You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பக்த விதுர் முதல் ஜன நாயகன் வரை: இந்திய சினிமா வரலாற்றில் நெருக்கடிகளை சந்தித்த திரைப்படங்கள்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது. சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் படங்களின் வெளியீடு பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இந்திய சினிமாவின் ஆரம்பக் காலத்தில் இருந்தே இது நடந்து வருகிறது.
சினிமாவின் தொடக்க நாட்களில் இருந்து தற்போது வரை அரசியல் கருத்துகள் இடம்பெற்றிருந்த திரைப்படங்களே கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதுபோல தணிக்கையை எதிர்கொள்ளும் திரைப்படங்கள், ஒன்று அந்தக் காட்சிகளைத் தியாகம் செய்ய வேண்டும் அல்லது நீண்ட, சோர்வளிக்கும் சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உலகில் முதன் முதலில் சினிமாவுக்கென ஒரு சட்டத்தை இயற்றிய நாடு பிரிட்டன் என்கிறது பௌமிக் சோமேஸ்வர் எழுதிய சினிமாவும் தணிக்கையும்: இந்தியாவில் கட்டுப்பாட்டு அரசியல் (CINEMA AND CENSORSHIP: The Politics of Control in India) என்ற புத்தகம். ஆனால், சினிமாவின் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதற்காக இந்தச் சட்டம் உருவாக்கப்படவில்லை. சினிமாவின் தொடக்க நாட்களில் சினிமா ஃபிலிம்களில் இடம்பெற்றிருந்த நைட்ரோசெல்லுலோஸ் என்ற ரசாயனம் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. இதனால், ஐரோப்பாவின் பல நகரங்களில் சினிமா திரையிடப்பட்ட இடங்களில் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், சினிமா அரங்குகளில் போதுமான தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை பிரிட்டன் இயற்றியது. 1909இல் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அரங்குகளின் பாதுகாப்புக்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டாலும், அதிகாரிகள் இந்தச் சட்டத்தை வைத்து உள்ளடக்கத்தையும் கண்காணித்தனர். முடிவில் படங்களின் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க பிரிட்டிஷ் திரைப்பட தணிக்கை வாரியம் (The British Board of Film Censor) என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
அதே காலகட்டத்தில், துண்டுப் படங்களின் வடிவில் இந்தியாவில் மெல்லமெல்ல திரைப்படங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்தியாவின் முதல் முழுநீள திரைப்படம் 'ராஜா ஹரிச்சந்திரா' தாதா சாஹேப் பால்கேவின் இயக்கத்தில் 1913இல் வெளியானது. அடுத்த சில ஆண்டுகளில் அதாவது, 1917இல் இந்தியாவில் சினிமா தணிக்கைக்கான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1918ஆம் ஆண்டில், இது 'சினிமாடோகிராஃப் சட்டம்' என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டது.
இந்திய சினிமாடோகிராஃப் குழுவின் அறிக்கை, 1927-1928 (Report of the Indian Cinematograph Committee, 1927 - 1928) ஆரம்பக் கால சினிமா தணிக்கை குறித்து சில தகவல்களைத் தருகிறது. அதன்படி, 1920இல் மும்பை, கல்கத்தா, சென்னை, ரங்கூன் ஆகிய நகரங்களில் தணிக்கை வாரியங்கள் அமைக்கப்பட்டன. இந்த வாரியங்கள் ஒவ்வொன்றும் அளிக்கும் சான்றிதழ்கள் பிரிட்டிஷ் இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகும். ஆனால், ஏதாவது ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் ஏதாவது ஒரு மாகாணத்திற்கு ஆட்சேபனை இருக்குமானால், வேறு மாகாணத்தில் அளிக்கப்பட்ட சான்றிதழ் செல்லுபடியாகாது.
அந்தக் காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில், தணிக்கை வாரியத்தில் 6 பேர் இருந்தனர். இதற்கு காவல்துறை ஆணையர் தலைவராக இருந்தார். ஒரு ராணுவ பிரதிநிதியும் இடம் பெற்றிருந்தார். இது தவிர ஒரு இஸ்லாமியர் உள்பட நான்கு பேர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். திரைப்படத்தை தயாரிப்பவர்கள் முழுப் படத்தையும் வாரியத்தின் தலைவருக்கு அளிக்க வேண்டும். அவரோ, வாரியத்தின் மற்ற உறுப்பினர்களோ படத்தைப் பார்த்துவிட்டு, அறிக்கை தயாரிப்பார்கள். பிறகு வாரியம் கூடி அந்த அறிக்கையை ஏற்பது குறித்து முடிவு செய்யும்.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1952ஆம் ஆண்டில் புதிய சினிமாடோகிராஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படியே தற்போது திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. இந்தத் தருணத்தில் பிராந்திய தணிக்கை வாரியங்கள் நீக்கப்பட்டு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (Central Board of Film Censors) உருவாக்கப்பட்டது. 1983இல் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பெயர் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification) என மாற்றப்பட்டது.
"இந்தியாவில் புதிய ஊடகமாக சினிமா உருவெடுத்தபோது, அது அரசியலுக்குப் பயன்படுத்தப்படலாம் என பிரிட்டிஷ் அரசு அஞ்சியது. இதனால், தணிக்கை வாரியங்கள் மாகாணங்களில் அமைக்கப்பட்டன. 1937இல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அரசு வந்தபோதுதான் தணிக்கையில் சற்று தளர்வு வந்தது. அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தபோது தியாக பூமி போன்ற சில திரைப்படங்கள் அரசியல் கருத்துகளுடன் வெளியாக முடிந்தது. பிறகு மீண்டும் தணிக்கை கடுமையானது" என்கிறார் சினிமா ஆய்வாளரும் ஐ ஆஃப் தி செர்பன்ட் (Eye of the Serpent) நூலின் ஆசிரியருமான தியடோர் பாஸ்கரன்.
இந்திய சினிமாவின் துவக்க காலத்தில் ஒரு படத்தில் ஆட்சேபனைகளை எழுப்ப பெரும்பாலும் அரசியல் காரணங்களே அடிப்படையாக இருந்தன. கடந்த 1921ஆம் ஆண்டில் கஞ்சிபாய் ரத்தோட் என்பவர் பக்த விதூர் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் மகாபாரத கதாபாத்திரமான விதுரனை மையமாகக் கொண்டது. மகாபாரத கதை இவரது பார்வையில் இருந்து சொல்லப்படுவதாக படம் நகரும்.
இந்தப் படத்தில் விதுரனின் பாத்திரம் காந்தியை ஒத்திருப்பதாக அப்போதைய பிரிட்டிஷ் அரசு கருதியதாக பேரரசின் பார்வைகளும் பிற கற்பனைகளும்: சினிமா, அயர்லாந்து மற்றும் இந்தியா 1910-1962 (Visions of Empire and Other Imaginings: Cinema, Ireland and India 1910-1962) என்ற நூல் குறிப்பிடுகிறது. சில காட்சிகளில் விதுரன், கதராடையும் காந்தி குல்லாவும்கூட அணிந்திருந்தார். இந்தப் பாத்திரம் காந்தியையே பிரதிநிதித்துவம் செய்வதாக அப்போதைய ஆட்சியாளர்கள் கருதினர்.
இதனால், இந்தப் படத்திற்கு சென்னை மற்றும் கராச்சி மாகாணங்களில் தடை விதிக்கப்பட்டது. "நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இது விதுரர் அல்ல. இது காந்திஜி. நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம்" என தணிக்கை வாரியம் குறிப்பிட்டது. இந்தியாவில் முதன் முதலில் தடையை எதிர்கொண்ட திரைப்படமாக இந்தப் படமே குறிப்பிடப்படுகிறது.
சில திரைப்படங்கள் வெளியான பிறகும் தடையை எதிர்கொண்டுள்ளன. அதற்கு ஓர் உதாரணம், தியாக பூமி. கல்கி எழுதிய கதை, கே. சுப்ரமணியத்தால் திரைப்படமாக உருவாக்கப்பட்டு, 1939ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி வெளியானது.
அடிப்படையில் இந்தப் படம் ஒரு குடும்பக் கதையைக் கொண்டதுதான். ஆனால், இந்தப் படத்தில் சுதந்திரப் போராட்டம் தொடர்பான சில கருத்துகளும் ஆதரவான பாடல்களும் இடம்பெற்றிருந்தன. படத்தின் முக்கிய பாத்திரங்களான உமா ராணி, ஸ்ரீதரன் ஆகியோர் தேசத்திற்காக மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்படுவதைப் போன்ற காட்சிகளும் இருந்தன.
தணிக்கைச் சான்றிதழைப் பெற்று இந்தப் படம், 22 வாரங்கள் ஓடிவிட்டது. அந்தத் தருணத்தில், சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவை இரண்டாம் உலகப் போரை முன்னிட்டு ராஜினாமா செய்தது. இதற்குப் பிறகு இந்தப் படம் சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது.
சமீப காலங்களில் தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் மறுக்கப்பட்டு நீண்ட போராட்டத்தைச் சந்தித்த படம், 'குற்றப் பத்திரிகை'. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தக் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோதே படம் தயாராகிவிட்டது.
கடந்த 1992 அக்டோபர் மாதம் படத்தை வெளியிடவும் படக் குழுவினர் முடிவு செய்தனர். ஆனால், இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்க மறுக்கப்பட்டது. பல ஆண்டுக்கால போராட்டம், வழக்கு ஆகியவற்றுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டின் இறுதியில் சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தைத் திரையிட நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், படம் தோல்விப் படமாகவே அமைந்தது.
இதேபோல, 2001இல் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் வெளியான 'காற்றுக்கென்ன வேலி' திரைப்படமும் திரைப்பட சான்றிதழ் வாரியத்தில் சிக்கல்களைச் சந்தித்தது. இந்தத் திரைப்படம் புலிகள் இயக்கம் குறித்த சாதகமான பார்வையையும் "அருகில் உள்ள நட்புரீதியான நாட்டின் ராணுவத்தை மோசமாக" காட்டியிருப்பதாகவும் கூறி இந்தப் படத்திற்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது.
'மணிமேகலை என்ற இளம்பெண் யுத்தத்தில் காயமடைந்த நிலையில், பாக் நீரிணையைக் கடந்து நாகப்பட்டினத்தை வந்தடைகிறாள். அங்கு ஒரு மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கும் அவளுக்கும் இடையிலான உறவு, மணிமேகலையின் பின்னணி ஆகியவை இந்தப் படத்தின் கதையாக இருந்தன.'
இந்தப் படத்திற்கு சென்னையில் இருந்த தணிக்கை வாரியம் அனுமதி அளிக்க மறுத்த நிலையில், புகழேந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிறகு டெல்லியில் இருந்த வாரியத்தில் முறையிட்டு சான்றிதழைப் பெற்றார்.
"காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தைப் பொறுத்தவரை, அதில் இரண்டு ஆட்சேபனைகள் பிரதானமாக வைக்கப்பட்டன. முதலாவது ஆட்சேபனை, அது புலிகளுக்கு ஆதரவான படம் என்பது. இரண்டாவது ஆட்சேபனை, படத்தின் நாயகிக்கு 'மணிமேகலை' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. உண்மையில் அப்படி ஒருவர் இருந்ததாக இங்கிருந்தவர்கள் கருதினார்கள்" என நினைவு கூர்கிறார் அந்தப் படத்தின் இயக்குநரான புகழேந்தி தங்கராஜ்.
மேற்கொண்டு பேசிய அவர், "16 நாட்களில் படத்தை எடுத்துவிட்டு, படம் வெளிவருவதற்காக 18 மாதங்கள் போராடினோம். பாரதிராஜா உள்ளிட்டவர்கள் இதற்காக இணைந்து பாடுபட்டார்கள். சென்னையில் காந்தி சிலை வரை ஊர்வலமாகச் சென்று கூட்டமெல்லாம் நடத்தினோம். பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கின் முடிவில், படத்திற்கு சான்றிதழ் வழங்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவை எடுத்துச் சென்று, டெல்லியில் இருக்கும் தீர்ப்பாயத்தில் அளித்து சான்றிதழைப் பெற வேண்டும். டெல்லி சென்றபோது, அங்கிருந்த ஒருவர் புதிதாக ஓர் ஆட்சேபனையை எழுப்பினார். 'காற்றுக்கென்ன வேலி' என்ற படத்தின் பெயர் அவருக்கு ஆட்சபேகரமாக இருந்தது. பிறகு அதுகுறித்து விளக்கி, சான்றிதழைப் பெற்றோம். சென்னை உயர் நீதிமன்றம் படத்தில் எந்தக் காட்சியையும் நீக்கச் சொல்லவில்லை. நாங்களாக சில காட்சிகளை நீக்கினோம். 2001ஆம் ஆண்டு தீபாவளிக்கு பெரிய படங்களோடு இந்தப் படமும் வெளியானது," என நினைவுகூர்ந்தார்.
இதேபோல, இலங்கை உள்நாட்டுப் போரை பின்னணியாகக் கொண்டு வெளியான 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்திற்கும் சான்றிதழ் மறுக்கப்பட்டது. இந்தப் படம் 2015இல் வெளியீட்டிற்குத் தயாரானது. படத்தை கு. கணேசன் என்பவர் இயக்கியிருந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்பட்டது.
சென்னையில் இந்தப் படத்திற்கு சான்றிதழ் மறுக்கப்படவே, மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டது. அங்கும் இந்தப் படத்திற்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து படத்தின் இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருந்தபோதும் சான்றிதழ் வாரியத்தின் முடிவையே சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.
கடந்த 1989ஆம் ஆண்டில் ஜோதி பாண்டியன் என்பவர் இயக்கத்தில் லக்ஷ்மி, நிழல்கள் ரவி நடித்து 'ஒரே ஒரு கிராமத்திலே' என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் திரைப்படம், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கதையைக் கொண்டிருந்தது. 1987இல் படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்து, படம் சான்றிதழ் வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் சான்றிதழ் கொடுக்க வாரியம் மறுத்துவிட்டது. இதையடுத்து படம் மேல் முறையீட்டிற்குச் சென்றது. மேல் முறையீட்டில் படத்திற்கு சான்றிதழ் கிடைத்தது. இந்த நிலையில், படத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது.
திராவிடர் கழகம், அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்றவை படத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தின. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், படத்தின் சான்றிதழை ரத்து செய்தது.
இதற்கிடையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அதாவது, வியாழக் கிழமையன்று உயர் நீதிமன்றத்தில் டிவிஷன் பெஞ்ச் முன்பாக இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து, தீர்ப்பு மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த நிலையில், இந்தப் படத்திற்கு சமூகப் பிரச்னைகளை சிறப்பாகச் சொல்லிய படம் என தேசிய விருது அளிக்கப்பட்டது. அதாவது, படம் வெளியாவதற்கு முன்பாகவே அந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர்கள் தேசிய விருதுக்கு அனுப்பியிருந்தனர். இந்தப் படத்திற்கு திங்கள் கிழமை குடியரசுத் தலைவர் விருது வழங்கவிருந்தார்.
இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் படத்தின் சான்றிதழை ரத்து செய்தது. இந்தப் படத்திற்கு விருது வழங்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அடுத்த நாளே (சனிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. திங்கள் கிழமை இந்த வழக்கை முதல் வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய விருதை வழங்கத் தடையில்லை என்று அறிவித்தது. இதனால், திங்கள் கிழமை படத்திற்கு விருது வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு, தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் படத்தை வெளியிடத் தடையில்லை என்று அறிவித்தது. இந்தப் படம் 1989ஆம் ஆண்டில் வெளியானது.
"இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவே ஆரம்பக் கால திரைப்படத் தயாரிப்பாளர்கள், சர்ச்சை ஏற்படாத வகையில் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். அவை பெரும்பாலும் பொழுதுபோக்குப் படங்களாகவே இருந்தன. இதனால், சினிமா கவலைகளை மறக்க வைக்கும் ஒரு பொழுதுபோக்காக மாறியது. இப்போது வரை அதிலிருந்து இந்திய சினிமாவால் மீள முடியவில்லை." என்கிறார் தியடோர் பாஸ்கரன்.
"தணிக்கை கடுமையாக உள்ள நாடுகளில், அந்தத் தணிக்கையையும் தாண்டி வரும் வகையில் அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்ட படங்களை எடுக்கிறார்கள்; இங்கே அப்படி இல்லை. அரசியலை உள்ளடக்கமாகக் கொண்ட படங்கள் வராததற்கு இதுவும் ஒரு காரணம். அதேபோல நிகழ்கால அரசியலைப் பற்றி வரும் சாதாரண வசனங்கள், காட்சிகளைக்கூட நீக்கச் சொல்வார்கள்" என்கிறார் அவர்.
படத்திற்கு சான்றிதழை மறுப்பது திரைப்படச் சான்றிதழ் வாரிய உறுப்பினர்களின் பரிந்துரைதான் என்றாலும்கூட, அதன் பின்னணியில் அரசுகள் இருக்கின்றன என்கிறார் புகழேந்தி தங்கராஜ்.
"ஒரு படத்தை முதலில் ஐந்து பேர் பார்க்கிறார்கள். பிறகு ரிவைசிங் கமிட்டிக்கு செல்லும்போது 9 பேர் பார்க்கிறார்கள். முதலில் படம் பார்த்த குழுவுக்கும் இரண்டாவது படம் பார்த்த குழுவுக்கும் இடையிலேயே கருத்து வேறுபாடு வருகிறது. கேட்டால், இரண்டும் வேறு குழுக்கள் என்கிறார்கள்.
வேறு வேறு குழுக்களாக இருக்கலாம். ஆனால், சட்டம் இந்த இரண்டு குழுக்களுக்கும் ஒன்றுதானே. அப்படியிருக்கும்போது முதல் குழு நிராகரித்த படத்தை இரண்டாவது குழு எப்படி ஏற்கிறது? பொதுவாக, வாரியத்தின் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவிப்பதாகக் கூறினாலும், உண்மையில் தமது விருப்பத்திற்கு ஏற்ப படம் வர வேண்டுமென நினைப்பது அரசுகள்தான். அதனால்தான் இப்படி நடக்கிறது" என்கிறார் புகழேந்தி.
பல தருணங்களில் வாரிய உறுப்பினர்களுக்கு சினிமா குறித்த பரிச்சயமே இருப்பதில்லை என்கிறார் தியடோர் பாஸ்கரன். "சங்கீத கலாநிதி விருதை, நன்றாக சங்கீதம் அறிந்தவர்கள்தான் கொடுக்கிறார்கள். ஆனால், சினிமாவில் அப்படி நடப்பதில்லை. தணிக்கை வாரியத்தில் இருப்பவர்களுக்கு சினிமாவை பற்றிய பரிச்சயமே பல தருணங்களில் இருப்பதில்லை. சினிமாதானே என்ற எண்ணம்தான் இருக்கிறது.
ஒரு திரைப்படத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டுமென பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியலைப் பாருங்கள். அவை பெரும்பாலும் பாலியல் தொடர்பானதாகவே இருக்கும். ஆனால், குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய வன்முறைக் காட்சிகள் வெகு எளிதாக இடம்பெறும்" என்று கூறும் அவர், "தணிக்கை விதிகள் தளர்த்தப்படுவதுதான் தீர்வு, இது குறித்து தீவிர விவாதம் நடக்க வேண்டும். ஆனால், அப்படியேதும் நடப்பதில்லை" என்கிறார்.
புகழேந்தியைப் பொறுத்தவரை, தணிக்கை வாரியத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கக்கூடாது என்கிறார். "நல்ல படங்களை எடுத்து ஓய்வுபெற்ற கலைஞர்கள்தான் அதில் இடம்பெற வேண்டும். அவர்களுக்குத்தான் சினிமாவின் அடிப்படை தெரியும். அதன் பின்னணி தெரியும்."
கடந்த 2002ஆம் இந்திய தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த விஜய் ஆனந்த், தணிக்கை வாரியத்தின் பார்வையை தாராளமாக்கும் முயற்சியை மேற்கொண்டார். அதற்கேற்ற வகையில் சினிமாடோகிராஃப் சட்டத்தை திருத்த வேண்டுமெனவும் பரிந்துரைத்தார். அதன்படி, 'XA' என்ற புதிய வகைப்பாட்டை பரிந்துரைத்த அவர், அதில் பாலியல் ரீதியான காட்சிகள் இடம் பெறலாம் என்றார்.
மேலும், தணிக்கை வாரியத்தை சுயாதீன அமைப்பாக மாற்றி, அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றார். அதோடு தணிக்கை வாரிய உறுப்பினர்களில் பாதிப் பேர் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், அவரது கருத்துகளை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஏற்கவில்லை. தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளிப்படையாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். முடிவில் விஜய் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு