You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரும்பு தின்றால் ரத்த சர்க்கரை உயருமா? - 4 சந்தேகங்களும் விளக்கமும்
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
பொங்கல் பண்டிகையின் முக்கிய அடையாளமாக உள்ள செங்கரும்பைச் சாப்பிடுவது தமிழக மக்களின் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் இடம் பெற்றுள்ளது. பொங்கல் கொண்டாடாத பலரும் கூட, கரும்பு சாப்பிடாமல் இருப்பதில்லை. தமிழில் 'கரும்பு தின்னக்கூலியா' என்ற பழமொழி நீண்டகாலமாக பேச்சு வழக்கில் உள்ளது.
ஆனால் சமீபகாலமாக கரும்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் குறித்து பலவிதமான கருத்துகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கரும்பு சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுமென்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைச் சாப்பிடக்கூடாது என்று ஒரு கருத்து பரவியுள்ளது.
மற்றொரு புறம், கரும்பு சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும், பல் மிகவும் பலமாகும் போன்ற சாதகமான கருத்துகளும் தெரிவிக்கப்படுகின்றன. இதுகுறித்து மருத்துவ உலகம் என்ன சொல்கிறது. இந்த தொகுப்பில் காண்போம்.
கரும்பு சாப்பிடுவதால் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும் என்பது உண்மையா?
கரும்பை நேரடியாகச் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும் என்பது உண்மைதான் என்று கூறுகிறார் கோவையைச் சேர்ந்த குடலியல் மற்றும் எண்டாஸ்கோப்பி மருத்துவ சிகிச்சை நிபுணர் வி.ஜி.மோகன் பிரசாத். இதுபற்றி பிபிசி தமிழிடம் அவர் விரிவாக விளக்கினார்.
''கரும்பில் உடலுக்கு பெரிதும் நன்மை பயக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் வேல்யூ நிறையவுள்ளது. வைட்டமின் சி–யும் நிறைய இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் தன்மை அதில் உள்ளது. அத்துடன் மெக்னீசியம், கால்சியம், பொட்டாஷியம் உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் (Minerals) உள்ளன. ஒருவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடலில் உள்ள தாதுக்கள் குறைந்துவிடும். அதை கரும்பு சரி செய்து கொடுக்கும். அது மட்டுமின்றி கரும்பில் நிறைய நார்ச்சத்து இருக்கிறது.'' என்றார் மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத்.
அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''நார்ச்சத்து என்பது நல்ல பாக்டீரியாக்களை நிறைய வளர்த்தெடுக்கும் ஒரு காரணியாகும். முக்கியமாக மூளைக்கு உணவு போன்ற பாக்டீரியாவையும் (short shine bacteria) , குடலின் பாதுகாப்பை பலப்படுத்தும் பாக்டீரியாவையும் இது வளர்ப்பதற்கு உதவும். அந்த வகையில் கரும்பு இயற்கையான எனர்ஜி பூஸ்டர். செரிமான சக்தியை அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருள்.'' என்றார்.
கரும்பு, உடலில் உள்ள அமிலத்தன்மையை (Acidity) குறைக்கும் என்று கூறும் மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத், அது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்பதால் மலச்சிக்கலையும் நிவர்த்தி செய்யும் என்கிறார்.
உடலின் செரிமானத்தை அதிகரித்து சமநிலைப்படுத்துவதால் குடலுக்கும் கரும்பு நன்மை பயக்கும் என்றும், கரும்பு சாப்பிடும்போது சிறுநீர் அதிகமாக வெளியேறுவதால் சிறுநீரகத்தில் கல் உருவாவதையும் தடுக்கும் என்றும் அவர் விளக்குகிறார். கரும்பில் இருக்கும் AHA (Alpha Hydroxy Acid) என்ற அமிலம், வயதாகும்போது ஏற்படும் தோல் மாறுபாட்டைத் தடுக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
கரும்பு–கரும்பு சாறு சாப்பிடும்போது ஏற்படும் வித்தியாசம் என்ன?
இதுபற்றி விளக்கிய குடலியல் மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத், ''கரும்பில் சர்க்கரையின் 3 விதமான கூறுகளும் (glucose, sucrose, fructose) இருப்பதால், நீரிழிவு நோய் இருப்பவர்கள் அதை எடுப்பது அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை சற்று அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால் கரும்பை சாறாகக் குடிக்காமல் கடித்துச் சாப்பிடும் போது, அது சர்க்கரையின் அளவை பெரிதும் எகிறச் செய்யாமல் சீரான அளவில் (Glycemic Index) வைத்திருக்கும்.'' என்கிறார்.
கரும்பை சாறாகக் குடிக்கும்போது, பித்தம் வயிற்றிலிருந்து வெளியேறும் என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் என்றாலும், நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்கள் நேரடியாக கரும்பைச் சாறாகப் பிழிந்து சாப்பிடுவது நல்லது என்கிறார். அதேநேரத்தில் கரும்புச்சாறுடன் சில ரசாயனங்களைக் கலந்து தரும் பானங்களைக் குடிப்பது எந்த வயதினருக்குமே நல்லதில்லை என்கிறார் அவர்.
இதே கருத்தைத் தெரிவிக்கும் நீரிழிவு நோய் மருத்துவர் குமார், ''கரும்புச்சாறுக்கு நிறைய கரும்புகள் பிழிந்து தரப்படுவதால் அதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனே அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் கரும்பைக் கடித்துச் சாப்பிடும்போது, அதிகபட்சமாக ஒருவரால் ஒரு கரும்பைத்தான் சாப்பிட முடியும். அதில் வரும் சாறு குறைவாகவே இருக்கும் என்பதால் சர்க்கரை அளவு பெரிதாக அதிகரிக்காது. '' என்றார்.
''உரிய மருந்து எடுத்துக் கொண்டு உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பவர்கள், சில துண்டுகள் கரும்பு சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், எப்போதாவது அரை கிளாஸ் கரும்புச்சாறு சாப்பிட்டாலும் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் கட்டுப்பாடு இல்லாமல் 400, 500 என்ற அளவில் ரத்த சர்க்கரை அளவு இருப்பவர்கள், முற்றிலும் கரும்பைத் தவிர்த்துவிடுவது நல்லது.'' என்கிறார் மருத்துவர் குமார்.
பொதுவாகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள், அதற்காக மருந்து சாப்பிடுபவர்கள் பழச்சாறுகளை எடுப்பதற்குப் பதிலாக பழங்களாகச் சாப்பிடுவது நல்லது என்று கூறும் மருத்துவர் குமார், அதுபோலவே கரும்புச்சாறுக்குப் பதிலாக கரும்பைச் சாப்பிடும்போது அதனால் சர்க்கரை அளவு திடீரென உயர (Sugar spike) வாய்ப்பில்லை. சாறாகச் சாப்பிட்டால் அது மிக அதிகமாக இருக்குமென்றும் அவர் விளக்குகிறார்.
கரும்பு சாப்பிட்டதும் நாக்கில் ஏற்படும் உணர்வுக்குக் காரணமென்ன?
கரும்பு சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் நாக்கில் ஒருவிதமான உணர்ச்சியற்ற தன்மை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்றும், அதனால் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா என்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர் வசுமதி விஸ்வநாதனிடம் கேட்டோம்.
அதற்கு அவர், ''கரும்பில் உள்ள அமிலத்தன்மை காரணமாக, கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் எதிர்வினை ஏற்பட்டு நாக்கில் அத்தகைய உணர்வை ஏற்படுத்தும். சிலருக்கு தொண்டை வலிப்பது போன்றும், சளி பிடிப்பது போன்றும் உணர்வு ஏற்படும். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 90 சதவீதம் பேருக்கு, ஓரிரு மணி நேரங்களில் சரியாகிவிடும்.'' என்றார்.
''கரும்பு சாப்பிட்டதும் சில்லென்று ஏதாவது குடித்தால் தொண்டையில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று கரும்பு சாப்பிடும்போது, அளவுக்கு அதிகமாக சத்தம் போட்டால் தொண்டையில் கரகரப்பு உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்படலாம். அத்தகைய நேரங்களில் தொடர்ச்சியாக சுடுதண்ணீர் குடித்தால் அந்த பாதிப்பிலிருந்து உடனடியாக மீண்டு விடலாம்.'' என்றும் மருத்துவர் வசுமதி விஸ்வநாதன் தெரிவித்தார்.
கரும்பு சாப்பிடுவதால் பற்கள் பலமாகுமா, சுத்தமாகுமா?
கரும்பில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் பல்லுக்கு சற்று பலம் கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி.மோகன் பிரசாத். ஆனால் கரும்பு சாப்பிடுவதால் பல்லுக்கு பலம் கிடைக்குமென்ற கருத்து பரப்பப்பட்ட கட்டுக்கதை (myth) தவிர அதில் எந்த உண்மையும் கிடையாது என்கிறார் பல் மருத்துவ நிபுணர் பாலச்சந்தர். அதேநேரத்தில் ஒருவருடைய பல்லின் பலத்தை கரும்பை வைத்துச் சோதிக்கலாம் என்கிறார் அவர்.
பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய பல் மருத்துவர் பாலச்சந்தர், ''பொதுவாக 16 வயதிலிருந்து 35 வரையுள்ள வயதில்தான் ஒருவருடைய பல் அதிகபட்ச பலமாக இருக்கும். அதற்குப் பின் ஒவ்வொருவரின் பராமரிப்பைப் பொருத்தே, பல்லின் பலம் இருக்கும். நம்முடைய பல்லின் பலத்தைப் பார்த்தே கரும்பைக் கடிக்க வேண்டும். பலமில்லாத பல்லைப் பயன்படுத்தி, மிகவும் கஷ்டப்பட்டு கரும்பைக் கடிக்கும்போது, பல் விழுந்துவிடும் வாய்ப்பு அதிகம். கரும்பில் நார்ச்சத்து இருப்பதால் அது பல்லைச் சுத்தம் செய்வதற்கு சிறிது உதவும்.'' என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு