You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் அதிகம் பேசப்பட்ட 3 என்கவுன்டர்கள் - பெருங்குற்றங்களுக்கு இதுதான் தீர்வா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மாநிலம் முழுவதும் அல்லது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கொலைகள், கொள்ளைகள் நடக்கும்போது அது தொடர்பாக கைதுசெய்யப்படுபவர்களில் சிலர் 'என்கவுன்டர்' செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது. பெரும் குற்றங்களுக்குப் பிந்தைய என்கவுன்டர்கள் பல சமயங்களில் பொதுமக்களின் வரவேற்பையும் பெறுகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் ஜூலை ஐந்தாம் தேதி சென்னையில் சிலரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தக் கொலை தொடர்பாக 11 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்தனர். அவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலையில் சென்னைக்கு அருகில், 'என்கவுன்டர்' எனப்படும் காவல்துறை மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் தங்களது காவலில் அவர்களை எடுத்தது. இந்த விசாரணையின்போது ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்காக திருவேங்கடத்தை அழைத்துச் சென்றதாகவும் அப்போது அவர் தப்பிச் சென்று காவல்துறையைத் தாக்க முயன்றதாகவும் அதனால், காவல்துறை அவரைச் சுட்டுக்கொன்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த என்கவுன்டர் குறித்து சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பு இருந்தாலும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த நிகழ்வு குறித்து கவலை தெரிவிக்கின்றனர். மாநிலத்தில் ஒரு மிகப் பெரிய குற்ற நிகழ்வு நடந்து, அரசின் மீது அதிருப்தி எழும்போது இதுபோன்ற என்கவுன்டர்களைச் செய்து சமூகத்தின் கூட்டு மனசாட்சியை அரசு திருப்திப்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஒரு பெரும் குற்ற நிகழ்வுக்குப் பிறகு என்கவுன்டரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொல்லப்படுவது என்பது தமிழ்நாட்டில் முதல் முறையல்ல. இதுபோல பல தருணங்களில் நடந்திருக்கிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
1. கோயம்புத்தூர் என்கவுன்டர், 2010
கோயம்புத்தூரில் ஜவுளிக்கடை அதிபர் ஒருவரின் 11 வயது மகளையும் 8 வயது மகனையும் 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். இதற்குப் பிறகு 11 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பிறகு அந்தச் சிறுமியையும் சிறுவனையும் கைகளைக் கட்டி பிஏபி கால்வாயில் மூழ்கடித்துக் கொலைசெய்தனர்.
இந்த வழக்கில் விரைவிலேயே மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அதற்குப் பிறகு அவர்களிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது, மோகனகிருஷ்ணன் காவலர்களிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, கேரளாவுக்கு வாகனத்தைத் திருப்பும்படி மிரட்டியதாகவும் அதற்குப் பிறகு காவல் அதிகாரிகளையும் சுட்டதால் தற்காப்பிற்காக பதிலுக்கு காவலர்கள் சுட்டதாகவும் அதில் மோகனகிருஷ்ணன் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. நவம்பர் 9ஆம் தேதி இந்த என்கவுன்டர் நடந்தது.
சிறுமியும் சிறுவனும் மிக மோசமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் கோயம்புத்தூர் மக்களிடம் பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், நீதி வழங்கப்பட்ட உணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், பொதுமக்களிடம் இந்த என்கவுன்டர் குறித்து நேர்மறையான எண்ணங்களே இருந்தன. அந்தச் சிறுமியின் வீடு இருந்த பகுதியில் வசித்தவர்கள் வெடி வெடித்து இந்த என்கவுன்டரை வரவேற்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான மனோகரனுக்கு 2014ல் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2019ல் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.
2. வேளச்சேரி என்கவுன்டர், 2012
கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி மதியம் சென்னை பெருங்குடியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, துப்பாக்கி முனையில் 19.25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது. அந்தக் கொள்ளை தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, பிப்ரவரி 20ஆம் தேதி கீழ்க்கட்டளையில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இரண்டு கொள்ளைச் சம்பவங்களும் ஒரே பாணியில் நடத்தப்பட்டிருந்ததால் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டதாகக் காவல்துறை கருதியது.
இந்த நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி அதிகாலை வேளச்சேரியில் உள்ள வண்டிக்காரன் தெருவில் இருந்த வீடு ஒன்றில் ஐந்து பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள்தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் என காவல்துறை கூறியது.
அவர்கள் அந்த வீட்டில் பதுங்கியிருந்ததை அறிந்த காவல்துறையினர், அந்த வீட்டை சுற்றி வளைத்ததாகவும் அப்போது அவர்கள் தப்பியோட முயன்றதாகவும் இதையடுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. வினோத் குமார், சந்திரிகா ராய், வினய் பிரசாத், அபய் குமார், ஹரீஷ் குமார் ஆகிய ஐந்து பேர் இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் பிகாரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.
என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஐந்து பிஸ்டல்கள், இரண்டு ரிவால்வர்கள், 14 லட்ச ரூபாய் பணம் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கொள்ளை நடந்த வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள், கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பார்த்து அவர்கள்தான் கொள்ளையர்கள் என உறுதிசெய்ததாகவும் காவல்துறை கூறியது.
ஆனால், இந்த என்கவுன்டர்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக ஜன்னல் வழியாக காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறிய நிலையில், ஜன்னலுக்கு எதிராக இருந்த சுவற்றில் இரண்டே இரண்டு குண்டு துளைத்த தடயங்கள் மட்டும் காணப்பட்டது, உள்ளே இருந்த டிவி நொறுங்காமல் இருந்தது ஆகியவை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
3. சிவகங்கை - மதுரை என்கவுன்டர், 2012
திருப்பாச்சேத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஆல்வின் சுதனைக் கொன்ற இருவரை காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது. ஆல்வின் சுதன் 2012ஆம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினத்தின்போது சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செல்லப்பாண்டியன் மற்றும் பிரபு ஆகிய இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இது மோதலாக வெடித்தது. அதனை விசாரிக்க ஆல்வின் சுதன் சென்றபோது, பிரபு மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் அவரை வெட்டிக் கொன்றனர்.
இதற்குப் பிறகு, பிரபு உள்ளிட்ட மூன்று பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களைத் தவிர்த்த மேலும் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பிரபு, பாரதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக மதுரைச் சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். அந்த வாகனம் மதுரை வாக்கர்ஸ் கிளப் அருகே வந்துகொண்டிருந்தபோது, பிரபுவும் பாரதியும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியதாகச் சொல்லப்பட்டது. இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் டிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையிலான அணியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இதற்குப் பிறகு இதே கொலை வழக்கில் கைதான கொக்கி குமார் என்பவர், ஜாமீனில் வெளியே வந்த பிறகு 2013ஆம் ஆண்டு வேறொரு வழக்கில் போலீஸ் காவலில் இருக்கும்போது மரணமடைந்தார். ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் விசாரணை துவங்கியது.
இதற்கிடையில், காவலில் இருக்கும்போது கொக்கி குமார் இறந்தது தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான வெள்ளைதுரையை பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் காவல்துறை இடைநீக்கம் செய்தது. பிறகு அந்த இடை நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, சமீபகாலங்களில் இந்தியாவிலும் பெரும் குற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு என்கவுன்டர்கள் நடந்திருக்கின்றன.
ஹைதராபாத் என்கவுன்டர் 2019
ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவ மாணவி ஒருவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஷாம்ஷாபாதில் உள்ள தொண்டுபள்ளி சுங்கச்சாவடிக்கு அருகில் தனது ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தபோது அங்குவந்த சிலர் அவரை அருகில் இருந்த புதருக்குள் இழுத்துச் சென்று வன்புணர்வு செய்து, கொலை செய்தனர். அதற்குப் பிறகு அவரது சடலத்தை அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள ஷாத்நகர் எனுமிடத்தில் ஒரு பாலத்திற்குக் கீழே வைத்து எரித்தனர். அவரது பாதி எரிந்த சடலம் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநில காவல்துறை நடத்திய விசாரணையில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்த நடவடிக்கைகளில் திருப்தி ஏற்படவில்லை. பெண்ணைக் காணவில்லை என்று சொன்னவுடன் நடவடிக்கையில் இறங்கியிருந்தால் குற்றத்தைத் தடுத்திருக்கலாம் எனக் குற்றம்சாட்டினர்.
குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட பிறகும் தில்லி, மும்பை, அகமதாபாத் போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக சுட்டுக்கொல்ல வேண்டுமென ஷாத்நகர் காவல்நிலையம் முன்பாக சிலர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். குற்றத்தை நிகழ்த்தியது எப்படி என நடித்துக்காட்ட அழைத்துச் சென்றபோது, போலீஸைத் தாக்கிவிட்டு தப்பிஓட முயற்சித்ததால் அவர்கள் சுடப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த என்கவுன்டரை பெண்ணின் குடும்பத்தினர் வரவேற்றனர். என்கவுன்டர் நடந்த இடத்தில் சுமார் 2,000 பேர் கூடி வெடிவெடித்து கொண்டாடினர்.
காவல்துறை குறித்து கேள்வி
பொதுவாக இதுபோன்ற மிகப் பெரிய குற்றங்களுக்குப் பிறகு, அந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களாகக் கைதுசெய்யப்படுபவர்கள் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டால் மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் உரிமைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைத் தவிர, மற்றவர்களிடம் வரவேற்பே காணப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தேகம் எழுப்பினாலும் சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பலரும் வரவேற்று எழுதினர். மரண தண்டனை, போலீஸ் என்கவுன்டர்கள் போன்றவற்றை ஏற்காத விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 'பொத்தாம்பொதுவாக எல்லா என்கவுன்டர்களும் கூடாது என்று சொல்லும் மனநிலையில் நான் இல்லை' என்று குறிப்பிட்டார்.
"ஒரு பெரிய குற்றம் நடந்த பிறகு, மக்களிடம் காவல்துறை குறித்து கேள்வி எழுகிறது. இவ்வளவு பெரிய குற்றம் நடக்கும்வரை போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது எனக் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்குப் பதில் சொல்லும்விதமாக இதுபோன்ற என்கவுன்டர்களை காவல்துறை மேற்கொள்கிறது. ஆனால், இது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் இது பெருமை சேர்க்காது" என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான திலகவதி.
பொதுவாக கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டாலும், தண்டனை கிடைக்கத் தாமதமாவது, அதற்குள் அவர்கள் ஜாமீனில் வெளியில் வருவது போன்றவை பாதிக்கப்பட்டவர்களிடம் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான சூழலில் காவல்துறை இப்படி நடவடிக்கைகளில் இறங்குகிறது என்கிறார் திலகவதி.
"சட்டங்கள் எதற்காக?"
ஆனால், இதனை நீதித் துறையின் தோல்வியாக மட்டும் பார்க்கக்கூடாது. காவல்துறைக்கும் இதில் பங்கிருக்கிறது என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன். "என்கவுன்டர் மூலம் உடனடியாக தீர்ப்பை வழங்கிவிடலாம் என்றால் நீதிமன்றங்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டங்கள் ஆகியவை எதற்காக இருக்கின்றன? தவறு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக இதுபோல எப்போதாவது நடந்திருக்கிறதா? தூத்துக்குடியில் 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரி, காவல் நிலையத்தில் வைத்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்களை உடைத்தார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
இப்படி கைதுசெய்யப்படுபவர்களை என்கவுன்டர் செய்தால், அவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது தெரியாமலேயே போய்விடும்" என்கிறார் ஹரி பரந்தாமன்.
1995க்கும் 1997க்கும் இடையில் மும்பை காவல்துறையால் 99 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. அதில் 135 பேர் கொல்லப்பட்டனர். இதனை எதிர்த்து சிவில் உரிமைக்கான மக்கள் இயக்கம் (பியுசிஎல்) நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் என்கவுன்டர்கள் தொடர்பாக 16 விதிமுறைகளை விதித்தது.
உடனடியாக எஃப்ஐஆர் பதிவுசெய்வது, மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடுவது, தவறாக என்கவுன்டர் நடந்ததாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
எழும் கேள்விகள்
"இந்த விதிமுறைகள் எல்லாம் எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படுகின்றன? இதை காவல்துறை தனது வெற்றியாகக் கொள்ள முடியாது. இது ஒரு தோல்வி. ராஜீவ் காந்தி கொலைவழக்கு எவ்வளவு பெரிய அதிர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது? அதில் கைதுசெய்தவர்களை உடனடியாக என்கவுன்டர் செய்தார்களா?
எவ்வளவு விரிவாக விசாரணை நடத்தப்பட்டது? ஒரு குற்றத்தை விரிவாக விசாரணை செய்தால்தான் அதன் பின்னணி தெரியவரும். மக்களின் திருப்திக்காக செயல்பட்டால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதே தெரியாமல் போய்விடும்" என்கிறார் ஹரி பரந்தாமன்.
பல தருணங்களில் நீதிமன்றங்களில் தாமதம் ஏற்படுவது, சம்பந்தப்பட்டவர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது. ஹைதராபாத் என்கவுன்டர் நடந்த பிறகு, டெல்லியில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் தாயார் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், தான் கடந்த ஏழு ஆண்டுகளாக நீதிக்காக போராடிக்கொண்டிருப்பதாகவும் ஹைதராபாத் என்கவுன்டரை தான் வரவேற்பதாகவும் அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.
கோயம்புத்தூர், ஹைதராபாத் என்கவுன்டர்களுக்குப் பிறகு பொதுமக்கள் வெடிவெடித்து அந்த என்கவுன்டர்களை வரவேற்று, கொண்டாடியது இதுபோன்ற என்கவுன்டர்களை அவர்கள் வரவேற்பதையும் சுட்டிக்காட்டியது.
"இதனை சமூகம் வரவேற்கிறதா இல்லையா என்பதெல்லாம் கேள்வியே இல்லை. ஒரு மக்கள் நல அரசு, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை 'நல்வாய்ப்புக் குறைந்தவர்கள்' என்ற வகையில்தான் அணுக வேண்டும். குற்றவாளிகள் என காவல்துறையே முடிவுசெய்து கொலைசெய்ய இது ஒன்றும் 1800கள் இல்லை" என்கிறார் திலகவதி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)