போலி நீதிமன்றம், போலி சிபிஐ: பிரபல தொழிலதிபரிடம் ரூ.7 கோடி மோசடி - நடந்தது எப்படி?

`தானா சேர்ந்தக் கூட்டம்’ பட பாணியில் ஏமாற்றப்பட்ட வர்தமான் குழுமத் தலைவர் எஸ்.பி.ஓஸ்வால்; நூதன மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Vardhman Official Website

படக்குறிப்பு, எஸ்.பி.ஓஸ்வால்
    • எழுதியவர், ஹர்மன்தீப் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 82 வயதான பத்மபூஷன் விருது பெற்ற ஜவுளி தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வால் மிகப்பெரிய இணைய மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஓஸ்வாலிடம் திரைப்பட பாணியில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

போலியான இணையவழி உச்ச நீதிமன்ற விசாரணைகள், போலி கைது வாரண்டுகள், போலி சிபிஐ அதிகாரிகள் என மிகப்பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி ஓஸ்வாலை ஏமாற்றியிருக்கிறது ஒரு கும்பல்.

கிட்டத்தட்ட சூர்யா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படமான 'தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில், சிபிஐ அதிகாரிகள் போன்று வேடமிட்டு குற்றச்செயலை அரங்கேற்றியுள்ளனர்.

எஸ்.பி.ஓஸ்வால், இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளரான வர்தமான் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.

காவல்துறை கூற்றுபடி, குற்றம் சாட்டப்பட்டுள்ள கும்பல், போலி சிபிஐ அதிகாரிகள் என கூறி அவரை அணுகியுள்ளனர். மும்பையின் அமலாக்கத்துறை இயக்குநரகம் பிறப்பித்ததாகக் கூறி, ஒரு போலி கைது வாரண்டைக் காட்டி ஓஸ்வாலை மிரட்டியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்று கூறி ஒரு போலி ஆவணத்தையும் அந்த கும்பல் ஓஸ்வாலிடம் காட்டியதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த உத்தரவில் ஓஸ்வால் ஏழு கோடியை ரகசிய கண்காணிப்புக் கணக்கில் (Secret Supervision Account) டெபாசிட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்ட அந்த கும்பல் ஓஸ்வாலை 'ஸ்கைப்' செயலி மூலம் இரண்டு நாட்கள் டிஜிட்டல் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்த வீடியோ கால் மூலம் போலி நீதிமன்ற விசாரணைக்கும் ஏற்பாடு செய்தனர்.

இந்த வழக்கில் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களை கொண்ட கும்பலை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இது தொடர்பாக குவாஹாட்டியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

இந்த கும்பல் அசாம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் பண மோசடி


`தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் ஏமாற்றப்பட்ட வர்தமான் குழுமத் தலைவர் எஸ்.பி.ஓஸ்வால்; நூதன மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பையில் ஓஸ்வாலின் பெயரில் ஒரு வங்கி கணக்கு இருப்பதாகவும், அதில் முறைகேடுகள் நடந்ததாகவும் அந்த கும்பல் ஏமாற்றியது

முதல் தகவல் அறிக்கையின்படி ( எப்ஐஆர் ), கடந்த ஆண்டு செப்டம்பரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஒரு தொழிலதிபர் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில், ஓஸ்வால் ஈடுபட்டதாக அந்த கும்பல் அவரை குற்றம்சாட்டியுள்ளது.

மும்பையில் ஓஸ்வால் பெயரில் முறைகேடாக வங்கி கணக்கு இருப்பதாக குற்றம்சாட்டி அவரை மிரட்டியுள்ளனர். இது தவிர, ஓஸ்வால் சட்டவிரோதமாக பார்சல் அனுப்பியதாகவும் அவரிடம் அந்த கும்பல் கூறியுள்ளது.

இந்த சம்பவத்தை வேறு யாரிடமாவது கூறினால் அது சட்டத்திற்கு எதிரானது என அந்த கும்பல் ஓஸ்வாலிடம் கூறியதால், இதை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலுக்கு ஓஸ்வால் தள்ளப்பட்டார்.

போலி நீதிமன்றம் மற்றும் ஆன்லைன் காவல்

`தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் ஏமாற்றப்பட்ட வர்தமான் குழுமத் தலைவர் எஸ்.பி.ஓஸ்வால்; நூதன மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த வழக்கில் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களை கொண்ட கும்பலை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்

முதல் தகவல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள், ஓஸ்வாலை இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியான ஆன்லைன் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

கேமராவை விட்டு விலகி செல்ல கூடாது, குறுஞ்செய்திகள் மற்றும் அனுமதியின்றி அழைப்புகளை ஏற்கக் கூடாது என்றும் ஓஸ்வாலிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவில் தூங்கும் போதும், ஆன்லைனில் ஓஸ்வாலை கண்காணித்தனர். ஸ்கைப் செயலி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. தூங்கும் போதும், மறுபுறத்தில் இருந்து ஒருவர் தொடர்ந்து அவரை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒஸ்வாலுக்கு "24×7 கண்காணிப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்" என்ற தலைப்பில் 70 விதிமுறைகளை கொண்ட ஆவணமும் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓஸ்வால் ஆன்லைன் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட கும்பல் போலி நீதிமன்ற விசாரணையையும் ஏற்பாடு செய்திருக்கிறது, அதில் ஒருவர் தன்னை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். ஆனால், ஓஸ்வால் போலி நீதிபதியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பிறகு ஓஸ்வாலுக்கு நீதிமன்ற உத்தரவு ஆவணம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அது அசல் ஆவணம் போலவே இருந்ததால், ஓஸ்வால் அந்த உத்தரவில் இருந்தபடி ரூ. 7 கோடியை அனுப்பினார்.

பணத்தை மீட்ட காவல்துறை

காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல்

பட மூலாதாரம், Kuldeep Chahal/FB

படக்குறிப்பு, காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல்

லூதியானா காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல், ஓஸ்வாலின் புகாரைப் பெற்ற பிறகு, பணத்தை திரும்பப் பெறுவதற்காக குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளை முடக்கும் பணியை முதலில் தொடங்கினார்.

இதுவரை 5.25 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட தொகை ஓஸ்வாலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை குறிப்பிட்டு பேசிய குல்தீப் சாஹல், ''இந்தியாவில் சைபர் குற்றங்களின் பிரிவில் இதுவரை மீட்கப்பட்டதில் இதுதான் அதிக தொகை'' என்று கூறினார்.

லூதியானா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் பொறுப்பாளரான காவல் ஆய்வாளர் ஜத்திந்தர் சிங் கூறுகையில், "ஆகஸ்ட் 28 மற்றும் 29 -ஆம் தேதிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் போலி சிபிஐ அதிகாரி போல் தன்னை காட்டி கொண்டு ஓஸ்வாலின் தனிப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டார்.

மும்பையின் சில அதிகாரிகளால் ஒரு பார்சல் கைப்பற்றப்பட்டதாகவும், அவர் (ஓஸ்வால்) பணமோசடியில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் ஓஸ்வாலிடம் கூறியிருக்கிறார். போலி கைது வாரண்ட் மற்றும் நீதிமன்ற உத்தரவும் ஓஸ்வாலுக்கு அனுப்பப்பட்டது'' என்கிறார்

ஜத்திந்தர் சிங் மேலும் கூறுகையில், ''குற்றம் சாட்டப்பட்ட கும்பலை சேர்ந்த ஒரு நபர், ஓஸ்வாலுக்கு ஸ்கைப்பில் வீடியோ கால் செய்திருக்கிறார். வீடியோ அழைப்பில் போலி சிபிஐ அலுவலகம் காட்டப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் போன்று அடையாள அட்டைகளை அணிந்து கொண்டு சிலர் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் சாதாரண ஆடைகளை அணிந்திருந்தனர். அந்த போலி அலுவலகத்தின் பின்னணியில் சில கொடிகள் இருந்தன. அது ஒரு புலனாய்வு அமைப்பின் உண்மையான அலுவலகம் போல் தோற்றமளித்தது. அதன் பின்னர் ஏமாற்று நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

ஓஸ்வால் மூன்று தவணைகளாக 7 கோடி ரூபாயை குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்'' என்கிறார்.

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அந்த கும்பல் மீண்டும் மீண்டும் வங்கி கணக்கு எண்களை மாற்றி கூறியதால் ஓஸ்வால் தரப்பில் சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஓஸ்வால் காவல்துறையை அணுகினார். போலீசார் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையைத் தொடங்கினர்.

காவல்துறையின் கூற்றுப்படி, எஃப்ஐஆர் பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்தக் கும்பலில் ஒரு தொழிலதிபரும், வங்கியின் முன்னாள் ஊழியரும் அடங்குவர்.

அட்னு சவுத்ரி மற்றும் ஆனந்த் குமார் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆனந்த் சொந்தமாக மருத்து கடை வைத்திருந்தார், மற்றொரு நபர் சிறிய வியாபாரம் செய்து வருகிறார். எனவே கைது செய்யப்பட்ட இருவரும் சிறு வணிகர்கள் என்று காவல்துறை கூறுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள், அதன் பிறகு சுலபமான வழியில் பணம் ஈட்ட நினைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் ரோமி கலிதா என்ற நபர் வங்கியின் முன்னாள் ஊழியர் என்று கூறும் காவல் ஆய்வாளர் ஜத்திந்தர் சிங்,'' இந்த குற்றச் சம்பவத்தில் வங்கி தொடர்பான பரிவர்த்தனை விஷயங்கள் மற்றும் அனைத்து வகையான தொழில்நுட்ப தகவல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது '' என்கிறார்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏழு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வர்தமான் குழுமத் தலைவர் எஸ்.பி.ஓஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

இணைய மோசடிகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இது போன்ற மோசடி சம்பவம் யாருக்காவது நடந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல் தெரிவித்துள்ளார். இது சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்.

இந்த சைபர் ஹெல்ப்லைன் 300க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் தொடர்பில் உள்ளது. இந்த ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்ட பிறகு, சம்பந்தப்பட்ட வங்கியால் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும், இதனால் இந்தக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க முடியாது.

மேலும், இதுபோன்ற அழைப்புகள் வரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

ஒருவர் மீது வழக்கு நிலுவையில் இருந்தால், அது அவருக்கு முன்பே தெரிந்திருக்கும். எனவே, இதுபோன்ற அழைப்புகள் மூலம் வழக்கு பதிவு செய்கிறோம் என்று யாராவது மிரட்டினால், அந்த விவகாரம் சந்தேகத்திற்குரியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)