You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 6 இளங்கலைப் படிப்புகள் திடீரென நிறுத்தம் - என்ன காரணம்?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7 இளங்கலை பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக 1,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 6 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், இளங்கலை படிப்புகளை நிறுத்த என்ன காரணம்? விண்ணப்பித்த 1,600 மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன?
6 இளங்கலை படிப்புகள் நிறுத்தம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நேரடி மற்றும் தொலைதூர கல்வி வழியாக 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக் கழகத்தில் முன்பு முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் மட்டுமே இருந்தன. 2022 ஆம் ஆண்டு அப்போது துணைவேந்தராக இருந்த ஜெ. குமார் இளங்கலை படிப்புகளை தொடங்கி வைத்தார்.
பி.எஸ்.சி கணிதம், உளவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.வொக்கேசன் ஆகிய ஏழு பிரிவுகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
அந்த வரிசையில், இந்த ஆண்டும் கடந்த மே மாதம் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்காக இணையம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,600 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பி.வொக்கேசன் தவிர்த்த மற்ற 6 இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாக பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
'இரு மடங்கு கட்டணம் செலுத்தி கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன்'
'மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் திடீர் அறிவிப்பால், கடைசி நேரத்தில் இரு மடங்கு கட்டணம் செலுத்தி வேறொரு கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன்' என்கிறார் மாணவர் கிஷோர் குமார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.காம் சேர விரும்பினேன். அங்கு வருடத்திற்கு 15 ஆயிரம் தான் கல்வி கட்டணம். ஆனால் பி.காம் உள்ளிட்ட 6 படிப்புகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனது தந்தை நான்கைந்து முறை சென்று பார்த்த பிறகே இந்த தகவல் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, கடைசி நேரத்தில் மற்றொரு கல்லூரியில் பி.காம் சேர்ந்துள்ளேன். அங்கே, வருடத்திற்கு 32 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். இதனை கட்ட எனது பெற்றோர் சிரமப்படுவார்கள்.", என்றார்.
"பல்கலை. சார்பில் முறையாக தகவல் அளிக்கவில்லை"
"மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சேர எனது தம்பியின் மகன் விண்ணப்பித்திருந்தார். இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக பல்கலைக் கழகம் திடீரென அறிவித்ததால், கடைசி நேரத்தில் கல்லூரியைத் தேடி அலைய நேரிட்டது," என்கிறார் மதுரை சேர்ந்த தினேஷ் குமார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இளங்கலை படிப்புகள் நிறுத்தப்படுவது தொடர்பாக எந்த மாணவருக்கும் பல்கலைக் கழகம் சார்பில் தகவல் அளிக்கப்படவில்லை.
எனது தம்பியின் மகன் கடந்த சில நாட்களாக அலைந்து பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்து, தற்பொழுது மதுரையில் உள்ள வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். பல்கலைக் கழகத்தின் இந்த முடிவு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை பாதித்துள்ளது. தனியார் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் என்பதால்தான் காமராசர் பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்திருந்தோம்,” என்றார்.
"பல்கலைக் கழகத்தில் நிதி நெருக்கடி"
பதவிக் காலம் முடிய 11 மாதங்கள் இருந்த நிலையிலேயே, துணைவேந்தர் ஜெ.குமார் கடந்த மே மாதம் உடல் நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தார். இதனால், கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
"பல்கலைக் கழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவே இளங்கலை படிப்புகள் துவங்கப்பட்டன. ஆனாலும் எதிர்பார்த்த நிதியை திரட்ட இயலவில்லை என்பதே இளங்கலை படிப்புகள் நிறுத்துவதற்கான காரணம்" என்று பெயரை வெளியிட விரும்பாத ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் கூறினார். .
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பல்கலைக் கழகத்தில் 500க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் உள்ளனர். அத்துடன், ஓய்வூதியதாரர்களுக்கும் சேர்த்து மொத்தமாக மாதந்தோறும் 11 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இந்த நிதியை திரட்டுவதில் சிக்கல் தொடர்ந்து இருப்பதால் சம்பளப் பிரச்னை இருந்தது. இதனைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் சார்பில் எடுக்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாகவே இளங்கலை படிப்புகளை துவங்குவதற்கு முன்னாள் துணைவேந்தர் முடிவு செய்தார். ஆனால் செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள் இதனை சுயநிதி (Self Finance) படிப்புகளாக துவங்க வேண்டுமென கூறினோம். இதன் மூலம் வருவாய் கிடைக்கும். அதன் வழியாக நிதி நெருக்கடியை சமாளிக்கலாம் என கூறினோம். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை." என்று கூறினார்.
இளங்கலை படிப்புகள் நிறுத்தப்பட்டது ஏன்?
"இளங்கலை படிப்புக்கு ஒரு வகுப்புக்கு 60 மாணவர்கள் வீதம் சேர்க்கைத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான அடிப்படை வசதிகள் இல்லை" என்று கூறுகிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் புஷ்பராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் என்ற அடிப்படையில் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இளங்கலை வகுப்பில் ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் வீதம் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதற்கான வகுப்பறைகள், கழிவறை வசதிகள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி போன்ற அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தாமல் முன்னாள் துணைவேந்தரின் கட்டாயத்தில் இளங்கலை படிப்புகள் தொடங்கப்பட்டன.
ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பி.வோக் தவிர மற்ற ஆறு படிப்புகளும் இந்தாண்டு நிறுத்தப்பட்டுள்ளன." என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "பல்கலைக் கழகத்தில் இளங்கலை பயில 1,600 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தாலும் ஒரு வகுப்பிற்கு 60 மாணவர்கள் வீதம் 6 படிப்புகளில் 360 மாணவர்கள் மட்டுமே சேர முடியும். விண்ணப்பித்த 1,600 பேரில் 240 மாணவர்கள் மதுரையில் உள்ள பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் நேரடியாக சேர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்.
பி.எஸ்.சி உளவியல் மற்றும் கம்ப்யூடர் சயின்ஸ் விண்ணப்பித்த 120 மாணவர்களுக்கு மட்டும் தனியார் கல்லூரிகளில் சேர்க்கைக்கான வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)