You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
21-ம் நூற்றாண்டிலும் உடன்கட்டை ஏறும் வழக்கமா? சத்தீஸ்கரில் கணவரை இழந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?
- எழுதியவர், அலோக் பிரகாஷ் புதுல்
- பதவி, ராய்கரில் இருந்து திரும்பிய பிறகு
சத்தீஸ்கரின் ராய்கர் நகரை ஒட்டியுள்ள சிட்காக்கானி கிராமத்தைச் சேர்ந்த சுஷில் குப்தா, தனது தந்தையுடன் கூடவே தனது தாயின் இறுதிச் சடங்குகளையும் செய்ய அனுமதி கோருகிறார்.
இருப்பினும் ராய்கர் மாவட்ட காவல்துறை சுஷில் குப்தாவின் தாயார் குலாபி குப்தா ’காணாமல் போனதாக’ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் அவரைக் காணவில்லை என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
ஆனால் குலாபி குப்தா ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கணவர் ஜெய்தேவ் குப்தாவின் எரியும் சிதையில் குதித்து 'சதி' எனப்படும் உடன்கட்டை ஏறுதலைச் செய்து கொண்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
குலாபி குப்தா 'தற்கொலை' செய்துகொண்டதாகக் கூறப்படும் இடுகாடு தற்போது போலீஸ் பாதுகாப்பின் கீழ் உள்ளது. பிரதான சாலையில் சாதாரண உடையில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு வருவோர், செல்வோர் கண்காணிக்கப்படுகின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இடுகாட்டில் ஏதேனும் சமய நிகழ்வுகள் தொடங்கக் கூடும் என்றும் போலீசார் அஞ்சுகின்றனர். சுஷில் குப்தாவின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த இடுகாடு உள்ளது.
“நள்ளிரவுக்குப் பிறகு கிராம மக்களுடன் இடுகாட்டை அடைந்தபோது எனது தந்தையின் சிதை இருந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் என் அம்மாவின் சேலை, செருப்பு மற்றும் கண்ணாடி ஆகியவை கிடந்தன. என் தந்தையின் சிதையிலேயே தாயின் உடலும் கிட்டத்தட்ட எரிந்திருந்தது. பின்னர் நாங்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தோம்,” என்று சுஷில் குப்தா கூறினார்.
ராய்கர் நகரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள கோடர்லியா பஞ்சாயத்தின் சிட்காக்கானி கிராமம் ஒடிசா எல்லையில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இந்தக் கிராமத்திலுள்ள பல குடும்பங்கள் ஒடிசாவில் உள்ள ஹிராகுட் அணையின் நீரில் மூழ்கிய பகுதியான பர்ஸ்தா ஜுக்னியில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறியவை.
அவர்களில் ஒருவரான கோல்தா சமூகத்தைச் சேர்ந்த ஜெய்தேவ் குப்தா மற்றும் அவரது மனைவி, தங்கள் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் தையல் கடை நடத்தி வந்தனர்.
கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?
“கணவன்-மனைவி இடையே பெருமளவு அன்பு இருந்தது. இருவரும் மிகவும் அமைதியாகவும் கண்ணியமாகவும் இருப்பார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெய்தேவ் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது சிகிச்சையில் குடும்பத்தினர் அனைவரும் மும்முரமாக இருந்தனர்," என்கிறார் ஜெய்தேவ் குப்தா வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த மங்கள் கமாரி.
மேற்கொண்டு பேசிய மங்கள் கமாரி, "ராய்கர் மருத்துவமனையில் ஜெய்தேவ் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் மாலை ஐந்து மணியளவில் இடுகாட்டில் நடந்தன,” என்றார்.
இரவு பத்து மணியளவில் சடங்கு முடிந்து மக்கள் திரும்பி வந்ததாக ஜெய்தேவின் மகன் சுஷில் கூறுகிறார். சுமார் 11 மணியளவில் சுஷில் எழுந்து பார்த்தபோது அவரது 57 வயதான தாய் குலாபி குப்தாவை வீட்டில் காணவில்லை. வீட்டின் வாயிற்கதவும் திறந்து கிடந்தது.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு கிராம மக்கள் சுடுகாட்டை அடைந்தனர். அங்கு சிதையில் பாதி எரிந்த சுஷிலின் தாயுடைய உடலை அவர்கள் கண்டனர்.
"குலாபி குப்தா தனது கணவரின் சிதையில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்று காலையில்தான் தெரிய வந்தது" என்று பஞ்சாயத்து தலைவர் ஹரிமதி ராட்டியா தெரிவித்தார்.
"நான் இரவு 2.30 மணியளவில் சுடுகாட்டை அடைந்தபோது அங்கு சிதை எரிந்து கொண்டிருந்தது,” என்று பஞ்சாயத்து தலைவர் ராட்டியாவின் அண்ணன் மகன் ஹேமந்த் குமார் கூறினார்.
பொதுவாக விறகு மூன்று-நான்கு மணிநேரத்திற்குள் எரிந்து அணைந்துவிடும். ஆனால் சிதையில் நெருப்பு எப்படி 8-9 மணிநேரம் தொடர்ந்து எரிந்தது?
‘‘கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் விறகு சேகரிக்கப்படுகிறது. ஒரு டிராக்டர் முழுக்க விறகுகள் இருக்கும். அவை முழுவதுமாகச் சிதையில் போடப்படும். மூன்று-நான்கு பேரைத் தகனம் செய்யக்கூடிய அளவிற்கு விறகு இருக்கும்,” என்று ஹேமந்த் குறிப்பிட்டார்.
”கணவன்-மனைவி இடையே அதிக அன்பு இருந்ததாக மக்கள் கூறுகின்றனர்,” என்று சக்ரதர்நகர் காவல் நிலைய காவலர் ஒருவர் தனது பெயர் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தெரிவித்தார்.
“சிறுவயதில் ஜெய்தேவ் என்னைவிட ஒரு வகுப்பு முன்னால் படித்தார். இவர் இந்தப் பகுதியில் பிரபலமான தையல்காரர். கணவன்-மனைவி இடையே மிகுந்த அன்பு இருந்தது. சந்தையாக இருந்தாலும் சரி, வயலாக இருந்தாலும் சரி, கணவன்-மனைவி இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர்,” என்று ஜெய்தேவ் குப்தாவை சிறுவயதில் இருந்தே அறிந்த வாசுதேவ் பிரதான் கூறினார்.
“சத்தீஸ்கர் அல்லது மத்திய பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவத்தை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை,” என்று ஸ்டாம்ப் விற்பனையாளராகப் பணிபுரியும் 54 வயதான ராகேஷ் காஷ்யப் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிர்வாகம் சொல்வது என்ன?
குடும்ப உறுப்பினர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராய்கர் மாவட்ட எஸ்பி திவ்யாங் படேல் கூறினார்.
இரவு 11 மணிக்குப் பிறகு குலாபி குப்தாவுக்கு என்ன நடந்தது என்பதை உறுதி செய்ய நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.
"இது தொடர்பாக ’காணாமல் போனதாக’ புகார் பதிவு செய்யப்பட்டு முழு விஷயமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தடயவியல் குழு, மருத்துவர் குழுவின் உதவியும் நாடப்பட்டுள்ளது. கிடைக்கும் எல்லா தகவல்களும் ஒவ்வொரு கோணத்திலும் ஆராயப்படுகிறது,” என்று திவ்யாங் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எஞ்சிய எலும்புகளுடன் தடயவியல் குழுவினர் பிலாஸ்பூர் திரும்பியுள்ளனர். அறிக்கை வந்ததும் மீண்டும் டிஎன்ஏ பரிசோதனை செய்யும் பணி தொடங்கும்.
அதுவரை குலாபி குப்தா அரசு கோப்புகளில் காணாமல் போனவராகவே பதிவு செய்யப்பட்டிருப்பார்.
ஆனால், ஜெய்தேவ் குப்தா மற்றும் குலாபி குப்தாவின் இறுதிச் சடங்குகள், விருந்து மற்றும் பிற துக்க நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் நிர்வாகம் இதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்றும் குடும்பத்தினர் விரும்புகிறார்கள்.
சுதந்திரத்திற்கு முன் இயற்றப்பட்ட சட்டம்
சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடை செய்யும் சட்டம் 1829ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை உருவாக்குவதில் ராஜா ராம் மோகன் ராயின் பிரசாரம் பெரும் பங்காற்றியது.
ஒரு பெண் தானாக முன்வந்து தற்கொலை செய்துகொண்டாலும்கூட, இந்தச் சட்டத்தின் கீழ் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணை எரித்தாலும், அதற்கு உதவி செய்தாலும் அல்லது ஊக்கம் அளித்தாலும் அவர்கள் கொலைக் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு சதி நடைமுறை தொடர்பான மிகவும் பரபரப்பான சம்பவம் 1987இல் நடந்தது. 18 வயது ரூப் குவார் தனது கணவரின் சிதையில் குதித்து தன்னைத் தானே எரித்துக்கொண்ட சம்பவம் ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் உள்ள திவ்ராலா கிராமத்தில் நடந்தது.
கடந்த 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் 1996இல் விடுவிக்கப்பட்டனர்.
உலகம் முழுவதிலும் இருந்து ராஜஸ்தான் அரசை விமர்சித்து கருத்துகள் வெளியாயின. இதன் காரணமாக அப்போதைய முதல்வர் ஹரிதேவ் ஜோஷி ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
அந்த நேரத்தில் ராஜஸ்தான் அரசு ’ராஜஸ்தான் சதி தடை உத்தரவு 1987’ஐ அறிமுகப்படுத்தியது. இது 1988இல் மத்திய அரசால் நடப்பில் இருந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில், 'சதி பழக்கத்தைப் புகழ்ந்து கொண்டாடுவது' குற்றம் என்று கூறப்பட்டது. இதில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தச் சட்டத்தில் ’சதி நடைமுறை’ கொலையுடன் இணைக்கப்பட்டது. அதை ஊக்குவிக்கும் எவருக்கும் மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடும் இதில் உள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
முக்கியத் தகவல்
உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தால் அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறு யாருக்காவது இருந்தால், இந்தியாவில் உள்ள ஆஸ்ரா இணையதளம் அல்லது உலக அளவில் Befrienders worldwide மூலம் உதவி பெறலாம்.
அதோடு, நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)