புனேவில் பணிச்சுமையால் ஒருவர் இறந்ததாக சர்ச்சை: வேலை - தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை பேணுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
எர்ன்ஸ்ட் & யங் (E&Y) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த நான்கு மாதங்களிலேயே 26 வயதான பணியாளர் ஒருவர், பணிச்சுமை காரணமாக உயிரிழந்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது, வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது குறித்த விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலையில் (Work-life balance) வைத்துக்கொள்வது எப்படி? பணியிடங்களில் மன அழுத்தமற்ற பணிச்சூழலை நிறுவனங்கள் எப்படி உறுதி செய்யலாம்? என்பதை இங்கே காணலாம்.

என்ன நடந்தது?
கேரளாவை சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்டான (சி.ஏ) ஆனா செபாஸ்டியன் பெராயில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பன்னாட்டு நிறுவனமான எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.
அங்கே, பணிக்கு சேர்ந்த நான்கு மாதங்களிலேயே, ஜூலை 20 அன்று அவர் உயிரிழந்தார். அவருடைய மரணம் குறித்து ஆனாவின் தாயார் அனிதா அகஸ்டின் அந்நிறுவனத்தின் இந்திய தலைமையான ராஜீவ் மேமானிக்கு சமீபத்தில் எழுதிய கடிதம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் வேலைகளை வழங்குவது, நீண்ட பணிநேரம், வார இறுதி நாட்களில் கூட வேலை செய்ய சொல்வது என, கடுமையான பணிச்சூழல் தான் தன் மகளின் இறப்புக்குக் காரணம் என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சில தினங்களாகவே நெஞ்சு பகுதியில் இறுக்கம் (constriction) காரணமாக, ஆனாவை புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அங்கு இசிஜி பரிசோதனையில் எல்லாம் சரியாக இருப்பதாக கூறிய மருத்துவர், அவருக்கு போதிய உறக்கம் இல்லை என்றும் அவர் மிகவும் தாமதமாக சாப்பிடுவதாகவும் கூறியதாக தாயார் அனிதா அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்று நிகழாமல் இருக்க இதுபோன்ற அமைப்பு ரீதியான பிரச்னைகளை தனிப்பட்ட நபர்களின் பிரச்னையாக பார்க்காமல் தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தன் மகளின் இறுதிச்சடங்கில் கூட நிறுவனத்தில் இருந்து யாரும் பங்கேற்காதது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அவர் அக்கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.
எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் பதில்
ஆனாவின் தாயாரின் கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது துயரமான சம்பவம் என்றும், ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆனாவின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும்” நிறுவனம் செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களின் கிளை நிறுவனங்களில் ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கவும் அதனை மேம்படுத்தவும் தொடர்ந்து வழிகளை கண்டறிவோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, லிங்க்ட் இன் பக்கத்தில் அந்நிறுவனத்தின் இந்திய தலைமை ராஜீவ் மேமானி, ஆனாவின் இறப்புக்கு இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
பணியாளர்களின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேலை - தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை பேணுவது எப்படி?
கோவிட் பொது முடக்க காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தபடி வேலை மற்றும் வாரத்தின் சில நாட்கள் அலுவலகத்திலும் மீத நாட்களை வீட்டிலிருந்தும் வேலை செய்யும் வகையிலான பணிச்சூழல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பணிச்சூழலில், மன அழுத்தம், சோர்வு ஆகியவற்றை களைந்து பணி - வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் வைத்துக்கொள்வது எப்படி?
சென்னையை சேர்ந்த மனநல ஆலோசகர் சில்வினா மேரி, அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும்ம் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கும் ஏற்ற சில ஆலோசனைகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
நேர நிர்வாகம்
ஒருநாளின் 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அலுவலக வேலை அல்லாத நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். நேரத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பணியை விட்டு வெளியே வரும் போது அதுகுறித்த சிந்தனை இல்லாமல் இருக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள், பொழுதுபோக்கு, கற்பனை திறன் இவற்றுக்கென சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.
சூழலை மாற்றுங்கள்
பணிச்சூழல் அழுத்தமாக இருக்கிறது என நினைத்தால், எங்காவது சிறு பயணம் மேற்கொள்ளலாம். அங்கு அலுவல் வேலை எதுவும் வைத்துக்கொள்ள கூடாது. அதுகுறித்த சிந்தனையே இருக்கக் கூடாது. இதனால், பயணத்திலிருந்து திரும்பி வரும்போது புத்துணர்ச்சியுடன் வேலை செய்யத் தொடங்கலாம்.
‘ஐந்து நிமிட’ மந்திரம்
தொடர்ச்சியான வேலைகளுக்கு மத்தியில் நீங்கள் களைப்பு காரணமாக கவலையாக உணர்ந்தால், ஒரு ஐந்து நிமிடத்திற்கு ‘அலாரம்’ வைத்துவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும். அந்த ஐந்து நிமிடத்தில் காபி, தண்ணீர் போன்றவை அருந்தலாம், ஓய்வறை வரை சென்று வரலாம். அதன்பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த ‘ஐந்து நிமிட’ ஓய்வுக்கு பின்னர் மீண்டும் ‘பரபரப்பாக’ வேலை செய்யலாம்.
‘நோ’ சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்
பணி நேரத்தை தாண்டி வீட்டில் உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் போதும் வேலைகளை வழங்கினால், கோபம் கொள்ளாமல் அமைதியாக உங்களால் முடியாது என்பதை சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். சில இடங்களில் ‘நோ’ சொல்ல தெரிந்திருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக நேரம் வேலை செய்வதால் கிடைக்கும் பாராட்டு, வெகுமதி எல்லாவற்றையும் தாண்டி தனிப்பட்ட நேரத்தில் வேலை சொன்னால் ‘நோ’ சொல்ல தெரிந்திருக்க வேண்டும். உங்களின் எல்லைகளை நீங்கள் வரையறுக்க வேண்டும்.
உடல் மொழி முக்கியம்
ஒருவருடன் எப்படி பேசுகிறோம் என்பதும் ஒரு கலைதான். பணியிடங்களில் மேலாளரிடம் எப்படி பேசுகிறோம், அப்போதும் நம்முடைய உடல்மொழி, குரல் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
புதிர் விளையாட்டுகள், நோட்டுகளில் ஏதேனும் எழுதலாம்.
அமர்ந்த நிலையிலேயே தியானம், யோகா செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images
பெற்றோர்கள், சக பணியாளர்களிடம் மனம்விட்டு பேசலாம். மன அழுத்தத்தை தேக்கி வைத்துக்கொள்ளக் கூடாது.
ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவதும் அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி இரண்டும் மகிழ்ச்சி ஹார்மோன் சுரந்து, மன அழுத்த ஹார்மோன்கள் குறைவதற்கு வழிவகுக்கும்.
பணியிடங்களில் பணிச்சுமை நம்முடைய உடல்நலத்தை பாதிக்கிறது என்றாலோ, பசியின்மை, தூக்கமின்மை என நம்முடைய அடிப்படையான நலன்களை பாதித்தாலோ, மனப் பதற்றம் ஏற்பட்டாலோ மனநல ஆலோசகரை அணுக வேண்டும்.
நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
நிறுவனங்கள் என்ன செய்யலாம் என்பதற்கான ஆலோசனையையும் மனநல ஆலோசகர் மேரி வழங்கினார்.
“மன அழுத்தம் சார்ந்த ஆலோசனைகளை தொடர்ச்சியாக பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். குழந்தைப்பேறுக்கு பிறகு பெண் பணியாளர்களின் உடல், மனநலன் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளை நடத்தலாம். ஒரு பெரிய பிராஜெக்டை ஆரம்பிப்பதற்கு முன்பும் அதை முடித்த பின்பும் பணியாளர்களின் மனநலம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யாமல் 1-2 நாட்கள் விடுப்பு அளிக்கலாம்” என அவர் தெரிவித்தார்.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
மனிதவள தொழில்நுட்ப நிறுவனமான (HR tech company) ரிமோட் எனும் நிறுவனம் 2024-ம் ஆண்டில் 60 உலக நாடுகளிடையே மேற்கொண்ட ஆய்வின்படி, வேலை - வாழ்க்கை இரண்டையும் சமமாக பாவிப்பதில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தில் குறைந்தபட்ச வருமானம் அதிகளவில் இருப்பது, குறைந்தது 32 நாட்கள் ஆண்டு விடுமுறை ஆகியவை வழங்கப்படுகின்றன. அலுவலகங்களில் உரையாடலுக்கு தயாராக இருப்பதும் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.
2021 நவம்பரில் அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா எனும் தொழில்துறை மற்றும் வர்த்தக கூட்டமைப்பு வெளியிட்ட ஆய்வு, இந்தியாவில் தனியார் துறையில் பணிபுரியும் 43% பேர் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
“விருப்பங்களை தெளிவாக கூற வேண்டும்”
சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறுகிறார், செந்தாமரை கோகுலகிருஷ்ணன். இவர், பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக செயல்பட்டுவரும் Yuukke எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர்.
“பணியாளர்களிடமிருந்து எதிர்பார்ப்புகள், தேவைகள் குறித்து தொடர்ச்சியாக சோதிப்பது முக்கியம்” என்கிறார் அவர்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மனநலம் குறித்து வெளிப்படையாக பேசுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்கிறார் அவர்.
அனைவரும் இணைந்து உண்பதையும் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார்.
“எல்லைகளை தெளிவாக வகுத்துக்கொண்டு, தங்களின் விருப்பம் என்ன என்பதை பணியாளர்களும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதை எங்கள் அலுவலகத்தில் வலியுறுத்துகிறோம்” என அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
சட்டம் என்ன சொல்கிறது?
ஐடி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பணியாளர்கள் ‘தொழிலாளர்கள்’ என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் என்பதால், அவர்களுக்கான உரிமைகள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

பட மூலாதாரம், Getty Images
“தொழிற்சாலைகள், கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கான உரிமைகள் உள்ளன. அவர்கள் தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் வந்துவிடுவார்கள். சட்ட ரீதியாக தொழிற்சாலை பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு சட்டங்கள் உள்ளன. ஒருங்கமைக்கப்படாத துறைகளில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பையும் தொழிலாளர் துறை உறுதி செய்யும். ஆனால், ‘தொழிலாளர்’ (workman) என்ற வரையறையில் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் வர மாட்டார்கள்” என்கிறார் அவர்.
தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் படி, வேலை நேரத்தைத் தாண்டி அதாவது ஒருவர் 8-9 மணிநேரத்தைக் கடந்தோ அல்லது வாரத்தில் 48 மணிநேரத்தைக் கடந்தோ வேலை செய்யும் போது அவர்களுக்கு அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்கிறது. இச்சட்டம் ‘தொழிற்சாலை தொழிலாளர்கள்’ அல்லது ‘தொழிலாளர்களுக்கானது’ என கூறுகிறது. ஆனால், சட்ட ரீதியான வரையறையின்படி, ஐ.டி. உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் ‘தொழிலாளர்’ என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் என்கிறார், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
“பெரு நிறுவனங்களுக்கு இத்தகைய சட்டம் பொருந்துமா, பொருந்தாதா என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு இவர்கள் பெரும்பாலும் செல்ல முடியாது. சிவில் நீதிமன்றங்களுக்கு இத்தகைய பிரச்னைகளை எடுத்துச் செல்லலாம்” என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












