You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காளை வளர்க்கும் பெண்கள் ஜல்லிக்கட்டில் ஆண்கள் போல் களம் காணாதது ஏன்?
"ஜல்லிக்கட்டு பாரம்பரியமாக ஆண்களால் விளையாடப்படுகிறது. இதில் பெண்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்காது. அப்படி இருந்தால் கலந்து கொள்ளலாம் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது."
நான்கு ஆண்டுகளாக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அழகுபேச்சியின் வார்த்தைகள் இவை.
எதிர்காலத்தில் ஒருவேளை பெண்கள் பங்கெடுக்கக்கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் "தனக்கும் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் வரும். ஆனால், அதே மனப்பான்மை அனைவருக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை" என்கிறார் அவர்.
அதேவேளையில், "மாடுகளை ஒரு பாச உணர்வில்தான் வளர்க்கிறோம். ஆனால் இந்த விளையாட்டை பாரம்பரியமாக ஆண்களே விளையாடி வருகின்றனர். பெண்கள் கலந்துகொண்டு ஒருவேளை விபத்து ஏதேனும் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அக்கறையில்தானே கூறுகிறார்கள்," என்கிறார் அழகுபேச்சி.
பெண்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆர்வத்துடன் பங்கேற்க அழகுபேச்சி போலவே பெண்கள் பலரும் விரும்பலாம். ஆனால் நடைமுறையில், ஏறுதழுவுதல் என்பது ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்திய கலாசார அமைப்புகளில் ஒன்றின் நீட்சியாகவே இருப்பதாக சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
தாராளவாத கலை மற்றும் மேலாண்மைக் கல்விக்கான அறக்கட்டளை பல்கலைக் கழகமான ஃப்ளேம்(FLAME)-இன் டிஸ்கவரிங் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, "இன்னமும் ஜல்லிக்கட்டு என்பது பெண்கள் பங்கேற்காத ஒரு விளையாட்டாகவே இருந்து வருகிறது. அவர்களின் வேலை, போட்டியில் பங்குபெறும் காளையை வளர்ப்பதுடன் மட்டுமே நின்றுவிடுகிறது" என்கிறது.
இது, தமிழர்களின் பண்பாட்டில் ஓர் அங்கமாகப் பார்க்கப்படும் ஜல்லிக்கட்டில் பெண்களின் பங்கு என்ன, மாடுபிடி வீரர்களாக அவர்கள் ஏன் பங்கெடுப்பதில்லை என்பன போன்ற கேள்விகளை எழுப்புகிறது.
ஏறு தழுவத் தொடங்கிய ஆண்கள்
ஏறுதழுவுதல் என்பது ஒரு மனிதனின் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாகவே போற்றப்பட்டு வருவதாகக் கூறுகிறார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான ஆறு.ராமநாதன்.
"தொல்பழங்காலத்தில் இருந்து பார்க்கும்போது, மக்கள் ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கிய நேரத்தில், வேளாண்மை செய்து உற்பத்தியைப் பெருக்குவது, விலங்குகளை வளர்த்து உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது ஆகிய செயல்கள் வாழ்க்கை முறையாக மாறியது" என்று அவர் விளக்கினார்.
"ஆரம்பத்தில் பெண்களின் ஆதிக்கமே நிலவிய, தாய்வழிச் சமூகமாக இருந்த காலத்தில், ஓரிடத்தில் தங்கி வேளாண்மை, விலங்கு வளர்ப்பு ஆகியவற்றைப் பேணுவது மற்றும் காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவதும் கால்நடைகள் போன்ற விலங்குகளைப் பிடித்து வருவதும் என இருவிதமான பணிகளைக் கவனிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது, உடல் வலிமை போன்ற காரணங்களால் ஆண்கள், வேட்டையாடுதல் போன்ற பணிகளை அதிகமாகக் கைக்கொள்ளத் தொடங்கியிருக்கலாம்."
அவர்கள்தான் காடுகளுக்குச் சென்று மாடுகளைப் பிடித்து வந்து பழக்குவதைச் செய்யத் தொடங்கியதாகக் கூறும் அவர், அதனாலேயே ஏறு தழுவுதல் என்று அது அழைக்கப்படத் தொடங்கியிருக்கலாம் என்றார்.
"இப்படியாக யார் அதிகமான மாடுகளைக் கொண்டு வருகிறார்களோ அவர்களே சமுதாயத்தில் செல்வந்தர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கு மதிப்பு கூடும். அவர்களை பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஏனெனில் அதிக மாடுகளைப் பிடித்து வரும் நபரால் அதிக உணவைக் கொடுக்க முடியும்."
இதன்மூலம், மாடுகள் செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட காலத்தில், அவற்றைப் பிடித்து வருவதும் திருமண உறவும் தொடர்புபடுத்தப்படுவது தொடங்கியதாக விவரித்தார் ஆறு.ராமநாதன்.
'காளையை அடக்கினால் திருமணம்'
"முன்பு போர்த்தொழிலின் ஓர் அங்கமாக இருந்த சிலம்பம், வில்வித்தை ஆகியவற்றை மையமாகக் கொண்டு சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு போன்றவை வந்தது போலவே, மாடுகளைப் பிடித்து வருதல் என்பது மாடுகளை அடக்குதல் அல்லது தழுவுதல் என்ற விளையாட்டாக உருப்பெற்றது" என்கிறார் ஆறு.ராமநாதன்.
சமூகம் மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, அது விளையாட்டாக மாற்றமடைந்தது என்றாலும், பெண்களின் திருமணத்துடனான அதன் தொடர்பு மட்டும் அதே நிலையில் தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
"பண்டைய காலங்களில், ஏறுதழுவுதலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசாக காளை உரிமையாளர்கள் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுத்தனர். குடும்பம் என்ற சமூக அமைப்பில், பெண்ணின் திருமணத்தை முடிவு செய்வதில் அவர்கள் வளர்த்த காளைகள் பங்கு வகிக்கும் நிலை நிலவியது. ஒரு பெண் வளர்க்கும் காளையை ஒரு மனிதன் அடக்கிவிட்டால், அந்தப் பெண்ணுக்குச் சரியான துணையை காளை தேர்வு செய்துவிட்டதாகக் கூறப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ள ஃப்ளேம் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை, இது ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடு எனத் தெரிவித்துள்ளது.
'நவீன காலத்திலும் தொடரும் ஆணாதிக்க மனநிலை'
இந்த விளையாட்டு பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைச் சந்தித்திருந்த போதிலும், அதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஆணாதிக்க விழுமியங்கள் இன்னும் அப்படியே இருப்பதாகக் கூறுகிறார் மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்.
ஜல்லிக்கட்டு போலவே கால்நடைகளை வைத்து ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் நடக்கக்கூடிய விளையாட்டுகளில் இருபாலரும் பங்கெடுப்பதாகக் கூறும் முத்துகிருஷ்ணன், "தமிழ் சமூகத்தில் ஆண்களை ஆதிக்கம் செலுத்தும் பாலினமாக நிலை நிறுத்துவதற்கான விளையாட்டாகவே இது இருந்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.
"ஆண்மை அல்லது ஆண்கள் என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டதாக தமிழ் சமூகம் மாறியதில் இருந்து இதன் பின்னணி தொடங்குவதாக நான் பார்க்கிறேன். இன்றளவும் இந்திய சமூகத்தில், பெண்கள்மீது அழகியல், பண்பாடு ஆகியவற்றின் சுமை திணிக்கப்படுகிறது. மாடுகளை வளர்ப்பதில்கூட பெண்ணே அதிகம் பங்கு வகிக்கிறார். ஆனால், அதை வைத்து நடத்தப்படும் விளையாட்டில் ஆண்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள்," என்கிறார் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்.
சமூகத்தில் நிலவும் மிகவும் வெளிப்படையான சாதி மற்றும் பாலினப் பாகுபாட்டின் ஓர் அங்கமாக ஜல்லிக்கட்டு விளங்குவதாகக் கூறுகிறார் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான அர்ச்சனா சேகர்.
