You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல் அதிகரிக்கிறதா? புள்ளிவிவரம் சொல்வது என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பட்டியலினத்தோர் மீதான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட நிடி ஆயோக்கின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம்?
கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2023-24ஆம் ஆண்டிற்கான நிலைத்த வளர்ச்சி இலக்கு குறியீட்டு தரவரிசைப் பட்டியலை (Sustainable Development Goals Index 2023-24) இந்தியாவின் கொள்கைகளை வகுக்கும் சிந்தனைக் குழுவான நிடி ஆயோக் வெளியிட்டது. இந்தப் பட்டியல் பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில் மாநிலங்களை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்ய 57ல் இருந்து 79வரை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. அதன்படி உத்தராகண்ட், கேரளா ஆகிய மாநிலங்கள் 79 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளன. 78 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
அதேபோல, ஏழ்மையை ஒழிப்பது என்ற இலக்கில் 92 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
கல்வியைப் பொறுத்தவரை பல குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. 18 - 23 வயதுக்குட்பட்டவர்களில் 28.4 சதவீதத்தினர் உயர்கல்வி பயிலச் செல்கின்றனர். ஆனால், இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 47 சதவீதம் பேர் உயர்கல்வி பயிலச் செல்கின்றனர்.
பள்ளிக்கூடங்களில் மின்சாரம், குடிநீர் வசதி போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கோவா ஆகிய இரு மாநிலங்களில்தான் 100 சதவீத பள்ளிகளில் இவை இருக்கின்றன. இந்திய அளவில் மேல் நிலைப்பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 92.2 சதவீத பள்ளிகளில்தான் இருக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இந்த சதவீதம் 99.9ஆக இருக்கிறது.
ஆனால், சில குறியீடுகளில் முந்தைய மதிப்பெண்களில் இருந்து சற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறது தமிழ்நாடு. குறிப்பாக, தற்கொலை செய்துகொள்வோர் விகிதம் ஒரு லட்சத்திற்கு 17.8ஆக இருந்தது, தற்போது 25.9ஆக அதிகரித்திருக்கிறது. சாலை விபத்துகளில் இறப்போர் விகிதமும் ஒரு லட்சத்திற்கு 13ஆக இருந்தது, தற்போது 23ஆக உயர்ந்திருக்கிறது. இந்திய அளவில் வாகன விபத்தில் இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு 12 தான்.
மிக முக்கியமாக பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் மீதான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில், பட்டியலினத்தோர் மீதான குற்றங்கள் ஒரு லட்சம் பேருக்கு 7.9 குற்றம் என்ற அளவில் பதிவானது.
ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 12.2ஆக அதிகரித்துள்ளது. அதேபோல பழங்குடியினர் மீதான குற்றங்களைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 3.9ஆக இருந்தது தற்போது 8.4ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய அளவைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம்.
குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கொலை, கடுமையாகத் தாக்குவது போன்ற கொடுங்குற்றங்கள் கடுமையாக அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார் எவிடன்ஸ் அமைப்பின் கதிர்.
"கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 சதவீதம் அளவுக்கு பட்டியலினத்தோருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை வழக்குகளை கொடூர குற்றம், சாதாரண குற்றம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடும் குற்றங்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, உண்மையிலேயே குற்றங்கள் அதிகரித்திருக்கலாம். அல்லது குற்றங்கள் காவல் நிலையத்தில் பதிவாவது அதிகரித்திருக்கலாம்" என்கிறார் கதிர்.
ஆனால், வலதுசாரி சக்திகளின் எழுச்சிதான் இப்படி வன்முறை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.
"தமிழ்நாட்டில் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல் மூன்று ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். பட்டியலினத்தோர் மீதான வன்முறை அதிகரிப்பதற்கான காரணங்களைப் பொறுத்தவரை, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையா என்று கேட்கலாம் அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றும் ஆராயலாம்." என்கிறார் ரவிக்குமார்.
ஆனால், தண்டனைகள் தாமதமாவது இத்தகைய சக்திகளை ஊக்குவிக்கிறது என்கிறார் எவிடன்ஸ் கதிர்.
"தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சாதி சார்ந்து மட்டும் 60 கொலைகள் நடக்கின்றன. 116 தலித் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வளவு கொடூரக் குற்றங்கள் நடக்கும்போது தண்டனை அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை. இதுபோன்ற வன்கொடுமை வழக்குகளில் 3 மாதங்களில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து மூன்று மாதங்களில் வழக்குகளை முடிக்க வேண்டும். ஆனால், சட்டத்தை செயல்படுத்துவது மிக பலவீனமாக இருக்கிறது" என்கிறார் கதிர்.
ஆனால், வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு அரசை மட்டும் குற்றம் சுமத்த முடியாது என்கிறார் 'தலித் முரசு' இதழின் ஆசிரியரும் தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவருமான புனிதபாண்டியன்.
"ஒரு வன்கொடுமை நடக்கும் நிலையில் அது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதற்கான எல்லாப் பொறுப்பையும் அரசின் மீது மட்டும் சுமத்திவிட முடியாது. சாதியின் வெளிப்பாடான வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பதற்கான பொறுப்பு, அரசுக்கும் சிவில் சமூகத்திற்கும் இருக்கிறது. சாதியை நிலைநிறுத்துவதில் சமூகம், குடும்பம், பண்பாடு, மதம், அடிப்படைவாத அமைப்புகள் போன்றவை முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றைக் கேள்விக்குள்ளாக்காமல் அரசை மட்டுமே குற்றம் சுமத்துபவர்கள், அவ்வரசின் நிர்வாகத்திலும் காவல் துறையிலும் தலித் மக்களின் பிரதிநிதித்துவமும் உள்ளடங்கி இருப்பதை கவனிக்கத் தவறி விடுகின்றனர்."
"தீண்டாமையின் அனைத்து வடிவங்களும் சட்டத்தால் தடை செய்யப் பட்டிருப்பினும் பொதுச் சமூகம் அதை அங்கீகரிக்காததால்தான் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன. சாதிய சமூகத்தைக் கண்டிக்காமல் அரசை மட்டுமே பொறுப்பாக்குவது, ஒருபோதும் தீர்வைத் தராது. சமூகம் எல்லா மட்டங்களிலும் ஒதுக்கி வைத்திருக்கப்படும்போது, வன்கொடுமை நடக்கும்போது மட்டும் அந்த விவகாரம் பேசப்படுகிறது. எப்போது பார்த்தாலும் அரசு என்ன செய்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், சமூகம் எல்லா மட்டத்திலும் ஜனநாயகத் தன்மை இல்லாமல் இருக்கிறது. அதன் விளைவாகத்தான் வன்கொடுமைகள் நடக்கின்றன. ஆகவே, சமூக ரீதியான பிரச்சனைக்கு அரசிடம் மட்டும் தீர்வைத் தேடக்கூடாது. சமூகம் மாற வேண்டும்." என்கிறார் புனித பாண்டியன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)