ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்குச் சென்றது - சுனிதா வில்லியம்ஸை எப்போது அழைத்து வரும்?

பட மூலாதாரம், X/NASA's Johnson Space Center
- எழுதியவர், லாரென்ஸ் பீட்டர்
- பதவி, பிபிசி செய்திகள்
கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப கொண்டு வருவதற்கான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்காக இரண்டு காலி இருக்கைகள் கொண்ட டிராகன் காப்ஸ்யூல், புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து சனிக்கிழமை ஏவப்பட்டது.
எட்டே நாளில் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய அவர்கள் இருவரும், தாங்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாமல் ஸ்டார்லைனர் விண்கலம் காலியாக ஏற்கனவே பூமிக்கு திரும்பிவிட்டது.
நாசா விண்வெளி வீரரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் புதிய ஆய்வுக் கருவிகள் மற்றும் பொருட்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு செல்கின்றனர். அவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் சுனிதா மற்றும் புட்ச் ஆகியோருடன் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிராகன் விண்கலத்தை வியாழக்கிழமையன்று விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் வீசிய ஹெலேன் சூறாவளி காரணமாக அதன் புறப்பாடு தாமதமானது. இந்த சூறாவளி புளோரிடா, வடக்கு ஜார்ஜியா, டென்னஸி மற்றும் கரோலினா மாகாணங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஈலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களுடன் விண்கலத்தை அனுப்புகிறது.
இரண்டு விண்வெளி வீரர்களை மீட்க அனுப்பப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 30) அதிகாலை 3 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

பட மூலாதாரம், NASA
நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான ஒப்பந்தத்தின் படி, மூன்று இருக்கைகள் கொண்ட ரஷ்ய சோயுஸ் விண்கலத்தின் ஒவ்வொரு விண்வெளி பயணத்தின் போதும் ஒரு நாசா விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். நான்கு இருக்கைகள் கொண்ட டிராகன் விண்கலத்தில் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் இருப்பார்.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் கூறியது என்ன?
ஓய்வுபெற்ற கடற்படை ஹெலிகாப்டர் பைலட்டான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார்.
போர் விமானியாக பணியாற்றிய வில்மோர், ஏற்கனவே இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ளார்.
"நாங்கள் இங்கே மிகவும் பிஸியாக இருக்கிறோம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினருடன் நாங்கள் இணைந்தோம்," என்று சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து சமீபத்திய உரையாடலில் கூறினார்.
"இது எங்களுக்கு வீடு மாதிரி. இப்படி முன்னும் பின்னுமாக மிதந்தால் நன்றாக இருக்கும். விண்வெளியில் நேரத்தை செலவிடுவது ஒரு அதிசயம்" என்று இருவரும் கூறினர்.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் விண்வெளியில் இருந்து அளித்த பேட்டியில், "எதிர்பாராத விதமாக இவ்வளவு நாட்கள் விண்வெளியில் இருக்க நேரிட்டது மிகவும் நல்லது" என்று கூறியுள்ளனர்.
இன்னும் சில வாரங்கள் இங்கு தங்கியிருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றே இருவரும் கூறினார்கள்.

பட மூலாதாரம், EPA
விண்வெளியில் வீரர்கள் ஏற்கனவே சிக்கியுள்ளார்களா?
கடந்த காலத்திலும் விண்வெளி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நாட்கள் விண்வெளியில் தங்க வேண்டியிருந்தது.
1990-ஆம் ஆண்டில், சோவியத் விண்வெளி வீரர் வெல்ட்ரே புலிகோவ் அந்நாட்டின் மிர் விண்வெளி ஆய்வு நிலையத்தில் 437 நாட்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு, ஃபிராங்க் ரூபியோ சர்வதேச விண்வெளி நிலையத்தில் 371 நாட்களை செலவிட்டார். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் இவர்தான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












