You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம் - களத்தில் என்ன நடக்கிறது? நேரலை
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டில் இதுவரை...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வழக்கம் போல் காளைகளை அணைந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மூன்று சுற்றுகள் முடிவடைந்திருந்த நிலையில், 8 மாடுபிடி வீரர்கள், 4 மாடு உரிமையாளர்கள், 4 காவலர்கள் & தீயணைப்பு வீரர்கள், 4 பார்வையாளர்கள் (ஒரு பெண் உட்பட) என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர்.
முதல் சுற்றில், களம் கண்ட 105 காளைகளில் 16 காளைகள் பிடிபட்டன. முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், திரைப்பட நடிகர் சூரி ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றன.
முதல் சுற்றில் தகுதி பெற்றவர்கள் விவரம்:
அகத்தியன், கருவனூர் - 3
கோகுல்ராஜ், கள்ளந்திரி - 2
அஜித், அலங்காநல்லூர் - 2
பிரசாத், மதுரை - 2
சூர்யா, வாடிப்பட்டி - 2
ஜல்லிக்கட்டை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்
அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட்டு வருகின்றனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களிக்கின்றனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர். Happy Pongal happy jallikattu" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர்.
வாடி வாசலுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்குமான தொலைவு இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக இருப்பதால் தாங்கள் சிரமப்படுவதாக காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
பரிசுகள் விவரம்
10-லிருந்து 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் முதன்மை பெறும் வீரர்கள் அனைவரும் இறுதிச்சுற்றில் விளையாடுவார்கள்.
சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பாக வழங்கப்படும் காரும், இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு இ-பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது.
அதே போன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் டிராக்டரும், இரண்டாவது சிறந்த காளைக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த காளைக்கு இ-பைக்கும் வழங்கப்படுகிறது.
இவை தவிர, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் ஏராளமான பரிசுகளை வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அறிவித்துள்ளனர்.
முதல்வர் வருகை
காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட வருகிறார். காலை 9.45 மணியளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வரும் முதல்வர், களத்தில் விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிப்பார்.
பிறகு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி அலங்காநல்லூர் முழுவதும் வளர்த்த போது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு