You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராணுவ பலம் மற்றும் சக்தியால் பிற நாடுகளை கட்டுப்படுத்த முற்படும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா - என்ன நடக்கிறது?
- எழுதியவர், அந்தோணி ஜுர்ச்சர்
- பதவி, பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர்
வெனிவேசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்த பிறகு, "மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் இனி ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவின் வலிமையை அந்நாட்டு அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தும் அதே வேளையில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தத்தமது செல்வாக்குட்பட்ட பிராந்தியங்களை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.
இந்த மூன்று நாடுகளுமே ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவ முயல்வதாகவும், இது ஐரோப்பா மற்றும் இதர பிராந்திய நாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் தங்களின் அண்டை நாடுகளை மட்டுமல்லாது, தொலைதூரத்தில் உள்ள நாடுகள் மீதும் செல்வாக்கு செலுத்த ராணுவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் வழிமுறைகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை ஆராய்வோம்.
'அதிகாரத்தால் ஆளப்படும்' உலகம்
டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமெரிக்க நிர்வாகம், தனது வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உத்திகளை மேற்கு அரைக்கோளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மறுவரையறை செய்து மாற்றி அமைத்து வருகிறது.
இது, இரு கட்சிகளையும் சேர்ந்த சமீபத்திய அமெரிக்க அதிபர்களிடமிருந்து மாறுபட்ட செயல்பாடுகளைக் குறிக்கிறது, இதற்கு முந்தைய அதிபர்கள் அமெரிக்காவின் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தை உலகளாவிய பார்வையில் அணுகினர்.
அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் குடியேற்றம், குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் "அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை" என்ற வெளியுறவுக் கொள்கையின் அமலாக்கமே இது என டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகம் என்பது "பலத்தால், சக்தியால், அதிகாரத்தால் ஆளப்படுவது" என அண்மையில் டிரம்பின் உயர்நிலை ஆலோசகர் ஸ்டீஃபன் மில்லர் கூறிய கருத்துகள், 1960 மற்றும் 70-களில் ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் பின்பற்றிய நடைமுறை சார்ந்த, லட்சியவாதமற்ற வெளியுறவுக் கொள்கையுடன் ஒப்பிடப்படலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிபர்களான வில்லியம் மெக்கின்லி மற்றும் தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோரின் அமெரிக்கப் பேரரசை உருவாக்கும் முயற்சிகளுடன் இதை ஒப்பிடலாம்.
மேற்கத்திய அரைக்கோளம் ஐரோப்பியத் தலையீட்டிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்ற 1823 ஆம் ஆண்டின் 'மன்றோ கோட்பாட்டை' விரிவுபடுத்திய ரூஸ்வெல்ட், அமெரிக்கக் கண்டங்கள் முழுவதையும் கண்காணிப்பதிலும் பாதுகாப்பதிலும் அமெரிக்கா தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று உறுதிபடக் கூறினார். அந்த காலகட்டத்தில் வெனிசுவேலா மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளுக்கு நிதியுதவி வழங்கிய அமெரிக்கா, ஹைத்தி மற்றும் நிகரகுவாவிற்கு அமெரிக்க வீரர்களை அனுப்பி வைத்தது.
தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்கு அருகில் உள்ள புவியியல் பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகள் மற்றும் பிரச்னைகள் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடிப்பதற்கான அவரது ராணுவ நடவடிக்கையை இதற்கு மிகத் தெளிவான உதாரணமாகச் சொல்லலாம்.
இருப்பினும் இந்த நடவடிக்கையானது, கரீபியனில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் என்று சந்தேகிக்கப்படும் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வர்த்தக வரி நடவடிக்கைகள், அந்நாடுகளின் தேர்தல்களில் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் ஆதரவளித்தல், பனாமா கால்வாய், கிரீன்லாந்து மற்றும் கனடா முழுவதையும் அமெரிக்காவுடன் இணைப்பதற்கான கோரிக்கைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவே முதன்மை நிலையில் இருக்க வேண்டும். இது நமது பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு மிகவும் அவசியமானது. அப்போதுதான், பிராந்தியத்தில் எங்கு, எப்போது தேவைப்படுகிறதோ, அங்கு நாம் நம்பிக்கையுடன் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்," என்று வெள்ளை மாளிகை அண்மையில் வெளியிட்ட தேசிய பாதுகாப்பு உத்தி அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், இந்த புதிய சர்வதேச உத்தியின் ஒரு பகுதியாக, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள் அமெரிக்காவின் அண்டை நாடுகள் மீது மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பது அடங்கியிருக்கிறது. குறிப்பாக, சீனாவின் முயற்சிகளை முறியடிப்பது முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செல்வாக்கு செலுத்துவதில் அமெரிக்கா கொண்டுள்ள இந்த புதிய கவனம், உலகளாவிய அரசியல் கவலைகளுடன் நேரடியாக மோதக்கூடும்.
கூடுதலாக, டிரம்ப் உலகம் முழுவதும் அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
அவரும், மில்லர் உள்ளிட்ட அவரது நெருங்கிய ஆலோசகர்களும், மேற்கத்திய நாகரிகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களைச் சிதைக்க முயலும் சக்திகளுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவை அனைத்தும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மூலோபாய அடிப்படைகள் புதிய "அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை" என்ற கண்ணோட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தாலும், டிரம்பின் சொந்த தனிப்பட்ட கருத்துகளும் ஆர்வங்களுமே அமெரிக்காவின் சர்வதேச செயல்பாடுகளைத் தொடர்ந்து வழிநடத்தும் என்பதை உணர்த்துகின்றன.
அமெரிக்காவின் 250 ஆண்டுகால வரலாற்றில், அதன் வெளியுறவுக் கொள்கை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலைப்பாட்டில் இருந்து, பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடும் பழைய நிலைக்கே மீண்டும் மாறிவிட்டது. இது அமெரிக்காவின் ராணுவ வலிமை மற்றும் அதன் மக்கள் மற்றும் தலைவர்களின் நலன்களைப் பொறுத்து லட்சியவாதம் மற்றும் நடைமுறைவாதத்தின் கலவையாக இருந்துள்ளது.
டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்து வருவது போல் தோன்றினாலும், நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இத்தகைய சுழற்சிகளும் மாற்றங்களும் முடிவுக்கு வந்துவிட்டன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
சீனாவின் 'மாபெரும் மீட்சி'
சீனாவின் உலகளாவிய செல்வாக்கு என்பது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடனோ அல்லது உலகின் ஒரு பகுதியுடனோ மட்டும் மட்டுப்படவில்லை. தெற்கு பசிபிக் முதல் தெற்கு மற்றும் மத்திய ஆசியா வரை, பரந்து விரிந்த மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் அவற்றுக்கு இடைப்பட்ட இடங்கள் என உலகின் ஒவ்வொரு மூலையிலும் தற்போது சீனாவின் இருப்பு உணரப்படுகிறது.
உலகளாவிய ஆதிக்கத்திற்கான தனது முயற்சியில், சீனா தனது முக்கிய திறமையான உற்பத்தித் துறையை பயன்படுத்துகிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களிலும் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் நமது பைகளில் உள்ள மின்னணுக் கருவிகள், நமது அலமாரிகளில் உள்ள ஆடைகள் மற்றும் நாம் தொலைக்காட்சி பார்க்கும் போது அமரும் நாற்காலி முதல் டிவி வைக்கும் அலங்கார அலமாரி வரையிலான அனைத்தும் அடங்கும்.
உலகின் அரியவகை கனிமங்களில் மிகப்பெரிய பங்கைத் தன்னிடம் வைத்திருக்கும் சீனா, எதிர்காலத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வலுவான நிலையில் இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள், மின்சார கார்கள், காற்றாலைக்குத் தேவையான உபகரணங்கள், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைத் தயாரிக்க இந்தத் தனிமங்கள் மிகவும் அவசியமானவை.
உலகில் உள்ள அரிய வகை கனிமங்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா சுத்திகரிக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் போது, அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகச் சீனா பதிலடி கொடுத்தது.
இதுவே கிரீன்லாந்திலும் அதற்கு அப்பாலும் கனிம வளங்களைத் தேட அமெரிக்காவை தூண்டியது. இவ்வாறு இந்த இரண்டு வல்லரசுகளும் வளங்களைப் பாதுகாப்பதற்கான போரில் ஈடுபட்டுள்ளது போல் தோன்றுகிறது.
2000-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆதிக்கம் நிறைந்த உலகில் சாதாரண ஒரு நாடாக இருந்த சீனக் குடியரசின் வளர்ச்சியையே இது காட்டுகிறது. 2026-ஆம் ஆண்டில், அதிபர் ஷி ஜின்பிங் ஓர் உலகளாவிய தலைவராக உருவெடுத்துள்ளார். வளர்ந்து வரும் ராணுவத்தின் துணையோடு வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகள் மூலம் அவர் தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் அதிகரித்து வருகிறார்.
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்து, ஒரு பெரிய தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப வல்லரசாகச் சீனா வளர்ந்த விதம், வளர்ந்து வரும் பல நாடுகளின் பொருளாதாரங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. மேற்கத்திய அரசியல் அமைப்புகளையோ அல்லது அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளையோ பின்பற்றாமலேயே ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டும் இது, 'மேற்கத்தியமயமாக்கல் இல்லாத நவீனமயமாக்கல்' என்று அறியப்படுகிறது.
இதுவொரு பயனுள்ள உத்தியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டில், 80 சதவிகிதத்திற்கும் அதிகமான நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை விட அமெரிக்காவுடன் அதிக வர்த்தகம் செய்தன. ஆனால் தற்போது, உலகின் சுமார் 70 சதவிகித நாடுகள் சீனாவுடன் தான் அதிக வர்த்தகம் செய்கின்றன.
வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வரும் சீனா, தனது 'பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பின்' ஒரு பகுதியாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இது ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை நிலம் மற்றும் கடல் வழித்தடங்கள் மூலம் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரமாண்டமான உலகளாவிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இதில் துறைமுகங்கள், ரயில்வே, சாலைகள் மற்றும் எரிசக்தி திட்டங்களில் சீனா பெருமளவில் முதலீடு செய்துள்ளது.
இது, பல நாடுகள் சீனாவிடம் அதிகளவில் கடன்படும் நிலைக்கு வழிவகுத்துள்ளது.
வெனிசுவேலாவில் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு எழுந்த மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, இது தைவான் மீது படையெடுக்க சீனாவுக்கு ஒரு தூண்டுதலாக அமையுமா என்பதுதான். ஆனால், சுயாட்சி கொண்ட அந்தத் தீவைத் தனது சொந்த விவகாரமாகவே சீனா கருதுகிறது. தைவான், தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு மாகாணம் என்றும், ஒரு நாள் அது தாய் நிலத்துடன் மீண்டும் இணையும் என்றும் சீனா கருதுகிறது.
ஒருவேளை ஷி ஜின்பிங் தைவான் மீது படையெடுக்க முடிவு செய்தால், அதற்கு அமெரிக்கா முன்னுதாரணமாக இருக்காது. தைவான் மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் தற்போதைய உத்தியையே சீனா தொடரும் என்றும், அதன் மூலம் தைவானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதே அதன் நோக்கம் என்றும் பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதிபர் ஷி ஜின்பிங்கின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் சீன தேசத்தின் "மாபெரும் மறுமலர்ச்சி"யாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது, தனது படைகளை மேற்பார்வையிட்ட ஷி, சீனாவின் எழுச்சி "தடுக்க முடியாதது" என்று கூறினார்.
சீனாவை மதித்து போற்றும் ஓர் உலகத்தை விரும்பும் சீன அதிபர், டொனால்ட் டிரம்பின் கீழ் நிலவும் தற்போதைய உலகளாவிய கொந்தளிப்பை அவர் ஒரு "மாற்றத்தின்" காலகட்டமாக சித்தரிக்கிறார்.
இதை அவர் ஒரு வாய்ப்பாகவே கருதுவார். உலகம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் இருப்பதாகவும், முன்னோக்கிச் செல்வதற்கு வழிகாட்ட உலகிற்கு உதவுவதில் சீனா சிறந்த நிலையில் உள்ளது என்பதே அவர் உலகுக்கு அளிக்கும் செய்தி.
ரஷ்யாவின் 'அருகிலுள்ள வெளிநாடுகள்'
இருபதாம் நூற்றாண்டின் "மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவு" என சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை விளாடிமிர் புதின் அழைக்கிறார்.
1990-களில் சுதந்திரம் பெற்ற முன்னாள் சோவியத் குடியரசுகளை ரஷ்யர்கள் "அருகில் உள்ள வெளிநாடுகள்" என்று அடிக்கடி அழைப்பது உண்டு. இதுகுறித்த புதினின் பார்வையை அவரது சொல்லாடல் ஆழமாக விளக்குகிறது. இந்த வார்த்தையே அந்த நாடுகளுக்கு, "தொலைதூர நாடுகளை" விட சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதற்கான உரிமை குறைவு என பலருக்கு உணர்த்துகிறது.
ரஷ்ய சித்தாந்தத்தின் அடிப்படையாக அமையும் இந்தச் சிந்தனைப் போக்கின்படி, இந்த நாடுகளில் ரஷ்யாவிற்கு நியாயமான நலன்கள் உள்ளன என்றும், அவற்றைப் பாதுகாக்க அதற்கு உரிமை உண்டு என்றும் கருதப்படுகிறது.
ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தின் எல்லை எது என்பது ஒரு தெளிவற்ற கருத்தாகும். தனது எல்லைகள் எங்கு முடிவடைகின்றன என்பதில் ரஷ்யா வேண்டுமென்றே ஒரு தெளிவற்ற தன்மையைப் பேணி வருகிறது.
"ரஷ்யாவின் எல்லைகளுக்கு முடிவே இல்லை" என்று அதிபர் புதின் ஒருமுறை கூறினார். அவரது விரிவாக்கக் கொள்கைகளை ஆதரிக்கும் சிலர், வரலாற்று ரீதியாக ரஷ்யப் பேரரசுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும், ஒருவேளை அதற்கும் மேலான பகுதிகளும் ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள் அடங்கும். இதனால்தான் யுக்ரேனில் தான் இணைத்துக் கொண்ட பகுதிகளை "வரலாற்றுப் பகுதிகள்" என்றே ரஷ்யா குறிப்பிடுகிறது.
முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் தனக்கு "நலன்கள்" இருப்பதாகக் கூறும் பிற நாடுகளின் இறையாண்மையை ரஷ்யா ஏட்டளவில் மட்டுமே மதிக்கிறது. ஆனால் நடைமுறையில், ரஷ்யாவின் பிடியிலிருந்து வெளியேற முன்னாள் நட்பு நாடுகள் முயன்றால் அவற்றின் மீது பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தைப் பயன்படுத்த ரஷ்யா ஒருபோதும் தயங்கியது கிடையாது.
யுக்ரேன் இதனை புரிந்துக் கொள்வதற்கு மிக அதிக விலை கொடுத்துள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, யுக்ரேன் அரசாங்கம் பெரும்பாலும் ரஷ்யாவின் நோக்கங்களுடன் ஒத்துப்போகும் கொள்கைகளையே பின்பற்றியது மற்றும் கருங்கடலில் உள்ள கிரைமியாவில் ஒரு பெரிய ரஷ்ய கடற்படைத் தளத்தையும் அனுமதித்திருந்தது.
சீர்திருத்த எண்ணம் கொண்ட, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான விக்டர் யூஷ்சென்கோ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, யுக்ரேனுடனான உறவில் ரஷ்யா மகிழ்ச்சியாக இருந்தது. யூஷ்சென்கோ ஆட்சிக்கு வந்த பிறகு, யுக்ரேனுக்கான எரிவாயு விநியோகத்தை 2006 மற்றும் 2009-இல் என இருமுறை ரஷ்யா நிறுத்தியது.
பொருளாதார அழுத்தம் மற்றும் அரசியல் தலையீடுகள் பலனளிக்காத போது, 2014-இல் கிரைமியாவை ஆக்கிரமித்த ரஷ்யா, அந்தப் பகுதியைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், 2022-இல் யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பையும் தொடங்கியது.
இதேபோல், சீர்திருத்தவாத அதிபர் மிகைல் சகாஷ்விலி தலைமையில் ஜார்ஜியா இருந்தபோது, 2008-ஆம் ஆண்டில் ரஷ்யா அதன் மீது போர் தொடுத்து, ஜார்ஜியாவின் நிலப்பரப்பில் தோராயமாக 20 சதவிகிதத்தை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. அப்போதிருந்து, "ஊர்ந்து செல்லும் ஆக்கிரமிப்பு" என உள்ளூரில் அறியப்படும் ஒரு நடைமுறையாக, ரஷ்ய துருப்புகள் தங்கள் நாட்டின் எல்லைச் சாவடிகளையும் முள்வேலிகளையும் ஜார்ஜிய பிரதேசத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வருகின்றன.
2008-இல் ஜார்ஜியா மீதும், 2014-ல் யுக்ரேன் மீதும் ரஷ்யா நடத்திய ஆக்கிரமிப்புகளுக்கு மேற்கத்திய நாடுகள் முறையான எதிர்வினையை ஆற்றாதது, "அருகிலுள்ள அண்டை நாடுகள்" தனக்குச் சொந்தமானவை என்ற புதினின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.
ரஷ்யாவின் அரசியல் ஆதிக்கத்தை யுக்ரேனும் ஜார்ஜியாவும் எதிர்த்ததால் ராணுவத் தலையீடுகளை எதிர்கொண்டாலும், முன்னாள் சோவியத் குடியரசுகள் சில ரஷ்யாவுடன் இணக்கமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெலாரஸ், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய ஐந்து நாடுகளின் அரசாங்கங்கள் இப்போதும் ரஷ்யப் படைகளைத் தங்கள் நாடுகளில் அனுமதித்துள்ளன.
ஜனநாயக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவை வளர்ப்பதன் மூலமும் ரஷ்யாவின் செல்வாக்கில் இருந்து விடுபடும் லட்சியத்தை அறிவித்த அரசாங்கங்கள் யுக்ரேன் மற்றும் ஜார்ஜியாவில் ஆட்சிக்கு வந்தபோதுதான் பிரச்னைகள் தொடங்கின.
அதற்குப் பிறகு நடப்பவை ஒன்றும் புதியவை அல்ல. ஒருவரின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் என்ற சாக்குப்போக்குகளின் கீழ் நடத்தப்பட்ட போர்களால் வரலாறு நிறைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும், பனிப்போருக்குப் பிறகும், நாடுகளின் அளவு அல்லது அவற்றின் ஆயுத பலத்தை பொருட்படுத்தாமல் உலகச் சமூகத்தை சமமான நாடுகளின் சமூகமாக மாற்றுவதற்குப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மீண்டும் எழுச்சி பெற்றுள்ள இந்த "செல்வாக்கு மண்டலங்கள்" என்ற கருத்து, நம் அனைவரையும் கடந்த காலத்தின் மிகவும் இருண்ட காலத்திற்கு இட்டுச் செல்லக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு