கைரேகை, கருவிழி ஒரே மாதிரி இருக்குமா? ஆதார் அட்டை கிடைக்காமல் போராடும் இரட்டையர்கள்

கைரேகை, கருவிழி ஒத்துப் போகுமா?
படக்குறிப்பு, மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் நிலேஷ் மற்றும் யோகேஷ்
    • எழுதியவர், சர்ஃபராஸ் சார்ட்டர்
    • பதவி, பிபிசி மராத்தி

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் நிலேஷ் மற்றும் யோகேஷ். இவர்களின் ஆதார் அட்டை புதுப்பிக்கப்படாததால், கல்வி கற்பதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். தற்போது அவர்களுக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக இவர்கள் மட்டுமின்றி இவர்களது பெற்றோரும் ஆதார் அட்டை பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள வால்வா எனும் கிராமத்தில் வசிக்கும் நிலேஷ் மற்றும் யோகேஷ் கல்கே ஆகிய இருவருக்கும் 18 வயதாகிறது. இருவருக்கும் வயது வித்தியாசம் ஐந்து நிமிடம்.

"இரட்டைக் குழந்தைகளாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்," என்று நிலேஷ் விரக்தியுடன் கூறுகிறார். நிலேஷ் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். யோகேஷ் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ (ITI) படித்து வருகிறார்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பிறகு ஒரு இந்திய குடிமகனுக்கு 12 இலக்க ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.

கைரேகை, கருவிழி ஒத்துப் போகுமா?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிலேஷ், யோகேஷ் இருவருக்குமே சிறு வயதில் ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

​​“ஐந்தாம் வகுப்பு படிக்கையில், ​​ஆதாரை புதுப்பித்த (Update) போது சிக்கல் ஏற்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் முடித்து, ஆவணங்களைச் சமர்ப்பித்து, முறையாக விண்ணப்பித்தாலும் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு நூற்றுக்கணக்கான முறை விண்ணப்பித்துள்ளோம்” என்கிறார் நிலேஷ்.

ஆதார் அட்டைக்காக பதிவு செய்யும் போது அல்லது அதை புதுப்பிக்கும் போது, ​​பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி போன்ற மக்கள்தொகைசார் (Demographic) விவரங்கள் மற்றும் மூன்று வகையான பயோமெட்ரிக் தகவல்கள் தேவை.

ஆதார் மையத்தில் முகத்தின் புகைப்படம், கைரேகை, கருவிழி ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன.

தொடரும் ஏமாற்றம்

கைரேகை, கருவிழி ஒத்துப் போகுமா?
படக்குறிப்பு, தந்தை தானாஜி, தாய் சவிதாவுடன் நிலேஷ் மற்றும் யோகேஷ்

யோகேஷ், நிலேஷ் ஆகிய இருவரின் கை ரேகையும், கருவிழியும் ஒரே மாதிரியாக இருந்ததே ஆதாரில் ஏற்பட்ட சிக்கலுக்கு காரணம் என்று சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுதான் காரணமா, அல்லது சரியான பிரச்னை என்ன என்பதை அரசு அலுவலகம் கூறவில்லை என்று இரட்டைச் சகோதரர்களின் தந்தை தானாஜி கல்கே பிபிசியிடம் தெரிவித்தார்.

அரசின் அறிவுறுத்தலின்படி அருகில் உள்ள அரசு மையங்களில் இது குறித்த புகார்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“இவர்கள் இருவரும் பிறந்தபோது, ​​கடவுள் எனக்கு வரமளித்ததைப் போல உணர்ந்தேன். இரண்டு குழந்தைகள் பிறந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இவர்கள் இருவரையும் காவல்துறை பணியில் அமர்த்த வேண்டும் என்பது என் கனவு. ஆனால் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனர்.” என்கிறார் தானாஜி.

தானாஜி மற்றும் அவரது மனைவி சவிதா இருவரும் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் தங்களது ஆதார் அட்டையிலும் ஏற்பட்டுள்ள சிக்கலால், அடிக்கடி ஊதியம் கிடைக்காமல் போகிறது என்கிறார் தானாஜி.

இரட்டைச் சகோதரர்களின் கல்வி மட்டுமின்றி, மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சவிதா தெரிவித்தார்.

“சில நேரங்களில் எங்களால் சாப்பிட கூட முடியவில்லை. பிள்ளைகள் அழும் போதெல்லாம் நாங்களும் அழுதோம். இதனால் அவர்களது பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் பல கஷ்டங்கள். சட்டத்தின் படி எங்கள் பிள்ளைகள் உண்மையில் இருக்கிறார்களா இல்லையா என்று யாரேனும் ஒருவர் ஆச்சரியப்பட தான் செய்கிறார்கள்” என்கிறார் சவிதா.

கைரேகை, கருவிழி ஒத்துப் போகுமா?
படக்குறிப்பு, யோகேஷ், நிலேஷ் ஆகிய இருவரின் கை ரேகையும், கருவிழியும் ஒரே மாதிரியாக இருந்ததே ஆதாரில் ஏற்பட்ட சிக்கலுக்கு காரணம் என்று சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின

‘கிடைத்த வேலையும் பறிபோய்விட்டது’

கல்லூரி சேர்க்கை, கல்வி உதவித்தொகை, இடஒதுக்கீடு, அரசு திட்டங்கள் மற்றும் வேலைகள் கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக யோகேஷ், நிலேஷ் ஆகியோர் சொல்கிறார்கள்.

“ஆதார் அட்டை இல்லாமல் கல்வி உதவித்தொகை மற்றும் அரசின் திட்டங்களைப் பெற முடியாது. இதன் காரணமாக என்னால் உதவித்தொகைக்கான படிவத்தை நிரப்ப முடியவில்லை. ஐடிஐ (ITI) படிப்பிற்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருந்தது.” என்று யோகேஷ் கூறுகிறார்.

பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மொபைல் சிம் கார்டு போன்றவற்றைத் பெறுவதிலும், ஒரு வங்கிக் கணக்கு தொடங்குவதிலும் கூட தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக சகோதரர்கள் கூறுகின்றனர்.

நிலேஷுக்கு 18 வயது பூர்த்தியான பிறகு, 15,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. ஆனால் ஆதார் பிரச்னை காரணமாக அந்த வேலையை இழந்ததாக கூறுகிறார் நிலேஷ்.

“கோலாப்பூரில் (மகாராஷ்டிராவில் உள்ள நகரம்) இருந்து வேலைக்கான அழைப்பு வந்தபோது, ​​அவர்கள் ஆதார் அட்டையைக் கேட்டார்கள். அப்போது சிறுவயதில் எடுத்த ஆதாரைக் கொடுத்தேன். நீங்கள் 12வது தேர்ச்சி பெற்றதாகச் சொல்கிறீர்கள், பிறகு ஏன் சிறு வயதில் எடுத்த ஆதாரை அனுப்பியுள்ளீர்கள்? என்று கேட்டார்கள். இது ஒரு சமீபத்திய உதாரணம். எங்களுக்கு போதிய திறனிருந்தும் இதேபோல பலமுறை நாங்கள் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளோம்.” என்கிறார் நிலேஷ்.

நிலேஷ் மற்றும் யோகேஷ்
படக்குறிப்பு, குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பேசும் போதெல்லாம், ஆதார் பிரச்னையை பற்றி மட்டும் தான் பேசுவோம் என்கிறார் சவிதா

‘காவல்துறையில் சேரும் கனவை கைவிட்டோம்’

‘காவல்துறையில் சேரும் கனவை கைவிட்டோம்’
படக்குறிப்பு, கல்லூரி சேர்க்கை, கல்வி உதவித்தொகை, இடஒதுக்கீடு, அரசு திட்டங்கள் மற்றும் வேலைகள் கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக யோகேஷ், நிலேஷ் ஆகியோர் சொல்கிறார்கள்

நிலேஷ் மற்றும் யோகேஷுக்கு காவல்துறை அல்லது ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவு இருந்தது, அதற்காக அவர்கள் பயிற்சியும் மேற்கொண்டனர். இப்போது விரக்தியால் பயிற்சியை நிறுத்திவிட்டனர்.

“நாங்கள் நால்வரும் ஒன்றாக அமர்ந்து பேசும் போதெல்லாம், இந்த பிரச்னையை பற்றி மட்டும் தான் பேசுவோம். ஆதார் அட்டை எப்போது வரும், எப்போது நல்ல வேலை கிடைக்கும் என கவலையுடன் விவாதிப்போம்.” என்கிறார் சவிதா.

“ஆதார் இல்லாத போது உடற்பயிற்சி செய்து என்ன பலன், காவல்துறை அல்லது ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு படிவத்தை நிரப்ப முடியவில்லை எனும்போது, எங்களை ஏன் பயிற்சி செய்யச் சொல்கிறீர்கள்? என கேட்கிறார்கள். அதனால் உடற்பயிற்சி செய்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள்,'' என சவிதா கண்ணீர் மல்க கூறினார்.

வல்வா கிராம பஞ்சாயத்து ஆதார் மையத்தின் இயக்குநர் பிபிசியிடம் பேசியபோது, “வல்வாவில் உள்ள ஆதார் கேந்திராவில் பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால், மும்பையில் உள்ள பிராந்திய ஆதார் பதிவு அலுவலகத்திற்கு தானாஜியின் குடும்பத்தினர் சென்றனர். அங்கும் தீர்வு கிடைக்காததால், அவர்கள் ஏமாற்றத்துடன் கிராமத்திற்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.” என்று கூறினார்.

வல்வா ஆதார் பதிவு மையத்தின் இயக்குநர் மகாதேவ் தேசாய், ​​“பயோமெட்ரிக் பொருத்தமின்மையால் UIDAI-இன் இலவச எண்ணான 1947இல் புகார் செய்தோம். நானே நிறைய முயற்சிகள் எடுத்தேன். ஆனால் சரியான பிரச்னை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. முன்னதாக நிலேஷின் பயோமெட்ரிக் பதிவுகள் யோகேஷ் பெயரிலும், யோகேஷின் பதிவுகள் நிலேஷின் பெயரிலும் இருந்திருக்க வாய்ப்பும் உள்ளது. எனவே புகார் அளித்துள்ளேன். UIDAI உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை சென்றும் அவர்களின் பிரச்னை தீரவில்லை” என்றார்.

இரட்டையரின் கைரேகை, கருவிழி ஒரே மாதிரி இருக்குமா?

கண் மருத்துவ நிபுணர் டாக்டர். திலீப் பட்வர்தன்
படக்குறிப்பு, சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் டாக்டர். திலீப் பட்வர்தன்

யோகேஷ் மற்றும் நிலேஷ் ஆகியோரின் கருவிழிகள் காரணமாக பயோமெட்ரிக் பதிவில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டதா என தெரிந்துகொள்ள பிபிசி முயற்சி செய்தது.

இரட்டை சகோதரர்கள் இருவரின் கண்களுக்கும் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா என்பதைப் புரிந்து கொள்ள சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் டாக்டர். திலீப் பட்வர்தனைத் தொடர்பு கொண்டோம்.

அவரது கூற்றின்படி, இருவருக்கும் வெவ்வேறு கண்கள் உள்ளன.

"மோனோசைகோடிக் இரட்டையர்களுக்கு (Monozygotic twins) ஒற்றுமைகள் இருக்கும். கட்டைவிரல் ரேகைகள் ஒத்ததாக இருக்கலாம். ஆனால் கண்களில் அப்படி இல்லை. கண்ணின் விழித்திரையைப் பார்க்கும் போது, ​​அங்குள்ள இரத்தக் குழாய்களின் அமைப்பு மரபணு ரீதியாகப் பொருந்தவில்லை என்பது ஆய்வில் தெரிந்தது.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புகைப்படங்களை எடுக்கும் போது இரு குழந்தைகளின் கண்களின் விழித்திரை மற்றும் ஃபண்டஸ் (Fundus- கண்ணின் உட்புறப் பகுதி) வித்தியாசமாக காணப்படும். இது பயோமெட்ரிக் மென்பொருளில் இணைக்கப்பட்டால், இரட்டைக் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.” என்று கூறுகிறார்.

ஆதார் பதிவுக்கான பயோமெட்ரிக் பதிவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் தீரும் என தானாஜியின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)