கு முதுநிலை அல்லது முனைவர் பட்டப்படிப்பில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே தங்களது வாழ்க்கைத் துணையை அழைத்து வருவதற்கான விசா வழங்கப்படும்.

அதற்கு அடுத்த படிநிலைகளில் உள்ள படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியை வாழ்க்கைத் துணை விசாவில் கனடாவிற்கு அழைத்து வர முடியாது.

"முன்பு, டிப்ளமோ படிப்புகளில் படித்த சர்வதேச மாணவர்களும்கூட தங்கள் மனைவிகளை அழைத்து வரலாம். ஆனால், இனி அப்படிச் செய்ய முடியாது,” என்கிறார் நடராஜன் ஸ்ரீராம்.

வாழ்க்கைத் துணை விசா என்பது ஒரு வகையான சார்பு விசா. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தை உடன் அழைத்து வந்து வைத்துக்கொள்ள இதைப் பயன்படுத்துகின்றனர்.

வேலை நேரம் குறைப்பு

சர்வதேச மாணவர்கள் படிக்கும் நேரம் போக, வேலை செய்வதற்கான பணி நேரத்தை கனடா அரசு குறைத்துள்ளது.

அரசாங்கத்தின் தற்போதைய விதிகளின்படி, மாணவர்கள் ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 24 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்கள் முதன்மையாகப் படிப்பில் கவனம் செலுத்துவதையும், தேவைப்படும் போது மட்டுமே வேலை செய்வதையும் உறுதிசெய்ய இந்த முயற்சியை எடுத்துள்ளதாக அரசு கூறுகிறது.

முன்பு மாணவர்கள் படிப்பு போக ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 மணிநேரம் வரை வேலை செய்யலாம் என்ற வகையில் இருந்தது. ஆனால், 2023-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி வரை இருந்த இந்த விதி மாற்றப்பட்டு, தற்போது வாரத்திற்கே அதிகபட்சம் 24 மணிநேரம் வரை மட்டுமே மாணவர்களின் பணிநேரம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நாளொன்றுக்கு 8 மணிநேரம் வரை வேலை செய்யலாம் என்ற விதி கோவிட் காலத்தில் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்டது என்கிறார் குடியேற்றங்களுக்கான வழக்கறிஞர் நடராஜன் ஸ்ரீராம்.

கோவிட் பேரிடருக்கு முன்பு, மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணிநேரம் வரை வேலை செய்யலாம் என்ற விதி இருந்தது. “கோவிட் காலத்தில் சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த விதி தளர்த்தப்பட்டு, மாணவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வரை வேலை செய்யலாம் என்ற விதி அமல்படுத்தப்பட்டது,” என்கிறார்.

இந்நிலையில், தற்போது இந்தத் தற்காலிகப் பணி நேரத்தை மாற்றியமைத்து 'முன்பு இருந்ததைவிட 4 மணிநேரம் உயர்த்தி 24 மணிநேரம் வரை பகுதிநேரம் வேலைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு' கனடிய அரசு அனுமதி அளித்துள்ளதாகக் கூறுகிறார் நடராஜன் ஸ்ரீராம்.

“மாணவர் விசாவில் வருவோரின் கவனம் முழுக்கக் கல்வியில் இருக்க வேண்டும் என்பதே கனடிய அரசின் நோக்கம்,” என்று கூறுகிறார் அவர்.

கூடுதல் தகவல்கள்: க.சுபகுணம், பிபிசி தமிழ்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)