சிஏஏ மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்? பாஜகவுக்கு என்ன ஆதாயம்?

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் குடியுரிமை கேட்டு இதுவரை நாடு முழுவதும் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறித்து தகவல் எதுவும் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமையின் கீழ் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும் கேட்ட கேள்விகளுக்கு, இப்படியான பதிலை வழங்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

மேலும், இந்த திட்ட செயலாக்க பணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை செய்வதற்கான பணியாளர்கள் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பகிர்ந்திருந்த ட்வீட் ஒன்றில், பராக் பள்ளத்தாக்கைச் சேர்ந்த நபர் ஒருவர் குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமைக் கோரி விண்ணப்பித்ததாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த நபர் யார் என்ற எந்த விவரத்தை அவர் பொதுவெளியில் பகிரவில்லை. பராக் பள்ளத்தாக்கின் பத்திரிகையாளர்களால் கூட இன்றுவரை அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், தேர்தலுக்கு முன் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் எதிர்பார்த்த அரசியல் பலன்கள் கிடைக்காமல் போகலாம் என்று பாஜகவின் ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.

கிழக்கு பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்த அகதிகள் அல்லது மத்துவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்களா என்பது இதுவரை தெரியவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், BANGLA PAKSHA

படக்குறிப்பு, ஆர்டிஐ கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள பதில்

எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிரிவின் கீழ் இயங்கி வரும் குடியுரிமைத் துறைக்கு இது தொடர்பாக பல கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை எத்தனை பேர் இணையம் வழியாக குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று கேட்கப்பட்டுள்ளது.

பங்களா போகோ (Bangla Paksha) என்ற சேவை அமைப்பின் சார்பில் முகமது ஷாஹீன் என்பவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார் . மேலும், சமூகம் மற்றும் சட்டத் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் விஸ்வநாத் கோஸ்வாமியும் இதேபோன்ற ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இவருக்குமே கிடைத்த பதில் ஒன்றுதான். குடியுரிமைத் துறையின் இயக்குநரான ஆர்.டி.மீனா, தனது அலுவலகத்தில் இந்த கேள்விகளுக்கான தகவல் எதுவும் இல்லை என்று பதில் வழங்கியுள்ளார்.

ஷாஹீனுக்கு கிடைத்துள்ள பதிலில், அப்படி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரங்களை சேமித்து வைக்க எந்த விதமான அமைப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தலைமை தகவல் அதிகாரி வழங்கியுள்ள பதிலில் திருப்தி இல்லை என்றால், உள்துறை அமைச்சகத்தின் 'வெளிநாட்டினர்' பிரிவு இணைச் செயலாளரிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் இருவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி உட்பட பல பாஜக தலைவர்கள் வங்கத்திற்கு வரும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதை சொல்லி பெருமை படுகின்றனர்.

'யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் எங்கிருந்து தகவல் கொடுப்பது?'

பங்களா போகோ அமைப்பின் தலைவரும், பேராசிரியருமான கர்க் சட்டர்ஜி பிபிசி பங்களாவிடம் பேசுகையில், “இணையத்தில் எத்தனை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய அரசிடம் எந்த தகவலும் இல்லாமல் இருப்பது எப்படி? " என்ற கேள்வியை முன்வைத்தார்.

"எங்கள் மனுக்களின் நோக்கமே, இதுவரை இணையம் வழியாக எத்தனை பேர் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பதை தெரிந்துக் கொள்வதே ஆகும். எனவே தான் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இறுதியில் எங்களுக்கு கிடைத்த பதில் என்ன? அதற்கான தரவுகளே தங்களிடம் இல்லை என்று அரசு கூறுகிறது.”

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், SANJAY DAS/BBC

படக்குறிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை வரவேற்ற மக்கள்

‘உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’

இதுகுறித்து பிபிசி பங்களாவிடம் பேசிய சுக்ரிதி பிஸ்வாஸ், "குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், யாராவது குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், அதை விசாரித்து முடிவு செய்ய உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. அதற்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆனால், இதுவரை இந்த பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று அரசே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது” என்கிறார்.

சாட்டர்ஜி மற்றும் விஸ்வாஸ் ஆகிய இருவருமேமக்களவைத் தேர்தலுக்கு முன் அரசியல் ஆதாயத்திற்காகவே பாஜக இந்த சட்டத்தை அமல்படுத்தியதாக கூறுகின்றனர்.

ஆனால் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு வரும் அகதிகள் அல்லது மத்துவா சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும் இந்த சட்டத்தின் மூலம் குடியுரிமை பெற மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பாஜக ஆதரவாளர்களாக கருதப்படும் மத்துவா குழுவினர் அதைக் கொண்டாடினர். அந்தக் குழுவின் தலைவரும், பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சருமான சாந்தனு தாக்குரும் இந்த சட்டம் அமலுக்கு வந்தபோது உற்சாகமாக கொண்டாடினார்.

வங்கதேசத்தில் இருந்து வந்து தற்போது மேற்கு வங்கத்தில் குடியேறிய பலரிடமும் பிபிசி பேசியது. அவர்கள் யாருமே தற்போது இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெரும் யோசனையில் இல்லை.

இவர்களில் பெயர் சொல்ல விரும்பாத பாஜக ஆதரவாளர் ஒருவர், "நான் ஏன் புதிதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்? ஏற்கனவே அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தான் என்னிடம் உள்ளனவே” என்று கூறினார்.

அகதிகள் மற்றும் மத்துவா தலைவர்களின் மதிப்பீட்டின்படி, வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கம் வந்த சுமார் இரண்டு கோடி மக்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமை இல்லை.

ஆனால், அவர்களிடம் குடியுரிமை தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லையென்றாலும், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் வைத்திருக்கின்றனர்.

இவற்றை ஏதோ ஒரு வகையில் தாங்கள் வாங்கியுள்ளதையும் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதன் காரணமாக புதிதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் இவர்களிடம் தென்படவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA / BBC

படக்குறிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு போராட்டங்கள்

'இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற முடியாது'

இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற முடியாது என்று அகதிகள் மற்றும் மத்துவா சமூகத்திற்கு நாங்கள் பலமுறை எடுத்துரைத்து வருகிறோம் என்கிறார் சுக்ரிதி ரஞ்சன் பிஸ்வாஸ்.

காரணம், இந்த சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை அவர்களால் ஏற்பாடும் செய்ய முடியாது என்கிறார் அவர்.

"நீங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் இந்திய குடிமகன் இல்லை என்று நீங்களே ஒப்புக் கொள்வதாக அர்த்தம். வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று அர்த்தம். ஆனால், இங்குள்ள அனைவரிடமும் குறைந்தபட்சம் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையாவது இருக்கிறது. சிலர் அரசு வேலைகளில் கூட இருக்கிறார்கள்.”

மேலும் விஸ்வாஸ் பேசுகையில், “குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களே தாங்கள் இந்திய குடிமக்கள் இல்லை என்று ஒப்புக்கொண்டால், அவர்களிடம் உள்ள அனைத்து அடையாள அட்டைகளும், ஆவணங்களும் ரத்து செய்யப்படும். அதன் பிறகு அவர்களின் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்திய குடியுரிமை கிடைக்குமா?” என்று கேட்கிறார்.

தேர்தலுக்காக அமல்படுத்தப்பட்டதா சிஏஏ?

மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பாஜக அரசியல் ஆதாயம் அடையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பாஜகவின் தேர்தல் கணக்கின்படி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த இதுவே சரியான நேரம் என்று அசாம் பத்திரிகையாளர் பைகுந்த் நாத் கோஸ்வாமி நம்புகிறார்.

இதுகுறித்து பிபிசி பங்களாவிடம் பேசிய அவர், "இந்த முறை பாஜக 'சார் ஹண்ட்ரட் பார்' (Chaar Hundred Paar) என்ற முழக்கத்துடன் களத்தில் இறங்கியது. மேலும் தென்னிந்தியா முதல் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் வரை அனைத்து அரசியல் கட்சிகளையும் தனது கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது.

இதன் மூலம் பாஜக ஒரு இடத்தை கூட இழக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. அதனால்தான் வங்கத்தின் மத்துவா சமூகம் மற்றும் அசாமின் வங்க இந்துக்களின் வாக்குகளை சிஏஏ மூலம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்கிறார்.

என்ஆர்சியில் இருந்து லட்சக்கணக்கான வங்க இந்துக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பேசிய கோஸ்வாமி, "என்ஆர்சியில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தை அணுக வேண்டியிருந்தது. அப்படிப்பட்டவர்கள் பாஜக மீது கோபமாக இருந்தனர். இந்நிலையில் தற்போதோ தேர்தலில், சிஏஏ மூலம் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவது குறித்து பேசப்படுகிறது" என்கிறார்.

மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மத்துவா வாக்காளர்களின் ஆதரவு முக்கியமான ஒன்று. இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும், சுமார் 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் குறிப்பிடத்தகுந்த நிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்கள் பல பகுதிகளில் கணிசமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "சிஏஏ அமல்படுத்தப்பட்டால், அதன் மூலம் தேர்தலில் பலன் கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம்" என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் ஒருவர்.

பாஜகவுக்கு என்ன பலன்?

மேற்கு வங்கம் மற்றும் அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேர்தலுக்கு முன் அமல்படுத்துவதன் மூலம் வாக்காளர்களை தன் பக்கம் இழுக்க பயன்படுத்திய உத்தி எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்ற கவலை தற்போது பாஜகவில் அதிகரித்து வருகிறது.

பெயர் கூற விரும்பாத மேற்கு வங்க பாஜக தலைவர் ஒருவர் பிபிசி பங்களாவிடம் பேசுகையில், "சிஏஏ அமல்படுத்தப்பட்டால், அதன் மூலம் தேர்தலில் பலன் கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், மக்கள் அந்த சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவே இல்லை. இந்நிலையில் தான் இதை எப்படியாவது தேர்தலுக்கு சாதகமாக நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.”

“ஆனால் எப்படி? உண்மையில், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் கேட்கப்பட்டுள்ள சான்றுகள் இங்குள்ள பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக உள்ளது" என்கிறார் அவர்.

தனிப்பட்ட உரையாடல்களின் போது இதுபோன்ற அச்சங்களை வெளிப்படுத்தினாலும், பிரதமர் நரேந்திர மோதி உட்பட பல பாஜக தலைவர்கள் வங்கத்திற்கு வரும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதை சொல்லி பெருமை படுகின்றனர். இது மாத்துவா சமூகத்தினர் மற்றும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான வழியைத் திறந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

அப்படி இது தான் உண்மை என்றால், இந்த சட்டத்தின் கீழ் மக்கள் ஏன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற கேள்விக்கு இங்கு பதில் இல்லை?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)