You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எம்எச்17 மலேசிய விமானம்: கொடிய நிகழ்வு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் 4 முக்கிய கேள்விகள்
- எழுதியவர், ஓல்கா இவ்ஷினா
- பதவி, பிபிசி ரஷ்யன்
ஜூலை 17, 2014 அன்று மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் (MH17) ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பற்றிய நான்கு முக்கிய கேள்விகள் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது வரை பதிலளிக்கப்படவில்லை.
'எம்எச் 17' விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, யுக்ரேனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியில் ஏவுகணையால் தாக்கப்பட்டது, அந்த நேரத்தில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த கிளர்ச்சியாளர் குழுக்களுக்கும் யுக்ரேனிய ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தில் 80 குழந்தைகள் உட்பட 283 பயணிகள் மற்றும் 15 பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து டச்சு அதிகாரிகள் குற்றவியல் விசாரணையைத் தொடங்கினர் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு சாட்சியங்களை நேர்காணல் செய்தனர். நூற்றுக்கணக்கான ஆதாரங்களை ஆய்வு செய்தனர். விபத்திற்கு ரஷ்யா பொறுப்பேற்க முடியாது என்று மறுத்தது, ஆனால் புலனாய்வாளர்கள் ரஷ்ய அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருப்பதை கண்டறிந்தனர்.
இந்த கொடிய நிகழ்வுத் தொடர்பான முக்கிய கேள்விகள்:
எம்எச் 17 விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக தண்டிக்கப்பட்டவர் யார்?
2022 ஆம் ஆண்டு ஹேக் மாவட்ட நீதிமன்றம் (The Hague) பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் மூன்று பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
மூவரும் முன்னாள் ரஷ்ய பாதுகாப்பு சேவை (FSB) அதிகாரிகள். அவர்கள் யுக்ரேனின் கிழக்கில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத பகுதியான `டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு (DPR) அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவும் இருந்தனர்.
'இகோர் கிர்கின்’ என்பவர் `டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு’ பகுதியின் முன்னாள் 'பாதுகாப்பு அமைச்சராக' இருந்தார், `செர்ஜி டுபின்ஸ்கி’ அதன் ராணுவ உளவுத்துறையின் தலைவராக இருந்தார். `லியோனிட் கிராவ்சென்கோ’ டுபின்ஸ்கியின் கீழ் பணியாற்றினார்.
நான்காவதாக ஒரு நபரும் குற்றம் சாட்டப்பட்டார், ஆனால் தண்டனை கொடுக்க அவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் பின்னர் முடிவு செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, இருப்பினும் அவர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
கிர்கின் மற்றும் டுபின்ஸ்கி ஆகிய இருவரும் ரஷ்ய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தபோதிலும், விபத்து பற்றிய சர்வதேச விசாரணைக்கு மாஸ்கோ ஒத்துழைக்கவில்லை.
இகோர் கிர்கின் ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் மீது முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டுகள் போடப்பட்டது.
முன்னாள் ரஷ்ய பாதுகாப்பு சேவை அதிகாரியான இகோர் கிர்கின், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் போது ரஷ்ய ராணுவத் தலைமையின் திறமையின்மையை குறிப்பிட்டு குற்றம் சாட்டினார். மேலும் ஜனவரி 2024 இல் ராணுவம் பற்றி பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிப்ரவரி 2022 படையெடுப்பு தொடங்கியவுடன் ரஷ்ய ராணுவத்தை விமர்சிப்பது ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்பட்டது.
ஏவுகணையை ஏவியது யார்?
டச்சு தலைமையிலான கூட்டு புலனாய்வுக் குழு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஆய்வு செய்தது. நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர். தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்து ஆதாரங்கள் ஆக்கினர்.
`டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு’ பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து, `பக் விமான எதிர்ப்பு ஏவுகணை’ மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை நிரூபிக்க இந்த ஆதாரம் அவர்களுக்கு உதவியது. `பக் லாஞ்சர்' (buk launcher) ரஷ்யாவிலிருந்து சப்ளை செய்யப்பட்டிருந்தது.
அதே சமயம், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூவரில் யாரும் ஏவுகணையை ஏவும் பொத்தானை அழுத்தவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
பெல்லிங்கேட் புலனாய்வு இணையதளம், இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த `புக் லாஞ்சர்’ என்பது ரஷ்யாவின் 53-ஆவது வான் பாதுகாப்புப் படைப் பிரிவின் மூன்றாவது பட்டாலியனுக்கு சொந்தமானது என்று கூறியது- இது சாத்தியமான குற்றவாளிகளின் எண்ணிக்கையை சுமார் 30 நபர்களாகக் குறைத்தது. அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் 17 ஜூலை 2014 அன்று பக் லாஞ்சரை இயக்கியிருப்பார்கள் என்று கருதப்பட்டது.
டச்சு புலனாய்வாளர்கள் இந்த படைப்பிரிவின் தளபதி கர்னல் செர்ஜி முச்கேவை விசாரிக்க வேண்டுமென ரஷ்ய அதிகாரிகளிடம் கோரினர்.
விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், ரஷ்யா எந்தக் கோரிக்கைக்கும் பதிலளிக்கவில்லை.
தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்து ஆய்வு செய்தபோது அதில் பேசிய மற்றொரு நபர் ரஷ்ய பாதுகாப்பு சேவை அதிகாரி, கர்னல் ஜெனரல் ஆண்ட்ரே புர்லாகா ஆவார். ரஷ்யாவில் இருந்து யுக்ரேனின் கிழக்கே பக் அமைப்பை மாற்றுவதில் புர்லாகாவின் பங்கீடு இருக்கலாம் என்று உரையாடல்களின் சான்றுகள் தெரிவிக்கின்றன.
2014-2015 இல் யுக்ரேனின் கிழக்கில் ஆயுத மோதலின் தீவிரமான கட்டத்தில், ஜெனரல் புர்லாகா ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான "ரஷ்யாவின் ஹீரோ" - மூலம் கெளரவிக்கப்பட்டதாக பிபிசி நிறுவியது.
ரஷ்ய அதிபர் புதினின் பங்கு என்ன?
பிப்ரவரி 2023 இல், மூன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, புலனாய்வு அதிகாரிகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கில் யுக்ரேன் மோதல் விவகாரம் மற்றும் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் நேரடியாக தலையிட்டதாகக் கூறினர்.
இந்த கூற்றுக்கு ஆதாரமாக அவர்கள் இரண்டு இடைமறித்த தொலைபேசி அழைப்புகளை சுட்டிக்காட்டினர். அந்த இரண்டு அழைப்புகளிலும் யுக்ரேனுக்கு ரஷ்ய பக் வான் பாதுகாப்பு ஏவுகணையைக் கொண்டு வருவது பற்றிய உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய பக் ஏவுகணையை கொண்டு வரும் முடிவு "மிக உயர்ந்த ஆளுமையால்" எடுக்கப்பட்டது என்று குறிப்பிடுகின்றன, இது அதிபர் புதினைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம்.
ஒரு செய்தியாளர் சந்திப்பில், டச்சு தலைமையிலான கூட்டு புலனாய்வுக் குழுவின் (JIT) புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில் : "புதின் நேரடியாக பக் தொடர்பான முடிவுகளில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆதாரங்கள் முழுமையான, மறுக்க முடியாத ஆதாரங்களாக இல்லை” என்றனர்.
`ரஷ்ய அரச தலைவர்’ என்ற அந்தஸ்து டச்சு சட்டத்தின் கீழ் புதினுக்கு `இம்யூனிட்டி’ (immunity) வழங்கியதாகவும், அவர் பதவியில் இருக்கும் போது அவரை தேசிய நீதிமன்றத்தால் விசாரிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அந்த நேரத்தில் ரஷ்யா விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்றும் இதனை புதினுக்கு சாதகமான நிலையாக பார்க்கப்படாது என்றும் கருத்து தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
2020 ஆம் ஆண்டில், டச்சு அரசாங்கம் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எம்எச்17 விமானத்தின் 298 பயணிகள் மற்றும் பணியாளர்களின் இறப்புக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்றும், அத்துடன் சம்பவத்தை விசாரிக்க மறுத்ததாகவும் குறிப்பிட்டது.
இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்த பேரழிவு சம்பவத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகித்தது என்றும், விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக ரஷ்யா தவறான தகவல்களை பரப்பி வருவது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சிவில் உரிமைகளை பாதிப்பதாகவும் டச்சு அரசாங்கம் வாதிடுகிறது.
ரஷ்யா தனக்கு எதிரான அனைத்து குற்றசாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறது. எம்எச்17 சம்பவம் பற்றி தீவிரமாக பேசி வருகிறது.
அந்த விமானம் யுக்ரேனிய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் விமானத்தில் இருந்த பயணிகள் விமானம் தரையில் வீழ்வதற்கு முன்பே இறந்துவிட்டதாகவும் கூறி வருகிறது.
ஒருவேளை `மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய மாநாடு’ (ECHR) வழக்கில் ரஷ்யா தோல்வியடைந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதை கட்டாயப்படுத்தலாம். நடைமுறையில், அத்தகைய முடிவு எடுக்கப்பட்டால் சிறந்த அடையாளமாக இருக்கும்.
ஆனால், யுக்ரேனில் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரஷ்ய பாராளுமன்றம் "ECHR முடிவுகளை செயல்படுத்தாதது" என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இது 15 மார்ச் 2022 முதல் நடைமுறைக்கு வந்தது.
அதே நேரத்தில், எம்எச்17 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் ரஷ்யாவில் வேறு ஒரு அரசாங்கம் அமைந்து, அத்தகைய தீர்வில் ஈடுபடுவதற்கான அரசியல் முடிவை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)