You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை என்னென்ன?
கர்ப்ப கால நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவ உலகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் இதய நோய்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என நிபுணர்கள் முன்பு கூறிவந்தனர்.
இந்நிலையில், இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் இறப்பதைத் தடுக்கும் வகையில், இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தது.
சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் 23 வயதான கர்ப்பிணி ஒருவர் பிரசவத்தின் போது இதய செயலிழப்பால் உயிரிழந்தார். முன் கூட்டியே அவர் இதய குறைபாட்டை கண்டறிந்திருந்தால் இறப்பை தடுத்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கர்ப்ப காலத்தில் முன்கூட்டியே கண்டறியப்படாத இத்தகைய இதய நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு ஐ.சி.எம்.ஆர்-யின் இந்த ஆராய்ச்சி உதவும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதில், கர்ப்ப காலத்தில் இதய நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுத்தல், முன்கூட்டியே இதய நோய்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை ஆராயப்பட உள்ளது.
கர்ப்ப கால இறப்புகளை தடுக்க இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் முக்கியமானதாக கருதப்படுகிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கர்ப்பிணி பெண்கள் இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிவது எப்படி, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்ன என்பன குறித்து, சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் பிபிசி தமிழிடம் பேசினார்.
“முன்பு தீவிரமான இதய நோய்கள் உள்ளவர்கள், பின்னாளில் வளர்ந்து கருத்தரிப்பது மிகவும் கடினம். மருத்துவ துறையின் வளர்ச்சியால் இதய நோய்கள் உள்ளவர்களும் கர்ப்பமடைகின்றனர். இதய நோய்கள் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்தை சிக்கலாக்குகின்றன” என தெரிவித்தார்.
பிறவியிலேயே ஏற்படும் இதய நோய்கள் குறித்துப் பேசிய மருத்துவர் சாந்தி, “இதயத்தின் சுவர்களுக்கிடையே குழந்தை பருவத்திலேயே சிலருக்கு ஓட்டை இருக்கும். இதுதவிர, மிக தீவிரமான இதய நோய்களும் உண்டு. சயனோசிஸ் பிரச்னை (ரத்தத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை) இருந்தால் உடல் நீலமாகிவிடும். இதனால், மூச்சுவிடுவது கூட சிரமமாகிவிடும்” என்றார்.
பிறவி இதய நோய்களை தவிர்த்து ருமாட்டிக் இதய நோய் என்பது மூட்டு வீங்கி அதனால் இதயத்தில் பாதிப்பு ஏற்படுவது என்கிறார் அவர். “12-13 வயதில் கூட இது ஏற்படலாம். இதனால் இதயத்தின் அயோடிக் வால்வு சுருங்குவது உள்ளிட்டவை ஏற்படும்” என்றார்.
கர்ப்பமாக உள்ள பெண்கள் இத்தகைய இதய நோய்களை முன்பே கண்டறிந்திருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பர் எனக்கூறும் அவர், ஆனால், பல சமயங்களில் கர்ப்பமாகும் போது மூச்சு வாங்குவது உள்ளிட்ட பிரச்னைகளுக்காக மருத்துவர்களிடம் சென்று பரிசோதிக்கும் போதுதான் இத்தகைய பிரச்னைகள் தெரியவரும் என்றார். கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் இப்பிரச்னைகளை தீவிரமாக்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார்.
சாதாரணமாகவே கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு இயற்கையாக உடலில் சில மாற்றங்கள் நிகழும்.
“அவற்றில், ரத்தத்தின் அளவு அதிகமாகும். உதாரணத்திற்கு, சாதாரணமாக 5 லிட்டர் என்றால், கர்ப்பிணிகளுக்கு 5.5 லிட்டர் இருக்கும். இதய துடிப்பு அதிகமாகுதல், ரத்த அழுத்தம் (5-10 மி.மீ அதிகமாகும்) ஆகியவற்றில் சிறிதாக மாற்றங்கள் இருக்கும். இத்தகைய பிரச்னைகள் கர்ப்பிணிகளிடையே வழக்கமானது என்பதால், இதய நோயாளிகளை கண்டுபிடிப்பது கடினம். அதனால், சென்னை மாதிரியான நகரங்களில் கர்ப்பிணிகளுக்கு எக்மோ, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்வது அரசு மருத்துவமனைகளிலேயே உண்டு” என்கிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
கர்ப்பிணிகள் இதய நோய்கள் உள்ளதை கண்டறிவது எப்படி?
- அதிகமான அசதி, சிறிய வேலை செய்தாலே சோர்வு ஏற்படுதல்
- இருமல்
- நெஞ்சு வலி
- மூச்சு வாங்குதல்
- படுத்தால் மூச்சு வாங்குதல்
- இரவில் இருமல்
- இருமலில் லேசாக ரத்தம் வருதல்
- கால் வீங்குதல்
நியூயார்க் இதய சங்கம் இந்த அறிகுறிகளை வகைப்படுத்தியுள்ளது. இந்த அறிகுறிகள் லேசாக இருந்தால் ஸ்டேஜ் 1, அன்றாட வேலைகளின் போது அறிகுறிகள் ஏற்பட்டால் ஸ்டேஜ் 2, எழுந்திருக்கவே முடியாமல் படுக்கையிலேயே கிடந்தால் ஸ்டேஜ் 3.
“இதைவிட தீவிரமாக ஸ்டேஜ் 4 ஏற்பட்டால், கர்ப்பிணிகள் எந்த வாரமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். லேசாக இருந்தால் புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார், மருத்துவர் சாந்தி.
இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?
இதய நோய் உள்ள கர்ப்பிணிகள் சாதாரண ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை எடுக்கக் கூடாது. அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவக் கல்லூரிகளில்தான் தங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
மகப்பேறு மருத்துவர், மருத்துவர்கள், இதய மருத்துவர் உள்ளிட்ட நிபுணர்கள் அங்கு இருக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதய நோய் இருக்கும் போது ரத்த சோகை இருக்கக் கூடாது. ரத்த சோகை இருந்தாலும் மூச்சு வாங்கும். இதனாலும் இதய துடிப்பு அதிகமாகும். இதனால் இதய நோய் தீவிரமாகும். எனவே, ரத்தசோகையை கட்டுப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனாலும் இதய படபடப்பு ஏற்படும்.
அதிகமாக உடற்பயிற்சி செய்வது, மாடிப்படி ஏறுவது கூடாது. அதிக வேலைகளை செய்யக் கூடாது. ஏனெனில் இது மிகவும் ஆபத்து நிறைந்த கர்ப்பமாகும்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ரத்தப் பரிசோதனைகள், எக்மோ, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை தவறாமல் எடுக்க வேண்டும், அதில் அலட்சியம் கூடாது.
ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தால் அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
புகைப் பழக்கம், மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
கர்ப்ப காலத்தின் ஐந்தாம் வாரத்தில் இதய நோயின் அறிகுறிகள் லேசாக தொடங்கி 32வது வாரத்தில் அதிகமாகும். ஏனெனில், 32ம் வாரத்தில் ரத்தத்தின் அளவு உச்சக்கட்டத்தை அடையும். அப்போது கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்காவிட்டால் இதயம் செயலிழந்து இறப்பு ஏற்படலாம்.
மிகவும் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகமாக சாப்பிடாமல் பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே சாப்பிட வேண்டும். சரிவிகித உணவை கடைபிடிக்க வேண்டும்.
கஷ்டப்பட்டு மலம் கழிக்கக் கூடாது. சுடுதண்ணீரை குடிக்க வேண்டும்.
பிரசவத்தின் போதும் அதற்கு பின்னரும் என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பமாகி ஐந்து வாரங்கள், பிரசவத்திற்கு முன்பான ஐந்து வாரங்கள், பிரசவத்திற்கு பிறகு ஐந்து மணிநேரம், ஐந்து நாட்கள், ஐந்து வாரங்கள் மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
அவர்களின் நாப்கின் முதற்கொண்டு தனிநபர் சுகாதாரத்தைக் கடைபிடிக்க வேண்டும். தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும்.
ஆபத்துகள் என்ன?
“சில குறிப்பிட்ட இதய நோய்களிலும் தீவிரமான இதய நோய்களில் மட்டுமே கர்ப்பத்தை தொடரக் கூடாது என்பதால், முன்பே கருக்கலைப்பு செய்ய வேண்டும். அதுவும் தாமதமாக வந்தால் கருக்கலைப்பு செய்ய முடியாது.
கர்ப்பமாக இருக்கும்போது கூட இரண்டாம் மூன்று மாத காலத்தில் (second trimester) சில முக்கியமான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மற்றும் அவசர இதய அறுவை சிகிச்சைகளை செய்கின்றனர்” என்கிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
கர்ப்ப காலத்தில் இதய நோய் ஆபத்துகள் குறித்து சென்னையை சேர்ந்த மற்றொரு மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி கூறுகையில், “மைட்ரல் ஸ்டீனோசிஸ், ஏஎஸ்டி (ஏட்ரியல் செப்டல் குறைபாடு), விஎஸ்டி (வெண்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு) போன்ற இதய நோய்களுடன் சிலர் பிறப்பார்கள். ஏ.எஸ்.டி இருப்பவர்களுக்கு சுகப்பிரசவம் கூட ஆகியிருக்கிறது. ஆனால், வி.எஸ்.டி இருப்பவர்களுக்கு இதயத்தில் எவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்” என்றார்.
அதேபோன்று, மைட்ரல் ஸ்டீனோசிஸ் இருப்பவர்களுக்கு மைட்ரல் வால்வு சுருங்கியிருக்கும். முன்பே இதற்கு அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஆபத்தில்லை எனக்கூறும் மருத்துவர் நித்யா, இல்லையென்றால் அவர்களின் கர்ப்பம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
மேலும், "அயோர்டிக் வால்வு ஸ்டீனோசிஸ் இருந்தாலோ, சயனோட்டிக் இதய நோய் இருந்தாலோ இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மார்பான் சிண்ட்ரோமும் இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு" என்கிறார் அவர்.
இதுதவிர, கர்ப்ப காலத்தில் மோசமாக ரத்த சோகை இருந்தால், புதிதாகவே இதயப் பெருக்கம் (heart enlargement) பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)