You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியாண்டர்தால் மனிதர்களுக்கு இரக்க குணம் இருந்ததா? 40,000 ஆண்டுகள் முன் வாழ்ந்த சிறுமியின் காது எலும்பு சொல்வது என்ன?
ஒரு சமூகத்தில் வாழ்வதும், மற்றவர்களைப் பராமரிப்பதும் நம் இனம் வாழ்வதற்கு மட்டும் வழிவகை செய்யவில்லை. பல நூறு கோடி ஆண்டுகளாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடையவும் உதவியுள்ளன.
பல ஆராய்ச்சியாளர்கள் கோட்பாட்டு அளவில் இதை நம்பிவந்திருந்தாலும், ஸ்பெயின் நாட்டில் அரிய புதைபடிவமான ஒரு சிறிய எலும்பு மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றன.
1989-ஆம் ஆண்டு ஸ்பெயினின் வேலன்சியா நகரில் அமைந்திருக்கும் கோவா நேக்ரா குகையில், புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் 5 செ.மீ அளவு நீளமான ஓர் எலும்புத் துண்டைக் கண்டெடுத்தனர். நியாண்டர்தால் காலத்தைச் சேர்ந்த 6 வயது மிக்க நபர் ஒருவரின் காது எலும்பு அது.
இந்த எலும்பு ஆணுடையதா, பெண்ணுடையதா என்பது நிரூபிக்கப்பட முடியாத சூழலில், ஆய்வுக்குழுவினர் அது 'டீனா’-வின் எலும்பு என்று குறிப்பிடுகின்றனர்.
நியாண்டர்தால் மனிதர்களின் காது எலும்பு கிடைப்பது அரிய நிகழ்வாகும். பொதுவாக மண்டையோடு, பல் அல்லது கால் எலும்புகள் மட்டுமே கிடைக்கும். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் மனித படிமங்கள் தொல்லியல்சார் முக்கியத்துவங்களைக் கொண்டிருந்தாலும், இந்தக் காது பகுதி மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
காது எலும்பில் இருந்தது என்ன?
சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிவைச் சந்தித்த நியாண்டர்தால் என்ற மனித இனம் சில நூறாயிரம் ஆண்டுகள் ஐரோப்பாவில் வாழ்ந்தது. இவர்கள் நவீன மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள்.
ஹோமோ சேப்பியன்ஸ் (நவீன மனிதர்கள்) மற்றும் நியாண்டர்தால்கள் (ஹோமோ நியாண்டர்தலென்சிஸ்) மனித இனத்தின் தனித்துவமான இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்களாகப் பிறந்து நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
குகையில் கண்டெடுக்கப்பட்ட எலும்பானது அப்பர் ப்ளீஸ்டோசீன் (Upper Pleistocene) காலத்தைச் சேர்ந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அதன் காலம் 1.2 லட்சம் ஆண்டுகள் முதல் 40,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது.
"இந்த எலும்பில் நடத்தப்பட்ட சி.டி.ஸ்கேன் முடிவுகள் ஆச்சரியமான பல தகவல்களை வழங்கியுள்ளது. நியாண்டர்தால் காலத்து காது எலும்பில் ஏற்பட்ட பிறப்புக் காயங்கள் டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) நோயுடன் ஒத்துப்போகின்றன. வாழ்நாள் முழுவதும் உடல் நிலை சரியில்லாத நபராக வாழ்ந்திருப்பார் அவர்," என்று பேராசிரியர் எமெரிடஸ் வலேண்டின் வில்லவெர்டே போனில்லா கூறுகிறார்.
இவர் வேலன்சியா பல்கலைக்கழத்தில் வரலாற்றுக்கு முந்தைய, தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்றுத் துறையில் பணியாற்றி வருகிறார். கோவா நேக்ரா அகழ்வாராய்ச்சியை வழி நடத்தியவர் அவர்.
டீனாவின் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள்
டீனாவின் காது எலும்பில் காணப்படும் காயங்கள், அவருக்கு ஓடிடிஸ் (otitis -காது வீக்கம்), காது கேளாமை, நடப்பது மற்றும் அவரை சீராக வைப்பதில் பிரச்னை இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது என்கிறார் வில்லவெர்டே.
டீனா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் தரும் பிரச்னைகளைச் சந்தித்தார். அவரால் அவற்றைச் சரி செய இயன்றிருக்காது என்றும் அவர் கூறுகிறார்.
டவுன் சிண்ட்ரோம் என்பது மரபணு தொடர்பான பிரச்னையாகும். பொதுவாக, இந்தப் பிரச்னைக்கு ஆளாகும் நபர்கள் கூடுதலாக ஒரு குரோமோசோம்-ம்-ஐ கொண்டிருப்பார்கள். அது அவர்களின் சிந்திக்கும் திறனை பல்வேறு வகையில் பாதிப்பதோடு, இதயம், மற்றும் மற்ற உடல் உறுப்புகளில் பிரச்னைகளை ஏற்படுத்தும். செரிமான பிரச்னைகளை உண்டாக்கும்.
இருப்பினும், 6 வயது வரை டீனா உயிருடன் இருந்திருக்கிறார். 6 வயது என்பது, வரலாற்றுக்கு முந்தைய மக்கள் தொகையில் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளின் ஆயுட்காலத்தைக் காட்டிலும் மிக அதிகம்.
ஒப்பீட்டளவில், 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1920-40-களுக்கு இடைப்பட்டக் காலத்தில், இந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகபட்சமாக 9 முதல் 12 வயது வரை தான் உயிர் வாழ்ந்தனர்.
டீனாவின் சிறிய எலும்பை ஆய்வுக்கு உட்படுத்திய அல்கலா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு, "டீனா உயிர்வாழத் தேவையான கவனிப்பை, ஒரு தாயால் மட்டும் வழங்கியிருக்க இயலாது. அவர் குழுவின் மற்ற உறுப்பினர்களின் உதவியை குழந்தையின் பராமரிப்புக்காக அவரது தாய் நாடியிருக்கலாம்," என்று குறிப்பிடுகின்றனர் வில்லவெர்டே.
நியாண்டர்தால்கள், வேட்டையாடி உணவு சேகரிக்கும் குழுவினர். அவர்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். "அந்த குழந்தைக்கு அத்தகைய சிறப்பு பராமரிப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், ஆறு வயது வரை உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை," என்று வில்லவெர்டே குறிப்பிடுகிறார்.
'சயின்ஸ் அட்வான்ஸ்' என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்பட்டன.
நடத்தையுடன் தொடர்புடையதா?
மாற்றுத்திறனாளிகளுக்கு நியாண்டர்தால்கள் சிறப்பு கவனம் செலுத்துவது பலகாலமாக அறிந்த ஒன்றே. ஆனால் அது அவர்கள் நடத்தையுடன் தொடர்புடையதா?
சில ஆய்வாளர்கள் "கவனிப்பைப் பரிமாறிக்கொள்ளும் திறன் கொண்ட தனி நபர்கள் இடையே இது இயல்பாக நிகழ்ந்தது," என்று நம்புகின்றனர். மற்றவர்கள், பராமரிப்பு இரக்க உணர்வால் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். இது உயர்ந்த தகவமைப்பு கொண்ட சமூக நடத்தையுடன் தொடர்புடையது என்று மற்றவர்கள் நம்புகின்றனர்.
ஹெச்.எம் மருத்துவமனையின் எவல்யூஷனரி ஓட்டோஅகவுஸ்டிக்ஸ் (Evolutionary Otoacoustics) துறை மற்றும் அல்கலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மெர்சிடிஸ் கான்டே வால்வெர்டே அடாபுர்காவிலிருந்து பிபிசி முண்டோவிடம் பேசினார். இவர் டீனாவின் சிறிய எலும்பைப் பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்களின் குழுவை வழிநடத்தினார்.
"பல ஆரோக்கியக் குறைபாடுகளைக் கொண்ட நியாண்டர்தால்களின் புதைபடிவங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் இளைஞர்களுடையது. இந்தக் குறைபாடுகள், காயங்கள், உடல்நலக்கோளாறு, உடைந்த எலும்புகள் மற்றும் இதர பிரச்னைகள் அவர்கள் வளரும் போது ஏற்பட்டது. பிறக்கும் போதே அவர்களுக்கு இந்த பிரச்னைகள் இல்லை," என்று கூறுகிறார் அவர்.
"உனக்கு உதவ வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது என்ற தன்னலமற்ற நடத்தைகளை (altruistic behavior) இந்தக் குழுவினர் கொண்டிருந்தனரா அல்லது, 'நீ எனக்கு உதவினாய் அல்லது வருங்காலத்தில் உதவுவாய் என்பதால் நான் உனக்கு உதவுகிறேன்' என்று உதவினார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.
நம்மைப் போன்றே தன்னலமற்றவர்கள்
டீனாவின் கதை வித்தியாசமானது. ஏனெனில் அவர் ஒரு பெண். அவர் இந்தப் பிரச்னைகளுடன் பிறந்தார். இருப்பினும் அவர் 6 வயது வரை உயிர்வாழ்ந்தார். "அவருக்கு நிறைய உதவிகள் செய்து நன்றாக கவனித்துக் கொண்டனர் என்பதையே இது காட்டுகிறது. இருப்பினும், அவர் ஒரு பெண். அவரிடம் இருந்து எந்த விதமான பிரதிபலனையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்," என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
உதவிக்குப் பதிலுதவி செய்ய மிகவும் குறைவான வாய்ப்புகளை மட்டுமே குழந்தைகள் கொண்டிருப்பதால், தீவிரமான நோய்களுடன் கூடிய குழந்தைகள் பற்றிய ஆராய்ச்சியானது மிகவும் ஆர்வமூட்டக்கூடியது.
நியாண்டர்தால்கள் தன்னலம் அற்றவர்களா?
நம் இனத்தின் வளர்ச்சி பற்றி ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், நியாண்டர்தால்கள் தன்னலமற்றவர்கள் அல்லது நவீன மனிதர்கள் போன்று தன்னலமற்றவர்கள்.
டவுன் சிண்ட்ரோமுடன் பிறந்த மனிதக்குரங்கு ஒன்று 23 மாதங்கள் உயிர்வாழ்ந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. அந்தக் குரங்குக்குத் தேவையான உதவிகளை அதன் அம்மா மற்றும் ஒரு மூத்த பெண் குரங்கும் செய்து வந்தன.
தன்னுடைய குட்டிகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் அம்மாவுக்கு பெண் குரங்கு உதவுவதை நிறுத்த, அந்த 23 மாத மனிதக் குரங்கு இறந்து போனது.
நம்மைப் போன்றே நியாண்டர்தால்களும் இரக்கம் மிக்கவர்கள். ஆனால் நம்மிரு இனங்களும் இருவேறு பரிணாம வளர்ச்சிக் கோடுகளைக் கொண்டிருக்கின்றோம். "நம்முடைய மூதாதையர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். அதனால் தான் அவர்களிடம் இருந்து பிரிந்த இரண்டு இனங்களிடமும் இந்தப் பண்பு காணப்படுகிறது," என்று கான்டே வால்வெர்டே குறிப்பிடுகிறார்.
நியாண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களாகப் பிரிந்த மூததை மனித இனம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்துள்ளனர்.
டீனா வாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் டீனாவுக்கு நேரடியாக உதவியிருக்கலாம், அல்லது அவரது அம்மாவுக்கு உதவி செய்து டீனாவுக்கு அளிக்கும் பராமரிப்புப் பணியில் இருந்து சிறிது நேரம் விடுவித்திருக்கலாம். நியாண்டர்தால்கள் நம்மைப் போன்றவர்கள், என்கின்றனர் இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள்.
நியாண்டர்தால்களிடையே இருந்த பராமரிப்பு குணமானது பரந்த, அதே சமயம் சிக்கலான சமூகப் பின்னணியை கொண்டது. கவனிப்பு என்பது கூட்டாக குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதைப் போன்ற சிக்கலான சமூக யுத்தியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பினை குழந்தைகள் மீதான ஆராய்ச்சி வழங்கியுள்ளது.
புதைபடிவப் பொருட்களை வைத்துமட்டுமே, நியாண்டர்தால்கள் இதர நபர்களை கவனித்துக் கொண்டனர் என்று யூகிக்க முடியாது என்றும், வெறும் யூகங்கள் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எட்டப்பட்டதாகவும் விமர்சனங்களும் எழுகின்றன. ஆனால், சமீப காலங்களில் புதைபடிவ ஆதாரங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் மனிதர்களிடையே ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும் குணம் இருப்பதை நிரூபிப்பதற்கான மூலமாக இருப்பது அதிகரித்து வருகிறது என்றும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ உடல் நலப் பிரச்னைகளைச் சந்திக்கும் குழு உறுப்பினரை கவனித்துக் கொள்ள மனிதர்கள் ஏன் நேரம் செலவிடுகின்றனர், அக்கறை காட்டுகின்றனர் என்பதைத் தீர்மானிக்கிறது ஹோமினிட்ஸ் எனும் ஆதி மனிதர்கள் மீதான உயிர் தொல்லியல் ஆராய்ச்சி.
எவல்யூஷனரி ஓட்டோஅகவுஸ்டிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் புதைப்படிம தொல்லியல் துறை இணை இயக்குநர் இக்னாசியோ மார்டினெஸ் மெண்டிஸாபால், "இந்தக் கண்டுபிடிப்பு அழகானது. ஏனெனில் 'டவுன் சிண்ட்ரோம்' கொண்ட மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. நாங்கள் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் பங்காற்றியுள்ளோம். எங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது. எங்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ள முடியும். நாங்கள் எப்போதும் இருந்தோம். நாங்கள் எப்போதும் பயணித்துக் கொண்டிருந்தோம், என்று இந்தப் புதைபடிவங்கள் சொல்கின்றன," என்று அவர் கூறுகிறார்.
நுட்பமான, ஆழமான, அறிவார்ந்த, பரிணாம உயிரியல் பிரச்னை ஒன்று இருக்கிறது: சமூகக் குழுவில் விளிம்பு நிலையில் உள்ள நபர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனித நடத்தை எங்கே, எப்போது தோன்றியது என்ற கேள்வி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)