சென்னை: பெண்களுக்கு பிரத்யேகமாக 200 இலவச ஜிம்கள் - எங்கு, எப்போது திறக்கப்படும்?

சென்னை: பெண்களுக்கு பிரத்யேகமாக 200 இலவச ஜிம்கள் - எங்கு, எப்போது திறக்கப்படும்?

பட மூலாதாரம், Getty Images

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ரூபாய் 10 கோடி மதிப்பில் பெண்களுக்கென பிரத்யேக எம்பவ்ஹெர் (EmpowHER) உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என்று மேயர் ஆர்.பிரியா அறிவித்திருந்தார்.

இப்போது அந்த உடற்பயிற்சிக் கூடங்களுக்கான கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கவிருப்பதாகவும், அவற்றை அமைப்பதற்கான தகுந்த இடங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன்.

“சென்னையில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெண்களுக்கான இந்த பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்கவுள்ளோம். டிரெட்மில், சைக்கிளிங் மற்றும் இஎப்எக்ஸ் இயந்திரங்கள், ஹைடிராலிக் வெயிட்லிப்டிங் மெஷின்ஸ் என அனைத்து உபகரணங்களும், குடிநீர் வசதி, பாதுகாவலர்கள் என அடிப்படை வசதிகளும் இந்த உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும்” என்று அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்படும் பெண்களுக்கான இந்த 200 உடற்பயிற்சிக் கூடங்கள் பயனுள்ளவையாக இருக்குமா? அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் பல இடங்களில் பராமரிக்கப்படாமல், பயனற்று இருப்பதாக புகார்கள் தொடர்ந்து எழும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் இந்த கூடங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?

200 இலவச உடற்பயிற்சி கூடங்கள்

பட மூலாதாரம், Getty Images

‘பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம்’

“கண்டிப்பாக இது மிகவும் பயனுள்ள திட்டம் தான். எனது பகுதியில் ஒரு தனியார் உடற்பயிற்சிக் கூடம் உள்ளது. அங்கு சென்று கேட்டபோது, மாதக் கட்டணம் கிடையாது, ஒரு வருடத்திற்கு 20,000 ரூபாய் என்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு சார்பாக பெண்களுக்கு அமைக்கப்படும் இந்த இலவச உடற்பயிற்சி கூடங்கள் கண்டிப்பாக நல்ல முன்னெடுப்பு தான்” என்கிறார் ராயப்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா.

“ஆனால், இத்தகைய உடற்பயிற்சிக் கூடங்களைப் பராமரிப்பது தான் முக்கியப் பிரச்னை. சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியில் அம்மா உடற்பயிற்சிக் கூடம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் எல்லாம் சிறப்பாக இருந்தது. இப்போது அது பூட்டப்பட்டு கிடக்கிறது, அது போல இதுவும் ஆகிவிடக்கூடாது” என்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த ருக்மணி.

“தனியார் உடற்பயிற்சிக் கூடங்களில் கட்டணம் அதிகம் என்பதோடு மட்டுமல்லாது, அதைக் காரணம் காட்டி பெண்களுக்கு இவ்வளவு செலவு செய்து எதற்கு உடற்பயிற்சி என்று வீட்டில் கேட்கிறார்கள். இப்போது இந்த இலவச உடற்பயிற்சிக் கூடம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டால் அது பெண்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும்” என்கிறார் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெனிட்டா.

200 இலவச உடற்பயிற்சி கூடங்கள்

பட மூலாதாரம், Getty Images

“பெண்களுக்கு கண்டிப்பாக உடற்பயிற்சி அவசியம், முக்கியமாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் குறித்து யாரும் பேசுவது கூட இல்லை. அதுவும் பெண்களுக்கு முறையான உடற்பயிற்சி என்பதே ஆடம்பரம் என்று இருக்கும் சூழலில், இந்தத் திட்டம் ஒரு நல்ல தொடக்கம்” என்கிறார் வீசிக்ஸ் உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் சோனியா.

தொடர்ந்து பேசிய அவர், “குழந்தை பெற்ற பிறகு, பெண்களுக்கு மிக எளிதாக எடை அதிகரித்துவிடும். அவ்வாறு இருக்கும் போது, இந்த மனஅழுத்தமும் அதிகரித்து அவர்களை மனச்சோர்வுக்குள் தள்ளிவிடும், எனவே அதிலிருந்து வெளியே வர உடற்பயிற்சி கண்டிப்பாக ஒரு நல்ல வழி தான்” என்று கூறினார்.

200 இலவச உடற்பயிற்சி கூடங்கள்
படக்குறிப்பு, சென்னை மாநகராட்சியின் 42வது வார்டு கவுன்சிலர் ரேணுகா.

‘அடித்தட்டு பெண்களுக்கான திட்டம்’

சென்னை மாநகராட்சியின் எம்பவ்ஹெர் (EmpowHER) உடற்பயிற்சிக் கூடங்களுக்கான திட்டம் குறித்தும், தனது சொந்த முயற்சியில் தண்டையார்பேட்டை 42-ஆவது வார்டில் கட்டப்பட்ட இலவச உடற்பயிற்சிக் கூடம் குறித்தும் பிபிசியிடம் பேசினார் வார்டு கவுன்சிலரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான ரேணுகா.

“அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம் செல்வது என்பதே பெரிய கனவு தான். பெண்களுக்கு எனும்போது அந்த உடற்பயிற்சிக் கூடம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இன்று சென்னையில், ஒரு நல்ல, பாதுகாப்பான உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தால் குறைந்தது 1000- 1500 ரூபாய் வரை மாதக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். அப்படி பார்க்கும்போது இதுவொரு மிகச்சிறந்த திட்டம்.” என்கிறார் கவுன்சிலர் ரேணுகா.

200 இலவச உடற்பயிற்சி கூடங்கள்
படக்குறிப்பு, கவுன்சிலர் ரேணுகாவின் முயற்சியில் கட்டப்பட்ட 42வது வார்டு உடற்பயிற்சிக் கூடம்.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர் ரேணுகா, “எனது 42-ஆவது வார்டில், அடித்தட்டு மக்களுக்கான ஒரு இலவச உடற்பயிற்சிக் கூடத்தை தொடங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதை நிறைவேற்ற எனது வார்டு நிதி மூலமாக ஒரு சிறிய உடற்பயிற்சிக் கூடத்தை குடிசை மாற்று வாரிய மக்களுக்காக கட்டினேன். இதில் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி அறைகள் உள்ளன. பெண்களுக்கான அறையில் ட்ரெட் மில், சைக்கிளிங் வசதிகள் உள்ளன. காலை 5.30 முதல் 7 மணி முதல் வரை நான்கைந்து பெண்கள் இங்கு வந்து உடற்பயிற்சி செய்கிறார்கள்."

"இந்த உடற்பயிற்சி நிலையத்தை திறந்துவைக்க ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.ஜெ.எபினேசர் வந்தபோது அவரிடம் 'என் வார்டு பெண்களுக்கான பிரேத்யேகமாக ஒரு உடற்பயிற்சிக் கூடம் வேண்டுமென' கோரிக்கை வைத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்."

"இப்போது சென்னை மாநகராட்சி ஒவ்வொரு வார்டுக்கும் பெண்களுக்கான ஒரு உடற்பயிற்சி நிலையம் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கவுள்ளன. முதல் கட்டமாக ஒவ்வொரு வார்டுக்கும் 5 லட்சம் கொடுக்கப்படும், அது மட்டுமல்லாது வார்டு கவுன்சிலரின் நிதியிலிருந்தும் குறிப்பிட்ட தொகை இதற்காகப் பயன்படுத்தப்படும்” என்றார்.

200 இலவச உடற்பயிற்சி கூடங்கள்

பட மூலாதாரம், CMOTamilNadu/X

படக்குறிப்பு, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அம்மா பூங்காக்கள் திறக்கப்பட்டன.

அம்மா பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள்

2016-இல், அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவை விதி 110-இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள், பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமென்ட் பெஞ்சுகள், குடிநீர் வசதிகள், புல் தரை, பசுமைத் தோட்டம், கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய 500 அம்மா பூங்காக்கள் ரூபாய் 100 கோடியில் அமைக்கப்படும்.

கிராமப் பகுதி இளைஞர்களுக்கு உடல்திறன் மற்றும் மனவளத் திறனை மேம்படுத்த அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 10 லட்சம் என்ற வகையில், 500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் ரூபாய் 50 கோடியில் அமைக்கப்படும்.” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் அம்மா பூங்காக்கள் பராமரிப்பின்றி இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான பா.வளர்மதி, “சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை வெறும் ஏமாற்று வேலை. கோடிக்கணக்கான ரூபாயில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் அம்மா பூங்காக்கள் எந்தவித பராமரிப்புமின்றி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிக் கிடக்கின்றன.அதை சீரமைக்கலாம் அல்லது உண்மையில் பெண்கள் மீது அக்கறை கொண்ட அரசு, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அரசு என்றால் அவற்றைத் தொடர்ந்து முறையாகப் பராமரித்திருக்கலாமே. மக்களின் பணம் வீணாகியிருக்காது அல்லவா” என்று கேள்வியெழுப்புகிறார்.

“ஆட்சி மாறியவுடன், மக்கள் நலனுக்காக அம்மா கொண்டுவந்த பல திட்டங்களைப் புறக்கணித்துவிட்டார்கள். இன்று அதே திட்டங்களை மீண்டும் வேறு பெயரில் கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் இது. குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை தாமதமாக கொண்டு வந்தார்கள். பல தகுதியான பெண்களுக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை. அதேபோல் இப்போது புதிதாக பெண்களுக்கு உடற்பயிற்சி நிலையம் என்று பெயரளவில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, பெண்களின் மீது அக்கறை இருப்பது போல நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது இந்த திமுக அரசு” என்று கடுமையாக விமர்சித்தார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.

சென்னை மாநகராட்சியால் கட்டப்படவிருக்கும் பெண்களுக்கான 200 உடற்பயிற்சிக் கூடங்கள் முறையாகப் பராமரிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கவுன்சிலர் ரேணுகா, “ஒவ்வொரு வார்டிலும் வார்டு பராமரிப்புக்கு என்று குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவே இந்த உடற்பயிற்சிக் கூடங்களும் பராமரிக்கப்படும். அம்மா உணவகத்தையும் அப்படி தான் பராமரித்து வருகிறோம். ஆனால் மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். பொது சொத்து என்பதால் இதைப் பயன்படுத்தும் மக்களும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)