ரசிகரை கொலைசெய்த குற்றச்சாட்டில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்ட பின்னணி

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தனது ரசிகரையே கொலை செய்த குற்றச்சாட்டில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனை கர்நாடக காவல்துறை கைதுசெய்துள்ளது. அந்த ரசிகர் தனது தோழிக்கு மிக மோசமான செய்திகளை அனுப்பியதால், அவரைக் கடத்திவந்து சித்ரவதை செய்து கொலைசெய்ததாக தர்ஷன் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

திரைப்படங்களில் வருவதைப் போல, கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர கொலையில் பிரபல நடிகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது அம்மாநிலத் திரையுலகை அதிரவைத்திருக்கிறது.

கன்னடத் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தர்ஷன் தொகுதீப. தனது தோழியை மிக மோசமாகத் திட்டி சமூக வலைதளங்கள் மூலம் செய்தி அனுப்பியதால், தன்னுடைய ரசிகரையே கடத்திவந்து, சித்ரவதைசெய்து, கொலை செய்ததாக தர்ஷனை கர்நாடக காவல்துறை கைதுசெய்துள்ளது. அவருடைய தோழி பவித்ரா கவுடாவும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கொலையின் பின்னணி

சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா சாமி. 33 வயதாகும் இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலைபார்த்து வந்தார். ஜூன் 9ஆம் தேதி ரேணுகா சாமி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஏகப்பட்ட காயங்களுடன் ஒரு சாக்கடையில் இருந்து காமாக்ஷிபாளயம் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில்தான் தர்ஷன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ரேணுகா சாமியும் தர்ஷனின் மிகத் தீவிரமான ரசிகர் என்பதுதான் பலரையும் வியப்புக்குள்ளாக்கிய அம்சம். தர்ஷனுக்கு 2003ஆம் ஆண்டில் அவரது உறவினரான விஜயலக்ஷ்மியுடன் திருமணமாகிவிட்டது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில், தர்ஷன் பவித்ரா கௌட என்ற நடிகையுடன் பழகிவந்திருக்கிறார். இதற்கு விஜயலக்ஷ்மி பொதுவெளியிலேயே எதிர்ப்புத் தெரிவித்துவந்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், தான் தன் கணவர் தர்ஷனுடனும் மகனுடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜயலக்ஷ்மி, 'This is Us, With our one and only' எனக் கூறியிருந்தார். இதற்கு சில மணி நேரங்களிலேயே தான் தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பவித்ரா, 'One Decade Down, Forever to go' என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பவித்ரா கவுடா, அவரது கணவர் சஞ்சய் சிங், மகள் குஷி கவுடா ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பவித்ராவைக் கடுமையாகச் சாடிய விஜயலக்ஷ்மி, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் நடந்த தினத்தன்று, தர்ஷன் நடித்த Kaatera படத்தின் வெற்றிவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த செய்தியாளர் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது.

இப்படி தான் விரும்பும் நடிகரின் மனைவி துன்பப்படுவதைத் தாங்க முடியாத ரேணுகா சாமி, பவித்ரா கவுடாவின் சமூக வலைதளக் கணக்குகளுக்கு ஆபாசமாகத் திட்டி செய்திகளை அனுப்பியதாக காவல்துறை கூறுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் பி. தயானந்த், "ரேணுகா சாமி பவித்ராவுக்கு மிக மோசமான செய்திகளை அனுப்பியதாகத் தெரியவருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்குப் பிறகு, ரேணுகா சாமி சித்ரதுர்காவில் கடத்தப்பட்டு பெங்களூருக்குக் கொண்டுவரப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தர்ஷனுக்கு தொடர்பிருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

மைசூரில் தங்கியிருந்த தர்ஷன் கைதுசெய்யப்பட்டு பெங்களூருக்குக் கொண்டுவரப்பட்டார். அவரிடம் நடந்த பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, அவரை போவரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அதன் பிறகு, அவர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கூடுதல் விசாரணைக்காக அவரை ஆறு நாட்கள் காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுப்ப உத்தரவிட்டது. செவ்வாய்க் கிழமையன்று பிற்பகலில் பவித்ரா கவுடாவும் கைதுசெய்யப்பட்டார். 'சேலஞ்சிங் ஸ்டார்' என்று அழைக்கப்படும் தர்ஷனின் பெங்களூர் ஆர்.ஆர். நகர் வீட்டிற்கு பலத்த போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிழமை மதியம் பெங்களூர் காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் ஜூன் 9ஆம் தேதி நள்ளிரவில் தர்ஷனுக்குச் சொந்தமானதாகச் சொல்லப்படும் ஸ்கார்பியோ கார் ஒன்று, ரேணுகா சாமியின் உடல் கிடைத்த இடத்திற்குச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அந்தக் காரில் தர்ஷன் இருந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

கடத்திவரப்பட்ட ரேணுகா சாமி, கட்டையால் அடித்தே கொல்லப்பட்டிருப்பதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களில் எட்டுப் பேர் ரேணுகா சாமி கொல்லப்பட்ட இடத்தில் தர்ஷன் இருந்ததை உறுதிசெய்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொலைசெய்யப்பட்ட ரேணுகா சாமி, அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன். அவருக்கு சமீபத்தில்தான் திருமணமான நிலையில், அவருடைய மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறார்.

'சேலஞ்சிங் ஸ்டார்' ஆன தர்ஷன்

1966ல் வெளிவந்த 'தொகுதீப' என்ற கன்னடப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிவாஸ். இதற்குப் பிறகு 'தொகுதீப' என்ற பெயர், இவருடைய பெயருக்குப் முன்பாக ஒட்டிக்கொண்டது. இந்த ஸ்ரீநிவாஸின் மகன்தான் தர்ஷன். இவருக்கு வீட்டில் சூட்டப்பட்ட பெயர் ஹேமந்த் குமார்.

'நினஷம்' என்ற திரைப்பட பயிற்சிப் பள்ளியில் படித்த ஹேமந்த் குமார், பி.சி. கௌரிஷங்கர் என்ற ஒளிப்பதிவாளரிடம் அசிஸ்டென்டாக இருந்தார். முதலில் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்த ஹேமந்த்திற்கு 1997ஆம் ஆண்டு வெளிவந்த 'மகாபாரதா' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தர்ஷன் என்ற பெயரோடு நடிக்க ஆரம்பித்த அவருக்கு ஆரம்பத்தில் சின்னச் சின்ன பாத்திரங்களே கிடைத்தன.

2001ஆம் ஆண்டு பி.என். சத்யாவின் இயக்கத்தில் வெளியான 'மெஜெஸ்டிக்' பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதற்குப் பிறகு இவர் நடித்து வெளியான சில படங்கள் வெற்றிப் படங்களாக அமையவே, கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் தர்ஷன். தமிழில் விஜயகாந்த் நடித்து வெளியான 'வல்லரசு' திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் தர்ஷன்.

இதற்கு முந்தைய சர்ச்சைகள்

2011 செப்டம்பரில் இவரது மனைவியான விஜயலக்ஷ்மி, தன்னைத் தன் கணவர் அடித்துத் துன்புறுத்துவதாகப் புகார் அளித்தார். அந்தப் புகாரில் கைதுசெய்யப்பட்ட தர்ஷன் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வெளியில் பேசித் தீர்க்கப்பட்டது.

2016ல் மீண்டும் இவரது மனைவி, தர்ஷனின் நடவடிக்கை குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். 2021ல் மைசூரில் ஹோட்டல் ஒன்றில், பணியாளர் ஒருவரை தர்ஷன் தாக்கியதாக புகாா் எழுந்தது.

2022ல் தன்னை தர்ஷன் மிரட்டுவதாக கன்னட திரைப்படத் தயாரிப்பாளரான பரத் என்பவர் புகார் அளித்தார். இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)