கிரீன்லாந்திற்கு ஐரோப்பிய படைகளின் வருகை டிரம்புக்கு உணர்த்தும் சேதி

    • எழுதியவர், பால் கிர்பி
    • பதவி, ஐரோப்பா டிஜிட்டல் ஆசிரியர்

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு பிரெஞ்சு ராணுவத்தின் ஒரு சிறிய குழு வந்து சேர்ந்துள்ளது.

பல ஐரோப்பிய நாடுகள் 'ஆய்வு மற்றும் கண்காணிப்பு' பணிக்காக தங்கள் நாட்டு வீரர்களை அங்கு அனுப்பி வருகின்றன.

ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் சிறிய அளவில் தங்களது படைகளை அங்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளன. டென்மார்க்கின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த ஆர்க்டிக் தீவின் மீதான தனது உரிமையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், "ஆரம்பகட்டமாக அனுப்பப்பட்டுள்ள இந்த ராணுவக் குழு விரைவில் தரை, வான் மற்றும் கடல்வழிப் படைகளுடன் வலுப்படுத்தப்படும்" என்றார்.

மூத்த தூதரக அதிகாரி ஆலிவர் போயவ்ரே டி'ஆர்வோர் இந்தத் திட்டத்தை ஒரு வலுவான அரசியல் சமிக்ஞையாகக் கருதுகிறார்.

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் புதன்கிழமை அமெரிக்க துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸுடனான சந்திப்பிற்காக அமெரிக்காவுக்குச் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, 15 பேர் கொண்ட பிரெஞ்சு படைப்பிரிவு பணியில் ஈடுபட்டதாக ஆலிவர் குறிப்பிடுகிறார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேசிய டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென், பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தபோதிலும், இரு தரப்புக்கும் இடையே "அடிப்படை கருத்து வேறுபாடு" நீடிப்பதாகக் கூறினார். மேலும், கிரீன்லாந்தை வாங்குவதற்கான டிரம்பின் முயற்சியையும் அவர் விமர்சித்தார்.

இதற்கிடையில், கிரீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தனது முயற்சியில் டிரம்ப் உறுதியாக உள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து நமக்குத் தேவை" என்றார். ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை என்றாலும், டென்மார்க்குடன் பேசி ஏதேனும் ஒரு தீர்வை எட்ட முடியும் என்று புதன்கிழமை இரவு தெரிவித்தார்.

"பிரச்னை என்னவென்றால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க விரும்பினால் டென்மார்க்கால் எதையும் செய்ய முடியாது. ஆனால் எங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். கடந்த வாரம் வெனிசுவேலாவைப் பார்த்தபோது நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள்," என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், கிரீன்லாந்திற்கு கூடுதல் ஐரோப்பியப் படைகள் அனுப்பப்படுவது, அந்தப் பகுதி தொடர்பான அதிபரின் முடிவெடுக்கும் முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

மேலும், "கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அவரது குறிக்கோளையும் இது பாதிக்காது" என்று அவர் கூறினார்.

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இதுகுறித்துக் கூறுகையில், கிரீன்லாந்திற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து படைகளை அனுப்ப போலந்து திட்டமிடவில்லை என்றும், ஆனால் அங்கு அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட்டால் அது "அரசியல் ரீதியாக ஒரு பேரழிவாக" அமையும் என்றும் எச்சரித்தார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், "நேட்டோவின் ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினரின் நிலப்பகுதியைக் கைப்பற்ற முயல்வது அல்லது மோதலில் ஈடுபடுவது என்பது, இத்தனை ஆண்டுகளாக நமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்த உலகத்தின் முடிவாக இருக்கும்," என்றார்.

இதற்கிடையில், பெல்ஜியமில் உள்ள ரஷ்யத் தூதரகம் ஆர்க்டிக் பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து "கடுமையான கவலை" தெரிவித்தது.

ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நேட்டோ அங்கு ராணுவ இருப்பை அதிகரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும், 'ஆபரேஷன் ஆர்க்டிக் என்டியூரன்ஸ்' என்று அழைக்கப்படும் டென்மார்க் தலைமையிலான கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக சில வீரர்கள் மட்டுமே அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது ஒரு அடையாள ரீதியான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் அங்கு எவ்வளவு காலம் தங்கியிருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பின்லாந்து தனது தரப்பிலிருந்து இரண்டு ராணுவத் தொடர்பு அதிகாரிகளை உண்மை கண்டறியும் பணிக்காக அனுப்பியுள்ளது.

"தற்போது நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை, அதே நேரத்தில் எதைப் பற்றியும் குறிப்பாக ஆலோசிக்கவில்லை," என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கைத் துறைத் தலைவர் ஜானே குஸேலா பிபிசியிடம் தெரிவித்தார்.

கிரீன்லாந்து மீது நேட்டோ அமைப்பிற்கு எந்தளவுக்கு வலுவான பிடி உள்ளது என்ற கவலைகளுக்கு மத்தியில், ஒரு நட்பு நாட்டு நிலப்பகுதியின் பாதுகாப்பை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்று குஸேலா கூறினார்.

ஜெர்மனி, ஒரு ஏ400எம் போக்குவரத்து விமானத்தை 13 வீரர்களுடன் வியாழக்கிழமை நூக் நகருக்கு அனுப்பியது.

இருப்பினும், அவர்கள் சனிக்கிழமை வரை மட்டுமே கிரீன்லாந்தில் தங்கியிருப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஐரோப்பிய மற்றும் அட்லாண்டிக் நாடுகளின் பாதுகாப்பிற்காக ஆர்க்டிக் பகுதியில் நேட்டோவின் தடம் மற்றும் இருப்பை வலுப்படுத்த", வரும் காலங்களில் கிரீன்லாந்தைச் சுற்றி ராணுவ நடமாட்டத்தை அதிகரிக்கப்போவதாக டென்மார்க் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கம் இணைந்து முடிவு செய்துள்ளனர்.

பிரான்ஸ் ஆயுதப் படைகளுக்கு ஆற்றிய புத்தாண்டு உரையில் மேக்ரான் பேசுகையில், "இந்த நிலப்பரப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமானது மற்றும் இது நமது நேட்டோ கூட்டாளிகளில் ஒன்றாகும் என்பதால், கிரீன்லாந்து மீது ஐரோப்பியர்களுக்கு ஒரு சிறப்புப் பொறுப்பு உள்ளது" என்றார்.

அமெரிக்காவிற்கு ஏற்கனவே கிரீன்லாந்தில் ஒரு ராணுவத் தளம் உள்ளது.

அங்கு தற்போது 150 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். மேலும் கோபன்ஹேகனுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின்படி, அதிக அளவிலான வீரர்களை அங்கு கொண்டு வரும் அதிகாரம் அமெரிக்காவிற்கு உண்டு.

இருப்பினும், டென்மார்க் தலைமையிலான இந்த நடவடிக்கை, ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பில் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் பங்கு உண்டு என்பதை டிரம்ப் நிர்வாகத்திற்கு உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டின் ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை நூக் நகருக்கு அனுப்பப்பட்டதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்தார். இவர்களுடன் நார்வேயின் இரண்டு வீரர்கள், ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி மற்றும் ஒரு டச்சு கடற்படை அதிகாரி ஆகியோரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் கூறுகையில், "வட துருவப் பகுதியின் பாதுகாப்பு" குறித்த அதிபர் டிரம்பின் கவலையைத் தாங்களும் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்தது.

மேலும், "ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் சீனாவின் செயல்பாடுகளைத் தடுப்பதற்காக வலுவான பயிற்சிகள் மூலம் பாதுகாப்பைத் தீவிரப்படுத்துவது" தான் படைகளை அங்கு நிலைநிறுத்துவதன் நோக்கம் என்று கூறியது.

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வியாழக்கிழமை பேசுகையில், கிரீன்லாந்தைப் பாதுகாப்பதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணியின் பொதுவான கவலை என்று குறிப்பிட்டார்.

டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் கூறுகையில், வெளிநாட்டு கூட்டாளிகளுடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், தீவில் "சுழற்சி முறையில்" ராணுவப் பாதுகாப்பை நிலைநிறுத்தவும், நிரந்தர ராணுவ இருப்பை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று டிரம்ப் கூறும் காரணத்தை டென்மார்க் மறுத்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராஸ்முசென், சீனா அல்லது ரஷ்யாவிடமிருந்து டென்மார்க்கும் கிரீன்லாந்தும் சமாளிக்க முடியாத அளவிலான "உடனடி அச்சுறுத்தல்" எதுவும் தற்போது இல்லை என்று புதன்கிழமை தெரிவித்தார்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு சார்ந்த கவலைகளை ஓரளவிற்குத் தாங்களும் பகிர்ந்துகொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைமையிலான குழு ஒன்று வெள்ளிக்கிழமை டென்மார்க்கிற்கு வருகை தர உள்ளது.

வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கிரீன்லாந்தின் வெளியுறவு அமைச்சருடன் ராஸ்முசென் புதன்கிழமையன்று பேசினார்.

"அதிபரின் விருப்பம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் எங்களுக்கும் சில எல்லைக்கோடுகள் உள்ளன. இது 2026-ஆம் ஆண்டு. நீங்கள் மக்களுடன் வர்த்தகம் செய்யலாம், ஆனால் மக்களையே வர்த்தகம் செய்ய முடியாது," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் இந்த வாரம் பேசுகையில், அந்தப் பிரதேசம் உலகளாவிய அரசியல் நெருக்கடியின் நடுவில் இருப்பதாகவும், ஒருவேளை மக்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால், அவர்கள் அமெரிக்காவை விட டென்மார்க்கையே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறினார்.

"கிரீன்லாந்து அமெரிக்காவிற்குச் சொந்தமானதாக இருக்க விரும்பவில்லை. கிரீன்லாந்து அமெரிக்காவால் ஆளப்பட விரும்பவில்லை. கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை," என்றும் அவர் வலியுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு