ஓமனில் எண்ணெய் கப்பல் விபத்து - 13 இந்தியர், 3 இலங்கையர் கதி என்ன?

ஓமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்களை காணவில்லை. அவர்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓமன் கடல் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து வருவதாக பிபிசியிடம் பேசிய இந்திய அதிகாரி தெரிவித்தார்.

ஓமனின் ராஸ் மத்ரக்கா தீபகற்பத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் பிரஸ்டீஜ் ஃபால்கன் (Prestige Falcon) என்ற எண்ணெய் டேங்கர் கவிழ்ந்ததாக ஓமன் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன 16 பணியாளர்களில் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எண்ணெய் கப்பல் யாருடையது?

கொமரோஸ் கொடியுடன் கூடிய அந்த கப்பல் ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. கப்பல் இன்னும் தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மைய அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்துள்ளனர்.

இந்த மையத்தை நடத்தும் ஓமானின் பாதுகாப்பு அமைச்சகம், டேங்கரில் இருந்த பொருட்கள் கடலில் கலந்ததா என்பது போன்ற பிபிசியின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

marinetraffic.com இணையதள தகவல்படி, 117.4 மீட்டர் நீளமுள்ள அந்த எண்ணெய் டேங்கர் 2007-ம் ஆண்டில் கட்டப்பட்டது. கப்பல் கவிழ்ந்த பகுதி ஓமனில் உள்ள துக்ம் மாகாணத்திற்குள் வருகிறது. அங்கு ஓமனின் பெரிய தொழில்துறை துறைமுகம் உள்ளது.

கப்பல் விபத்துகளில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

உலகளாவிய கடல்சார் தொழிலாளர்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இதுபோன்ற விபத்துகள் அல்லது கடற்கொள்ளையர்களால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஏப்ரல் மாதம் ஈரான் துருப்புகள் ​​இஸ்ரேலுடன் தொடர்பு கொண்ட MSC ஏரீஸ் என்ற வணிகக் கப்பலை சிறைபிடித்த போது, அதில் 17 இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டில், ஒரு கப்பலின் 16 இந்திய பணியாளர்கள் ஈக்குவடோரியல் கினி கடற்படையால் 9 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)