கொல்கத்தா: பெண் அணிந்திருந்த மூக்குத்தியின் திருகு அவரது நுரையீரலுக்குள் சென்றது எப்படி?

நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இரண்டு மாதங்களுக்கு முன்பு வர்ஷா சாஹு மூச்சை இழுக்கும்போது தற்செயலாக அவரது மூக்குத்தி திருகு மூக்கு வழியாக உடலுக்குள் சென்றுவிட்டது. அப்போது அவர் அதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லை. காரணம் திருகு வயிற்றுக்குள் சென்றுவிட்டது, எனவே தன் செரிமான அமைப்பு வழியாக அது வெளியே சென்றுவிடும் என்றும் அவர் நினைத்தார்.

ஆனால் அந்த உலோகப் பொருள் அவரது நுரையீரலுக்குள் சென்றுவிட்டது. சில வாரங்களுக்கு அசௌகரியத்தையும் மூச்சுத் திணறலையும் அது ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன நடந்தது?

இந்தியாவில் உள்ள பெரும்பாலான திருமணமான இந்து பெண்களைப் போலவே, 35 வயதான வர்ஷாவும் ‘16-17 ஆண்டுகளுக்கு முன்பு’, அதாவது திருமணமானதிலிருந்து மூக்குத்தி அணிந்திருந்தார். திருமணத்தின் அடையாளமாக மூக்குத்தி கருதப்படுகிறது.

"அப்போது திருகு அவிழ்ந்திருந்தது எனக்குத் தெரியவில்லை" என்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசியில் அவர் பிபிசியிடம் கூறினார்.

"நான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். ஆழமாக மூச்சை உள்ளிழுத்தபோது திருகு உள்ளே சென்றுவிட்டது. அது என் மூச்சுக் காற்றுப்பாதைக்குள் சென்றது எனக்குத் தெரியாது. அது என் வயிற்றுக்குள் சென்றுவிட்டது என்று நான் நினைத்தேன்" என்று இரண்டு டீனேஜ் பையன்களின் தாயான வர்ஷா கூறினார்.

கடந்த மாதம் வர்ஷாவின் நுரையீரலில் இருந்து இந்த திருகை அகற்றிய, மெடிகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் தேப்ராஜ் ஜஷ், இந்த சம்பவத்தை "மிகவும் அரிதானது" என்று விவரித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் இது போன்ற இரண்டு சம்பவங்கள் மட்டுமே இந்திய ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"சில நேரங்களில் உலர் பழங்கள் அல்லது வெற்றிலை, நுரையீரலுக்குள் சிக்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் சிறு குழந்தைகள் அல்லது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கே நடக்கும். முப்பதுகளில் இருக்கும் பெண் நோயாளி ஒரு விதிவிலக்கு," என்று அவர் தெரிவித்தார்.

நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு
படக்குறிப்பு, திருமணமானதில் இருந்து 16-17 ஆண்டுகளாக மூக்குத்தியை அணிந்திருந்தார் வர்ஷா.

‘தொடர் இருமல், மூச்சுத் திணறல், நிமோனியா’

திருகு உள்ளே இழுத்து, ஒரு மாதத்திற்குப் பிறகுதான வர்ஷாவின் உண்மையான பிரச்னை தெரிய வந்தது. தொடர் இருமல், மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியா அறிகுறிகளுடன் அவர் மருத்துவரிடம் சென்றார். மூக்கில் முன்பு ஏற்பட்ட காயம் காரணமாகவே மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அவர் நினைத்தார்.

மருந்துகள் பலனளிக்காததால் நுரையீரல் நிபுணரை அவர் அணுகினார். அவரது நுரையீரலில் ஒரு பொருள் இருப்பதை சிடி ஸ்கேன் சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட மார்பு எக்ஸ்ரே அது என்ன என்பதைக் காட்டியது.

நுரையீரல் நிபுணர் ஃபோர்செப்ஸ் மற்றும் ஒரு சிறிய கேமரா கொண்ட ஃபைபர் ஆப்டிக் ப்ரோன்கோஸ்கோப்பை அவரது காற்றுப்பாதைக்குள் அனுப்பினார். ஆனால் ‘கூர்மையான பளபளக்கும் பொருளை’ அந்த கருவியால் பிடிக்கமுடியாதால் அதனால் திருகை வெளியே இழுக்க முடியவில்லை. பின்னர் அந்த மருத்துவர் வர்ஷாவை டாக்டர் ஜஷ் இடம் பரிந்துரைத்தார்.

"நாங்கள் முதலில் நோயாளிக்கு கவுன்சலிங் செய்ய வேண்டியிருந்தது. முதல் செயல்முறைக்கு பிறகு உடனே இரண்டாவது செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதைப் பற்றி அவர் கவலைப்பட்டார். ஆனால் ஒரு வெளிப்பொருளை ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலேயே மனித உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அவருக்கு விளக்கினோம்.”

அவருடைய உடல் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவரது நிமோனியா மோசமாகிவிடும் என்றும் நாங்கள் அவரிடம் சொன்னோம்," என்று டாக்டர் ஜஷ் கூறினார்.

நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு
படக்குறிப்பு, வர்ஷாவின் நுரையீரலில் உலோகப் பொருள் இருப்பதை எக்ஸ்ரே காட்டியது.

அவரது நுரையீரலின் ஒரு பகுதியைத் துண்டிக்கும் அறுவை சிகிச்சையைக் கூட தாங்கள் செய்ய வேண்டி வரலாம் என்று வர்ஷாவிடம் கூறியதாக மருத்துவர் ஜஷ் தெரிவித்தார். ஆனால் இது நீண்டகால சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஃபைப்ரோப்டிக் ப்ரான்கோஸ்கோப் முறையை மீண்டும் முயற்சிக்க அவர் முடிவு செய்தார்.

"வழக்கமான ப்ரான்கோஸ்கோப் கொண்டு ஒரு கூர்மையான பொருளை வெளியே எடுப்பது மிகவும் கடினம். அந்தப் பொருள் அவரது நுரையீரலில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருந்தது, அதைச்சுற்றி திசுக்கள் ஏற்கனவே வளர்ந்திருந்தன.”

"நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டி இருந்தது. ஏனெனில் வெளியே இழுக்கும்போது திருகு, மிகவும் குறுகலாக இருக்கும் மூச்சுக் காற்றுப்பாதையுடன் தொடர்பு கொண்டால், அது காயத்தை ஏற்படுத்தலாம். அப்படி நடந்தால் ரத்தபோக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலைமை உருவாகலாம்” என்கிறார் மருத்துவர் ஜஷ்.

ஆனால் 30 நிமிடங்கள் நீடித்த இந்த செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு வர்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

“அவர் சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளுக்காக வந்திருந்தார். அவர் இப்போது நலமாக இருக்கிறார்" என்று மருத்துவர் ஜஷ் கூறினார்.

மீண்டும் மூக்குத்தி அணியத்தொடங்கி விட்டீர்களா என்று நான் வர்ஷாவிடம் கேட்டபோது அவர் சிரித்தார்.

"மாட்டவே மாட்டேன். இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தில்லை. ஆனால் அது நடந்துவிட்டது. அது மீண்டும் நிகழ்வதை நான் விரும்பவில்லை," என்றார் அவர்.

நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு
படக்குறிப்பு, நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)