You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அத்துமீறி கட்டப்பட்ட பிறை கொடி' : திருப்பரங்குன்றத்தில் புதிய சர்ச்சை
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
'கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து சந்தனக் கூடு திருவிழாவை வெளிப்படுத்தும்விதமாக கல்லத்தி மரக் கிளையில் சிலர் கொடியைக் கட்டியுள்ளனர். இது சட்டவிரோதமானது'
திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று சுப்ரமணிய சுவாமி கோவிலின் கண்காணிப்பாளர் அளித்துள்ள புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அதே நாளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, 'கல்லத்தி மரத்தில் உள்ள கொடி' தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, 'தர்கா நிர்வாகத்துக்கு எந்தத் தகவலையும் கூறாமல் ஜனவரி 15ஆம் தேதி பிறை கொடியை அகற்றிவிட்டதாக' அதன் நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடப்பட்டிருந்த கொடியை மட்டுமே கோவில் நிர்வாகம் அகற்றியுள்ளதாக இந்து அமைப்பினர் கூறுகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மரத்தில் கொடியைக் கட்டியதால் என்ன பிரச்னை? இரு தரப்பும் சொல்லும் விளக்கம் என்ன?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் அமைந்துள்ள மலையின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் கோவிலும் வலதுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் அமைந்துள்ளது.
தர்கா அமைந்துள்ள இடத்தின் அருகில் கல் தூண் ஒன்று உள்ளது. 'இந்த தூணில் கார்த்திகை தீபத்தின்போது தீபம் ஏற்ற வேண்டும்' என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தன.
இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்' என உத்தரவிட்டார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால் இந்து அமைப்பினர் மற்றும் காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கோவிலின் செயல் அலுவலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
'கல்லத்தி மரத்தில் பிறை கொடி'
வழக்கின் விசாரணையில் கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை, வக்ஃப் வாரியம், மாவட்ட நிர்வாகம் என அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, 'மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்' என உத்தரவிட்டனர்.
இந்த தூண், தேவஸ்தான நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளதாக தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், 'சிவில் நீதிமன்றத்தால் தேவஸ்தானத்தின் சொத்து என அறிவிக்கப்பட்ட பகுதியில் அந்த கல் தூண் அமைந்துள்ளது' எனக் குறிப்பிட்டனர்.
அந்தக் கல் தூணின் அருகே கல்லத்தி மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் தர்கா நிர்வாகத்தின் சார்பில் கொடி ஒன்று கட்டப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 6 ஆம் தேதியன்று சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக் கூடு திருவிழா நடைபெற்றது.
அப்போது கல்லத்தி மரத்தில் சிலர் பிறை கொடியைக் கட்டியதாக இந்துத்துவ அமைப்புகள் குற்றம் சுமத்தின. இதுதொடர்பாக, சுப்ரமணிய சுவாமி கோவிலின் கண்காணிப்பாளர் சத்தியசீலன் கடந்த ஜனவரி 9 ஆம் தேதியன்று திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
கோவில் நிர்வாகம் அளித்த புகார் என்ன?
அந்த மனுவில், கோவிலுக்கு சொந்தமான மலை மற்றும் காலியிடங்களில் வளர்ந்துள்ள மரங்கள் அனைத்தும் கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் சந்தனக் கூடு திருவிழாவை காட்டும் வகையில் சிலர் அத்துமீறி கொடியைக் கட்டியுள்ளதாகவும் புகார் மனுவில் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
'இதுபோன்று கொடியைக் கட்டுவது சட்டவிரோதமானது. இதனை விசாரித்து அத்துமீறி பிரவேசித்தல், மரத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்தது ஆகிய குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பேரில் திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜனவரி 12 அன்று மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வழிபாடு நடத்துவதற்காக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா வந்தார்.
ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு
அப்போது, சிக்கந்தர் தர்காவுக்கு செல்லும் பாதை வழியாக அவர் நுழைய முயன்றார். அவரை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். 'கல்லத்தி மரத்தில் உள்ள கொடி அகற்றப்பட்டுவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்' என ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த காவலர்கள், தர்கா அமைந்துள்ள இடத்தில் அருகே செல்வதற்கு அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினருடன் அவர் வாக்குவாதம் செய்தார். இந்த விவகாரத்தில் ஹெச்.ராஜா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், கார்த்திகை தீபத்தின்போது கல் தூணில் தீபம் ஏற்றப்படாதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜனவரி 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, கல்லத்தி மரத்தில் உள்ள கொடி தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார். 'கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பிறை கொடி கட்டப்பட்டுள்ளது. அதனை ஏன் அகற்றவில்லை?' எனக் கோவில் நிர்வாகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் கேட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதியன்று கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை கோவில் நிர்வாகத்தினர் அகற்றியுள்ளனர். இதற்கு எதிராக திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் தர்கா நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
'இரவு வரை கொடி பறந்தது... மறுநாள்?'
