திருப்பதி லட்டு சர்ச்சை: பிரகாஷ் ராஜ் - பவன் கல்யாண் இடையே மீண்டும் வார்த்தைப் போர்

பட மூலாதாரம், Getty Images/Janasena party
- எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
- பதவி, பிபிசி செய்தியாளர்
திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக ஆந்திர துணை முதல்வருக்கும் , நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் இடையே மீண்டும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுத்திகரிப்பு நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பங்கேற்று, கோயில் படிக்கட்டுகளை கழுவினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மதச் சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல, இருவழிப் பாதை" என்று பவன் கூறினார். அதுகுறித்துப் பேசியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், முக்கியமான விஷயங்களில் கவனமாகப் பேசுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பவன் கல்யாண் பேசியது என்ன?
“பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டது குறித்து நான் சொல்கிறேன், இதற்கும் பிரகாஷ்ராஜுக்கும் என்ன சம்பந்தம்?, நான் வேறு எந்த மதத்தையாவது குறை கூறுகிறேனோ?, பிரசாதத்தில் தீட்டு, கலப்படம் போன்ற எதுவும் நடக்கக் கூடாது என்று சொல்லும் போது, அதுகுறித்து பேசக் கூடாது என்பதற்கு என்ன அர்த்தம்? மத சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல, இந்துக்கள் தாக்கப்படுவது பற்றி பேசுவது தவறாகுமா?" என்று பவன் கல்யாண் கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், "இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல. அது இரு தரப்பிலும் இருக்க வேண்டும். இந்த நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை உண்டு. அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறேன். திருமலை சம்பவம் போன்ற சம்பவம் எந்த மசூதியிலோ, தேவாலயத்திலோ நடந்தால் இப்படி பேசுவார்களா?

பட மூலாதாரம், X/Deputy CMO, Andhra Pradesh
இஸ்லாத்திற்கு எதிராக குரல் எழுப்பினால் சாலைகளில் வந்து அடிப்பார்கள் என்று பயப்படுகிறார்கள். தங்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அஞ்சுகிறார்கள். பிரகாஷ் ராஜ் என்னுடைய நல்ல நண்பர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், சனாதன தர்மமும், புனிதமும் மீறப்படும் போது கூட பேசுவது தவறு என்று சொன்னால் என்ன செய்வது?
இதே தப்பு மசூதிக்கோ, சர்ச்சுக்கோ நடந்தால் இப்படி பேசுவார்களா? நாட்டில் என்ன நடந்தாலும் பேச இந்துக்களுக்கு உரிமை இல்லையா? இந்து தெய்வங்களை நையாண்டி செய்வதையும், விதவிதமாக கேலி பேசுவதையும் நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?. மனம் புண்பட்டாலும் வாயை மூடிக்கொண்டு இருப்பது சரியா?
இதுதான் நீங்கள் சொல்லும் மதச் சார்பின்மையா? பிரகாஷ் ராஜ் மட்டுமின்றி, அவர் உட்பட அனைவருக்குமே விமர்சனத்துக்கு முன் என்ன நடந்தது என்பது தெரியும். நூறு முறை யோசித்து பேசுங்கள்." என்று பவன் கல்யாண் பேசினார்.

பட மூலாதாரம், SCREENGRAB
பிரகாஷ் ராஜ் பதில்
பவன் கல்யாண் விமர்சனத்திற்குப் பதிலளித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"பவன் கல்யாண், நான் என்ன சொன்னேன்? தவறாக புரிந்து கொண்டு, அதை ஏன் திரித்துப் பேசுகிறீர்கள்? நான் தற்போது படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறேன். வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு வருவேன். வந்ததும் நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன். முடிந்தால் என்னுடைய ட்வீட்டை மீண்டும் வாசித்துப் பாருங்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்" என்று அந்த வீடியோவில் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டு சர்ச்சை - நடந்தது என்ன?

பட மூலாதாரம், Twitter : Hindu IT Cell
செப்டம்பர் 19 அன்று, திருப்பதி கோவிலின் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இந்து ஐடி செல் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்தது.
திருப்பதி லட்டில் கலப்படத்திற்கான காரணங்களை கண்டறிந்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பவன் கல்யாண் நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Twitter : Pawan Kalyan
இந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ட்வீட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
“திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதைப் பற்றி கேள்விப்பட்டு நாங்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டோம். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க எங்கள் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது" என்று பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார்.
தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[’ரக்ஷனா] வாரியத்தை நிறுவுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், தேசிய அளவில் இது குறித்து விவாதம் தேவை என்றும் செப்டம்பர் 20 ஆம் தேதி பவன் கல்யாண் குறிப்பிட்டிருந்தார்.
பிரகாஷ் ராஜ் அறிவுரை

பட மூலாதாரம், Twitter : Prakashraj
திருப்பதி லட்டு பிரசாதம் கலப்பட சர்ச்சையில் பவன் கல்யாணை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்துள்ளார்.
“அன்புள்ள பவன் கல்யாண், இந்த சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் தேவையற்ற அச்சத்தை பரப்புகிறீர்கள். இந்த பிரச்னையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நாட்டில் போதுமான வகுப்புவாத பதற்றங்கள் உள்ளன. (மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி)' என்று ட்வீட் செய்துள்ளார்.
நாட்டில் ஏற்கனவே மதம் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்று குறிப்பிட்டு, மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு, அதாவது பா.ஜ.க.வுக்கு நன்றி என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ``Just Asking’’ என்ற ஹேஷ்டேக் சேர்க்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதில்

பட மூலாதாரம், Twitter : Vishnu Manchu
பிரகாஷ் ராஜின் ட்வீட்டிற்கு தெலுங்கு நடிகர் சங்க தலைவர் நடிகர் மஞ்சு விஷ்ணு பதிலளித்துள்ளார்.
“என்னைப் போன்ற லட்சக்கணக்கான இந்துக்களுக்கு திருப்பதி லட்டு என்பது பிரசாதம் மட்டுமல்ல, நம்பிக்கையும் கூட. துணை முதல்வர் பவன் கல்யாண் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சிக்கிறார்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
விஷ்ணு #StayInYourLane என்ற ஹேஷ்டேக்கைச் சேர்த்துள்ளார்.
மஞ்சு விஷ்ணுவின் ட்வீட்டுக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். தனது ட்வீட்டை டேக் செய்து, "ஓகே சிவய்யா.. நான் பகிர்ந்த கருத்து என்னுடைய கருத்து. நீங்கள் பகிர்ந்தது உங்களின் பார்வை " என்று குறிப்பிட்டார்.
மஞ்சு விஷ்ணுவை சிவய்யா என்று பிரகாஷ் ராஜ் அழைக்க காரணம் அவர் கண்ணப்பா என்னும் படத்தில் நடித்திருப்பதால் தான் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
இந்தப் படத்தில் விஷ்ணுவை ‘சிவய்யா’ என்று சத்தமாக அழைக்கும் காட்சி இருக்கும்.
நெட்டிசன் கருத்து என்ன?
பிரசாதத்தில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியின் கொழுப்பை சேர்த்தது மத ரீதியான கவலையை பரப்பவில்லையா..? அதை வெளியுலகுக்கு சொல்வது மதப் பிரச்னையா? என்று நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் ட்வீட்டுக்கு குஜராத் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு தலைவர் ஹிதேந்திர பிடாடியா பதிலளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலின் செல்வாக்கை அதிகரிக்க திருப்பதி கோவிலின் பெயரை கெடுக்க சதி நடந்துள்ளதா..? என்று அவர் பதிவிட்டுள்ளார்.
குஜராத்தின் நரேந்திர மோதியும், அமித் ஷாவும் அரசியல் சதி செய்யும் வரலாற்றைக் கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பாஜக தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
பவன் கல்யாணின் பிராயச்சித்த தீட்சை (Pawan Prayaschitta Deeksha)

பட மூலாதாரம், Janasena party
இந்நிலையில், திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 11 நாட்கள் பரிகார பூஜை நடத்தப்படும் என்று துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் கருத்துக்கு பவன் கல்யாண் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் உட்கொண்ட பிரசாதம் தூய்மையற்றது என்றால், ஒருவர் கூட பேசக்கூடாதா? அப்படிப் பேசுவது எப்படி மதச்சார்பற்ற அமைப்பை சீர்குலைக்கும்? இந்துக்களுக்கும் உணர்வுகள் உள்ளது. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசக் கூடாது என்று நீங்கள் எப்படி சொல்லலாம் ? என்று பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
சுஸ்வாகதம், பத்ரி, ஜல்சா, கேமராமேன் கங்கதோ ராம்பாபு, வக்கீல் சாப் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












