You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியன் 2: படம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12 அன்று வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? இந்தப் படத்தின் நிறை, குறைகள் என்ன என்பவை குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
'எந்த ஒட்டுதலும் இல்லை'
“இந்தியன்’ முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி சாத்தியமானதற்கு முக்கியக் காரணம், அப்படம் நாட்டின் மூலை முடுக்குகளில்கூட நடக்கும் சின்னச் சின்ன ஊழலின் மூலம் எளிய மக்கள் அனுபவிக்கும் வலியை அப்படியே கண்முன் நிறுத்தியதுதான். குறிப்பாக, அந்தப் படத்தின் தொடக்கத்தில் மனோரமா வரும் காட்சி, அதைத் தொடர்ந்து சேனாபதியின் என்ட்ரி எனத் தொடக்கமே நம்மை உள்ளே இழுத்துவிடும். ‘இந்தியன் 2’ படத்தில் பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான அம்சங்கள் எதுவும் இல்லாதது மிகப் பெரிய குறை” என்கிறது ‘இந்து தமிழ் திசை’ இணையதளம்.
படம் தொடங்கியது முதலே எந்தவித ஒட்டுதலும் இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கைத்தனங்களுடன் செல்வதாக விமர்சித்துள்ள ‘இந்து தமிழ் திசை’, முதல் பாகத்தில் அமைதியாக, அதே நேரத்தில் அதிரடி காட்டும் 'இந்தியன் தாத்தா', இதில் "பேசுகிறார் பேசுகிறார் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்" என்றும் விமர்சித்துள்ளது.
“கிரியேட்டிவிட்டிக்கு புகழ்பெற்ற ஷங்கர், இந்தப் படத்தில் இந்தியன் தாத்தா செய்யும் கொலை தொடர்பான காட்சிகளில் எந்தவித புதுமையையும் நிகழ்த்தாதது பெரும் குறை” எனச் சுட்டிக்காட்டியுள்ளது இந்து தமிழ்.
“அனிருத் தனது பின்னணி இசை மூலம் படத்துக்கு வலுசேர்க்க முயன்றுள்ளார். எனினும், முந்தைய பாகத்தின் இசை வரும் இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை ஹெவியாக மிஸ் செய்ய முடிகிறது. பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், அவற்றைப் படத்தில் வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என்கிறது அந்த விமர்சனம்.
இந்தியன் முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது திரைக்கதையில் இயக்குநர் ஷங்கர் தடுமாறுவது தெரிவதாக விமர்சித்துள்ளது ‘தினமணி’. எனினும் அவரிடம் இருக்கும் பிரமாண்டங்கள் தீரவில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளது 'இந்து தமிழ் திசை'.
'விசிலடிக்க வைக்கும் கமல்'
இலவச மிக்சி, கிரைண்டர் எனப் படத்தில் மேலோட்டமான அரசியலைப் பேசியிருப்பதாக ‘தினமணி’ கூறுகிறது. சித்தார்த் பேசும் சில வசனங்கள் கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறது.
“ஆனால், சில காட்சிகளில் பிரமாண்ட படங்களுக்கே உரித்தான லாஜிக் இல்லை. குறிப்பாக, வர்மக் கலையால் எதிரிகளைத் தாக்கும் காட்சிகளில் 'ஐ', 'அந்நியன்' போன்ற திரைப்படங்களின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. வர்ம அடியால் ஒரு ஆண் கதாபாத்திரம் பெண்ணாக மாறுகிறார். அதில், மூன்றாம் பாலினத்தவரின் நளினங்களே இருக்கின்றன. இக்காட்சி நகைச்சுவையாக மாறுவதால், ஷங்கர் கேலிக்காக ஏன் இவற்றை அணுகுகிறார் எனத் தோன்ற வைக்கிறது” என தினமணி விமர்சித்துள்ளது.
விமர்சனங்களுக்கு மத்தியில் சில பாராட்டுகளையும் தினமணி முன்வைத்துள்ளது.
“கதை நாயகனான நடிகர் கமல் ஹாசன் சில காட்சிகளில் விசிலடிக்க வைக்கிறார். இத்தனை ஆண்டுகால நடிப்பு அனுபவத்தால் முதுமையான உடல் மொழியைச் சில இடங்களில் கச்சிதமாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவரது குரலில் இருந்து வரும் வசனங்களும் அதற்கு ஏற்ற தோற்றங்களும் ஏமாற்றத்தைத் தரவில்லை” என்கிறது தினமணி விமர்சனம்.
அதோடு, இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை, வேகமான திரைக்கதைக்குத் தொந்தரவு செய்யாமல் இருப்பதாகவும், "இளம் வயது கமல், பிரிட்டிஷ் ஆட்சியின் காலகட்டம் போன்ற காட்சிகளால் விசில் ஓசைகள் கேட்கின்றன. மூன்றாம் பாகத்திற்கான ஆவலை இந்தியன் 2 உறுதி செய்திருக்கிறது" என்று நேர்மறை கருத்துகளையும் ‘தினமணி’ குறிப்பிட்டுள்ளது.
'நடிப்புக்கான வாய்ப்பு இல்லை'
இந்தப் படத்தில் பிரமாண்டமான செட்டுகள், பிரமாண்டமான கிராஃபிக்ஸ் காட்சிகள் போன்ற பல பிரமாண்டங்கள் இருந்தாலும்கூட ஒரு உணர்வுரீதியான ஒட்டுதலை இந்தப் படம் ஏற்படுத்தவில்லை என்கிறது, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம்.
“இந்தியன் முதல் பாகம் முழுக்க சேனாபதியின் சொந்தப் போராட்டத்தோடு தொடர்புப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் அவருடைய போராட்டம் வெறுமையாகவும், இன்னும் முக்கியமாக அந்தப் பாத்திரத்தின் கண்ணியமே போகும் வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறது” என்கிறது அந்த விமர்சனம்.
ஊழல் என்பது இத்தனை ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்துவிட்ட நிலையில் வெறுமனே இருந்துவிட்டுத் திடீரென அவர் இப்போது ஏன் எதிர்த்து சண்டைபோட வருகிறார் என பார்வையாளர்கள் கேள்வி கேட்க ஆரம்பிப்பதாகக் கூறுகிறது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’.
“ஆக்ஷன் காட்சிகளில்கூட, அதாவது 'புவியீர்ப்பு விசையே இல்லாத ஒரு இடத்தில்' நடக்கும் சண்டையும் அதேபோல ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிளில் செல்லும் சேனாபதியை துரத்தும் காட்சிகளும் எவ்வித ஆர்வத்தையும் தூண்டவில்லை. இதற்கிடையே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த அனிருத் எவ்வளவோ முயற்சி செய்துள்ளார்” என்கிறது அந்த விமர்சனம்.
ஒரு காட்சியில் சட்டை இல்லாமல்கூட வரும் கமலுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவருடைய பிராஸ்தடிக் ஒப்பனைக்குத்தான் வாய்ப்பு இருப்பதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சித்துள்ளது.
'கேள்விகளுக்கு பதில் இல்லை'
‘இந்தியன் 2’ திரைப்படம் காலாவதியான புளித்த அரைத்த மாவு என விமர்சித்துள்ளது, ‘தி நியூஸ் மினிட்’ இணையதளம்.
"இந்தியாவுக்குத் திரும்பி வர இந்தியன் தாத்தாவுக்கு ஏன் இத்தனை காலம் ஆனது? அவரின் மனைவி எங்கு போனார்? இந்த வயதிலும் அவரால் எப்படிச் சண்டையிட முடிகிறது? தலையில் எப்படி இன்னும் முடி இருக்கிறது?' என்ற எதற்கும் பதில் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியன் திரைப்படத்தில் சேனாதிபதி தனது மகள் தீ காயத்துடன் மருத்துவமனையில் இருக்கும்போதும் லஞ்சம் தர மறுத்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான அவருடைய மனைவி அந்த மருத்துவருக்குத் தன்னுடைய நகையைக் கொடுத்து சிகிச்சை அளிக்கக் கூறுவார்.
"முதல் பாகம், தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கும் ஒருவருக்கும், காரியம் ஆக வேண்டுமானால் அதற்காக சமரசம் செய்துகொள்ளும் உலகத்திற்குமான போர். ஆனால் இரண்டாம் பாகத்தில் இதுதான் என்ற தெளிவான கதை ஏதும் இல்லை," என்று விமர்சித்த தி நியூஸ் மினிட் மூன்று மணிநேரம் அமர்ந்து பார்த்த பிறகு, மூன்றாம் பாகம் வெளியாக உள்ளது என்பது மட்டுமே தெரிந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)