You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"டிரம்பின் பொருளாதாரப் போர்": மேற்கத்திய கூட்டணியை பிளவுபடுத்துமா?
- எழுதியவர், ஃபைசல் இஸ்லாம்
- பதவி, பொருளாதார ஆசிரியர்
கிரீன்லாந்தை இணைத்துக்கொள்ளும் தனது திட்டத்தை மேற்கத்திய நட்பு நாடுகள் எதிர்க்கக் கூடாது என்றும், மீறினால் அமெரிக்காவுடனான தங்கள் வர்த்தகத்திற்கு மேலும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல் முன்னெப்போதும் நிகழ்ந்திராதது.
கடந்த ஓராண்டாக அதிபர் டிரம்பிடமிருந்து வழக்கத்திற்கு மாறான மற்றும் எதிர்பாராத பொருளாதார அச்சுறுத்தல்களை நாம் கேட்டுள்ளோம், ஆனால் இது எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது என உறுதியாக சொல்லலாம், மேலும் இது நம்மை கற்பனைக்கு அப்பாற்பட்ட மற்றும் முற்றிலும் ஆபத்தான ஒரு நிலைக்கு இட்டுச் செல்கிறது.
டிரம்ப் கூறியதை உள்ளபடியே எடுத்துக்கொண்டால், இது தன்னுடைய நெருக்கமான நட்பு நாடுகள் மீது வெள்ளை மாளிகை தொடுக்கும் பொருளாதார போரின் ஒரு வடிவம்.
ஏனெனில், இது மிகக்குறுகிய முன்னறிவிப்புடன் நட்பு நாடுகளை குறிவைக்கிறது, மேலும் நேட்டோ மற்றும் மேற்கத்திய கூட்டணி பிளவுபடும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்படுவதாக உள்ளது.
இது, அந்நாடுகளை சேர்ந்த அதிகாரிகளை முற்றிலும் குழப்பமடையச் செய்துள்ளது. உண்மையில், இந்நடவடிக்கையால் கோபமடைவதை விட அவர்கள் வழக்கத்திற்கு மாறாக குழப்பத்தில் உள்ளனர்.
உங்கள் கூட்டாளியின் நிலத்தைக் கைப்பற்றுவதை அடிப்படையாகக் கொண்ட இதுபோன்ற ஒரு அச்சுறுத்தல் உண்மையில் நடக்கும் என்று உலகில் யாரும் நினைக்க மாட்டார்கள். இதைச் செய்வதற்கு டிரம்புக்கு உண்மையிலேயே அமெரிக்கா, அதன் நாடாளுமன்றம், அவ்வளவு ஏன் அவருடைய சொந்த நிர்வாகத்தில் ஆதரவு உள்ளதா?
சில வர்த்தக அதிகாரிகள் கருதுவது போல, இது முன்னெப்போதும் நடந்ததைவிட மிகப்பெரிய வரி விதிப்பு (TACO- Trump will Chicken Out) அச்சுறுத்தலா? அதாவது, டாக்கோ என்பது மிகப்பெரும் வரி விதிப்பின் மூலம் அச்சுறுத்தும் டிரம்பின் போக்கை குறிப்பதாகும். அவ்வப்போது இந்த வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் வருகின்றன, அதனை பொருளாதார ரீதியாக இந்த நாடுகள் இதுவரை சமாளித்துள்ளது.
உதாரணமாக, கனடாவை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவுடனான அதன் வர்த்தக உறவு சரிவை சந்தித்துள்ளது. ஆனால், கனடா பிரதமர் மார்க் கார்னியின் உத்தி மூலம், அந்நாட்டின் வர்த்தகம் உலகின் மற்ற நாடுகளைவிட 14% அதிகரித்துள்ளது, இது அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக இழப்பை சமாளிக்க தேவையானதைவிட மிகவும் அதிகமாகும்.
இந்த வாரம் சீனாவில் இருக்கும் கார்னி, "புதிய உலக ஒழுங்கு" என்ற கருத்தை முன்னெடுத்து, சீனாவுடன் மேலும் வர்த்தக உறவுகளை அதிகரிக்க முயற்சித்து வருகிறார். இது, சீனாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளை குறைக்க வேண்டும் என்ற அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள சில அதிகாரிகள் விரும்பும் அணுகுமுறைக்கு மாறானதாக உள்ளது.
"இது சீனாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையேயான ஒரு போராட்டம்" என்று, டிரம்ப் நிர்வாகம் வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பு உலகின் மற்ற நாடுகளை நம்பவைக்க முயன்றது.
இந்த அணுகுமுறையை கார்னி வெளிப்படையாக காட்டி வருகிறார். அதுவே, தற்போது (டிரம்பால்) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் நேரத்தைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான பின்னணியாக இருக்கலாம்.
இருப்பினும், நாம் டிரம்பின் சமீபத்திய மிரட்டல்களை தீவிரமாக எடுத்துக்கொண்டால், அவை மிகவும் கவலை அளிப்பவையாகும்.
10% வரி விதிப்பால் மட்டும் இது கவலைக்குரியதல்ல, மாறாக அதன் பின்னணியில் உள்ள காரணத்தினால்தான் இது முக்கியத்துவம் பெறுகிறது - ஒரு நட்பு நாட்டிலிருந்து நிலத்தைப் பறிப்பது மற்றும் நட்பு நாடுகளைப் பகிரங்கமாக மிரட்டி பணியவைக்க முயற்சிக்கும் செயல் கவலைக்குரியது. சீனா அல்லது ரஷ்யா தங்கள் நட்பு நாடுகளில் சிலவற்றுக்கு இதுபோன்ற ஒரு மிரட்டலை விடுத்திருந்தால், உலகம் எப்படி எதிர்வினையாற்றியிருக்கும்?
இந்த அச்சுறுத்தலின் அடிப்படை வெளிப்படையாக மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள தலைநகரங்களில் பலர் டிரம்பின் சமூக ஊடக அறிவிப்பைப் படித்து, அமெரிக்காவின் முடிவெடுக்கும் செயல்முறை குறித்து கேள்வி எழுப்புவார்கள்.
வரும் புதன்கிழமை அன்று உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) தான் பொருளாதார ரீதியாக அச்சுறுத்திய நட்பு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க அதிபர் டிரம்ப் வருகை தருகிறார்.
அதற்குள், எதனுடனும் ஒப்பிட முடியாத இந்த அச்சுறுத்தல் எப்படியாவது தணிந்துவிடும் என்று உலகின் பெரும்பாலானோர் நம்புவார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு