காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மக்கள் சந்திக்கும் சவால்கள்

காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள்
படக்குறிப்பு, கேரன் மற்றும் எல்ஓசியை சுற்றியுள்ள பகுதிகள் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமையின் சுமைகளைச் சுமந்துள்ளன.
    • எழுதியவர், ஜுகல் ஆர் புரோஹித்
    • பதவி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி)காஷ்மீர்

"எங்களுக்கு விராட் கோலியை கொடுங்கள்" என்று ஆற்றின் குறுக்கே இருந்து ஒருவர் கத்துகிறார்.

"இல்லை, நாங்கள் கொடுக்க மாட்டோம்" என்று பதில் சொல்கிறார், வடக்கு காஷ்மீரில் உள்ள கேரன் கிராமத்தில் வசிக்கும் 23 வயதான துஃபைல் அகமது பட்.

இது சாதாரண ஒரு உரையாடல்தான். ஆனால், அது நடக்கும் இடம், அதைக் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாற்றுகிறது. மலைப்பாங்கான மற்றும் அடிக்கடி கொந்தளிப்பான சூழல் நிலவும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் (LoC) இரு பக்கங்களில் இருந்து இந்த உரையாடல் நடக்கிறது. இது இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோடு.

கேரன் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் எல்லைக் கோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமையின் சுமைகளைத் தாங்கி நிற்கின்றன.

வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சண்டைநிறுத்த ஒப்பந்த மீறல்கள்

கடந்த 2021ஆம் ஆண்டில், மோர்டார் ரக குண்டுகள் முதல் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் என 594 சண்டைநிறுத்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டதாக இந்தியா கூறுகிறது.

அந்த ஆண்டில் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற மீறல்களுக்கு பாகிஸ்தான் இந்திய அரசை குற்றம் சாட்டியது. சண்டை நிறுத்த மீறல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தனது சொந்தத் தரவுகளை பாகிஸ்தான் பராமரிக்கிறது.

பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அத்துமீறல்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாற்றுத்திறனாளி ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள்

இருப்பினும் 2021இல் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, 2022 முதல் 2024 செப்டம்பர் வரை இதுபோன்ற இரண்டு மீறல்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.

சண்டைநிறுத்த மீறல்கள் இப்படி கணிசமாகக் குறைந்துள்ளது, மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது?

அதை அறிய, உள்ளூர்வாசிகள், அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோருடன் 10க்கும் மேற்பட்ட நேர்காணல்களை நடத்தி ஆவணப்படுத்தியுள்ளோம்.

மாற்றத்தின் அடையாளமாக இருக்கும் துஃபைல்

எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் துஃபைல் தங்கும் இல்லங்களை நடத்தி வருகிறார். முந்தைய சண்டை நிறுத்த மீறல்களின் துப்பாக்கி குண்டு அடையாளங்கள் அவரது வீட்டுக் கூரையில் காணப்படுகின்றன.

"பல ஹோம்ஸ்டேக்கள் இங்கு திறக்கப்பட உள்ளன," என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் எல்லை சுற்றுலாவை ஊக்குவித்ததற்காக அரசை அவர் பாராட்டினார்.

காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள்
படக்குறிப்பு, "பல ஹோம்ஸ்டேகள் இங்கு திறக்கப்பட உள்ளன" என்கிறார், துஃபைல் அகமது பட்

"இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முன்பு எங்களுக்கென ஒரு வீடு கட்டிக்கொள்வதற்குக்கூட உந்துதல் இருக்கவில்லை," என்று அவர் கூறினார்.

'புறக்கணிக்கப்படும் பகுதி'

இட்ரிஸ் அகமது கான் கேரனில் ஒரு கடை நடத்தி வருகிறார். இந்தப் பகுதி எப்போதும் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகக் கூறுகிறார் அவர்.

"மோதியின் நிர்வாகம் மட்டுமே எங்களுக்காக வேலை செய்கிறது. கடந்த சில ஆண்டுகளில் எங்களுக்கு சாலைகள் கிடைத்துள்ளன, மின்சாரம் கிடைத்துள்ளது. நான் அவருடைய கட்சிக்கு வாக்களித்திருப்பேன். ஆனால் அந்தக் கட்சி இங்கிருந்து போட்டியிடவில்லை" என்று அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் 2018 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது. கடைசியாக 2014ஆம் ஆண்டு மாநில தேர்தல் நடந்தது. கேரன் மற்றும் வடக்கு காஷ்மீரின் பிற இடங்களில் உள்ள மக்கள் அக்டோபர் 1ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.

மின்வெட்டு பிரச்னை

இருப்பினும் எல்லோரும் கான் சொல்வது போல நினைக்கவில்லை.

"ஆமாம், எங்களுக்கு மின்சாரம் கிடைப்பதை அவர்கள் உறுதி செய்தார்கள். ஆனால் இங்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இரவு நேரத்தில் பார்த்தால் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு மறுபுறம் ஒரு நிமிடம்கூட மின்வெட்டு இல்லாமல் இருப்பது தெரிகிறது.

அவர்களுடைய சாலைகளைப் பாருங்கள். அவர்களால் அதைச் செய்ய முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது?" என்று காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்றவரும், அங்கு வசிப்பவருமான அப்துல் காதர் பட் கேள்வி எழுப்பினார்.

காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள்
படக்குறிப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உரையாடிக் கொள்கின்றனர்.

எல்லைப் பகுதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். கேரன் கிராமம் இருக்கும் குப்வாரா மாவட்டத்தில், 2021-2022இல் 2,217 உள்ளூர் 'வளர்ச்சி' திட்டங்கள் முடிக்கப்பட்டன.

அதற்கு அடுத்த ஆண்டு இது 4,061 ஆக அதிகரித்தது. 2023-24இல் இந்தத் திட்டங்களின் எண்ணிக்கை 3,453 ஆக உள்ளது.

சமீப ஆண்டுகளில் போடப்பட்ட எல்லைச் சாலைகளில் பெரும் பங்கு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லா எல்லை மாநிலங்களிலும், போடப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு இந்திய அரசால் பகிரப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.

அனுமதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் அதன் பங்கு பல எல்லை மாநிலங்களைவிட அதிகமாக உள்ளது.

ஆனால் ஒரு மணிநேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் சென்றடைந்த தங்தரில், இவை தொடர்பான மக்களின் கவலைகள் குறைந்துள்ளதாகத் தெரியவில்லை.

'சாலை இணைப்புகள் தேவை'

தங்கள் பகுதிக்கு எல்லா வானிலையையும் தாக்குப்பிடிக்கக் கூடிய சாலை இணைப்புகள் தேவை என்று கிராமத் தலைவர் முகமது ரஃபீக் ஷேக் எங்களிடம் கூறினார்.

காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள்
படக்குறிப்பு, சாலை இணைப்புகள் தேவை என்று கிராமத் தலைவர் முகமது ரஃபீக் ஷேக் கூறினார்

“எங்கள் பிள்ளைகள் தேர்வு எழுத வெளியே செல்ல வேண்டும். பனிப்பொழிவு காரணமாக கணவாய்கள் தடைபட்டு அவர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கும் பல நிகழ்வுகளை நாங்கள் சந்தித்துள்ளோம்,” என்றார் அவர்.

இப்பகுதியில் நாங்கள் பேசிய மக்கள் அனைவரும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிக் குறிப்பிட்டனர். மலைப்பாங்கான பகுதிகளில் பெரிய அளவில் விவசாயம் செய்வது முடியாத காரியமாக இருப்பதாகவும், அங்கு போதுமான அமைப்பு சார்ந்த வேலைகள் இல்லை என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இது இன்னொரு சூழ்நிலையை உருவாக்குகிறது.

"எங்கள் வேலைகள் எல்லாமே ராணுவம் எங்களை போர்ட்டர்களாக பணியமர்த்துவதை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எத்தனை பேரை வேலைக்கு அமர்த்தலாம் என்பதற்கு வரம்புகளும் உள்ளன" என்கிறார் ஷேக்.

”அண்மைக் காலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கத்தையும் பார்க்க முடிகிறது. இளைஞர்கள் சரியான பாதையில் செல்வதை உறுதி செய்யக் கடுமையாக உழைக்கிறோம். ஆனாலும் பிரச்னை அப்படியே உள்ளது," என்றார் அவர்.

பல ஆண்டுகளாக பயங்கரவாத நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ள பகுதி இது. இதன் காரணமாகப் பல பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் அங்கு இப்போதும் உள்ளன. எனவே, இங்கு செல்வது எளிதல்ல. இங்கு செல்வதற்கு முன்கூட்டியே அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.

அது இருந்தாலும்கூட பாதுகாப்புப் பணியாளர்கள் அடிக்கடி அடையாள ஆவணங்களைக் கேட்பார்கள். எங்கள் வாகனங்கள் மற்றும் உபகரணங்களும் பலமுறை சோதனை செய்யப்பட்டன.

காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள்
படக்குறிப்பு, வாகனங்கள் மற்றும் உபகரணங்களும் பலமுறை சோதனை செய்யப்பட்டன

சுகாதார வசதிகள் இல்லை என்றும் ஏழைகளுக்குப் போதுமான ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்தனர்.

ஸீமாரி கிராமத்தில் நஹிதா பர்வீனை நாங்கள் சந்தித்தோம். பட்டதாரியான அவர் வருங்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அரசு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன்.

"இங்கே தனியார் பள்ளிகளைத் தொடங்க அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது இங்கே தனியார் பள்ளிகள் எதுவும் இல்லை. அரசு வேலைகளும் இல்லை. என்னைப் போன்ற படித்த பெண்கள் பள்ளிக்கூடங்களில் கற்பிப்பார்கள்," என்று அவர் பதில் அளித்தார்.

'காஷ்மீருக்காக நிற்க யாரும் இல்லை'

பெரும்பாலான உள்ளூர் மக்கள் தேர்தலில் வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்தனர். மற்றொரு கிராமவாசியான அப்துல் அஜிஸ் லோன் "ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தலைவர் தேவை என்பதை நாங்கள் அறிவோம். தற்போது காஷ்மீருக்காக நிற்க யாரும் இல்லை. ஒருவர் வந்தவுடன் நிலைமை மேம்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள்
படக்குறிப்பு, அப்துல் காதர் பட்

எங்களின் கடைசி நிறுத்தம் மச்சில் பள்ளத்தாக்கு. இது தங்தருக்கு வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில், எல்ஓசி-ஐ ஒட்டி அமைந்துள்ளது.

அரசு நிதியுதவியுடன் கிராமத்தில் வெடிகுண்டு காப்புப் புகலிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஓரிடத்திற்கு நாங்கள் சென்றோம். கான்கிரீட்டால் கட்டப்பட்ட இந்தப் புகலிடம் தற்போது பயன்பாட்டில் இல்லை. கதவுகள் துருப்பிடித்துள்ள போதிலும் அவை திறந்து மூடுகின்றன.

"இந்தப் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். ஆனால் இந்தப் புகலிடம் சுமார் 100 பேருக்கு மட்டுமே இடமளிக்க முடியும்" என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார்.

இங்கு சமீபத்தில்தான் மின்சார வசதியும் வந்துள்ளது.

மச்சிலில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சானியா, ’மின்சார வசதி இருந்தால் தன்னால் அதிக நேரம் படிக்க முடியும்’ என்று என்னிடம் கூறினார். அவருடைய கனவு என்ன என்று கேட்டபோது, தான் ஐஏஎஸ் அதிகாரி ஆக விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சானியா
படக்குறிப்பு, ஐஏஎஸ் அதிகாரி ஆக விரும்புவதாகக் கூறுகிறார் சானியா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவின் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது சண்டைநிறுத்த ஒப்பந்த மீறல் மீண்டும் தொடங்குமோ எனத் தாங்கள் அஞ்சுவதாக உள்ளூர்வாசிகள் எங்களிடம் தெரிவித்தனர்.

"அந்த நாட்களை நாங்கள் யாரும் மறக்கவில்லை. அமைதி நிலவும் என்று நாங்கள் நம்புகிறோம், அதற்காக பிரார்த்தனை செய்கிறோம்,” என்று ஆசிரியர் அப்துல் ஹமீத் ஷேக் கூறினார்.

இதனிடையே கேரன் மற்றும் சிமாரியில் வசிக்கும் இளைஞர்கள் தங்களுடைய மிகப்பெரிய கவலையைச் சுட்டிக்காட்டினர். மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததுதான் அந்தப் பிரச்னை.

காஷ்மீருக்காக நிற்க யாரும் இல்லை என்கிறார் அப்துல் அஜிஸ் லோன்
படக்குறிப்பு, காஷ்மீருக்காக நிற்க யாரும் இல்லை என்கிறார் அப்துல் அஜிஸ் லோன்

"என் ஹோம்ஸ்டேக்கு ஒரு வலைதளம் உள்ளது. அதற்காக யூடியூபர்கள் மற்றும் வ்லாகர்களின் பரிந்துரைகள் என்னிடம் உள்ளன. ஆனால் மக்கள் என்னைத் தொடர்புகொள்ள மொபைல் நெட்வொர்க்கே இல்லை என்றால் இவற்றால் என்ன பயன்,” என்றார் துஃபைல்.

"எங்கள் போனில் நெட்வொர்க் கிடைக்க நாங்கள் ஒரு மணிநேரம் நடக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தியை தயவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியுமா?" என்று நஹிதா என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

(விக்கர் அகமது ஷாவின் கூடுதல் உள்ளீட்டுடன்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)