திருப்பதி லட்டு சர்ச்சை: தேவஸ்தானம் இந்த 5 அடிப்படை கேள்விகளுக்கு பதில் தருமா?

பட மூலாதாரம், RAJESH
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை பூதாகரம் ஆகியுள்ளது. இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் சில முன்வைக்கப்படுகின்றன. இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.
லட்டு பிரசாதத்தில் ஒருவேளை வெண்ணெய், பாமாயில் அல்லது எருமை நெய், எளிய தாவர எண்ணெய் போன்றவற்றை கலந்திருந்தால் பிரச்னை இவ்வளவு பெரிதாக வெடித்திருக்காது. ஆனால் மாட்டிறைச்சி, மீன் மற்றும் பன்றி இறைச்சியால் ஆன கொழுப்பு எண்ணெய் கலந்துள்ளதாக கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விடைத் தெரியாத சில அடிப்படை கேள்விகள் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முன்னுள்ள 5 கேள்விகள்

பட மூலாதாரம், TTD
- `ஏஆர் டெய்ரி ஃபுட்’ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட பத்து நெய் டேங்கர்களில் 6 பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள நான்கு டேங்கர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் ஏஆர் நிறுவனம் வழங்கிய நெய்யின் மொத்த அளவு என்ன? அதில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது? எவ்வளவு நிராகரிக்கப்பட்டது?
- சந்தேகத்தின் பேரில் சில நெய் டேங்கர்களை சோதனை செய்து திருப்பி அனுப்பிய போது, பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் இருந்த நெய்யிலும் கலப்படம் செய்யப்பட்டதா என்பது சோதிக்கப்பட்டதா? பயன்படுத்தப்பட்ட ஆறு டேங்கர் நெய்யின் மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டதா?
ஒருவேளை பயன்படுத்தப்பட்ட அந்த ஆறு டேங்கர்களும் கலப்படம் செய்யப்படவில்லை என்றால் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில், மிருகக் கொழுப்பு கலந்த நெய் சேர்க்கப்படவில்லை என்று அர்த்தம். ஆனால், அப்படி இல்லாத பட்சத்தில் அந்த ஆறு டேங்கர் நெய்யிலும் கலப்படம் இருப்பதாக கருதினால், நடைமுறைப்படி சோதனைகளை செய்யாமல் அவை பயன்படுத்தப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

பட மூலாதாரம், rajesh
3. ஜூலை 23-ஆம் தேதியன்று ஆய்வக அறிக்கை வெளியானது. மறுநாள் அதுகுறித்து பேட்டியளித்த செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் தாவர கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதே தவிர, விலங்குக் கொழுப்பு ஏதும் கலக்கப்படவில்லை என்றார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அந்த அறிக்கையை புரிந்து கொள்ள நேரம் எடுத்ததாக கூறினார். அறிக்கையில் காய்கறி கொழுப்பு பற்றி எழுதப்பட்ட அதே பக்கத்தில் விலங்கு கொழுப்பு இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கவனிக்கவில்லை என்று செயல் அதிகாரி ஜே. ஷியாமளா சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அறிக்கையில் இருந்த தொழில்நுட்ப விவரங்கள் செயல் அதிகாரிக்கு புரியவில்லை எனில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக பால்பண்ணை உள்ளது. மைசூர் CFTRI (மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்) தேவஸ்தானம் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அவர் கூறினார். எஸ்வி பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு தெலுங்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான அதிகாரிகளுக்கு போன் செய்திருந்தால் அறிக்கை தொடர்பான தகவல்களை சொல்லி இருக்கலாம்.
இறுதியாக, சோதனைகள் செய்த ஆய்வகம் அவர்களை அழைத்து விவரங்களை கூறியுள்ளது. தேவஸ்தானம் செயல் அதிகாரி ஜே. ஷியாமளா அறிக்கை பற்றிய விவரங்களை அறிய யாரையாவது தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தாரா?
அவர் அறிக்கையில் விவரங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லையா? அல்லது தெரிந்தும் விஷயத்தை வெளிப்படையாக சொல்லாமல் இருந்தாரா? தாவர கொழுப்பு மட்டுமே கலந்திருப்பதாக சொன்னது ஏன்?

பட மூலாதாரம், YV SUBBA REDDDY/FACEBOOK
4 . தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) ஆய்வகம், நெய் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி கூறியிருந்தது. நெய் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பால் எந்த பசுக்களில் இருந்து எடுக்கப்பட்டதோ, அவற்றின் தீவனத்தில் இருக்கும் எண்ணெய் வித்துக்களின் அளவு, எருமை நெய் கலப்படம் செய்திருப்பது, பசுக்கள் சரியான ஊட்டச்சத்து இல்லாதது போன்றவை சோதனை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
பிபிசியிடம் பேசிய மூன்று நிபுணர்களும், அந்த சோதனைகளால் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை முழுமையாக கண்டறிய முடியாது என்றனர். அப்படியெனில், அதை எப்படி முழுமையாக கண்டறிவது?
5. ஜூன் 12 முதல் ஏஆர் டெய்ரி நெய்யை மட்டுமே பிரசாதம் செய்ய பயன்படுத்தி உள்ளனர். ஜூலை மாதம் நெய்யில் கலப்படம் கண்டறியப்பட்டன. அப்படியெனில் ஜூன் மாதம் வரை பயன்படுத்த நெய்யில் கலப்படம் இல்லையா? பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் இல்லை என்று முடிவு செய்ய முடியுமா?
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னுள்ள கேள்விகள்

பட மூலாதாரம், Sridhar Raju
இது குறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கீழ் பணியாற்றிய செயல் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் சொல்ல வேண்டியது:
1. சந்தை விலையை விட குறைந்த விலையில் நெய் வழங்க முடியுமா? தேவஸ்தானம் நிர்வாகம் நெய் கொள்முதல் தொடர்பாக அதன் சொந்த பால்வள துறைகள் அல்லது பொதுத் துறைகளுடன் கலந்தாலோசிக்கவில்லையா?
நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதை முழுவதுமாக கண்டறிய முடியாது என்று கூறிய நிபுணர்கள் கூட, ஏதோ ஒரு வகையில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்கின்றனர்.
பிபிசி பேசிய அனைத்து நிபுணர்களும் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது முழுமையாக கண்டறியப்படவில்லை என்று சொன்னாலும், நெய் கொள்முதல் விலையின் அடிப்படையில் கலப்படத்தை அடையாளம் கண்டுள்ளனர். அவ்வளவு குறைந்த விலையில் நெய்யை கொடுக்க முடியாது என்கிறார்கள் .
மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் பணியாற்றிய வாரியம் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த குறைந்தபட்ச தெளிவு கூட ஏன் இல்லை? இவ்வளவு குறைந்த விலைக்கு நெய்யை கொடுக்க முடியுமா என்று அவர்கள் ஏன் யோசிக்கவில்லை?
2. ஏழுமலையான் கோயிலுக்கான நிவேதனப் பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 60 கிலோ நெய் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார். அப்படியெனில் அந்த நெய் கிலோ ரூ.1600 என்ற மதிப்பில் கிடைத்திருக்கிறது. ஆனால் லட்டு பிரசாதம் செய்ய நெய் ஒரு கிலோ ரூ. 320 என்ற மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. ஏன் இவ்வளவு வித்தியாசம்? அதிகாரிகள் ஏன் அதைப் பற்றி சிந்திக்கவில்லை?
அப்போதைய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள பாரம்பரிய மாட்டுப் பண்ணைகளில் இருந்து நெய் கொண்டு வரப்பட்டது. அந்த மாட்டுப் பண்ணைகளால் டெண்டர்களில் பங்கேற்க முடியாததால், நன்கொடையாளர்களின் உதவியுடன் நேரடியாக நெய் வாங்கப்பட்டது" என்றார்.
அதாவது, நிவேதனம் செய்ய சுத்தமான பசு நெய் வாங்க சிரமப்பட்டதாகக் கூறும் சுப்பாரெட்டி, அதே நெய்யை ரிவர்ஸ் டெண்டரில் வாங்கியது ஏன்? குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால், கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படை சந்தேகம் வரவில்லையா ?
3. பசுவின் பாலில் 4 இயற்கையான கொழுப்புச் சத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு 15 டன் நெய் தேவைப்பட்டால், சுமார் 6 லட்சம் லிட்டர் பசும்பாலில் இருந்து நெய் எடுத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா முழுக்க பல லட்சம் லிட்டர் பசும்பாலை சேகரிக்கும் திறன் கொண்ட அனைத்து பால் பண்ணைகளையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். தனியார் துறையினரால் இவ்வளவு நெய்யை எப்படி கொண்டு வர முடியும் என்ற தெளிவு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏன் இல்லை?
4. நெய் டெண்டர்களில் பங்கேற்கும் பால் பண்ணைகள் குறைந்தபட்சம் 4 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தி, 8 டன் நெய்யை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏன் தளர்த்தப்பட்டது?
தெலுங்கு தேசம் முன்னுள்ள கேள்விகள்

பட மூலாதாரம், I&PR
ஜூலை 23-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்த அறிக்கை பற்றி செப்டம்பர் 19-ம் தேதி முதல்வர் பேசினார். செப்டம்பர் 20-ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் எந்த அதிகாரியும் இல்லாமல் செய்தியாளர் சந்திப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இவை தொடர்ச்சியாக நடந்தது.
விலங்குகளின் கொழுப்பு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உங்களுக்கு எப்போது தெரியும்? எந்த அடிப்படையில் விலங்கு கொழுப்பின் கலப்படம் இருப்பது தீர்மானிக்கப்பட்டது? தெரிந்த பிறகும் அதை வெளியிட ஏன் தாமதம் ஆனது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












