லாபட்டா லேடீஸ் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து திரையுலகில் எழும் சர்ச்சைகள்

பட மூலாதாரம், Prodip Guha/Getty Images
- எழுதியவர், அஜய் பிரம்மத்மஜா
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘லாபட்டா லேடீஸ்’ (Laapataa Ladies) என்ற ஹிந்தி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கிரண் ராவ் இயக்கத்தில், அமீர் கான் தயாரிப்பில் உருவான ‘லாபட்டா லேடீஸ்’ படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாயல் கபாடியா எழுதி, இயக்கிய 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' (All We Imagine as Light) படம் இன்னும் சிறந்த தேர்வாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு மொழிகளில் 29 படங்கள் பரிசீலிக்கப்பட்டன. கல்கி கிபி 2898, அனிமல், சந்து சாம்பியன், சாம் பகதூர், கொட்டுக்காளி, ஆர்டிகிள் 370 உள்ளிட்ட திரைப்படங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் 13 பேர் கொண்ட நடுவர் குழு, இயக்குநர் கிரண் ராவின் 'லாபட்டா லேடீஸ்' படத்தை ஒருமனதாகப் பரிந்துரைத்தது.

இந்தப் படம் கடந்த ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 8 வாரங்களுக்குப் பிறகு, இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக 'லாபட்டா லேடீஸ்' முன்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் 'லாபட்டா லேடீஸ்' படத்துடன் சேர்த்து, 50-52 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இந்தப் பிரிவின் கீழ் அனுப்பப்பட்டுள்ளன.
'லாபட்டா லேடீஸ்' திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரைக்குத் தேர்வான பிறகு, இயக்குநர் கிரண் ராவ், "இந்த அங்கீகாரம் எங்கள் ஒட்டுமொத்த குழுவின் அயராத உழைப்புக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம். படக் குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தால் இந்தக் கதை உயிர்பெற்றது" என்றார்.
"சினிமா எப்போதுமே இதயங்களை ஒன்றிணைக்கவும், எல்லைகளைத் தகர்க்கவும், அர்த்தமுள்ள விவாதங்களைத் தொடங்கவும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறது. இந்தப் படம் இந்திய பார்வையாளர்களைப் போலவே உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். அமீர் கான் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுக்கு நன்றி. அசைக்க முடியாத ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமீர்கான் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய அனுபவம் பலன் கொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Images
'லாபட்டா லேடீஸ்' படத்தை பாலிவுட் நடிகர் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. அவரது தயாரிப்பில் வெளியான `லகான்’ மற்றும் 'தாரே ஜமீன் பர்' (Taare Zameen Par) ஆகிய படங்கள் ஏற்கெனவே இந்தப் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனவே, தனது கடந்தகால அனுபவங்களைப் பயன்படுத்தி அமீர் கான் ‘லாபட்டா லேடீஸ்’ படத்தின் ஆஸ்கர் பரிந்துரையை சிறப்பான இடத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த வெளிநாட்டு படத்திற்காக உலகம் முழுவதிலும் இருந்து அனுப்பப்படும் படங்களை மதிப்பீடு செய்ய ஆஸ்கர் ஜூரி குழு உள்ளது.
நாம் அனுப்பும் திரைப்படத்தைப் பற்றி ஆஸ்கர் ஜூரி குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்தப் பிரசாரத்திற்காகப் பெரும்தொகை செலவிடப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தின் பின்னால் வலுவான தயாரிப்பாளர் இல்லை என்றால், இந்த விளம்பரத்திற்காகவும் தேவையான செலவுகளுக்காகவும் நிதி திரட்டும் பிரசாரமும் தொடங்கப்படும்.
இதற்காக திறமைமிக்க படைப்பாளிகளின் ஆற்றலும் புத்திசாலித்தனமும் வீணாகிறது. மேலும் இந்த விளம்பரத்திற்காக ஐந்து-ஆறு மாதங்கள், முழு நேரமும் வீணாகிறது. நேரம், பணம் செலவிட்டு படத்தை விளம்பரப்படுத்திய பிறகும் படம் பரிந்துரைக்கப்படவில்லை என்றால், அந்த நாட்டு ரசிகர்களும், திரையுலக ஆர்வலர்களும் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஆஸ்கர் விருது நிபுணர்களின் கூற்றுப்படி, விருதுகளுக்குத் தகுதியான திரைப்படங்களை மதிப்பிடவும், பாராட்டவும், கருதவும் ஒரு சிறப்பு முறை பின்பற்றப்பட்டுகிறது. ஆனால் இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் படங்கள் பின்தங்கியுள்ளன.
மும்பையின் பாலிவுட் திரையுலகம் மற்றும் பிற மொழி திரைப்படத் துறைகளில் உள்ள பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டுக்கான 'ஆஸ்கர் பிரசாரம்' இந்திய திரைப்படங்களுக்குத் தேவையற்றது எனக் கருதுகின்றனர்.
இந்திய படங்களின் சிறப்பை நிரூபிக்க ஆஸ்கர் முத்திரை தேவையா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
கலை, கலாசாரம், சினிமா என அனைத்தும் உலகமயமாகும் இந்தக் காலகட்டத்தில், எந்தத் தரத்தில் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன, சர்வதேச அரங்கில் எந்த மாதிரியான கவனத்தைப் பெறுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆணாதிக்கத்தை எதிர்க்கும் லாபட்டா லேடீஸ்

பட மூலாதாரம், Getty Images
இயக்குநர் கிரண் ராவின் 'லாபட்டா லேடீஸ்' 23 ஆண்டுகளுக்கு முன்பு, 2001இல் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்.
கிரண் ராவ், 'நிர்மல் பிரதேசம்' என்ற கற்பனையான மாநிலத்தின் கதையைப் படமாக்கி இருப்பதால், சில சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்திருக்கிறார். உத்தர பிரதேசம் அல்லது மத்திய பிரதேசம் என கதை சொல்லப்பட்டிருந்தால் சர்ச்சையில் சிக்கியிருப்பார்.
ஆயினும்கூட, திரையில் காட்டப்படும் கற்பனையான மாநிலம் (ஒருவேளை பிகார் மற்றும் கிழக்கு உத்தர பிரதேசம்) ஹிந்தி பேசும் மாநிலம் என்பது உறுதியாகிறது. இது அரசியல் கட்டுரைகள் மற்றும் ஆய்வுகளில் 'பிமாரு மாநிலம்' (BIMARU) என்று அழைக்கப்படுகிறது.
கிரண் ராவ் இந்த அமைதியான மாநிலத்தின் சமூக அமைப்பை முன்வைத்து, பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனநிலையை எடுத்துக் காட்டியுள்ளார்.
படத்தின் எழுத்தாளர்களும் இயக்குநரும், சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடு மற்றும் பழமைவாத மரபுகளின் எளிமையான கதையை, கூரிய பார்வையுடன் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் மூலம் அழகாக முன்வைத்திருக்கின்றனர்.
ஹிந்தி பேசும் கிராமப்புற சமூகத்தை முன்வைத்து கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாபாத்திரங்களை முன்வைக்கும் போது, அவர்களின் பலவீனங்களை நகைச்சுவையாக மாற்ற அவர் அனுமதிக்கவில்லை.
படத்தில் எந்தக் குறிப்பிட்ட முழக்கத்தையும் முன்வைக்கவில்லை. தீவிர பெண்ணிய சிந்தனையும் முன்வைக்கப்படவில்லை. படத்தில் சாதாரண நிகழ்வுகள் மற்றும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் மூலம் ஹிந்தி சமூகத்தில் பெண்களின் நிலையை உணர்வுபூர்வமாகக் காட்டியுள்ளனர்.
இந்தத் திரைப்படம், வாழ்க்கையை தொலைத்த பெண்களின் கதையை காட்டுகிறது. வளர்ச்சியின் பாதையில் இந்தியா இருக்கிறது என்று வளர்ச்சியை முன்வைத்துப் பெருமை பேசும் அரசியலின் எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
படத்தின் அடிப்படைக் கதையுடன், இன்றைய காலகட்டத்தில் நிலவும் பல சமூகச் சீர்கேடுகளும் காட்சிகளாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஹிந்தி படம் கிராமிய வாழ்க்கையைக் காட்டியுள்ளது. பண்ணைகள், கொட்டகைகள் மற்றும் கிராமப்புற சாலைகளைக் காட்டியிருப்பது வரவேற்பைப் பெற்றது.
இந்திய கிராமங்கள் வளர்ச்சிப் பந்தயத்தில் மிகவும் பின்தங்கியிருப்பதை இந்தப் படத்தின் மூலம் நகர்புற பார்வையாளர்களால் உணர முடியும்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நவீனத்துவ அலை இன்னும் கிராமப்புறங்களை சென்றடையவில்லை .
அமைதியான கிராமப்புற வாழ்க்கையின் கதை

பட மூலாதாரம், Getty Images
கிராமபுறங்களில் மெதுவான வாழ்க்கையில் வலி இல்லை என்றாலும், அவர்களின் சுற்றுப்புறத்தையும் வாழ்க்கையையும் பார்க்கும்போது, இந்தப் பகுதிகள் ஏன் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது.
கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல், ஃபூல் மற்றும் ஜெயாவின் வாழ்க்கை ஓட்டம் என அற்புதமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். அவர்களின் மொழி, உடைகள், உரையாடல்களில் எளிமை உள்ளது. எந்தவித செயற்கைத்தனமான உணர்வும் இல்லை.
'லாபட்டா லேடீஸ்' படைப்பு மற்றும் தொழில்நுட்பக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியால், படம் இயற்கையான சூழலில் உருவாகியுள்ளது.
ஃபூல், ஜெயா ஆகிய கதாபாத்திரங்களை இரண்டு மணப்பெண்களாகக் காட்டுகின்றனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒரே ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பெட்டியில் மற்ற மணப்பெண்களும் அமர்ந்துள்ளனர்.
கிட்டத்தட்ட அனைவருக்கும் மூக்கு வரை முக்காடு இருக்கும். இந்த முக்காடு அந்த மணமகள் சார்ந்திருக்கும் சமூகத்தை எதார்த்தமாகக் காட்டுகிறது. மணப்பெண்கள் சந்தர்ப்ப சூழலால் இடமாறுகிறார்கள்.
தற்செயலாக நிகழ்ந்த இந்த நிகழ்வு வேடிக்கையானது. ஆனால் கதையில் நாம் கதாபாத்திரங்களுடன் பயணிக்கும்போது இந்த சூழ்நிலையின் சிக்கலான தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
ஃபூலும் ஜெயாவும் இறுதியில் எப்படி சரியான இடங்களை அடைந்தார்கள் என்பது நம்மையும் பதற்றப்பட வைக்கிறது.
ஃபூல் மற்றும் ஜெயாவின் சூழ்நிலைகள் வேறுபட்டிருந்தாலும் ஒரே மாதிரியானவை. இருவரின் நிகழ்காலமும் நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளது. ஃபூல், எளிமையாக இருப்பார். ஜெயா, புத்திசாலியாக இருப்பார். இருவரும் ஆணாதிக்க சமூகத்தின் வலையில் சிக்கியுள்ளனர்.
இருவரின் கணவர்களும் இயல்பில் மிகவும் வித்தியாசமானவர்கள். தீபக் தனது சிந்தனையில் முற்போக்கானவர், ஆனால் பிரதீப் பழமைவாதி மற்றும் ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்.
ஃபூல், ஜெயா, தீபக் மற்றும் பிரதீப் ஆகிய நான்கு கதாபாத்திரங்களில் பெண்களின் அடையாளம், மற்றும் கௌரவம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளை மிக எளிமையாக முன்வைத்து சில முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் கிரண் ராவ்.
கலைஞர்களால் வெற்றி பெற்ற திரைப்படம்
பிப்லாப் கோஸ்வாமி, சினேகா தேசாய், திவ்ய நிதி சர்மா ஆகியோரின் எழுத்தில் புதுமை மிளிர்கிறது. மேலும், அவர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய நடிகர்கள் எந்த முன் முடிவுகளையும் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவதில்லை.
அவர்களின் நடிப்பில் ஒரு புதுமை உள்ளது. பரிச்சயமான நடிகர்கள் புதிய பாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது அவர்களின் ஒரே மாதிரியான செய்கைகளால் சலிப்படையச் செய்வார்கள். ஆனால் லாபட்டா லேடீஸ் படத்தில் புதுமுக நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்தப் படத்தில் கிரண் ராவ், ரவி கிஷன் என்ற நடிகரைத் தவிர வேறு எந்த பிரபல நடிகரையும் தேர்வு செய்யவில்லை. ரவி கிஷனும் தனது பிரபலமான இமேஜில் இருந்து மாறுபட்ட ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கிறார். தனது தனித்துவமான நடிப்பால் அந்தப் பாத்திரத்தை அழகாக்குகிறார்.
பின்னர் அவரது கேரக்டரில் வரும் திருப்பங்களும், மாற்றங்களும் அவரை பார்வையாளர்களுக்குப் பிடித்தவராக மாற்றுகிறது.
பல ஆண்டுகளாக, வறுமை, அவல நிலை மற்றும் குறைபாடுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் சர்வதேச தேர்வுகளுக்கு அனுப்பப்படுவதாக படத்தின் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தப் படம் ஒரு புதிய முயற்சி. பன்மொழி இந்தியத் திரையுலகில் ஒவ்வோர் ஆண்டும் திரைப்படங்களைத் தேர்வு செய்வது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்திய திரைப்படக் கூட்டமைப்பு மும்பையில் இருப்பதால் பாலிவுட் படங்கள் முக்கியத்துவம் பெறுவதாக ஒரு கூற்று உள்ளது.
சர்ச்சை எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச அரங்குகளுக்குப் பரிசீலனைக்கு வரும் படங்களில் பெரும்பாலானவை ஹிந்தி படங்களாக இருக்கின்றன. ஜூரி குழுவில் மும்பை திரையுலகைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருப்பதால், பெரும்பாலும் ஹிந்தி படங்களே தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ஆண்டும் பரிசீலனைக்கு வந்த 29 படங்களில் 14 ஹிந்தி படங்கள்.
ஜூரி குழு உறுப்பினர்களின் தகுதிகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேசிய திரைப்பட விருது பெற்ற சிறந்த திரைப்படத்தை மட்டுமே ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தும் எழுந்தது.
முந்தைய ஆண்டுகளில், பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும் படத்துடன் டெபாசிட் செய்யவேண்டிய மிகப்பெரிய கட்டணம் பற்றிய விமர்சனமும் எழுந்தது.
இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் இந்தச் செயல்பாடுகள் குறித்த தகவல்களும் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை என்று பல திரைப்பட தயாரிப்பாளர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுதவிர பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை பரிசீலனைக்குக்கூட அனுப்புவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை இந்திய திரையுலகில் 'ஆஸ்கர் பிரசாரம்' நடக்கும்.
இந்தப் பிரசாரத்தின் உண்மைத் தன்மையையும் நாம் அறிவோம். 2001ஆம் ஆண்டில், அமீர் கான் தயாரிப்பில் வெளியான 'லகான்' திரைப்படம் பரிந்துரைப் பட்டியலை எட்டியது.
அதற்கு முன்னும் பின்னும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு படம் அனுப்பப்படும், ஆனால் இதுவரை இந்திய படங்கள் மூன்று முறை மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கடந்த 1957 முதல் ஒவ்வோர் ஆண்டும், ஆஸ்கரின் வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவுக்கு ஒரு இந்திய திரைப்படம் அனுப்பப்படுகிறது. ஆனால் இதுவரை 'மதர் இந்தியா' (1957), 'சலாம் பாம்பே' (1988) மற்றும் 'லகான்' (2001) மட்டுமே ஆஸ்கரை சென்றடைய முடிந்தது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












