இந்தியன்-2: ரஜினிக்காக உருவான கதைக்குள் கமல் வந்தது எப்படி? மீண்டும் அந்த 'மேஜிக்' நிகழுமா?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தியன், இந்த முறையும் அதனை நிகழ்த்துமா?

1996-ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் 'இந்தியன்' படத்தின் விளம்பரம் வெளியானபோது, சினிமா ரசிகர்களிடம் ஒரே பரபரப்பு. முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு, குருதிப் புனல் படத்தைத் தந்திருந்த கமல், அடுத்ததாக இயக்குநர் ஷங்கருடன் கைகோர்த்திருந்தார்.

ஜென்டில்மேன், காதலன் படங்களுக்குப் பிறகு ஷங்கருக்கு மூன்றாவது படம் இந்தியன். படத்தைத் தயாரித்தவர் ஏ.எம். ரத்தினம். ஜென்டில்மேன் படத்தை அதே பெயரிலும் காதலன் படத்தை ப்ரேமிக்குடு என்ற பெயரிலும் தெலுங்கிலும் வெளியிட்டு லாபம் பார்த்திருந்த ஏ.எம். ரத்தினம் ஷங்கருடன் இணைந்து நேரடியாகவே ஒரு தமிழ் படத்தை இயக்க முன்வந்திருந்தார்.

ரஜினிக்காக உருவாக்கிய கதை

இந்தியன் படத்தின் கதை முதலில் ரஜினிகாந்திற்காக உருவாக்கப்பட்டது என தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடுகிறார் அந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இயக்குநர் வசந்தபாலன்.

"1994ம் ஆண்டு என்று நினைக்கிறேன். 'காதலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. 'எனக்கு ஏதாவது கதையிருக்கா ஷங்கர்?' என்று ரஜினி கேட்க 'பெரிய மனுஷன்' என்ற தலைப்பில் ரஜினிக்கான கதையை ஷங்கர் உருவாக்கினார். கதையைப் பாராட்டினார் ரஜினி. காதலன் திரைப்படம் முடியும் தருவாயில் ரஜினியின் பல படங்களின் கால்ஷீட் தேதிகள் இடிக்க, உடனே படம் செய்ய முடியாமல் போனது."

"காதலன் திரைப்படத்திற்குப் பிறகு பெரிய மனுஷன் கதையைத்தான் படமாக எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ஷங்கர். கதையில் கதாநாயனுக்கு தந்தை - மகன் என இரு வேடங்கள். அடுத்ததாக கமலுக்கு அந்த கதை சொல்லப்பட்டது. ஒருவேளை கமல் நடிக்க மறுத்தால் என்ன செய்வது என்று எண்ணி பிளான் பி தயாரானது. தெலுங்கு கதாநாயகர்கள் நாகார்ஜீனா அல்லது வெங்கடேஷை மகனாக நடிக்க வைக்கலாம். டாக்டர் ராஜசேகரை தாத்தா வேடத்தில் நடிக்க வைக்கலாம். ஆனால், ஒரு வழியாக கமல் நடிப்பது முடிவானது" என்கிறார் வசந்தபாலன்.

முதலில் பெரிய மனுஷன் என பெயர் சூட்டப்பட்டிருந்த, அந்தப் படத்தின் பெயர் எப்படி இந்தியன் என மாறியது என்பதையும் குறிப்பிடுகிறார் வசந்தபாலன்.

"இந்தியன் திரைப்படத்திற்கு 'பெரிய மனுஷன்' என்கிற தலைப்பு ஒரு சின்ன வட்டத்திற்குள் இருப்பதைப் போல இருக்கிறது. கதை அதைத் தாண்டி பெரியதாக இருந்ததால், வேறு டைட்டில் தேட வேண்டியிருந்தது. சேனாதிபதி, INA, சுதந்திரம், சத்யமேவ ஜெயதே, புது ஆயுதம், போர், யுத்தம் என பலவாறாக யோசித்து இடையில் இந்தியன் என முடிவானது என்கிறார் வசந்தபாலன்.

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட காட்சிகளை அந்தச் சாயலே தெரியாமல் கமல் தனக்குரிய பாணியில் மாற்றிவிட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக ஊர்மிளா மடோன்கரும் மனீஷா கொய்ராலாவும் தேர்வானார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஜீவா ஒளிப்பதிவு செய்தார்.

'இந்தியன்' படத்தின் வசூல் எப்படி இருந்தது?

படத்தின் கதை இதுதான். மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரி ஒருவர் கொல்லப்படுகிறார். அதேபோல பல அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். இதனை சிபிஐ அதிகாரியான கிருஷ்ணசாமி விசாரிக்கிறார். மற்றொரு பக்கம், சந்திரபோஸ் என்ற சந்துரு, ஒரு ஆர்டிஓ அலுவலகத்தில் இடைத்தரகராக இருக்கிறார். பிரேக் இன்ஸ்பெக்டராக அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்துத் துறைச் செயலரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்துதருகிறார். இவருடைய காதலி ஐஸ்வர்யா.

ஒரு கட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதிதான் இந்தக் கொலைகளைச் செய்வது என்பதைக் கண்டுபிடிக்கிறார் கிருஷ்ணசாமி. ஆனால், சேனாபதி தப்பிச்செல்கிறார். இதற்கிடையில் சேனாபதியின் ஃப்ளாஷ்பேக் சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு, மேலும் பல கொலைகளைச் செய்கிறார் சேனாபதி. அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கிறது.

சேனாபதியின் மகனான சந்துரு, லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதியில்லாத பேருந்திற்கு தகுதிச் சான்றிதழ் அளிக்கிறார். அந்தப் பேருந்து விபத்திற்குள்ளாகி 40 குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள். இதனால், மகனையும் கொல்ல முடிவெடுக்கிறார் சேனாபதி. இறுதி மோதல் விமான நிலையத்தில் நடக்கிறது. அங்கே மகனைக் கொல்கிறார் சேனாபதி. அப்போது விமானம் வெடிக்க அதில் சேனாபதி இறந்துவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவர் தப்பிவிட்டதை உணர்கிறார் கிருஷ்ணசாமி. பிறகு, ஹாங்காங்கிலிருந்து கிருஷ்ணசாமியை அழைக்கும் சேனாபதி, தேவை ஏற்படும்போது தான் திரும்பி வருவேன் என்று சொல்வதோடு முதல் பாகம் முடிவுக்கு வரும்.

இந்தப் படம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரானது. படத்தின் தயாரிப்புச் செலவு எவ்வளவு என யாருக்கும் தெரியாது. சுமார் 8 கோடி ரூபாயில் இருந்து 12 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என சொல்லப்பட்டது. தமிழில் இந்தியன், தெலுங்கில் பாரதியீடு, இந்தியில் இந்துஸ்தானி என்ற பெயர்களில் வெளியானது படம்.

படம் வெளியானபோது பல வசூல் சாதனைகளை முறியடித்தது. மொத்தமாக 50 கோடி ரூபாயை வசூலித்ததாகச் சொல்லப்பட்டது.

இந்தியன் - 2 தாமதமானது ஏன்?

அடுத்த பாகத்தை உருவாக்குவதற்கு ஏதுவாகவே இந்தியன் படத்தின் க்ளைமாக்ஸ் இருந்தாலும், அடுத்த பாகம் எடுக்கப்படுவது பற்றிய பேச்சே பல ஆண்டுகளுக்கு எழவில்லை. 2017ல் தனது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் இறுதியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவித்தார் கமல்ஹாசன். முதலில் ஸ்ரீ வெங்கேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், விரைவிலேயே அந்த நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகிக்கொண்டது.

இதற்குப் பிறகு, சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, தயாரிப்பிற்கு முந்தைய பணிகள் தீவிரமடைந்தன. வழக்கமாக ஷங்கரின் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மானே இசையமைக்கும் நிலையில், இந்தப் படத்தில் அனிருத் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், படத்தின் தயாரிப்பு பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போனது. பிறகு 2019ஆம் ஆண்டுத் துவக்கத்தில் படத்தின் பணிகள் தொடங்கின. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, பிரேமானந்தம் ஆகியோர் படத்தில் இணைந்தனர். ஆனால், படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டது. பிறகு 2019ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. பிறகு கோவிட் காலகட்டத்தில் தடை ஏற்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு துவங்கி நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸும் தயாரிப்பில் இணைந்துகொண்டது.

இதற்குப் பின் படப்பிடிப்பு தீவிரமடைந்தது. இந்த ஆண்டு ஏப்ரலில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் தாமதமானதால், ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது இந்தப் படம்.

ஹாங்காங்கிலிருந்து திரும்பும் சேனாபதி, இந்தியாவில் தனது வீடியோக்கள் மூலம் ஊழல்களை அம்பலப்படுத்திவரும் சித்ரா அரவிந்தனுடன் கைகோர்ப்பதைப் போல இந்தப் படத்தின் கதை நகர்கிறது.

இந்தியன் 3

இப்போது இந்தியன் படத்தின் மூன்றாவது பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்த மூன்றாம் பாகத்திற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பே தேவைப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த மூன்றாம் பாகம், 2025ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கிறது.

இந்தியன் படத்தின் முதல் பாகம், வெளியானபோது பலவிதங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகப் பெரிய பொருட்செலவு, வித்தியாசமான கதைக்களம், பல மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள் என படம் வெளியாகி பல மாதங்களுக்கு இந்தப் படம் பற்றியே பேச்சாக இருந்தது. அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சிறந்த கலை இயக்குநருக்கான விருது ஆகியவை இந்தியன் படத்திற்குக் கிடைத்தன.

தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் இந்தப் படம் 150 நாட்களைக் கடந்து ஓடியது. தொலைக்காட்சிகளில் இப்போதும் அந்தப் படத்தின் காட்சிகள் ஒளிபரப்பானால் ரசிகர்கள் வேலைகளை மறந்து, நின்று ரசிக்கிறார்கள்.

இப்போது இந்தியன் -2 வெளியாகவிருக்கிறது. முதல் பாகத்திற்கும் இதற்கும் இடையில் 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. முந்தைய பரபரப்பையும் அனுபவத்தையும் இந்தப் படம் தருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)