You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்கி படத்தில் நடிப்பதற்கு சம்மதிக்க ஓராண்டு எடுத்துக் கொண்ட கமல்ஹாசன் - என்ன கதாபாத்திரம்?
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27, வியாழக்கிழமை வெளியாகிறது. ‘மகாநதி’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியானதிலிருந்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முக்கிய கதாபாத்திரங்கள் தவிர, ராணா டகுபதி, திஷா பதானி, அன்னா பென், பசுபதி உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தயாரிப்பாளர் ‘வைஜெயந்தி மூவிஸ்’ சார்பில் அஸ்வானி தத் தயாரித்துள்ளார்.
இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ‘பான் இந்தியா’ திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஜோர்ட்ஜே ஸ்டோஜில்ஜ்கோவிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அறிவியல் புனைவுடன் புராணத்தையும் இணைத்து உருவாகியுள்ள ‘கல்கி’ திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்றது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அப்படி, சில தினங்களுக்கு முன் அப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத், பிரியங்கா தத் இருவரும் அமிதாப், கமல், பிரபாஸ், தீபிகா ஆகியோருடன் இணைந்து உரையாடினர்.
ஷூட்டிங்குக்கு முன்னதாக 5 மாதங்களாக முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டதாகவும் இயக்குநர் கூறிய கதையை முழுமையாக படமாக எடுக்க முடியுமா என்பதை தாங்கள் சந்தேகித்ததாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
அப்போது, இவ்வளவு பிரமாண்டமான, பெரிய அளவில் உழைப்பு தேவைப்படும் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகளை இரு பெண்கள் ஏற்று திறம்பட கையாண்டதாக அமிதாப் பச்சன் இருவரையும் பாராட்டினார்.
ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத வகையிலான காட்சிகளை திரையில் பார்க்கலாம் என்று அமிதாப் பச்சன் கூறினார்.
மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும், யதார்த்தமான நடிப்பும் முக்கிய இடம் பிடித்திருப்பதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்தார்.
கமல் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனை உள்ளே கொண்டு வருவது தங்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். படத்தின் முக்கிய கதாபாத்திரமான ‘யஸ்கின்’ எனும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். வயதான கதாபாத்திரத்தில், படத்தின் முக்கிய வில்லனாக கமல் இருப்பார் என கூறப்படுகிறது. அமிதாப் பச்சன், பிரபாஸ்-ஐ விட வலிமையான ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் இருக்க வேண்டும் என எண்ணி கமல்ஹாசனை தேர்ந்தெடுத்ததாக தயாரிப்பாளர்கள் கூறினர்.
"அமிதாப், பிரபாஸ் போன்ற நடிகர்கள் படத்தில் இருக்கும்போது நான் என்ன செய்யப் போகிறேன்" என சந்தேகித்ததாக கமல் தெரிவித்தார். கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஓராண்டு காத்திருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். அப்போது, “என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், என்னை விட்டுவிடுங்கள் என கமல்ஹாசன் நினைத்திருப்பார்” என பிரபாஸ் வேடிக்கையாக கூறினார்.
படத்திற்கு அனைத்து மொழிகளிலும் கமல்ஹாசனே டப்பிங் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் ஒவ்வொருவரின் தோற்றத்திற்கும் பல பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தன்னுடைய தோற்றத்தைகு ஐந்து முறை பரிசோதித்து பார்த்ததாக கமல்ஹாசன் கூறினார். ‘பிராஸ்தெடிக்’ ஒப்பனைக்காக மூன்று மணிநேரம் செலவிட வேண்டும் எனவும் அதனை அகற்றுவதற்கு இரண்டு மணிநேரம் செலவிட வேண்டும் என்றும் அமிதாப் பச்சன் கூறினார்.
எகிறும் எதிர்பார்ப்பு
இந்த திரைப்படத்தின் கதை மகாபாரத காலத்தில் ஆரம்பித்து 2898-ம் ஆண்டில் முடியும் என இயக்குநர் நாக் அஷ்வின் கூறியிருந்தார். “அதனால்தான் படத்திற்கு ‘கல்கி 2898’ என பெயர் வைக்கப்பட்டது” என்றார். ஐஐடி மும்பையில் மாணவர்களிடையே கலந்துரையாடிய நாக் அஸ்வின், “கடந்த காலம், நிகழ்காலம் இரண்டையும் இணைப்பதுதான் இத்திரைப்படம்” என்றார்.
படத்தில் முக்கியமாக ‘புஜ்ஜி’ எனும் கார் வருகிறது. தனித்துவம் வாய்ந்த இந்த கார், முழுவதும் இந்தியாவிலேயே, இளம் பொறியாளர்களால் தயாரிக்கப்பட்டதாக அப்படக்குழு தெரிவித்தது. அந்த காரை வைத்தும் பல புரொமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு செய்து வருகிறது. ‘காந்தாரா’ திரைப்படத்தின் கதாநாயகன் இந்த காரை இயக்கி படத்திற்காக புரொமோஷன் செய்துள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
“இத்திரைப்படம் 1000 கோடி வசூல் எனும் இலக்கை எளிதாக அடைய முடியும்” என, திரைப்பட டிராக்கிங் இணையதளமான sacnilk கூறியுள்ளது. “முதல் நாளிலேயே வசூல் 200 கோடியைத் தாண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு முதல்நாள் முன்பதிவு 19.95 கோடி ரூபாய் என்றும் sacnilk தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட வட இந்திய நகரங்களிலும் இத்திரைப்படத்தை பலரும் முன்பதிவு செய்துவருவதாக sacnilk எண்டர்டெயின்மெண்ட் கூறுகிறது.
வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்திற்கு முன்பதிவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வட அமெரிக்காவில் 77,000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக பிரத்யங்கரா சினிமாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)