1953-ல் இரானில் அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்தது எப்படி தெரியுமா?

    • எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

அன்றைய இரவு, இரான் தலைநகர் டெஹ்ரானில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடக்க இருந்தது.

அன்று நள்ளிரவு, பிரதமரை கைது செய்ய ஒரு வாகனம் முழுவதும் வீரர்கள் சென்றனர். ஆனால் முன்கூட்டியே இதைப்பற்றி தகவல் கிடைத்ததால் பிரதமருக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகள் அந்த வீரர்களை கைது செய்தனர்,

ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கவில்லை. இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் வேர்கள் மிகவும் ஆழமானது. இது இரானில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்கள் பற்றியது அல்ல.

1953-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்போது இரானின் பிரதமராக இருந்த முகமது மொசாதெக்கை பதவியிலிருந்து நீக்க நடைபெற்ற சதியின் போது நிகழ்ந்தவை. இந்தச் சதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் இரான் முன்னாள் அரசரும் சம்மந்தப்பட்டிருந்தார்.

அதற்கு நான்கு நாட்கள் கழித்து பிரதமர் மொசாதெக் இந்தச் சதியில் வீழ்ந்தார், அவரின் ஆட்சி அகற்றப்பட்டது.

சமீபத்திய போராட்டங்களின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகள் 1953-இல் நடந்த ஆட்சி கவிழ்ப்பை நினைவூட்டுவதாக அமைந்தன.

தங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என இரான் எச்சரித்திருந்தது.

2013-ஆம் ஆண்டு சிஐஏ வெளியிட்ட ஆவணங்களின்படி, இரானில் 1953-இல் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பில் சிஐஏ முக்கிய பங்கு வகித்ததை முதல்முறை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.

இரானில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு அங்கமாக சிஐஏ வழிகாட்டுதல்களின்படி நடந்ததாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

73 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இரானில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டது. அதன் பின் உள்ள காரணங்களை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

எண்ணெயில் தொடங்கிய கலகம்

1908-ஆம் ஆண்டு இரானில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து இந்த கதை தொடங்குகிறது.

இரானின் கஜர் அரசர் உடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி பிரிட்டன், 'ஆங்கிலோ-பெர்சியன் எண்ணெய் நிறுவனம்' மூலம் எண்ணெய் வருவாயில் 80 சதவிகிதத்தைப் பெற்றுவந்தது. அதன் சொந்த இயற்கை வளங்களில் இருந்து இரானுக்கு 10-12% வருவாய் மட்டுமே கிடைத்துவந்தது. '

கஜர் அரசர் அகமது ஷாவின் ஆட்சியைக் கவிழ்த்து பஹ்லவி வம்சத்தை உருவாக்கினார் ரெசா ஷா. இவர் 1941-ஆம் ஆண்டு வரை இரானின் அரசராக இருந்தார். அதன் பின்னர் அவருடைய மகன் முகமது ரெசா பஹ்லவிக்கு அதிகாரம் சென்றது.

1940களின் இறுதியில் பிரிட்டன் எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் இடையே அதிருப்தி அதிகரித்ததாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள வொல்ஃப்கேங் கே.க்ரெஸ்ஸின் தெரிவிக்கிறார்.

வெளிநாட்டு கட்டுப்பாட்டை குறைக்கும் முயற்சியாக, அந்த நிறுவனத்தைத் தணிக்கை செய்ய இரான் முயற்சித்ததாக அமெரிக்க பத்திரிகையாளர் ஸ்டீபன் கின்ஸெர் 'ஆல் தி ஷாஸ் மென்' என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

ஆனால் இரான் அரசுடன் ஒத்துழைக்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் 1951-இல் எண்ணெய்த் துறையை தேசியமயமாக்குவதற்கு ஆதரவாக இரான் நாடாளுமன்றம் வாக்களித்தது. இந்தச் சட்டத்தின் ஆதரவாளரான முகமது மொசாதெக் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தன்னுடைய நலன்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை கண்ட பிரிட்டன், மொசாதெக் தலைமையிலான இரான் அரசை பலவீனப்படுத்த ரகசிய திட்டம் ஒன்றை தொடங்கியதாக பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் தெரிவிக்கிறது.

அதில், "முதலில் நாடாளுமன்ற உத்தரவு மூலம் மொசாதெக்-ஐ பதவியில் இருந்து நீக்குமாறு உத்தரவிட இரான் அரசரை சம்மதிக்க வைக்க பிரிட்டன் முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைய மொசாதெக்கின் புகழ் அதிகரித்தது. அதேநேரத்தில் இரான் அரசரின் செல்வாக்கு குறைந்தது."

"இந்தச் சூழலில் தன்னிச்சையாக ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை தவிர்க்க நினைத்த பிரிட்டன், அமெரிக்காவுடன் கூட்டு சேர முடிவெடுத்தது. பனிப்போர் அச்சுறுத்தல்களும் ஊதி பெரிதாக்கப்பட்டன. மொசாதெக் கம்யூனிசத்திற்கு எதிரானவர் என்றாலும் கூட அவர் இரான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக செல்கிறார் எனப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரான் பிரதமருக்கு எதிராக பிரிட்டன்-அமெரிக்க கூட்டணி

அமெரிக்க இதழான 'டைம்', 1951-ஆம் ஆண்டின் நபராக முகமது மொசாதெக்-ஐ அறிவித்தது. "அவர் சர்வதேச விவகாரங்களில் மிகவும் துடிப்பான கொள்கையைக் கடைபிடித்தார். எந்த அளவிற்கு என்றால் ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நாடுகளின் அமைச்சகங்கள் அவரால் இரவு வரை கூட துடிப்பாக இருந்தன. மக்கள் அவரை மிகவும் ஈர்ப்புடன் பார்த்தனர்." என்றும் டைம் இதழ் அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

கின்ஸெரின் கூற்றுப்படி, மொசாதெக் சமரசங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை உணர்ந்த பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் 1953-இன் தொடக்கத்தில் அவரின் ஆட்சியை கவிழ்க்க முடிவெடுத்தனர்.

அமெரிக்கா இதனை ஆபரேஷன் அஜாக்ஸ் எனப் பெயரிட்ட நிலையில் பிரிட்டன் இதனை "ஆபரேஷன் பூட்' என அழைத்தது.

இரான் நிபுணரும் ஆட்சிக் கவிழ்ப்பை திட்டமிட்டவர்களில் முக்கியமானவருமான டொனால்ட் என்.வில்பரை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ரைசன் 1953 மார்சில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இரான் ராணுவ தளபதி ஒருவர் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு ஆதரவு கேட்டு அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டதாக டெஹ்ரானில் உள்ள சிஐஏ அலுவலகம் பதிவு செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

கலகத்திற்கு தலைமை ஏற்று நடத்தவும் பிரதமர் பதவியிலிருந்து மொசாதெக்கை நீக்கிவிட்டு அந்த இடத்தில் அமரச் செய்யவும் இரான் அரசரின் ஆதரவாளரான ஃபஸ்லொல்லா ஸகிதி என்பவரை தான் தேர்ந்தெடுத்ததாக பிரிட்டன் உளவு அமைப்பான எம்ஐ6-இன் இரான் நிலைய தலைவர் நார்மன் டார்பிஷைர் உடனான நேர்காணலை மேற்கோள்காட்டி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

வில்பர் தனது 'ரகசிய சேவை வரலாறு: பிரதமர் மொசாதெக் ஆட்சிக் கவிழ்ப்பு - நவம்பர் 1952 - ஆகஸ்ட் 1953' என்கிற புத்தகத்தில், மொசாதெக்-ஐ எந்த விதத்திலாவது பதவி நீக்க அப்போதைய சிஐஏ இயக்குநர் ஆலன் டபிள்யூ. டல்லஸ் 1 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியதாக தெரிவிக்கிறார்.

இதில் இரான் அரசர் முதன்மையான பங்கு வகிப்பார் என்பது தான் திட்டமாக இருந்ததாக வில்பர் குறிப்பிடுகிறார். ஆனால் அவர், "இயல்பாகவே முடிவெடுக்க முடியாதவராகவும் நிலையற்ற சந்தேகங்கள் மற்றும் அச்சங்களால் சூழப்பட்டவராகவும்" இருந்ததாக சிஐஏ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் அடிக்கடி குடும்பத்துடன் முரண்பட்டுள்ளார். அதில் குறிப்பாக அவரின் இரட்டையரும் சக்திவாய்ந்த இளவரசியுமான அஷ்ரப் உடன் அதிகம் முரண்பட்டுள்ளார்.

இரான் அரசருக்கு பிரிட்டனின் திட்டங்கள் பற்றி அச்சம் இருந்ததாக சிஐஏ குறிப்பிடுகிறது. இது கூட்டு திட்டங்களுக்கு தடையாக இருந்தது.

1952 அக்டோபரில் பிரிட்டன் உடனான உறவுகளைத் துண்டித்த மொசாதெக், பிரிட்டன் உளவாளிகளையும் அதிகாரிகளையும் நாட்டைவிட்டு வெளியேற்றினார். இது நார்மனின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது. அவர் தனது திட்டங்களை பெய்ரூட்டில் உள்ள சிஐஏவிடம் வழங்கினார்.

தயங்கிய ஷா, விடாது துரத்திய சிஐஏ

அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தனது இறுதி ஒப்புதலை வழங்காதபோதிலும் இரான் அரசர் தயக்கதுடன் இருந்தபோதிலும் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது.

ஜூன் மாதம் பெய்ரூட்டில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவு அதிகாரிகள் தங்களின் செயல்திட்டத்தை இறுதி செய்தனர். அதற்கு பிறகு சிஐஏவின் மேற்கு மற்றும் ஆப்ரிக்க பிரிவின் தலைவரும் தியோடர் ரூஸ்வெல்டின் பேரனுமான கெர்மிட் ரூஸ்வெல்ட் இந்த திட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்த டெஹ்ரான் வந்தடைந்தார்.

அதிபர் ஐசன்ஹோபர் ஜூலை 11-ஆம் தேதி தனது இறுதி ஒப்புதலை வழங்கினார். அந்த திட்டத்தின்படி சிஐஏ, பொதுமக்கள் போராட்டத்தை தூண்டும், நாட்டில் குழப்பமான நிலை உருவானதும் இரான் அரசர் மொசாதெக்-ஐ நீக்கிவிட்டு ஸகிதியை பிரதமராக நியமிக்கும் உத்தரவை வெளியிடுவார்.

அதே வேளையில், சிஐஏ அதிகாரி ஸ்டீபன் மியத் மற்றும் பிரிட்டன் உளவு அதிகாரியான நார்மன் வெளிநாட்டில் வசித்து வரும் இளவரசியான அஷ்ரஃப் பஹ்லவியைச் சந்தித்து இரானுக்கு திரும்புமாறும் அவருடைய சகோதரரை இந்தத் திட்டத்தைப் பின்பற்ற நிர்பந்திக்குமாறும் வலியுறுத்தி உள்ளனர்.

"இதற்கான செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என விளக்கி பெரும் அளவிலான பணத்தை காண்பித்தபோது அவரின் கண்கள் பிரகாசமடைந்தன," என நார்மன் தெரிவிக்கிறார்.

அஷ்ரஃப் இரானுக்கு திரும்பியது பிரதமருக்கு ஆதரவான வட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என வில்பர் தெரிவிக்கிறார். தனது அனுமதியின்றி இரானுக்கு திரும்பி வந்ததால் கோபமடைந்த இரான் அரசர் அவரைச் சந்திப்பதை முதலில் தவிர்த்து வந்தார்.

எனினும் ஜூலை 29-ஆம் தேதி அரண்மனையில் வேலை பார்த்து வந்த பிரிட்டன் உளவாளி ஒருவர் இளவரசி அஷ்ரஃப் அரசரை சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் இருவரிடையே என்ன உரையாடல் நடைபெற்றது என்பது எங்கும் பதிவு செய்யப்படவில்லை.

சிஐஏ அமைப்பும் தனது பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இரானின் பிரதான செய்தித்தாளின் நிறுவனருக்கு 45,000 அமெரிக்க டாலர் கடன் வழங்கப்பட்டது. "அந்த செய்தித்தாள் தங்களின் செய்தியை கொண்டு செல்லும் நோக்கில்" அந்த கடன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சிஐஏ தயாரித்த உத்தரவில் கையெழுத்திட இரான் அரசர் மறுத்துவிட்டார். அதே வேளையில் தனக்கு எதிரான சதித்திட்டம் பற்றி அறிந்திருந்த மொசாதெக் தனது அதிகாரத்தை வலுப்படுத்த நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு பொது வாக்கெடுப்பு ஒன்றை அறிவித்தார்.

