இஸ்ரேலுக்கு வேலைக்கு சென்ற இந்தியர்களின் நிலை என்ன? குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

- எழுதியவர், சையது மோசெஜ் இமாம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் நடைபெறும் மோதல்கள் இந்தியர்களையும் பாதித்துள்ளது. இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய போது, அங்குள்ள இந்தியர்களுக்கு என்னவாகுமோ என்ற அச்சம் அவர்களின் குடும்பத்தினரிடம் நிலவியது.
இஸ்ரேலில் இருக்கும் தங்கள் உறவினர்களை வீடியோ கால் மூலம் அழைத்து நலம் விசாரித்து வருகின்றனர் இந்தியர்கள்.
இஸ்ரேலில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் நிறைய பேர் கடந்த ஓராண்டில் தொழிலாளர்களாக சென்றவர்கள்.
இவர்களில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த குடும்பங்களிடம் பிபிசி பேசியது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக அங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்த ஆள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இஸ்ரேல் அரசு இந்தியர்களை வேலைக்கு எடுக்க தொடங்கியது.

அச்சத்தில் இருக்கும் குடும்பங்கள்
உத்திர பிரதேச மாநிலம் , ஃபதேபுர் சலேநகர் என்ற இடத்தில், இஸ்ரேலுக்கு சென்றுள்ள நபர்களின் குடும்பங்களை சந்தித்தது பிபிசி.
நவராத்திரி பண்டிகை காலம் என்பதால் அங்குள்ள கோயிலில் பூசு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கோயிலிலிருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும் தினேஷ் சிங் வீட்டின் முன்பு மக்கள் கூடினர். தினேஷ் தற்போது இஸ்ரேலில் இருக்கிறார். இரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து அங்கிருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
“நாங்கள் வீடியோ காலில் அவரிடம் பேசினோம். அக்டோபர் 1 அன்று நடந்த தாக்குதலுக்கு பிறகும் கூட தினேஷ் எங்களை அழைத்துப் பேசினார். நாங்கள் மீண்டும் அவரை தொடர்புக் கொள்ள முயன்ற போது, நெட்வர்க் கோளாறுகள் காரணமாக பேசமுடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடம் பேச முடிந்தது. எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது என அவரிடம் தெரிவித்தோம்” என்கிறார் தினேஷின் மனைவி அனிதா.
“அங்கு தாக்குதல் அதிகமானால் வீடு திரும்பும் படி அவரிடம் கூறினோம். ஆனால் அது குறித்து அவர் முடிவெடுக்கவில்லை” என்கிறார்.
“போர் நடைபெறக் கூடாது, போர் யாருக்கும் நன்மை தராது. இங்கு வேலை கிடைக்கவில்லை என்பது உண்மை. எனினும், நிலைமை மோசமடைந்தால், அங்கிருப்பவர்களை அரசு மீட்டுக் கொண்டு வர வேண்டும்” என்கிறார் தினேஷின் சகோதரர் கேசர் சிங்.

இஸ்ரேலில் வேலைக்கு செல்லும் இந்தியர்கள்
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பலர் இஸ்ரேல் செல்வதற்காக லக்னோவில் பதிவு செய்தனர். தற்போது இஸ்ரேலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உள்ளனர்.
அரசு தரவுகளின் படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4800 பேர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் 1500 பேர் சென்றுள்ளனர்.
பம்வர் சிங்-ன் சகோதரர் ராகேஷ் சிங் இஸ்ரேலில் டெல் அவிவ் நகரத்துக்கு அருகில் வசிக்கிறார். பம்வர் சிங் தனது சகோதரருக்கு அவ்வபோது வீடியோ கால் செய்து நலம் விசாரித்துக் கொள்கிறார்.
“நிறைய குண்டுகள் வீசப்படுவதாக ராகேஷ் கூறுகிறார். சைரன் சத்தம் கேட்ட போது, அவர் நிலத்துக்கு அடியில் இருக்கும் மறைவிடத்துக்கு ஓடிச் சென்றதாக கூறினார்” என்று மிகுந்த கவலையுடன் கூறுகிறார் பம்வர் சிங்.

ஃபதேபுர் சலேநகர் கிராமம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் சென்றுள்ளனர். மேலும் பலர் அங்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர்.
அந்த கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜூ சிங், “இரண்டு பேர் சொந்த காரணங்களுக்காக திரும்பி வந்துவிட்டனர். மற்றவர்கள் இஸ்ரேல் செல்ல தயாராகி வருகின்றனர். அங்கு வேலை கிடைத்தால் நல்ல பணம் கிடைக்கும், அதனால்தான் அங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். இப்போது போர் நடைபெறுவதால் சிலர் இப்போது செல்ல முடியாமல் இருக்கலாம்” என்று பிபிசியிடம் கூறினார்.
“குண்டு வெடிப்பதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன் சைரன் சத்தம் கேட்கும் என்றும், அவரும் அவரது நண்பர்களும் உடனே நிலத்துக்கு அடியில் இருக்கும் மறைவிடத்துக்கு சென்று விடுவதாகவும் எனது சகோதரர் கூறினார். அவர் தற்போது ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்” என்று மகேந்திர சிங் கூறுகிறார்.

இஸ்ரேல் பணிக்கு பயிற்சி பெறும் இந்தியர்கள்
இஸ்ரேலுக்கு தற்போது 10 ஆயிரம் பணியாளர்கள் தேவை என்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. இஸ்ரேலில் வேலை செய்ய, இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் அதிகாரிகள் குழுவினர் பயிற்சி அளிப்பதற்காக இந்தியா வந்திருந்தனர். லக்னோவில் உள்ள அவுந்த் ஐடிஐ இஸ்ரேலுக்கு செல்ல விரும்பும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
அங்கு பயிற்சி பெறுபவர்களில் ஒருவரான சந்திரசேகர் சிங், இங்கு தனக்கு வேலை கிடைக்காததால் இஸ்ரேல் செல்ல வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.
“வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. மக்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. நாங்கள் தொடர்ந்து பயிற்சிப் பெற்று வருகிறோம். ஆனால் எப்போது இஸ்ரேல் செல்ல வேண்டும் என்பது குறித்து அரசு எதுவும் இன்னும் தெரிவிக்கவில்லை” என்றார்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) கூறும் தரவுகள் படி, இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் வேலையின்மை 9.2% ஆக இருந்தது. கிராமப்புறங்களில் 9.3% ஆகவும், நகர்ப்புறங்களில் 8.9% ஆகவும் வேலையின்மை உள்ளது.
பிபிசி தொடர்பு கொண்டு பேசிய குடும்பங்கள், இஸ்ரேலுக்கு செல்வதால் தங்களின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாக தெரிவித்தனர். மாதம் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளம் கிடைப்பதாக கூறுகின்றனர்.
இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் தங்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அவர்கள் வசிக்கும் பகுதியில் கிட்டதட்ட தினமும் சைரன் சத்தம் கேட்கிறது என்றும் செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தவுடன் மறைவிடத்துக்கு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