"தமிழ் கலாசாரத்தில் ஆணாதிக்கம் வேரூன்றியுள்ளது. மாநிலத்தின் விவசாயத் தொழிலாளர்களில் 40-50% பேர் பெண்களாக இருந்தபோதிலும், ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டாகவே உள்ளது" என்கிறார் அவர்.
எதிர்காலத்தில் பெண்கள் மாடுபிடி வீரர்களாகப் பங்கெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று எழுத்தாளர் முத்துகிருஷ்ணனிடம் கேட்டபோது, "அதற்கு எவ்வித சாத்தியமும் இருப்பது போலத் தெரியவில்லை. கிரிக்கெட் உள்பட பெண்கள் பங்கெடுக்கும் முக்கிய விளையாட்டுகளே பல ஆண்டுகள் கழித்து இப்போதுதான் முன்வரிசையில் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஏறுதழுவுதலில் பெண்கள் பங்கெடுப்பதை ஆண்கள் ஏற்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
ஆனால் அதற்கு முன்பாக தமிழர் கலாசாரம் என்பது நாட்டின காளைகளைப் பாதுகாப்பதில் இருக்கிறதா அல்லது அவற்றை அடக்குவதில் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் அர்ச்சனா சேகர்.
அதோடு, "பெண்கள் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கு வகித்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டாகப் பார்க்கும்போது அதிலும் பெண்கள் ஈடுபடுவதை உறுதி செய்வது அவசியம். ஆனால், அறிவியல் மற்றும் பகுத்தறிவு சார்ந்து பார்க்கையில், இத்தகைய ஒரு விளையாட்டு இன்றைய சமூக சூழலில் தேவையா என்ற கேள்வியை முதலில் எழுப்ப வேண்டியுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
'பல தலைமுறைகளாக இப்படித்தான் இருந்து வருகிறது'
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பெண்கள் பங்கெடுக்கக் கூடாது என்று விதிகளோ கட்டுப்பாடுகளோ இல்லை என்கிறார் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் செயலாளர் ஹிமாகிரண்.
இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "சமத்துவத்தை முடிவு செய்வதை, கொடுக்கப்படும் வாய்ப்புகள் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். அப்படி சம வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்றால் சமத்துவமின்மை நிலவுவதாகக் கூறலாம். ஆனால், அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டில் பல தலைமுறைகளாக இரு பாலர்களின் பங்களிப்பும் வரையறை செய்யப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதில் எது சரி, எது தவறு என்பதற்குள் நான் செல்லவில்லை. ஆனால் கடந்த 5,000 ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் இப்படித்தான் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஏறுதழுவுதலில் பெண்கள் பங்கெடுக்கக் கூடாது என்று எவ்வித தடையோ விதிமுறையோ இல்லை. இது, இந்த விளையாட்டில் பங்கெடுப்பதற்கான திறன்கள் சம்பந்தப்பட்டது," என்று தெரிவித்தார்.
அடிப்படையில் உயிரியல் ரீதியாக ஒரே வயது, ஒரே எடை இருக்கக்கூடிய ஆண், பெண் இடையில் ஒப்பிடும்போது ஆண்கள் வலிமையானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை எனக் கூறிய ஹிமாகிரண், "மாடு வளர்ப்பு விஷயத்தில் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டியவை என்பது பாலினம் சார்ந்த பணிகளாக வரையறுக்கப்படவில்லை. அது வசதியான ஒன்றாக இருந்ததால் காலங்காலமாக அப்படியே பின்பற்றப்பட்டு வருகிறது" என்றார்.
ஜல்லிக்கட்டை பொறுத்தவரை, "நெகிழ்வுத் தன்மை, சுறுசுறுப்பு ஆகியவை மிக முக்கியம். மாட்டின் திமிலை வலுவாகப் பிடித்துக் கொள்ள வலிமையும் தேவையாகிறது" என்று விளக்கிய ஹிமாகிரண், இத்தகைய திறன்கள் இருந்தால், பாலின வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்றார்.
அதோடு, "வழக்கமாக மாடுகளை வளர்ப்பது பெண்களாக இருந்தாலும், அதை களத்திற்குக் கொண்டு வந்து அவிழ்த்து விடுவது ஆண்களாகத்தான் இருக்கும்." அந்த நிலை சமீப காலங்களில் மாறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வரும் காலங்களில் பெண்கள் மாடுபிடி வீரர்களாகவும் மாறக்கூடும் என்றார்.
மேலும், "எனக்குத் தெரிந்து அடுத்த சில ஆண்டுகளில் இது நடக்கலாம். அரசாங்கமேகூட பெண்கள் பங்கெடுக்கும் வகையில் தனிப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் நிலை வரலாம். அதை யாரும் தடுக்கப் போவதில்லை," என்றும் கூறினார் அவர்.
'பெண்கள் விரும்புகிறார்களா என்பது முக்கியம்'
மறுபுறம், இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வமும் விருப்பமும் பெண்களுக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி.
அவரது கூற்றுப்படி, பெண்கள் எந்தக் காலத்திலும் தங்களுக்கு உடல் வலிமை இருந்தாலும்கூட, அதை வைத்துத்தான் ஆற்றலை நிரூபிக்க வேண்டுமென்ற கருத்துக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டதே இல்லை.
"மாடுகளை வளர்க்கும் ஆயர் பெண்கள் பற்றி சிலப்பதிகாரத்தில் வரும் குறிப்புகளைப் பார்க்கும்போது, அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளுக்குமே உடல் வலிமை தேவையான ஒன்றுதான். ஆனால், தங்கள் உடல் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக, பயனுள்ள வகைகளில்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
வரலாற்று ஆதாரங்களைப் பார்க்கும்போது, பெண்கள் தவிர்க்க முடியாத நிலையில் போருக்குக்கூட சென்றுள்ளார்கள். ஆனால் பெண்கள் போரை விரும்பியதில்லை. அதனால் இப்படிப்பட்ட விளையாட்டுகளும், சாகசங்களும் தங்களை நிரூபித்துக்கொள்ள ஆண்களுக்குத்தான் தேவைப்படுகிறது" என்கிறார் அருள்மொழி.
அதுமட்டுமின்றி, "பெண்கள் இதை விரும்புகிறார்களா என்ற கேள்வியும் உள்ளது. ஒருவேளை தாமாக விருப்பப்பட்டு அதில் ஈடுபட முன்வந்தால் அது பரிசீலிக்கப்படலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.
'மாற்றம் காலப்போக்கில் வரக்கூடும்'
"வேளாண்மை பெண்களின் கையிலும், வேட்டை மற்றும் பிற பணிகள் ஆண்களின் கையிலும் இருந்த காரணத்தால் ஆண்களே மாடுபிடி வீரர்களாக இருந்த நிலை நீடித்திருக்கக்கூடும். இது தொடக்கத்தில் உடல் வலிமை அடிப்படையில் இருந்து, பின்னர் அப்படியே தொடர்ந்திருக்கலாம்." என்றார் ஆறு.ராமநாதன்.
அதற்காக பெண்கள் இதில் பங்கெடுக்கவே கூடாது, விளையாடவே கூடாது என்றெல்லாம் எவ்வித வரையறைகளும் இல்லை என்றும் சொல்கிறார் ஆறு.ராமநாதன்.
"இளவட்டக்கல் தூக்குவதும் ஆண்களை மையப்படுத்திய ஒன்றாகவே இருந்தது. அதை இப்போது பெண்கள் பலரும் செய்து காட்டுகிறார்கள். அதேபோல, ஏறு தழுவுதலிலும் பெண்கள் முன்வந்து மாடுபிடி வீரர்களாகப் பங்கெடுப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை உருவாக்கலாம். இந்த மாற்றம் காலப்போக்கில் வரக்கூடும் எனக் கருதுகிறேன்," என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு