பாலியல் புகார்: தேவே கெளட பேரன் எங்கே? காவல்துறையில் அவரது வழக்கறிஞர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூருவிலிருந்து
முன்னாள் பிரதமர் தேவே கெளடவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான வீடியோக்கள் அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இதுவரை ரேவண்ணா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரது அலுவலக அதிகாரி ஒருவர் இதை மறுத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் போலியானவை என்று கூறியிருக்கிறார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவரும், பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பாவுமான ஹெச்.டி.குமாரசாமி, இந்தச் சம்பவத்திற்காக ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட முடிவு செய்யப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை (ஏபர்ல் 29) தெரிவித்தார்.
இந்த விஷயம் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் கர்நாடக மாநில காவல்துறை ஐ.ஜி-க்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா, கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரும் அக்குடும்பத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அரசியல் சதி என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், X/Prajwal Revanna
பிரஜ்வல் ரேவண்ணா சொல்வது என்ன?
இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா புதன்கிழமை (மே 1-ஆம் தேதி) முதல்முறையாக தனது தரப்பை முன்வைத்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்றுவிட்டதாகச் சொல்லப்படும் செய்தி வெளியான நிலையில், அவர் தனது தரப்பை அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் அவர் மீதும் அவரது தந்தை மீதும் குற்றம் சாட்டப்படிருக்கிறது. இருவரும், சிறப்பு விசாரணைக் குழுவின் முன் அவர் ஆஜராகும்படிக் கூறப்பட்டிருந்தது.
அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூருவில் இல்லை. எனவே இதனை எனது வழக்கறிஞர்கள் மூலம் பெங்களூரு சி.ஐ.டி-இடம் (CID) தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெளிவரும்," என்று எழுதியிருக்கிறார்.

பட மூலாதாரம், ANI
சுமார் 2,500 போட்டோ, வீடியோ காட்சிகள்
கர்நாடக மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) இந்த வழக்கை விசாரிக்கும் என்று கர்நாடக முதல்வர் கே சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக மாநில ஏ.டி.ஜி.பி பி.கே.சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுள்ளது.
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேவண்ணாவின் தொகுதியான ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு அவர்மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தன. பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே ஹசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட பென்-டிரைவ்கள் பரப்பப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோக்களில், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண்களின் முகங்கள் இருந்தன.
"இந்தப் பென்-டிரைவ்கள் பேருந்து இருக்கைகளிலும், பேருந்து நிலையங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட்டன," என்று ஓர் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்தார். "இந்தப் பென்-டிரைவ்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 2,000-க்கும் மேற்பட்ட ஃபைல்கள் இருந்தன. சில மணிநேரங்களுக்குப் பிறகு, இவை வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டன," என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.
'வீடியோக்களைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது'
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"சில வீடியோக்களைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "ஒரு பெண் 'தயவுசெய்து வேண்டாம், தயவுசெய்து வேண்டாம்' என்று கெஞ்சுகிறாள். அதைப் பார்த்தாலே பதறுகிறது," என்று அவர் கூறினார்.
வேலைக்கார பெண் கூறுவது என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28), ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார்.
"நான் [அவர்கள் வீட்டில் பணிக்குச்] சேர்ந்தபோது, அங்கிருந்த மற்ற ஆறு பணிப்பெண்கள் பிரஜ்வலைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவார்கள். ஆண் ஊழியர்களும் எங்களை ஹெ.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வலிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
"அவரது மனைவி இல்லாத போதெல்லாம், ஹெச்.டி.ரேவண்ணா என்னை தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்," என்று அவர் தனது புகாரில் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மற்ற பெண்களில் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார்.
மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். அவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது தந்தை இந்தக் கூற்றை மறுத்து விசாரணையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "நாங்கள் பயந்து ஓட மாட்டோம். நாங்கள் இங்கேயே இருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'இத்தகைய கொடூரமான செயலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்' எப்படி விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பட மூலாதாரம், HD Deve Gowda's X account
பா.ஜ.க மீது எழும் கேள்வி
'நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த வேட்பாளரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அறிந்தே' பா.ஜ.க கூட்டணி ஏன் பிரஜ்வல் ரேவண்ணாவை தேர்தலில் நிறுத்தியது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதியை கேள்வி கேட்டு ஒரு கர்நாடக மாநில அமைச்சர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு பா.ஜ.க தலைவர் ஒருவர் இந்த வீடியோக்கள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைமையிடம் தெரிவித்ததாக 'தி இந்து' நாளிதழின் செய்தியைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
பா.ஜ.க-வின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்.டி.டி.வி செய்தி சேனலிடம், "ஒரு கட்சியாக எங்களுக்கும் இந்த வீடியோக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விசாரணையைப் பற்றி எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை," என்று கூறினார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளது. ஹெச்.டி.ரேவண்ணாவின் சகோதரரும், முன்னாள் கர்னாடக முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி, திங்கள்கிழமை, பிரஜ்வல் ரேவண்ணாவையும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணாவையும் 'சமூகத்திற்கு அவமானம்' என்று கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “[எங்கள்] குடும்பத்தைக் குறை கூறாதீர்கள். எச்.டி. ரேவண்ணாவும் அவரது குடும்பத்தினரும் தனியாக உள்ளனர். அவரது செயல்களை நான் கண்காணிப்பதில்லை," என்றார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இருவர் மீதும் கட்சித் தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர் தேவே கெளட தெரிவித்தார்.
இது தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இது பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க-வை சேர்த்தோ தனித்தனியாகவோ குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பாதிக்கலாம். இது 'வெட்கக்கேடான விஷயம்' என்று பா.ஜ.க தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால், தற்போதைய நிலவரத்தப் பார்த்தால், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இந்தப் புயலில் இருந்து வெளியேறும் என்று தெரிகிறது.
இருப்பினும், அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, அடுத்த கட்டமாக கர்நாடகாவில் மீதமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை எவ்வாறு நடத்துகிறது என்பதைப் பொறுத்தே இந்தச் சம்பவம் ஏற்படுத்தும் என்பதைக் கூறமுடியும்.

பட மூலாதாரம், ANI
கட்சியின் எதிர்காலம் என்னவாகும்?
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் இருந்து இந்த வீடியோக்களின்மீது தடை ஆணை பெற்றார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் பா.ஜ.க தலைவர் தேவராஜ் கவுடா, டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜேந்திராவுக்கு கடிதம் எழுதி, பிரஜ்வல் ரேவண்ணா அல்லது அவரது குடும்பத்தினர் யாரையும் கூட்டணியில் இருந்து வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கோரியிருந்தார்.
ஆனால், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டவுடன், யாரை வேட்பாளராக நிறுத்துவது, எனும் முடிவை கூட்டணிக் கட்சிக்கே விட்டுவிட வேண்டும் என பா.ஜ.க தலைமை முடிவு செய்திருந்தது.
ஆனால், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கொள்கை மற்றும் ஆளுமைப் பேராசிரியர் நாராயணா பிபிசி ஹிந்தியிடம், "இந்தச் சம்பவம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில், ஓட்டுப்பதிவு நடந்த போது, ஹசன் நகரில் மட்டுமே, வீடியோ அடங்கிய பென்-டிரைவ்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால் கர்நாடகாவில் முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மீதமுள்ள 14 இடங்களில் பெண்களின் வாக்குகளை ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்தால், அது பாஜகவுக்கு தார்மீக சவால் அளிக்கும்,"
என்றார்.
அரசியல் விமர்சகர் உமாபதி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் ஹெச்.டி.தேவே கெளட உயிருடன் இருக்கும் வரை, தனது கட்சியை உடைய விடமாட்டார், என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