ஆகஸ்ட் 10-ஆம் தேதி இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்ட தளபதி ஸகிதி மற்றும் அதிகாரிகள் சிலரையும் இரான் அரசர் சந்தித்தார். அப்போதும் உத்தரவில் கையெழுத்திட மறுத்துவிட்டார். அடுத்த சில நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ரூஸ்வெல்ட் கடும் கோபத்துடன் திரும்புவார் என இரான் அரசரிடம் சிஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி மொசாதெக்-ஐ பதவியிலிருந்து நீக்கும் உத்தரவில் இரான் அரசர் கையெழுத்திட்டார். ராணுவம் தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பிற்கு அவர் ஆதரவு வழங்குவார் என்கிற செய்தி தளபதி ஸகிதிக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் மத்தியில் பரவியது.

ரகசியத்தை கசிய விட்ட ராணுவ அதிகாரி

ஆகஸ்ட் 15-ஆம் தேதி இரவு கலகம் துவங்கியது. ஆனால் இரான் ராணுவ அதிகாரி ஒருவரால் இந்த ரகசியம் கசிந்து சதித்திட்டம் பற்றிய தகவல் பிரதமரை அடைந்தது.

உளவு வரலாற்றின்படி, மொசாதெக்-இன் தலைமைத் தளபதியான தாகி ரியாஹி ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி சில மணி நேரங்கள் முன்பு தெரிந்துகொண்டு அரசுப் படைகளின் முகாமிற்கு தனது துணை தளபதியை அனுப்பி வைத்தார்.

ஆனால் துணை தளபதி கைது செய்யப்பட்டார். இரான் அரசருக்கு ஆதரவான படைகள் நகர் முழுவதும் மூத்த அதிகாரிகளை கைது செய்து வந்த அதே நேரத்தில் இது நிகழ்ந்தது. ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் இடையேயான தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, தொலைபேசி நிலையங்களும் கைப்பற்றப்பட்டன.

ஆனால் ஆச்சரியமளிக்கும் விதத்தில் தொலைபேசிகள் இயங்கியது மொசாதெக்-இன் படைகளுக்கு சாதகமாக அமைந்தது. அரசர் ஆதரவு படைகளிடமிருந்து தப்பிய தளபதி ரியாஹியும் பிரதமருக்கு ஆதரவாக படைகளைத் திரட்ட துவங்கினார்.

பிரதமரை கைது செய்ய அனுப்பப்பட்ட படை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். தளபதி ஸகிதி உடனிருந்த மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ராணுவ தலைமையகத்தில் பீரங்கிகள் மற்றும் அரசு ஆதரவு படைகளைப் பார்த்த உடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

வரலாற்று ஆவணங்களின்படி, அடுத்த நாள் காலை, அரசுக்கு எதிரான கலகம் முறியடிக்கப்பட்டதாக டெஹ்ரான் வானொலி அறிவித்தது.

அமெரிக்க தூதரகத்தில் இருந்த சிஐஏ அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு வழியில்லை என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தூதகரத்திலிருந்து வெளியேறிய கெர்மிட் ரூஸ்வெல்ட் டெஹ்ரானின் வடக்குப் பகுதியில் பதுங்கியிருந்த தளபதி ஸகிதியைச் சந்தித்தார். ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டத்தை கைவிட தளபதி ஸகிதி தயாராக இல்லை.

தளபதி ஸகிதி தான் அதிகாரப்பூர்வ பிரதமர் என பொதுமக்களுக்கு உறுதியளிக்கப்பட்டால் ஆட்சிக் கவிழ்ப்பு இப்போதும் வெற்றியடையும் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இதை சாத்தியப்படுத்த இரான் அரசர் இரண்டு அரச உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்தியை பரப்ப அவர்கள் திட்டமிட்டனர்.

டெஹ்ரானில் உள்ள சிஐஏ நிலையம் நியூயார்க்கில் உள்ள அசோசியேடட் பிரஸிற்கு செய்தி ஒன்றை அனுப்பியது. உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, சதித்திட்டத்தை தீட்டியவர்கள் கைவசம் மொசாதெக்-ஐ பதவி நீக்கம் செய்யவும் ஸகிதியை பிரதமராக நியமிக்கவும் இரான் அரசர் பிறப்பித்த இரண்டு உத்தரவுகள் இருந்தன. சிஐஏ மற்றும் அதன் முகவர்கள் இந்த உத்தரவுகளை சில இரானிய செய்தித்தாள்களுக்கும் விநியோகித்தனர்.

ஆனால் இந்த பரப்புரை விரைவிலே பயனற்று போனது. சிஐஏவிற்காக வேலை பார்த்த இரானிய முகவர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது தலைமறைவாயினர். அன்று மதியம் தளபதி ஸகிதியின் அறிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு வழங்க சிஐஏ ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் பிரதமர் ஆதரவு படைகளின் கண்காணிப்பில் இல்லாத அச்சகத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரான் அரசர் பாக்தாத் சென்றுவிட்டார் என்கிற செய்தி, ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுவதில் பின்னடைவை ஏற்படுத்தின. இந்த நிலையில் ரூஸ்வெல்ட் உடனடியாக திரும்புமாறு டெஹ்ரானுக்கு சிஐஏ தலைமையகம் தந்தி அனுப்பியது.

ஆனால் இதற்கு மறுத்த ரூஸ்வெல்ட், பாக்தாத் வானொலியில் இரான் அரசர் பேசுவதும் மற்றும் தளபதி ஸகிதி கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதும் நடந்தால், "வெற்றி பெறுவதற்கு சிறிய வாய்ப்பு இருப்பதாக." கூறி வந்தார்.

வில்பரின் கூற்றுப்படி கலகத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தைக் கலைத்த மொசாதெக் இம்முறை சிஐஏ வகுத்த திட்டத்தில் சிக்கியதாக தெரிவித்தார்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி பிரதமரை பதவி நீக்கும் உத்தரவில் தான் கையெழுத்திட்டதாக இரான் அரசர் பாக்தாத்தில் இருந்து அறிவித்தார். இதனிடையே, இரான் அரசரின் புறப்பாடு மற்றும் கலகத்தில் ஈடுபட்ட அதிகாரிகளின் கைது ஆகியவற்றால் திருப்தியடைந்த மொசாதெக், ஆபத்து நீங்கியது என நம்பி படைகளை விலக்கிக் கொண்டார்.

அதே இரவு, தளபதி ஸகிதி மற்றும் முக்கிய இரானிய முகவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை வாகனங்கள் மற்றும் மூடப்பட்ட ஜீப்களின் அடிப்பகுதியில் அமரவைத்து தூதரக வளாகத்திற்கு சிஐஏ அழைத்து வந்தது. அங்கு பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி பதில் தாக்குதல் நடத்த ஒப்புக்கொண்ட அவர்கள் டெஹ்ரானில் இருந்து முக்கிய மதகுரு ஒருவரை கோம் நகருக்கு அனுப்பினர். கம்யூனிசத்திற்கு எதிரான ஜிகாத்திற்கு அழைப்புவிடுத்து ஒருங்கிணைக்க அவர் அனுப்பப்பட்டார்.

இரானிய வரலாற்றாசிரியரான மைக்கேல் ஆக்ஸ்வொர்த்தியின் கூற்றுப்படி, "மொசாதெகிற்கு எதிரான இந்த இயக்கம் அவரின் வீழ்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது," எனக் குறிப்பிடுகிறார்.

இந்தச் சூழலில் இரான் அரசர் மீண்டும் சிஐஏ-விற்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்த நாள் பாக்தாத்தில் இருந்து ரோம் புறப்பட்டுச் சென்றார்.

பிரதமருக்கு ஆதரவான செய்தித்தாள்கள் ரெசா பஹ்லவி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்ததாக தெரிவித்து வந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அறிக்கை ஒன்று இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை 'ஆங்கிலோ அமெரிக்கன் சதித்திட்டம்." எனக் குறிப்பிட்டது. இரான் அரசரின் சிலைகளைப் போராட்டக்காரர்கள் இடித்து தரைமட்டமாக்கினர்.

அஜாக்ஸ் திட்டத்தை தொடரலாமா? அல்லது பின்வாங்கிவிடலாமா என டெஹ்ரானில் உள்ள சிஐஏ அலுவலகம் தலைமையகத்திடம் வழிகாட்டுதல்களைக் கோரியது.

கலகம் வெற்றியடைந்த புள்ளி

அமெரிக்கா பின்வாங்க முடிவெடுத்துவிட்ட நிலையில் டெஹ்ரானில் நிலைமை மாறியது.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை இரானிய செய்தித்தாள்கள் இரான் அரசரின் உத்தரவை பிரசுரித்தன. அதன் பின்னர் இரான் அரசருக்கு ஆதரவான குழுக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கின.

அந்தக் குழுக்களுக்கு தலைமை தான் தேவைப்பட்டது, அது சிஐஏவின் இரானிய முகவர்கள் மூலம் கிடைத்தது என வில்பரின் உளவு வரலாறு தெரிவிக்கிறது.

வெளிப்படையான உத்தரவு எதுவும் இல்லாமல், பத்திரிகையாளரும் சிஐஏவின் முக்கியமான இரானிய முகவருமான ஒருவர் நாடாளுமன்றத்தை நோக்கி ஒரு குழுவை வழிநடத்திச் சென்று மொசாதெக்-இன் வெளியுறவு அமைச்சக செய்தித்தாள் அலுவலகத்தை தீக்கிரையாக்க மக்களைத் தூண்டினார். மற்றுமொரு சிஐஏ ஏஜென்ட் மற்ற செய்தித்தாள் அலுவலகங்களைத் தாக்க இன்னொரு கும்பலை வழிநடத்திச் சென்றார்.

இந்தச் சதித்திட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு இணைந்த இரானிய ராணுவ கர்னல் ஒருவர் திடீரென பீரங்கி ஒன்றுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே தோன்றினார். உளவுத் தகவல்களின்படி, காலை 10.15 மணிக்கு இரான் அரசர் ஆதரவு வீரர்கள் அடங்கிய படை அனைத்து முக்கியமான சந்திப்பிற்கும் வந்தடைந்தது.

மதியத்திற்குள் சில அதிகாரிகளின் நேரடி தலைமையில் இந்தக் குழுக்கள் செயல்படத் தொடங்கின. ஒரு மணி நேரத்தில் மத்திய தந்தி அலுவலகம் கைப்பற்றப்பட்டு இரான் அரசருக்கு ஆதரவாக கலகம் செய்ய அனைத்து மாகாணங்களுக்கும் தந்தி அனுப்பப்பட்டது. சிறிய சண்டைக்குப் பிறகு காவல்துறை தலைமையகமும் வெளியுறவு அமைச்சகமும் கைப்பற்றப்பட்டன.

நிலையற்ற தன்மை காரணமாக டெஹ்ரான் வானொலி காட்டன் விலை பற்றிய நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. எனினும் மதியத்திற்கு உள்ளாகவே பொதுமக்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இரான் அரசருக்கு ஆதரவானவர்கள் ஒலிபரப்பை கைப்பற்றி கலகம் வெற்றியடைந்ததாக அறிவித்து அரசரின் உத்தரவை வாசிக்கத் தொடங்கினர்.

அமெரிக்க தூதரகத்தில் இருந்த சிஐஏ அதிகாரிகள் குதூகலித்தனர். பாதாளத்திற்குள் பதுங்கியிருந்த தளபதி ஸகிதியை ரூஸ்வெல்ட் மீண்டும் வெளியே அழைத்து வந்தார்.

ராணுவ அதிகாரி ஒருவர் பீரங்கி ஒன்றை ஏற்பாடு செய்து அவரை வானொலி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து ஸகிதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

மொசாதெக் மற்றும் இதர அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். தளபதி ஸகிதிற்கு ஆதரவான அதிகாரிகள் டெஹ்ரானில் உள்ள அனைத்து அலகுகளின் கட்டுப்பாட்டையும் இந்தச் சதித்திட்டத்தின் ஆதரவாளர்களுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்வுகள் சோவியத் ஒன்றியத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மொசாதெக் அரசு வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் மாஸ்கோ வானொலி, "இரானில் தோல்வியடைந்த அமெரிக்க ஆபரேஷன்" என்கிற செய்தியை ஒலிபரப்பி வந்தது.

சோவியத் ஒன்றியத்தைப் போலவே சிஐஏ தலைமையகமும் இந்த நிகழ்வுகளை ஆச்சரியத்துடன் தான் பார்த்தது. கலகம் வெற்றியடைந்த செய்தி வந்தபோது, "அதற்கு முந்தைய தினம் நிலவிய சூழ்நிலையால் இது ஒரு குரூரமான நகைச்சுவையாக தெரிந்தது," என உளவு வரலாறு குறிப்பிடுகிறது.

இரான் அரசருடன் சிஐஏ இயக்குநர் ஆலன் துன்னஸ் ரோமிலிருந்து டெஹ்ரானிற்கு வந்தார். மொசாதெக்கிற்குப் பதிலாக ஸகிதி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். மொசாதெகிற்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரான் அரசரின் தனிப்பட்ட உத்தரவின்படி அது மூன்று ஆண்டுகள் தனிமைச் சிறைவாசமாகவும் அதன் பின்னர் வீட்டுச் சிறைவாசமாகவும் மாற்றப்பட்டது. 1967-இல் அவர் உயிரிழந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு