மதுரை மருத்துவக் கல்லூரி: LGBTQIA+ விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது மாணவர்கள் பாதியில் வெளியேற்றப்பட்டது ஏன்?

மதுரை மருத்துவக் கல்லூரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புக்காட்சி
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் LGBTQIA+ சமூகத்தினர் குறித்த நிகழ்ச்சியை கல்லூரி நிர்வாகம் பாதியிலேயே நிறுத்தியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

“Unlocking Understanding : An update of LGBTQIA+” எனும் தலைப்பில், LGBTQIA+ சமூகத்தினர் குறித்த புரிதலை மேம்படுத்தும் வகையில் மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது.

ஆனால் அந்தக் கூட்டம் நடத்தப்படும் போது பாதியில் மாணவர்களை வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் அல்லாதவர்கள் நிகழ்ச்சியில் பேசக் கூடாது என்ற காரணத்தால் மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது.

LGBTQIA + சமூகத்தினர் குறித்த நேர்மறையான புரிதலை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது என்றும், நிர்வாகம் கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளார்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் LGBTQIA+ சமூகத்தினர் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிமுகப்படுத்த நினைத்த மாற்றங்கள் பிற்போக்கானவை என்று எதிர்ப்பு கிளம்பிய பிறகு அவை நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

மதுரை மருத்துவக் கல்லூரியின் 1984-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாதந்தோறும் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைந்து வந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை LGBTQIA+ சமூகத்தினர் குறித்து பேசுவதற்காக ஒரு மனநல மருத்துவர், ஒரு சிறுநீரக மருத்துவர், செந்தில்குமார், அழகு ஜெகன் ஆகிய இரண்டு செயற்பாட்டாளார்கள் மற்றும் ஒரு திருநங்கை மருத்துவர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் செயற்பாட்டாளர்கள் பேச ஆரம்பிக்கும் போது நிர்வாகத்தினர் அறிவித்ததன் பெயரில், மாணவர்கள் அரங்கை விட்டு வெளியேறினர்.

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷ், நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கிய பிறகு, மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று கல்லூரி முதல்வர் உத்தரவிட்டதாக தெரிவிக்கிறார்.

“நிகழ்ச்சியில் யார் பங்கேற்கிறார்கள் என்று பெயர், புகைப்படத்துடன் வளாகத்தில் பத்து நாட்களுக்கு முன்பாகவே பிளக்ஸ் வைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பு, மாணவர் பிரதிநிகளை அழைத்து மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று கூறியுள்ளனர். அதன் பின் இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று கல்லூரி நிர்வாகத்தால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பேசி முடித்த பிறகு, செந்தில்குமாரை அறிமுகப்படுத்தினேன். அதன் பின் செந்தில் குமார் பேச ஆரம்பித்த போது தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மேடை ஏறி மைக்கை பிடுங்கி, மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது, வெளியேற வேண்டும் என்று அறிவித்தனர். மருத்துவர்கள் அல்லாதவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்” என்றார் சேவியர் செல்வ சுரேஷ்.

நிகழ்ச்சியில் பேசவிருந்த சமூக செயற்பாட்டாளர் அழகுஜெகன், “LGBTQIA+ சமூகத்தினர் குறித்து மருத்துவர்கள் பேசியதை கேட்டனர். ஆனால் சமூகத்தை சேர்ந்த நாங்கள் சமூகவியல் பார்வையோடு பேசுவதை கேட்க தயாராக இல்லை. எங்களுக்கு அது அவமானமாக இருந்தது. ஒரு மாற்றுதிறனாளி, ஒரு திருநங்கை, மருத்துவராக இருந்தால் மட்டுமே மருத்துவர்களிடம் தங்கள் கதையை கூற முடியுமா? அந்தக் கல்லூரியில் இருக்கும் LGBTQIA+ சமூகத்தினர் பாதுகாப்பாக இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது” என்றார்.

LGBTQ விழிப்புணர்வு நிகழ்ச்சி

பட மூலாதாரம், Dr Xavier Selva Suresh

படக்குறிப்பு, மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷ்

'மருத்துவர்கள் அல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாது'- கல்லூரி முதல்வர்

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வராணி, அந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்கவில்லை என்கிறார்.

தொடர் மருத்துவ கல்வி (Continuing Medical Education) எனும் திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும். இதில் மருத்துவர் அல்லாதவர்கள் மாணவர்களிடம் பேச முடியாது. மருத்துவர் அல்லாத அழைப்பாளர்களை நீக்கிவிடுவதாக கூறி விட்டு, அதை செய்யாமல் நிகழ்ச்சியை நடத்தினர். எனவே மாணவர்களை பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தினோம்” என்றார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்து தற்போது மருத்துவராக உள்ள திருநங்கை கவி இந்த நிகழ்ச்சியில் பேசவிருந்தார். ஆனால் அவர் நிகழ்ச்சியன்று காலை தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மருத்துவர் கவியை தொடர்பு கொண்டு பேசிய போது, “திருநர் சமூகத்தினருக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது, என்ன சிரமங்கள் உள்ளன, அதை மருத்துவர்கள் எப்படி அணுக வேண்டும், திருநர் சமூகத்துக்கு எப்படி உதவ வேண்டும் என்று பேசவிருந்தேன். ஆனால் எனக்கு காது வலி ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை” என்றார்.

LGBTQ விழிப்புணர்வு நிகழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு திருநங்கை, மருத்துவராக இருந்தால் மட்டுமே மருத்துவர்களிடம் தங்கள் கதையை கூற முடியுமா? என கேட்கிறார் ஒரு செயற்பாட்டாளர். (கோப்புக்காட்சி)

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலுறவை தவிர பிற உறவுகள் இயற்கைக்கு மாறான பாலினக் குற்றங்கள் என எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தேசிய மருத்துவ ஆணையம் அமைத்த குழு இவை இயற்கைக்கு மாறான பாலினக் குற்றங்கள் அல்ல என்று கூறியது. பின்னர் இது பாடத்திட்டத்தில் இருந்தும் நீக்கப்பட்டது.

இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் மீண்டும் தன்பாலின உறவை பாலியல் குற்றம் என வகைப்படுத்தும் மாற்றத்தை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, செப்டம்பர் மாதம் அந்த பரிந்துரையை பின்வாங்கியது தேசிய மருத்துவ ஆணையம்.

LGBTQIA+ சமூகத்தினர் குறித்த மருத்துவர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டதற்கு, “அவர்கள் பற்றிய புரிதல் ஊடகங்களிடம் இருந்து கிடைப்பது மட்டுமே, புத்தகங்களில் வரவில்லை. அது பாடப்புத்தகங்களுக்கு வெளியே உள்ள விஷயம். படிப்பு ரீதியானது அல்ல. மருத்துவக் கல்லூரி, மருத்துவம் சார்ந்து மட்டுமே CME நிகழ்வுகள் இருக்க வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு செயலாளர் சேவியர் செல்வ சுரேஷ், LGBTQIA+ சமூகத்தினர் குறித்த மருத்துவர்களின் பார்வை நிறைய நேரங்களில் மோசமாக உள்ளது என்கிறார்.

“பலரது தனிப்பட்ட அனுபவங்களை கேட்ட போதே எனது பார்வை மாறியது. தன்பாலின ஈர்ப்புக் கொண்ட பெண் ஒருவர் தனக்கு எச் ஐ வி இருக்கும் என மருத்துவர்கள் தவறாக நினைத்துக் கொண்டு ரத்த வங்கியில் தனது ரத்தத்தை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டதாக கூறினார். மனநல மருத்துவர்களுக்கு புரிதல் இல்லாததால் எப்படி தாங்கள் பாதிக்கப்பட்டோம் என்று பலர் கூறியுள்ளனர். ஒரு நோயாளியாக அவர்கள் கூறுவதை கேட்பதில் என்ன தவறு?” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)