You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் அமெரிக்க ராணுவம் நேரடியாக தலையிடுமா?
இரானில் நடைபெற்றுவரும் போராட்டங்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இவை கடந்த டிசம்பரில் தொடங்கின. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் மோசமான பொருளாதார நிலை ஆகியவற்றால் கடும் அதிருப்தியில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த போராட்டங்களை இரான் பாதுகாப்புப் படைகள் கடுமையாக ஒடுக்கி வருகின்றன. இதன் காரணமாக பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்.
தங்கள் நாட்டில் கலவரத்தைத் தூண்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முயற்சிப்பதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது. எந்தவொரு ராணுவ தலையீடும் நடந்தால், அது முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று இரான் எச்சரித்துள்ளது.
இதுவும் இந்தியாவிற்கு முக்கியமானது. ஏனெனில், இரான் இந்தியாவின் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் மூலோபாய கூட்டுறவுகளில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. குறிப்பாக, சபாஹர் துறைமுகம் போன்ற திட்டங்கள், இந்தியாவிற்கு மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.
இரானின் தற்போதைய நிலை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
இந்நிலையில், இப்போது பல கேள்விகள் எழுந்துள்ளன: இந்த போராட்டங்கள் முந்தைய போராட்டங்களிலிருந்து வேறுபட்டவையா? போராட்டக்காரர்களிடையே தலைமை இல்லாதது ஒரு பெரிய பலவீனமா? இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் பேசுவதற்குப் பின்னால் உள்ள அவரது உண்மையான நோக்கம் என்ன? அமெரிக்கா இரானில் ராணுவ நடவடிக்கை எடுக்கும் அபாயம் உள்ளதா? இரானில் நிலையற்ற தன்மை நீடிப்பது இந்தியாவிற்கு சாதகமா அல்லது பாதகமா?
பிபிசி ஹிந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான 'தி லென்ஸ்'-ல், கலெக்டிவ் நியூஸ்ரூமின் பத்திரிகைத்துறை இயக்குநர் முகேஷ் சர்மா, இந்த கேள்விகள் குறித்து நிபுணர்களுடன் விவாதித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய முன்னாள் தூதர் மகேஷ் சச்தேவ், ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் மேற்கு ஆசிய ஆய்வுகள் மையப் பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா, மற்றும் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் (ORF - ஓஆர்எஃப்) மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான துணை இயக்குநர் கபீர் தனேஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த முறை போராட்டங்கள் எவ்வளவு வேறுபட்டவை?
இரானில் கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அங்கு மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவது அல்லது அரசின் கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. இருப்பினும், இந்த முறை சர்வதேச ஊடகங்களும் உலக சமூகமும் இந்த போராட்டங்களை மிகக் கூர்மையாக கவனித்து வருகின்றன.
இரான் ஆட்சியமைப்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் சொல்லாட்சியும் இந்தப் போராட்டத்தை அதிக கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாற்றியுள்ளது. ஆனால், இந்த போராட்டங்கள் முன்பு நடந்தவற்றிலிருந்து உண்மையில் வேறுபட்டவையா என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்துப் பேசிய ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் மேற்கு ஆசிய ஆய்வுகள் மையப் பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா, "இரானில் நடைபெறுவதை ஒரு தற்காலிகப் போராட்டமாக மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அங்குள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கைகளும், அவர்களுக்குள் தேங்கியிருந்த சோர்வும் கோபமும் வெடித்துச் சிதறும் ஒரு வெளிப்பாடாக இதைக் காண வேண்டும்" என்று கூறினார்.
மேலும், "பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, நாணய மதிப்பிழப்பு மற்றும் இரான் மக்களின் தினசரி வாழ்க்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளன. அவர்களின் பொறுமையையும் மன உறுதியையும் சிதைத்துள்ளன. இரான் தெருக்களில் காணப்படுவது ஒரு தனிப்பட்ட பிரச்னைக்கான எதிர்வினை அல்ல. அது முழு அமைப்பின் மீதான ஆழமான விரக்தியின் வெளிப்பாடு" என்றும் அவர் கூறினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான துணை இயக்குநர் கபீர் தனேஜா, "நாம் ஒரு வருடம் பின்னோக்கிச் செல்வோம்... இரான் அரசாங்கம் தனது மக்களுக்கு அளித்த ஒரே உத்திரவாதம் பாதுகாப்பு மட்டுமே. ஆனால் அமெரிக்கா இரானின் மீது குண்டு வீசியது. இஸ்ரேலும் குண்டு வீசியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் உயர் தளபதிகள் எங்கே சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள் என்பது வரை தெரிந்து வைத்திருந்ததைப் போல் அவர்களைக் குறிவைத்தன" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சில மாதங்களுக்கு முன்பு டெஹ்ரானில் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டபோது, மக்கள் தங்கள் தலைநகரை மாற்ற வேண்டியிருக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தனர். இரானியர்கள் கடுமையான தண்ணீர் பிரச்னை இருப்பதாகக் கூறினர், ஆனால் இரானிய உயரடுக்கினரிடம், அதாவது ஐஆர்ஜிசி அல்லது ஆயதுல்லாவின் ஆட்களிடம், தண்ணீருக்குப் பஞ்சம் இல்லை. இப்போது வரை, அடிப்படை விஷயங்களுக்கான சண்டை கடந்த ஐந்து அல்லது ஆறு மாதங்களாக இருந்த நிலையை எட்டவில்லை"
"மக்கள் தங்கள் அரசாங்கத்திடம், 'நீங்கள் எங்களுக்கு வேலையையும் தரவில்லை, பணத்தையும் தரவில்லை, தண்ணீரையும் தரவில்லை, இப்போது பாதுகாப்பையும் தர முடியவில்லை போலத் தெரிகிறது' என்று கேட்டார்கள். இரானுக்குள் கருத்துகள் ஒன்று திரள்வதும், அதிருப்தியும் இருந்தது. அது நீண்ட காலமாகப் புழுங்கிக் கொண்டிருந்தது, இப்போது வெளியே வந்துள்ளது" என்றும் அவர் கூறினார்.
காமனெயி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்
இரானில் கடந்த 15 ஆண்டுகளில் நடக்கும் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகும் அரசாங்கம் பின்வாங்காது என்று இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கூறியிருந்தார்.
போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக, வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுவோரைக் தனது அரசு சகித்துக் கொள்ளாது என்று காமனெயி வெளிப்படையாகக் கூறினார்.
ஆனால், இரானில் தொடர்ந்துவரும் போராட்டங்கள், இரான் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் அறிக்கைகள், ராணுவ தலையீடு மிரட்டல்கள் மற்றும் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் ஆகியவை, இரானுக்கு சவால்களை மேலும் அதிகரித்துள்ளன.
முன்னாள் இந்திய தூதர் மகேஷ் சச்தேவ் இதுகுறித்து கூறுகையில், "இரானின் நிலைமை மிகவும் சிக்கலானது. இதை ஒரு உள்நாட்டு பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. ஏனெனில், பிற நாடுகள் இரானுக்கு விதித்துள்ள தடைகளும் இதில் பெரிய பங்காற்றுகின்றன" என்கிறார்.
"இந்த சூழ்நிலையில் காமனெயி எதிர்கொள்ளும் முதல் பெரிய சவால் என்னவென்றால், தனது ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வைத்திருப்பது. அவர்களுக்குள் பிளவுகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதே" என்றார்.
அதுமட்டுமல்லாமல், "காமனெயி பொதுமக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும். அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து இரான் ஆட்சியமைப்பை ஆதரிப்பவர்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளவும், மேலும் ஆதரவு பெறவும் வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
இரானில் அமெரிக்க ராணுவம் நேரடியாக தலையிடுமா?
இரானில் போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் ஒரு பதிவில், இரான் அரசு அப்பாவி மக்களைக் கொன்றால், அமெரிக்கா அவர்களை காப்பாற்ற முன்வரும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இரானில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்ற ஊகங்கள் பரவலாக எழுந்தன. ஆனால் பின்னர் இதை விளக்கிய டிரம்ப், "ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும், அதற்கு இரானுக்கு படைகளை அனுப்புவது என்று அர்த்தமில்லை" என்று தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், இரானில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து, மக்கள் உயிரிழந்தால், அமெரிக்கா ராணுவ தலையீடு மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்துப் பேசிய மகேஷ் சச்தேவ், "அமெரிக்காவுக்கு இதுபோன்ற எந்த நடைமுறை சார்ந்த தெரிவும் இல்லை என நான் நம்புகிறேன். ஏனெனில், அமெரிக்கா தனது மக்களிடம் இனி எங்கும் அமெரிக்கப் படைகளை அனுப்பமாட்டோம் என்று ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல், முடிவில்லா போர்களில் அமெரிக்காவை சிக்கவைத்த முன்னாள் அதிபர்களை அவர் கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார். அவை அமெரிக்காவுக்கு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இராக் ஆகட்டும், ஆப்கானிஸ்தான் ஆகட்டும், அங்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது" என்று கூறினார்.
பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா, "இங்கே அமெரிக்காவின் பங்கு பெரும்பாலும் தடைகள் மற்றும் அழுத்தம் என்ற வடிவில்தான் பார்க்கப்படுகிறது. நேரடியாக களத்தில் இறங்காமல், பொருளாதார, அரசியல் மற்றும் தூதரக ரீதியாக அழுத்தம் தந்து அதன் மூலம் தாக்கம் செலுத்தவே அவர்கள் விரும்புகின்றனர்" என்றார்.
"மறுபுறம், வெனிசுவேலாவில் செய்தது போல அமெரிக்கா நேரடித் தாக்குதலை நடத்தும் என்று நாம் சொன்னால், புவிசார் அரசியல் யதார்த்தத்தை நீங்கள் பார்க்க வேண்டும். வெனிசுவேலா அதன் அருகிலேயே இருந்தது, ஆனால் இரான் மிகத் தொலைவில் உள்ளது. அமெரிக்கா இரானின் அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீசியிருந்தாலும், இங்கு அரசியல் மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமாகவே அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா மீதான தாக்கம் என்ன?
இந்தியா மற்றும் இரான் பல துறைகளில் முக்கிய கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. ஒருகாலத்தில், இந்தியா இரானிலிருந்து பெரிய அளவில் எண்ணெயை வாங்கி வந்தது.
இரானில் இந்தியா உருவாக்கி வரும் சபாஹர் துறைமுகம் இந்தக் கூட்டணியின் முக்கிய விளைவாகும். இந்தத் துறைமுகம் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை அணுகுவதற்கான முக்கிய வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குகிறது.
இத்தகைய சூழலில், இரானில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நிலவினால் அல்லது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது இந்தியாவுக்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கபீர் தனேஜா, "இந்தியா தன் பார்வையில் இரானை எப்படி பார்க்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியா, இரானை பெரும்பாலும் ஒரு அண்டை நாடாகவே பார்க்கிறது" என்றார்.
மேலும், "ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரத்தில் இரான் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வந்துள்ளது. இந்தியா - இரான் இருதரப்பு உறவுகளை நல்ல முறையில் தொடர இந்தியா முயற்சிக்கும். இரானில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
முன்னாள் இந்திய தூதர் மகேஷ் சச்தேவ், "மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இரான் மீது தொடர்ந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, தன்னை நிலைநிறுத்தவும் ஆதரவைத் தொடரவும் பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் ஒத்துழைப்பு இரானுக்கு மேலும் முக்கியமாகும்.
மேலும் தடைகள் விதிக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக நிலவழிப் பாதைகளை பயன்படுத்தி சீனாவுடன் தனது வர்த்தக மற்றும் மூலோபாய உறவுகளை இரான் மீண்டும் விரிவுபடுத்தக்கூடும். அதேபோல், காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து இந்த தடைகளை சமாளிக்க முயற்சிக்கும்" என்றும் அவர் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு