அமைச்சரான அடுத்த ஆண்டே முதல்வர் ஆன ஆதிஷி - டெல்லி அரசியலில் வேகமாக வளர்ந்தது எப்படி?

அதிஷி, டெல்லி முதல்வர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிஷி

டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ஆதிஷி பதவியேற்றுள்ளார். அவருக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சனிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த வாரம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், முதல்வர் பதவிக்கு ஆதிஷியின் பெயர் அங்கீகரிக்கப்பட்டது.

ஆதிஷியுடன் கைலாஷ் கெலாட், கோபால் ராய், சௌரப் பரத்வாஜ், இம்ரான் ஹுசைன், முகேஷ் அஹ்லாவத் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். பதவியேற்பு விழாவில் அரவிந்த் கேஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.

அதிஷி, டெல்லி முதல்வர்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் முதல்வர் ஆக்குவேன்'

முன்னர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் பேசிய ஆதிஷி, "நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்க வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாக இருக்கும். டெல்லி மக்களை பாதுகாக்க முயற்சிப்பேன். மேலும் கேஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவேன்", என்று கூறினார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமா குறித்து ஆதிஷி பேசுகையில், "அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இன்று டெல்லியில் உள்ள இரண்டு கோடி மக்கள் சார்பாக நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், டெல்லிக்கு எப்போதும் ஒரே முதல்வர்தான், அது அரவிந்த் கேஜ்ரிவால் மட்டும்தான்", என்றார்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான் ஆதிஷி டெல்லியின் முதல்வராக இருக்கிறார் என்று கோபால் ராய் முன்னர் கூறியிருந்தார்.

"பாஜக, ஆம் ஆத்மி கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்றது, ஆனால் நாங்கள் அவர்களது ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்துவிட்டோம்", என்று கோபால் ராய் தெரிவித்தார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆதிஷியை புதிய முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

கட்சியின் அந்தக் கூட்டத்தில், அரவிந்த் கேஜ்ரிவாலே அடுத்த முதல்வராக ஆதிஷியின் பெயரை முன்மொழிந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களிடம் அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை அன்று பேசியபோது, முதல்வர் பதவிக்கான போட்டியில் ஆதிஷியின் பெயரும் இடம்பெற்றது.

ஆதிஷியை தவிர கோபால் ராய், கைலாஷ் கெலாட் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் ஆகியோரின் பெயர்களும் இந்த பதவிக்கான போட்டியில் விவாதிக்கப்பட்டன.

தற்போது அதில் 43 வயதான ஆதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த முதல்வராக இருக்கிறார். டெல்லியில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும்வரை ஆதிஷி முதல்வராக இருப்பார்.

இது ஆதிஷிக்கு சாதகமாக நடந்ததா?

அமைச்சரான அடுத்த ஆண்டே முதல்வராகும் அதிஷி - டெல்லி அரசியலில் வேகமாக வளர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், ANI

திங்கட்கிழமை அன்று நடந்த கட்சியின் கூட்டத்திற்குப் பிறகு, ஆதிஷி முதல்வர் பதவி போட்டிக்கான தேர்வில் முன்னணியில் இருப்பதாகக் கருதப்பட்டார்.

அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, ​​ஆதிஷியின் கட்டுப்பாட்டில் அதிகபட்ச அமைச்சகங்கள் மற்றும் இலாகாக்கள் இருந்தன.

மணீஷ் சிசோடியா கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையில் பல முக்கியப் பணிகளை ஆதிஷி செய்துள்ளார். மேலும் மணீஷ் சிசோடியா இல்லாத நேரத்தில் கல்வித் துறையின் பொறுப்பையும் அவர் வகித்தார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரியவராக ஆதிஷி கருதப்படுகிறார். தற்போதைய சூழ்நிலையில் ஆதிஷி முன்னணியில் இருப்பதாக கட்சியை சேர்ந்த பல நபர்கள் பிபிசியிடம் குறிப்பிட்டனர்.

ஆதிஷிக்கு ஏன் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை?

2020-ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையில் ஆதிஷி உட்பட எந்தப் பெண் உறுப்பினருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

ஆதிஷிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படாததற்கு, அக்கட்சியின் சில தலைவர்கள் அப்போது விமர்சனங்களை முன்வைத்தனர்.

அந்த தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அதில் 8 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

ஆனால், இதற்கு பிறகும் அரவிந்த் கேஜ்ரிவால் தனது அமைச்சரவையில் ஒரு பெண் உறுப்பினருக்கு கூட அமைச்சர் பொறுப்பை வழங்கவில்லை. காலப்போக்கில் டெல்லியின் அரசியல் நிலையும் மாறியது.

மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங்க்கு பிறகு அரவிந்த் கேஜ்ரிவாலும் சிறைக்கு சென்றார். ஆட்சி முதல் கட்சி வரை என பல விஷயங்களை ஆதிஷி கையாண்டார்.

2023-ஆம் ஆண்டு, கேஜ்ரிவால் ஆட்சியில் ஆதிஷி முதல் முறையாக கல்வி அமைச்சர் ஆனார்.

அதிஷி, டெல்லி முதல்வர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023-ஆம் ஆண்டு, ஆதிஷி முதல் முறையாக அமைச்சரானார்

ஆதிஷிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமான உறவு எப்படி தொடங்கியது?

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் விஜய் குமார் சிங் மற்றும் திரிப்தா வாஹி ஆகியோருக்கு ஆதிஷி பிறந்தார் என இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு செய்தி கூறுகிறது.

அவர் டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் படித்தார். மேலும் புனித ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு படிப்பு படித்துள்ளார்.

ஆதிஷி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர் செவனிங் ஸ்காலர்ஷிப் எனும் கல்விக்கான உதவித்தொகையைப் பெற்றார்.

ஆந்திராவில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் ஆதிஷி குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தார். அவர் இயற்கை விவசாயம் மற்றும் கல்வி தொடர்பான பணிகளை செய்வதில் தீவிரமாக இருந்தார்.

அதன் பின்பு, ஆதிஷி போபாலுக்கு வந்தார். இங்கே அவர் பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் பணியாற்றத் தொடங்கினார். இந்த சமயத்தில், அவர் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோருடன் தொடர்பு கொண்டார்.

அண்ணா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்தே இந்த அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஆதிஷி தற்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக உள்ளார்.

2013-ஆம் ஆண்டு, ஆதிஷி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

அவர் 2015 முதல் 2018 வரை அப்போதைய கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக பணியாற்றினார்.

ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக இருந்தபோது, ​​டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையை மேம்படுத்தவும், பள்ளி நிர்வாகக் குழுக்களை உருவாக்கவும் அவர் பணியாற்றினார் என்றும், தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கடுமையான விதிகளையும் அவர் நடைமுறைப்படுத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் ஆதிஷி இருக்கிறார்.

தற்போது அவர் டெல்லி அரசாங்கத்தில் கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பப் பயிற்சி, பொதுப்பணித் துறை, எரிசக்தி, வருவாய், திட்டக்குழு, நிதி, லஞ்ச ஒழிப்பு, நீர் மேலாண்மை, மக்கள் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி போன்ற இலக்காக்களில் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் டெல்லியில் உள்ள கல்காஜி பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

அதிஷி, டெல்லி முதல்வர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2013-ஆம் ஆண்டு, ஆதிஷி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

அவர் ஏன் தனது குடும்பப் பெயரை நீக்கினார்?

2019-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் அவர் கிழக்கு டெல்லி தொகுதிக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக களம் இறங்கினார். அப்போது அவரது பெயர் ஆதிஷி மர்லினா என்று இருந்தது.

முன்னதாக, ஆதிஷி களத்திற்கு பின்னால் உட்கட்சி விவகாரங்களில் மட்டும் செயல்படும் தலைவர்களுள் ஒருவராக கருதப்பட்டார்.

2019-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது, ​​திடீரென பொது மக்கள் முன்னிலையில் ஆதிஷி மைக்கில் உரையாற்றியதைப் பார்த்த பிறகு, அவர் அரசியலில் முக்கியமான பெண் பிரமுகராக உருவெடுப்பார் என்று கருதப்பட்டது.

அந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆதிஷி தனது குடும்பப் பெயரான 'மர்லினா' என்பதை அனைத்து கட்சி பதிவுகள் மற்றும் தேர்தல் பிரசாரம் தொடர்பான ஆவணங்களிலிருந்தும் நீக்கினார்.

அப்போது, பாரதிய ஜனதா கட்சி ஆதிஷியை ஒரு வெளிநாட்டவர் என்றும் அவரது குடும்பப்பெயரை சுட்டி அவரை ஒரு கிறிஸ்தவர் என்றும் குறிப்பிட்டு வந்தது.

அதற்கு, தனது அடையாளத்தை நிரூபிப்பதில் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் தனது குடும்பப்பெயரை நீக்குவதாக ஆதிஷி கூறியிருந்தார். அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்தும் தனது குடும்பப்பெயரை நீக்கினார்.

ஆதிஷியின் பெற்றோர் இடதுசாரிகளாக இருந்ததால், கார்ல் மார்க்ஸ் மற்றும் விளாடிமிர் லெனின் பெயர்களின் எழுத்துக்களைச் சேர்த்து ஆதிஷிக்கு 'மார்லினா' என்ற குடும்பப்பெயரை வழங்கியதாக எண்ணப்படுகிறது.

ஆதிஷியின் குடும்பப்பெயர் குறித்த சர்ச்சைக்கு நடுவே, மணீஷ் சிசோடியா அவருக்கு ஆதரவாக நின்று அவரை ஒரு 'ராஜ்புதானி' என்று அழைத்தார்.

"எங்கள் கட்சியின் கிழக்கு டெல்லி வேட்பாளர் ஆதிஷியின் மதத்தைப் பற்றி பாஜகவும் காங்கிரஸும் இணைந்து பொய்யான கருத்துக்களை பரப்புவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவரது முழுப் பெயர் ஆதிஷி சிங். அவர் ஒரு ராஜ்புதானி. ஜான்சி ராணியைப் போல அவர் ஒரு வலுவான பெண்மணி. அவர் வெற்றி பெற்று சரித்திரம் படைப்பார்", என்று மணீஷ் சிசோடியா கூறினார்.

2019-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் ஆதிஷி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் போட்டியிட்ட கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்ட கௌதம் கம்பீர் வெற்றி பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)