"ஹெச்.ராஜா வந்துவிட்டுப் போன பிறகு தான் கொடியை அகற்றியுள்ளனர். இதுதொடர்பாக தர்கா நிர்வாகத்துக்கு உரிய முறையில் தெரியப்படுத்தவில்லை" எனக் கூறுகிறார், சிக்கந்தர் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.
"ஜனவரி 14 ஆம் தேதி இரவு வரை கொடி பறந்தது. மறுநாள் பொங்கல் அன்று அதிகாலையில் துணியும் இல்லை, கொடியும் இல்லை என எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தர்கா நிர்வாகம் சார்பாக அப்பாஸ் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்" எனக் கூறுகிறார், அல்தாஃப்.
தொடர்ந்து பேசிய அவர், "ஹெச்.ராஜாவுடன் வந்த பா.ஜ.கவினர், தர்காவுக்கு சொந்தமான தடுப்பு கம்பிகளை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, திருப்பரங்குன்றம் உதவி ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்கிறார்.
கடந்த 14 ஆம் தேதியன்று இரவு சுமார் 11 மணியளவில் காவல்துறையினரின் உதவியுடன் கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை கோவில் நிர்வாகம் அகற்றியுள்ளதாகக் கூறுகிறார், இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன்.
" ஆனால், அத்துமீறி சிலர் கொடியை அகற்றியதாக தர்கா நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கொடி கட்டிய அவர்கள் மீது தான் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதனை மறுத்துப் பேசும் தர்கா நிர்வாகி அல்தாஃப், "காலம் காலமாக மரத்தில் கொடி கட்டப்பட்டு வருகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீபம் ஏற்றப்படாதது குறித்துக் கேட்காமல் கல்லத்தி மரக் கொடி தொடர்பாக நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் தர்கா மீது கோவில் நிர்வாகம் புகார் கொடுத்தது" என்கிறார்.
'வரைபடத்தில் பறக்கும் கொடி'
இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள வரைபடத்தில், கல் தூண் அருகில் உள்ள மரத்தில் கொடி பறப்பதைக் காட்டும் வகையில் படம் வரைந்துள்ளதாகக் கூறி அந்தப் படத்தை பிபிசி தமிழிடம் அல்தாஃப் பகிர்ந்தார்.
"இந்தப் படம் வரைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தர்காவுக்கு சொந்தமான இடத்தில் கொடி மரம் அமைந்துள்ளதாக இந்த வரைபடமே கூறுகிறது. தர்காவைத் தாண்டித் தான் கொடி மரத்துக்கு செல்ல முடியும்" எனக் கூறுகிறார் அவர்.
"அது தர்காவுக்கு சொந்தமான இடம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அண்மையில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு தர்காவுக்கு எதிராக அமைந்துள்ளது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளோம்" என்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், "மலைக்குச் செல்லும் படிக்கட்டு முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது. தர்காவுக்கு நெல்லித்தோப்பில் ஓர் ஏக்கர் நிலம் உள்ளது. 33 சென்ட் நிலத்தில் தர்கா அமைந்துள்ளது" என்கிறார்.
தர்காவுக்கு சென்று வழிபடுவதற்கு இருபது படிக்கட்டுகள் உள்ளதாகக் கூறும் சோலைக்கண்ணன், "படிக்கட்டுகள் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமானது என இரு நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. தீபத்தூணுக்கு செல்லும் வழியில் கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரம் உள்ளது. கோவில் கண்காணிப்பாளர் அளித்துள்ள புகார் மனுவிலும் இதைப் பற்றி கூறப்பட்டுள்ளது" என்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பிறை கொடியை தர்கா நிர்வாகிகள் ஏற்றி வந்துள்ளதாகக் கூறும் சோலைக்கண்ணன், "இதுதொடர்பாக பலமுறை புகார் கொடுத்தோம். நீதிமன்றத்திலும், அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. தற்போது தான் கொடியை அகற்றியுள்ளனர்" என்கிறார்.
பிரச்னையின் தீவிரம் அதிகரித்த காரணத்தால் மட்டுமே பிறை கொடியை கோவில் நிர்வாகம் அகற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
'படிப்படியாக பறிபோகும் உரிமை'
ஆனால், மதவழிபாட்டு இடத்தைப் புண்படுத்தும் வகையில் கொடியை அகற்றியுள்ளதாகக் கூறும் அல்தாஃப், "மலையின் மீது இஸ்லாமிய மக்களுக்கான உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன" என்கிறார்.
"தொடக்கத்தில் 6 மணிக்கு மேல் தர்காவுக்குள் தங்கக் கூடாது என்றனர். பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறினர். பிறகு ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்பட்டது. தற்போது பிறை கொடியை அகற்றிவிட்டனர். இனி தர்காவை அப்புறப்படுத்துவது அவர்களின் இறுதி நோக்கமாக உள்ளது" எனக் கூறினார்.
தர்கா நிர்வாகிகள் குற்றச்சாட்டு தொடர்பாக, திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலின் துணை ஆணையர் யக்ஞ நாராயணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "கடந்த சில நாட்களாக விடுப்பில் இருப்பதால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க இயலாது" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு