You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துப்பாக்கி குண்டு நெருங்கி வந்த விநாடியில் என்ன நடந்தது? படுகொலை முயற்சிக்குப் பிறகு டிரம்ப் முதல் பேட்டி
- எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) தனது மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக நேர்காணல் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அந்த நேர்காணலில், "அதிர்ஷ்டமோ அல்லது கடவுளின் செயலோ, ஏதோ ஒன்றால் நான் காப்பாற்றப்பட்டு விட்டேன். நான் இறந்திருக்க வேண்டியவன், நான் இங்கே இப்படி அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்க முடியாது" என்று கூறினார் டிரம்ப்.
மேலும், "என்னால் நம்ப முடியாத விஷயம் என்னவென்றால், நான் எனது தலையை சரியான நேரத்தில் சரியான திசையில் திருப்பினேன் என்பது தான். எனது காதை உரசிச் சென்ற தோட்டா, என்னை எளிதாகக் கொன்றிருக்கக் கூடும்" என்று அவர் கூறினார்.
இந்த தாக்குதலில் பொதுக்கூட்டத்தில் இருந்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரும் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார், அவரது பெயர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'கொலை முயற்சி என்னை பாதித்துள்ளது'
சனிக்கிழமையன்று, முழுமையாக என்ன நடந்தது என்பதன் யதார்த்தத்தை புரிந்துகொள்ள தான் முயற்சித்து வருவதாக கூறிய டிரம்ப், தான் சுடப்பட்டதை உணர்ந்த பிறகு கூட்டத்தை நிமிர்ந்து பார்த்து, கை முஷ்டியை உயர்த்திய தருணத்தை விவரித்தார்.
“அந்த நேரத்தில் அங்குள்ள மக்களிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றல், அவர்கள் அங்கேயே அப்படியே நின்றிருந்தார்கள். அது எப்படிப்பட்ட உணர்வு என்பதை விவரிப்பது கடினம். ஆனால் உலகம் எங்களை கவனிக்கிறது என்றும், வரலாறு இதை வேறு மாதிரியாக அணுகும் என்றும் எனக்குத் தெரியும். நாங்கள் நன்றாகத் தான் இருக்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்" என்று அவர் நேர்காணலில் கூறினார்.
ஜோ பைடனை விமர்சிப்பதற்குப் பதிலாக தேச 'ஒற்றுமை' குறித்த செய்தியில் கவனம் செலுத்தப் போவதாகவும், இதற்காக தனது குடியரசு கட்சி மாநாட்டு உரையை முழுவதுமாகத் திருத்தி மீண்டும் எழுதியதாகவும் கூறினார் டிரம்ப்.
"வியாழன் அன்று நான் ஆற்றவிருக்கும் உரை தனித்துவமாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்" என்று அவர் நேர்காணலில் கூறினார்.
"ஒருவேளை இந்த தாக்குதல் சம்பவம் நடக்கவில்லை என்றால், அதிபர் பைடனின் கொள்கைகளை விமர்சிக்கக் கூடிய சிறந்த உரைகளில் ஒன்றாக எனது உரை இருந்திருக்கும். ஆனால், இப்போது அது முற்றிலும் மாறுபட்ட உரையாக இருக்கும். அமெரிக்க நாட்டை ஒன்றிணைக்க இது ஒரு வாய்ப்பு. எனக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது." என்றார் டிரம்ப்.
முன்னதாக, டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) தனது விஸ்கான்சின் பயணத்தை இரண்டு நாட்களுக்கு தாமதப்படுத்தலாம் என நினைத்ததாகவும் ஆனால், பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.
"யாரோ ஒரு ஷூட்டர் (shooter) அல்லது குற்றவாளி ஒருவர், என்னுடைய பிரசார அட்டவணையை மாற்றுவதை என்னால் அனுமதிக்க முடியாது" என்றார்.
இந்த கொலை முயற்சி தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று டிரம்ப் கூறினார்.
சம்பவ இடத்தில் அமெரிக்க ரகசிய சேவை முகமையால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 வயதான கொலையாளி க்ரூக்ஸின் நோக்கம் பற்றி இதுவரை அதிகம் அறியப்படவில்லை.
க்ரூக்ஸ் தனியாக செயல்பட்டதாகவும், ஆனால் அதேவேளை அவருக்கு வேறு ஏதும் உதவி கிடைத்ததா என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் எஃப்.பி.ஐ (FBI) கூறியுள்ளது.
அடுத்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப், விஸ்கான்சின் செல்கிறார். அங்கு நடக்கவிருக்கும் குடியரசுக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். துணை அதிபர் வேட்பாளர் யார் என்பதையும் அவர் அப்போது அறிவிப்பார்.
தாக்குதலைத் தொடர்ந்து, தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதிபர் பைடன் "அமெரிக்க அரசியலில் நிலவும் பதற்றச் சூழ்நிலை தணிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
"நாம் மீண்டும் இந்த வன்முறை பாதையில் செல்ல முடியாது, செல்லவும் கூடாது. அமெரிக்காவின் வரலாற்றில் இதற்கு முன்பு பலமுறை இத்தகைய பாதையைக் கடந்து வந்துள்ளோம்" என்று கூறிய பைடன், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் வன்முறைகள் குறித்து பட்டியலிட்டார்.
"அமெரிக்காவில் எங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளுக்கு ஜனநாயக முறையில் தான் தீர்வு காண்போம், தோட்டாக்களால் அல்ல." என்று கூறினார் பைடன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)