உதகை, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் - எவ்வாறு பெறுவது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய சுற்றுலாத்துறை 2023-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலின்படி, இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.
தற்போது, கோடைக்காலம் என்பதால் வெப்ப அலையில் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் கோடை விடுமுறை காலத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, கொரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இ-பாஸ் பெறுவது எப்படி? அரசு பேருந்துகளில் செல்லலாமா? அரசு கூறுவது என்ன? இந்த நடைமுறையால் சுற்றுச்சூழல் காக்கப்படுமா?
தமிழ்நாட்டில் கொடைக்கானல், உதகை, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைகள் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன.இவற்றில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியாக கருதப்படும் உதகை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை என்பது ஆண்டுதோறும் இருக்கும்.
இ- பாஸ் முறை ஏன்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இதில் நீலகிரி மற்றும் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆஜராகி இருந்தனர்.
நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையின்படி, உதகைக்கு கோடை விடுமுறையில் நாள்தோறும் 1,300 வேன்கள் உள்பட 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனை கேட்ட நீதிபதிகள், இவ்வளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் மலை பகுதிகளுக்குச் சென்றால் நிலைமை மோசமாகும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாத சூழல் ஏற்படும், சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினர்.
சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வறிக்கையை அளிக்குமாறு கூறினர்.
மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை உதகை மற்றும் கொடைக்கானலில் மே ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இந்த ஆண்டுக்கு மட்டுமே ஆனது. அடுத்த ஆண்டு குறித்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை.
இ- பாஸ் நடைமுறைகள் என்ன?

இ-பாஸ் விதிமுறையை பின்பற்ற கூறிய நீதிபதிகள் அதனை வழங்குவதற்கு முன்பாக வாகனங்களில் வருவோரிடமிருந்து என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர், எத்தனை நாள் சுற்றுலா உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும்.
இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். உள்ளூர் மக்களுக்கு இந்த இ- பாஸ் நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரம் கொடுக்க வேண்டும், இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
'மலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு'

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். குறிப்பாக, கொடைக்கானலில் சீசன் அல்லாத மாதங்களில் நாள்தோறும் ஆயிரம் முதல் 2,000 சுற்றுலா வாகனங்கள் வரும். இதுவே கோடை விடுமுறையில் நாள்தோறும் 20,000 முதல் 30,000 வரையில் வாகனங்கள் அதிகரிக்கும்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இதனை நம்பி தொழில் செய்யும் பல்வேறு துறையினருக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கிறது. மறுபுறம் போக்குவரத்து நெரிசலால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கடினமாக மாறி இருக்கிறது.
நீதிமன்றம் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்திடம் சுற்றுலாவுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன.
சுற்றுலாத்துறை, காவல்துறை, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து இ-பாஸ் நடைமுறையை எப்படி முறைப்படுத்தி செயல்படுத்தலாம் என்பது குறித்து பேசப்பட்டு இருக்கிறது.
எதன் அடிப்படையில், இ-பாஸ் எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது", என்றார்.
இ-பாஸ் பெறுவது எப்படி?

இதுகுறித்து பிபிசி தமிழிடம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பேசுகையில், "நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை பின்பற்றி இ-பாஸ் சேவையை வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.
இ-பாஸ் பதிவு செய்யும் இணையதள பக்கம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படும்.
அதற்கு முன்னதாகவே இந்த இணையதள பக்கம் பயன்பாட்டுக்கு வரும். இதில் முன்பதிவு செய்துவிட்டு கொடைக்கானலுக்கு சென்று மக்கள் சுற்றிப் பார்க்கலாம்.
ஒருநாளைக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம், அரசுப்பேருந்துகளில் செல்பவர்களுக்கு அனுமதி எப்படி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஓரிரு நாட்ளில் அதற்கான அறிவிப்புகள் முறையாக அறிவிக்கப்படும்", என தெரிவித்தார்.
"சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமம்"

"இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகள் சில சிக்கல்களை சந்திக்கலாம்", என்கிறார் சுற்றுலாத்துறை உதவி பேராசியர் கோ.வை. திலீபன்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "கோடை காலங்களில் மலைப்பிரதேசங்களை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும்.
இதனால் கூட்ட நெரிசலை சுற்றுலா தலங்கள் சந்திக்கும். தற்பொழுது நீதிமன்றம் வாயிலாக நடைமுறைக்கு வரவிருக்கும் இ-பாஸ் முறை சுற்றுலாப் பயணிகள் கூட்ட நெரிசலின்றி சுற்றுலா சென்று பல்வேறு பகுதிகளை பார்த்து வர இயலும்.
ஆனால், சிலருக்கு விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலா செல்ல முடியும். அவர்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை சிக்கலை கொண்டு வரலாம்.
உதகை மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு மட்டுமே இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருப்பதால், ஏலகிரி, ஏற்காடு, மேகமலை போன்ற வேறு சில பகுதிகளை நோக்கிச் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இதனால் அந்த பகுதியில் சுற்றுலா சார்ந்த வியாபாரங்கள் நடைபெறும்”, என்றார்.
'சுற்றுலாப் பயணிகளை நம்பியிருப்போர் தொழில்கள் பாதிப்பு'
இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி விஜய் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி ஹோட்டல்கள், தங்கும், விடுதிகள் சிறு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என அனைத்துத் தரப்பு தொழிலும் இ-பாஸ் நடைமுறையால் பாதிக்கும் சூழல் ஏற்படும்.
கொடைக்கானலுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். இதனால் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கொடைக்கானலுக்கு வருவார்கள். இவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதால், சீசனை நம்பி பல ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து தொழில் செய்யும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, இதனை நடைமுறைப்படுத்த அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக”, கூறுகிறார்.
'சொந்த வாகனங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம்'

"கொடைக்கானல், உதகை ஆகிய நகரங்கள் தாங்கும் திறனை தாண்டி விட்டதாக," கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை சுற்றுலாத் தலங்கள் அதன் தாங்கு திறனை தாண்டி விட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மக்கள் நெரிசலால் காட்டுயிர் பன்மைத்தன்மை பாதிக்கப்படாமல் அதை பாதுகாக்க வேண்டும்.
சுற்றுலா தலங்களுக்கு சொந்த வாகனங்களில் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் வேண்டும், அறிவியல்பூர்வமாக, அதன் தாங்கும் திறனை கண்டறிந்து தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்", என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












