ராஜஸ்தான்: மசூதிக்குள் புகுந்து மௌலவியை கொன்றது யார்? 3 நாளாகியும் பிடிபடாததால் மக்கள் கோபம்

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBC
- எழுதியவர், மோஹர் சிங் மீனா
- பதவி, பிபிசி இந்திக்காக
ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ராம்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் ஒரு மௌலானா தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் பற்றிய எந்தத் தடயத்தையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த விவகாரத்தில் விரைவில் கைது நடக்கும் என போலீசார் கூறினாலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்துள்ளது.
அஜ்மீரில் உள்ள ராம்கஞ்ச் காவல் நிலையத்தின் படிக்கட்டுகளில் ஒரு முதியவரும் சில குழந்தைகளும் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
குர்தா- பைஜாமா அணிந்த இவர்கள் அனைவரின் முகத்திலும் துக்கம் தெரிகிறது.
மௌலானா மாஹிர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்த முதியவரும், குழந்தைகளும் வாக்குமூலம் பதிவு செய்ய வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தில் வசிப்பவர்கள்.
மசூதியில் கொல்லப்பட்ட மௌலானா

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBC
ராம்கஞ்ச் காவல் நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கஞ்சன் நகரில் முகமதி மசூதி உள்ளது. மசூதிக்கு முன்னால் வெற்று நிலம் உள்ளது. மசூதிக்கு உள்ளே சில போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் அமர்ந்துள்ளனர்.
சுமார் நானூறு கெஜ நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள மசூதி வளாகத்திற்குள் நுழைந்தவுடனே வலது புறத்தில் ஒரு மசூதி தெரிகிறது. அதற்கு நேர் எதிரே ஓர் அறை உள்ளது. இந்த அறை போலீஸால் பூட்டப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை. ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் இதே அறையில் மௌலானா முகமது மாஹிர் தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினர் மௌலானாவின் உடலை உத்தரபிரதேசத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏப்ரல் 28 அன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
மௌலானா கொலைக்குப் பிறகு அஜ்மீர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி முஸ்லிம் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் ஏப்ரல் 28ஆம் தேதி காலை இறந்த மௌலானாவின் சித்தப்பாவும், மௌலானாவின் மாணவர்களும் ராம்கஞ்ச் காவல் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்யச்சென்றனர்.
"27 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் முகமது மாஹிர் மௌல்வி கொல்லப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத மூவர் வந்து அவரை தடிகளால் அடித்துக் கொன்றனர் என்று தெரிய வந்தது,” என்று இதுகுறித்து ராம்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.
இறந்த மௌலானாவின் சித்தப்பா உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். அவருடைய வயது 50. அஜ்மீர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் வந்துள்ளார்.
“குற்றவாளிகளை பிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீசார் உறுதியளித்தனர், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை," என்றார் அவர்.
”கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,” என்று முகமதி மசூதிக்கு அருகில் வசிப்பவரும், மௌலானாவுடன் பழகியவருமான ஷோயிப் கூறினார்.
காவல்துறையின் தேடல் தொடர்கிறது

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBC
மௌலானா முகமது மாஹிர் கொலை செய்யப்பட்ட மூன்றாவது நாளான ஏப்ரல் 29ஆம் தேதி வரையிலும் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
"எப்எஸ்எல் குழு மற்றும் மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன," என்று ராம்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் கூறினார்.
"காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மூவரும் கைது செய்யப்பட்டவுடன் கொலைக்கான காரணம் மற்றும் பிற நபர்களின் தொடர்பு குறித்து தகவல் கிடைக்கும்."
"சிசிடிவி கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."
இந்த படுகொலையில் வகுப்புவாதம் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளதா? இந்தக் கேள்விக்கு பதில் அளித்த காவல் நிலையப் பொறுப்பாளர், "வகுப்புவாத சம்பவங்கள் தொடர்பான எந்த விஷயமும் வெளிச்சத்துக்கு வரவில்லை. அதுபோன்ற உண்மைகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை,"என்று கூறினார்.
மசூதியை கவனித்து வரும் ஆசிப் கான், "போலீசார் விரைவில் கைது செய்யாவிட்டால், சமுக மக்களின் கருத்துகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்போம். போராட்டம் நடத்துவோம். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு குழந்தைகள் மௌலானா வீட்டில் தங்கியிருந்தனர். இப்போது யாருமே மசூதியில் வசிக்கவில்லை, மக்கள் தொழுகை நடத்த மட்டுமே வருகிறார்கள்,”என்று குறிப்பிட்டார்.
நேரில் கண்ட சாட்சி என்ன சொன்னார்?

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBC
மௌலானா முகமது மாஹிரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 6 மைனர் குழந்தைகளும் மசூதி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வசித்து வந்தனர்.
சம்பவத்தின் போது கூட மௌலானா மாஹிரும், எல்லா குழந்தைகளும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
ராம்கஞ்ச் காவல் நிலையத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பிறகு, சாஜித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "நான் இரண்டு ஆண்டுகளாக மசூதியில் படித்து வருகிறேன், இது எனது மூன்றாவது ஆண்டு," என்று கூறினார்.
"உணவு சாப்பிட்டுவிட்டு நாங்கள் அனைவரும் மௌலானா சாஹேப்புடன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று சிலர் வந்து அவரை கம்புகளால் தாக்கினார்கள். சத்தம் கேட்டு நாங்கள் அனைவரும் எழுந்தோம்." என்று சாஜித் தெரிவித்தார்.
சம்பவத்தை நினைவு கூர்ந்த சாஜித், "மூன்று பேர் இருந்தனர். மூவரும் கருப்பு உடை அணிந்து முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் கையுறை அணிந்திருந்தனர். கைகளில் கம்புகள் வைத்திருந்தனர்." என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடந்ததை விவரித்த அவர், "எங்களை மிரட்டி அறைக்கு வெளியே துரத்திவிட்டார்கள். மூன்று பேரில் ஒருவர் எங்களுடன் நின்றுகொண்டிருந்தார். சத்தம் போட்டால் உங்களையும் கொன்றுவிடுவோம் என்று அந்த நபர் மிரட்டினார்.”
"அவர்களில் ஒருவர் கேலரிக்குள் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அனைவரும் பின்பக்க சுவரைத் தாண்டி குதித்து ஓடிவிட்டனர். என்னைவிட வயதில் மூத்த இரண்டு குழந்தைகள் மௌலானா சாஹேப்பை பார்த்துக்கொண்டனர். சிறிய குழந்தைகளான நாங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைக்கச் சென்றோம்."
"இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் மௌலானா சாஹேப்பின் உடலைக் கொண்டு சென்றனர்" என்று கூறினார்.
மொளலானாவின் நட்பான நடத்தை

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBC
மசூதிக்கு அருகில் வசிக்கும் ஒரு நபர் மௌலானா முகமது மாஹிரின் படத்தைக் காட்டுகிறார். இந்த படத்தில், மௌலானா வெள்ளை குர்தா பைஜாமா, கழுத்தில் மலர் மாலை, முகத்தில் பெரிய தாடியுடன் சாந்தமாக தோற்றமளிக்கிறார்.
"எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. மௌலானா எங்களிடம் எந்தவிதமான அச்சுறுத்தல் அல்லது பிரச்னையைப் பற்றி கூறியதில்லை. எங்கள் கிராமம் கங்கைக் கரையில் அமைந்துள்ளது. மக்கள் எண்ணிக்கை குறைவு. எங்களுடையது மிகவும் மகிழ்ச்சியான கிராமம்," என்று இறந்த மௌலானா மாஹிரின் சித்தப்பா அக்ரம், ஈரமான கண்களுடன் கம்மிய குரலில் தெரிவித்தார்.
"மௌலானா சாஹேப் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவருடனும் நன்றாக நட்புடன் பழகுவார்,"என்று ஷோயிப் குறிப்பிட்டார்.
"இப்போது வரை இருந்த மூன்று மௌலானாக்களில் மௌலானா மாஹிர் சிறந்தவராக இருந்தார். அவர் அனைவருடனும் நன்றாக கலந்து பழகினார். அனைவரையும் நேர்மையான பாதையில் செல்ல அறிவுறுத்தினார்," என்று முகமதி மசூதியை பராமரிக்கும் ஆசிப் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.
மௌலானா மாஹிர் யார்?

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBC
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஹாபாத் தாலுகாவில் உள்ள ராய்பூர் கிராமத்தில் வசிப்பவர் மௌலானா முகமது மாஹிர்.
ஈகைத் திருநாளன்று தனது கிராமத்திற்குச் சென்றிருந்த மௌலானா மாஹிர் எட்டு நாட்களுக்கு முன்புதான் அஜ்மீர் திரும்பினார்.
பல ஆண்டுகளுக்கு முன் தனது மாணவப் பருவத்தில் அஜ்மீரின் இந்த மசூதியில் மாணவராக அவர் ஆன்மீக கல்வி கற்றார். பின்னர் அவர் உத்தரபிரதேசம் திரும்பினார். சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் அஜ்மீருக்கு மீண்டும் வந்தார்.
"பல ஆண்டுகளுக்கு முன்பு மௌலானா சாஹேப் மதரஸாவில் ஒரு மாணவராக இருந்தார், அப்போதிலிருந்து அவரை எனக்கு பழக்கம். ஆறு மாதங்களுக்கு முன்பு என் தந்தை ஜாகிர் சாஹேப் இறந்துவிட்டார். அவருக்குப் பிறகு முகமது மாஹிர் மௌலானாவாகி நன்றாக நிர்வகித்து வந்தார்." என்று ஷோயிப் குறிப்பிட்டார்.
"முகமது மௌலானாவுக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர். மூத்த சகோதரிக்கு திருமணமாகிவிட்டது," என்று மௌலானா மாஹிரின் சித்தப்பா கூறுகிறார்.
"மௌலானா சாஹேப் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் பற்றிய பேச்சுகள் நடந்து கொண்டிருந்தன. அவரது தந்தை அஸ்லம் விவசாயம் செய்கிறார். சம்பவம் பற்றிய தகவல் கிடைத்த பிறகு அவர் அதிர்ச்சியடைந்து படுத்த படுக்கையாகிவிட்டார்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"அவருக்கு முன் ஜாகிர் சாஹேப் மௌலானாவாக இருந்தார். அவர் தான் முகமது மாஹிரை இங்கு அழைத்தார். மாஹிர் அவருடைய சீடர்," என்று ஆசிஃப் கான் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு ஆன்மீக கல்வி கொடுத்தார்

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBC
"மௌலானா சாஹிப் எங்களுக்கு குர்ஆன் ஷரீப் கற்றுக் கொடுத்தார். இதே மதரஸாவில் இருந்த முந்தைய மெளலானாதான் இவருக்கு கற்றுக் கொடுத்தார்," என்று மசூதியில் உள்ள அறையில் மௌலானாவுடன் வசித்த குழந்தைகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
"மௌலானா மாஹிர் குழந்தைகளுக்கு இஸ்லாம் பற்றிய கல்வியைக் கொடுப்பார். குழந்தைகள் காலை ஐந்து மணிக்கு எழுந்து தொழுகை நடத்துவார்கள். காலை உணவுக்குப் பிறகு ஏழு முதல் பதினொன்று வரை படிப்பார்கள். பிறகு இரண்டு மணிநேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் படிப்பார்கள். வியாழக்கிழமை அவர்களுக்கு விடுமுறை," என்று ஆசிப் கான் கூறுகிறார்.
"மௌலானா மக்களுக்கு இஸ்லாம் பற்றிய தகவல்களை அளித்து, அவர்களை உன்னத பாதையில் செல்ல ஊக்கம் அளித்தார்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மௌலானா மாஹிர் எப்போதாவது அச்சுறுத்தல், பிரச்னை அல்லது தகராறு பற்றி குறிப்பிட்டுள்ளாரா? என்று கேட்டதற்கு அவருடன் வசிக்கும் குழந்தைகளும் சித்தப்பாவும், இல்லை என்று பதில் அளித்தனர்.
ஆனால், ஒருமுறை மௌலானா சாஹிப் என்னிடம், ’ஆசிப் பாய், சிலர் என்னைத் துன்புறுத்துகிறார்கள். நீங்கள் சொன்னால் நான் சென்றுவிடுகிறேன். நான் மக்களுக்கு மதத்தைப் பற்றிக் கற்பிப்பதால், உள்ளூர் மக்கள் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள்’ என்று என்னிடம் சொன்னார்,” என்று ஆசிப் கான் குறிப்பிட்டார்.
மசூதி நிலம் தொடர்பான சர்ச்சை

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBC
சரஸ் மில்க் பிளாண்ட் அருகே கஞ்சன் நகரில் சுமார் நானூறு கெஜத்தில் கட்டப்பட்ட மசூதியின் சுவருக்குப் பின்னால் உள்ள காலி மனை மற்றும் காலனி ஆகியவை தௌராய் கிராம பஞ்சாயத்தின் கீழ் வருகிறது.
"மசூதி கட்டப்பட்ட நிலம் ஒரு பாபாவுக்கு சொந்தமானது. அவர் இறந்த பிறகு ஆசிஃப் பாய் அதை கவனித்துக் கொள்கிறார்," என்று ஷோயிப் விளக்குகிறார்.
மசூதியின் இந்த நிலத்தை சிலர் விற்க முயற்சிப்பதாக பலமுறை பேச்சு எழுந்தது.
"இங்கே பாபா முகமது உசேன் இருந்தார். இந்த நிலம் அவர் பெயரில் உள்ளது. இங்கு மசூதியில் கமிட்டி எதுவும் இல்லை. நான் மசூதியை கவனித்துக்கொள்கிறேன்," என்கிறார் மசூதியை கவனித்து வரும் ஆசிஃப் கான்.
30 வயதான மௌலானா முகமது மாஹிர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே சில போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ராம்கஞ்ச் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், மூன்று நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் மக்கள் மத்தியில் கோபம் நிலவுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








