குஜராத்: மதுபான கடத்தல்காரருடன் பிடிபட்ட பெண் காவலர் - இன்ஸ்டா பிரபலம் நீதா சௌத்ரியின் பின்னணி

குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில், பெண் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீஸ் அதிகாரி நீதா சௌத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகத் தலைமறைவாக இருந்தார். இருப்பினும், குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) அவரை செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) லிம்ப்டி அருகே பால்கம்டா கிராமத்தில் கைது செய்தது.

பிபிசி குஜராத்தி நிருபர் சச்சின் பித்வாவின் கூற்றுப்படி, சட்டத்துக்குப் புறம்பான மதுபானக் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் யுவராஜ் சிங்கின் உறவினர்கள் நீதா சௌத்ரி தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

நீதா சௌத்ரி யுவராஜ் சிங்குடன் சேர்ந்து மதுபானம் கடத்திய வழக்கில் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதா சௌத்ரி மற்றும் யுவராஜ் சிங் ஜடேஜா ஆகியோர் ஆறு போலீசாரை கால்களால் மிதித்துத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் கட்ச் போலீசார் ஜூன் 30ஆம் தேதி அவர்களை கைது செய்தனர்.

இருப்பினும், நீதா சௌத்ரி அங்கிருந்து தப்பி, தலைமறைவாகிவிட்டார். லிம்ப்டி அருகே உள்ள பால்கம்டா என்னும் கிராமத்தில் பதுங்கியிருந்த அவரை குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஜூலை 16 அன்று மீண்டும் கைது செய்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதுகுறித்து லிம்ப்டி பிரிவு டி.எஸ்.பி ரபாரி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், "கட்ச் பகுதியின் பச்சாவ் காவல்நிலையப் பகுதியில் பெண் காவலர் ஒருவருடன் கடத்தல்காரர் ஏராளமான மதுபாட்டில்களுடன் பிடிபட்டார். பின்னர் அந்தப் பெண் காவலருக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும், அவரது ஜாமீனை போலீசார் ரத்து செய்தனர், ஆனால் அவர் தப்பியோடிவிட்டார்.”

"நேற்று மாலை லிம்ப்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள பால்கம்டா கிராமத்தில் நீதா சௌத்ரியை குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) அதிகாரிகள் கைது செய்ததாக செய்தி வந்தது.

எங்களுக்கு இந்தக் கைது நடவடிக்கையில் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், நீதா சௌத்ரி கடத்தல், கொள்ளை வழக்குகளில் பிடிபட்ட யுவராஜ் சிங்கின் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தற்போது ஏடிஎஸ் குழு அவரை அழைத்துச் செல்கிறது. எங்களுக்கு ஏதேனும் உத்தரவு வழங்கப்பட்டால், மேற்கொண்டு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று விவரித்தார்.

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் கான்ஸ்டபிள்

பெண் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பெண் காவலர் (constable) நீதா சௌத்ரி பணியில் இருந்தபோது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்.

பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்ஸ் வீடியோக்கள் உருவாக்கி பதிவிட வேண்டாம் என்றும், சமூக ஊடகங்களில் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் குஜராத் காவல்துறை அவருக்கு அறிவுறுத்தியது. ஆனாலும் நீதா சௌத்ரி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்தார். அவரைக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் பின்தொடர்ந்து வந்தனர்.

``நல்ல பிள்ளைகள் டாக்டர்-இன்ஜினீயர் ஆகிறார்கள், கெட்ட மாணவர்கள் என்ன ஆகிறார்கள் தெரியுமா? போலீஸ் ஆகிறார்கள். நல்ல குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, காவல்துறை உருவாக்கப்பட்டுள்ளது” என்ற வசனத்தைப் பேசி போலீஸ் சீருடையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிட்டிருக்கிறார் நீதா.

நீதா சௌத்ரியின் இன்ஸ்டாகிராம் ரீல்களும் பதிவுகளும் அவரது வாழ்க்கை முறையைக் காட்டுகின்றன. அவர் அடிக்கடி வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை ஓட்டி வருவதைப் பதிவிட்டிருக்கிறார். ரீல்ஸ் மூலமாகப் பிரபலமான நீதா தற்போது குற்றச் சம்பவத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, பச்சாவ் நகர போலீசார் ஒரு குறிப்பிட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளச்சாராய வணிகர் யுவராஜ் சிங் ஜடேஜாவை பிடிக்க ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் ஜடேஜா தார் காரில் இருந்து இறங்கியபோது, ​​கான்ஸ்டபிள் நீதா சௌத்ரியும் காரினுள் இருந்தார்.

நிற்காமல் சென்ற கார்

காவல்துறை தகவலின்படி, யுவராஜ் சிங் ஜடேஜா மீது பச்சாவ் நகர காவல் நிலையத்தில் 15 மதுபானம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆறு வழக்குகளில் அவர் தேடப்படும் குற்றவாளியாகக் கருதப்படுகிறார், உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைத் தேடி வந்தனர்.

இதற்கிடையில், பச்சாவ் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் யுவராஜ் சிங் (வயது 30) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) மாலை சாம்கியானி வழியாக காந்திதாம் சாலைக்குச் செல்வார் என்பதை உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் குழு கண்டறிந்தது. இதன் அடிப்படையில், அந்தப் பகுதியைத் தீவிரமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்தது. அப்போது பச்சாவ் நகருக்கு வெளியே உள்ள சோப்த்வானா பாலத்தில் போலீசார் ஒரு வாகனத்தை நிறுத்த முயன்றனர்.

ஆனால் அந்த வாகனம் நிறுத்தாமல் போலீசாரின் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் மீது மோதிவிட்டுக் கடந்து செல்ல முயன்றது. ஆனால் காவல்துறை தடுத்து நிறுத்தியது. அப்போது, ​​பச்சாவ் போலீஸ் துணை ஆய்வாளர் ஜலா மற்றும் ஒரு காவலர், காரில் இருந்து வெளியே வரும்படி யுவராஜ் சிங்கை மிரட்டினர். ஆனால் ​​அவர் காரை இயக்கி மீண்டும் தப்பிக்க முயன்றார். உள்ளே இருந்தது யுவராஜ் என்பது அப்போது போலீஸுக்கு தெரியாது. காரின் முன்புறத்தில் கருப்பு கண்ணாடித் திரை போடப்பட்டதால், காரில் இருந்தவர்கள் யார் என்பது குறித்துத் தெரியவில்லை.

காரை நிறுத்தாமல் மீண்டும் தப்பிக்க முயன்றதால், போலீசார் காரின் முன்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நீண்ட நேரமாகியும் டிரைவர் காரை திறக்கவில்லை. இறுதியாக, காவல்துறை வாகனத்தின் வலதுபுறத்தில் உள்ள டிரைவரின் பின்புறக் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்தவர்களை வெளியே வருமாறு கட்டாயப்படுத்தியது.

அப்போது உள்ளே இருந்த யுவராஜ் உடன் ஒரு பெண்ணும் இருந்துள்ளார். விசாரணையில், அவர் கட்ச் சிஐடி குற்றப்பிரிவு காவலர் நீதா சௌத்ரி (வயது 34) என்பது தெரிய வந்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ​​அதற்குள் மதுபாட்டில்கள், பீர் கேன்கள் இருப்பது தெரிய வந்தது.

கட்ச் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் சாகர் பாக்மர் செய்தியாளர் சந்திப்பின் போது இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலும் மக்கள் இவர்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருந்தால் அல்லது துன்புறுத்தலுக்கு ஆட்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.

கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குடிபோதையில் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால் செய்தியாளர் சந்திப்பின்போது எஸ்பி பாக்மர் இந்தத் தகவலை மறுத்தார்.

நீதா சௌத்ரி யார்?

கான்ஸ்டபிள் நீதா சௌத்ரி குஜராத்தின் சிஐடி குற்றப்பிரிவில், கட்ச் பகுதியில் பணி அமர்த்தப்பட்டார். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக பதிவிட்டு வருகிறார். இவர் 550க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தபோது, ​​அவரை இன்ஸ்டாவில் சுமார் 50 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். ஆனால் செவ்வாய் மாலைக்குள் இந்த எண்ணிக்கை 58 ஆயிரத்தைத் தாண்டியது.

ஒரு திரைப் பிரபலத்தைப் போலவே, நீதாவின் இன்ஸ்டாவில் கிராமப் பயணங்கள், ஓய்வு விடுதிகளில் விடுமுறைக் கொண்டாட்டங்கள், ஹெலிகாப்டர் சவாரிகள், ஷாப்பிங் மால் அனுபவங்கள், சமூக அல்லது குடும்ப நிகழ்வுகள் அல்லது இரவு உணவுகள் போன்ற ரீல்கள் நிறைந்துள்ளன.

கடந்த ஆண்டு, சிவப்பு நிற ஆடை அணிந்து, வெள்ளை நிற தார் காரை வாங்கும் வீடியோவை வெளியிட்டார். அது வைரல் ஆனதால், அதன் பிறகு, இன்ஸ்டா ரீல்களில் அவர் அடிக்கடி வாகனம் ஓட்டுவது அல்லது வாகனத்துடன் இருப்பதைப் பதிவிட்டார்.

அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட காரின் புகைப்படமும், ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் பிடித்த வாகனமும் ஒன்றுதான் என்பது தெரிந்தாலும், நம்பர் பிளேட் இல்லாததால் உறுதியாகக் கூற முடியவில்லை.

யுவராஜுக்கும் நீதாவுக்கும் என்ன தொடர்பு?

தேடப்படும் குற்றவாளியுடன் சிஐடி பெண் காவலருக்கு என்ன வேலை? போலீஸ் அதிகாரிகளைப் பார்த்த நீதா சௌத்ரி ஏன் யுவராஜ் சிங்கை பிடிக்க உதவவில்லை? குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் காரை உடனடியாகத் திறக்கவில்லை? வாகனத்தில் மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டவை டெலிவரிக்காகவா அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவா?

இதுபோன்ற பல கேள்விகள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், காவல் நிலையத்திலும் விவாதிக்கப்படுகின்றன.

ஊடகங்களுடன் பேசுவதற்கு அதிகாரம் இல்லாத கட்ச் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி குஜராத்தியிடம், "குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் ஐபிசி 307 (கொலை முயற்சி) மற்றும் 427 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதா சௌத்ரி தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவர் இந்தச் சம்பவம் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை."

"நீதா சௌத்ரிக்கு யுவராஜ் உடன் ஏதேனும் குடும்பம் அல்லது சமூகத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன்புதான் யுவராஜ் சிங்கை பேஸ்புக்கில் சந்தித்ததாக நீதா சௌத்ரி கூறினார். ஆனால் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே அவரது செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்வது மற்றும் பிற வழிகளில் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று விளக்கினார்.

நீதாவும் யுவராஜும் பல பிரச்னைகளில் இருந்து தப்பியதாக அந்த அதிகாரி கூறுகிறார். இரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு சம்பவம் நடந்திருந்தால், இந்திய நீதித்துறைச் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வந்திருக்கும், மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு நடந்திருக்கும் என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)