சிந்து சமவெளி: சங்க இலக்கியத்தோடு ஒத்துப்போகும் வாழ்வியலை கொண்ட பண்டைய நாகரிகம்

சிந்து சமவெளி அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு: புதிரின் சாவி எங்கே இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய துணைக் கண்டத்தின் தொல்லியல் வரலாற்றில், சிந்து சமவெளி கண்டறியப்பட்டது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிந்து சமவெளி கண்டறியப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகி இன்றோடு நூறு ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவம் என்ன?

கடந்த 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளிவந்த The Illustrated London News இதழின் முகப்புப் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தி, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு குறித்த புரிதலையே மாற்றியமைக்கப் போகிறதென அந்தத் தருணத்தில் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்திய தொல்லியல் கழகத்தின் (ஏஎஸ்ஐ) தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல், தாங்கள் ஹரப்பாவில் (தற்போதைய பாகிஸ்தான்) கண்டறிந்த புதிய தொல்லியல் தளத்தைப் பற்றிய தகவல்களை படத்துடன் வெளியிட்டிருந்தார்.

"ஒரு மறைந்துபோன நாகரீகத்தின் எச்சங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சும் வாய்ப்பு ஒரு தொல்லியலாளருக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால், இந்தத் தருணத்தில், சிந்துவின் சமவெளிப் பகுதிகளில் அம்மாதிரி ஒரு கண்டுபிடிப்புக்கு அருகில் இருக்கிறோம்" என்றார்.

"First Light on a Long - Forgotten Civilisation: New Discoveries of an unknown prehistoric past in India" என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியாகியிருந்தது.

இதற்கு அடுத்த இதழிலேயே பிரிட்டனின் வரலாற்று நிபுணரான ஆர்ச்சிபால்ட் சாய்ஸ், இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஒரு முக்கியமான தகவலை முன்வைத்தார்.

அதாவது, சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளைப் போன்ற முத்திரைகள், இரானிலும் மெசபடோமியாவிலும் கிடைத்திருக்கின்றன. அகழாய்வில், வெண்கல காலகட்டத்தைக் குறிப்பிடும் மட்டத்தில் இந்த முத்திரைகள் கிடைத்தன. இந்த வெண்கலக் காலம் என்பது கி.மு.3300 - கி.மு.2500 வரையிலான காலப்பகுதியைக் குறிக்கிறது. ஆகவே, ஹரப்பாவில் கிடைத்தவையும் வெண்கல காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என யூகிக்க முடிந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வரலாறு மாற்றி எழுதப்பட்ட தருணம்

சிந்து சமவெளி அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு: புதிரின் சாவி எங்கே இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

இது ஒரு மிகப் பெரிய திருப்பம். 1924ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் வரை, கி.மு. 326ஆம் வருடம்தான் இந்திய வரலாற்றில் மிகப்பழைய வருடமாக இருந்தது. மகா அலெக்ஸாண்டர் காந்தகாரின் மீது படையெடுத்த வருடம் அது.

மேலும் இந்திய பண்பாடு மற்றும் கலாசாரத்தின் தொடக்கப் புள்ளியாக, அதுவரை வேத காலத்தையே குறிப்பிட்டு வந்தனர். இந்தியாவின் நாகரீகம், அறிவு, பண்பாடு ஆகிய எல்லாமே அந்தக் காலகட்டத்தில்தான் துவங்கியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பு, இதையெல்லாம் மாற்றுவதற்கான ஓர் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. கிழக்கிந்திய கம்பெனியை விட்டு ஓடிப்போன சார்லஸ் மாசோன் என்பவர், 1829 வாக்கில் பஞ்சாப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்தப் பகுதியில் உளவுத் தகவல்களைச் சேகரித்து கம்பனிக்கு அளிப்பதன் மூலம், கிழக்கிந்திய கம்பனியோடு மீண்டும் சேர்ந்துகொள்ள நினைத்தார் அவர். அப்படிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சிந்து நதியின் துணை நதியான ராவி நதியின் சமவெளிப் பகுதியில், பல தொல்லியல் தடயங்கள் அவருக்குக் கிடைத்தன.

அவருக்கு மகா அலெக்ஸாண்டர் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அந்தப் பகுதி, அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்த பகுதியாகவும் இருந்ததால், இந்தத் தொல்லியல் தளம் அலெக்ஸாண்டர் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதினார் சார்லஸ். இதையெல்லாம் தன்னுடைய Narrative of Various Journeys in Baluchistan, Afghanistan, and the Punjab நூலில் பதிவு செய்தார் அவர்.

இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு வந்த அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் என்பவரும் அங்கிருந்த தொல்லியல் தளத்தில் கிடைத்த சுட்ட செங்கற்கள் குறித்தும் அவை உள்ளூர் மக்களால் அள்ளிச் செல்லப்படுவது குறித்தும் குறிப்புகளை எழுதினார். 1848-49இல் பஞ்சாப் கிழக்கிந்திய கம்பனியின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு, இந்தப் பகுதி மேலும் சூறையாடப்பட்டது. ரயில்வே பணிகளுக்கு இங்கிருந்து செங்கற்கள் அள்ளிச் செல்லப்பட்டன.

இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பனியிடமிருந்து நேரடியாக பிரிட்டன் ஆட்சியின் கீழ் வந்த பிறகு தொல்லியல் துறை கூடுதல் கவனத்தைப் பெற ஆரம்பித்தது. 1861இந்தியத் தொல்லியல் கழகம் (Archaeological Survey of India - ASI) உருவாக்கப்பட்டது. அதன் முதல் இயக்குநர் ஜெனரலாக அலெக்ஸாண்டர் கன்னிகம் நியமிக்கப்பட்டார்.

அதற்கு முன்பே ஹரப்பாவை பார்த்திருந்த அவர், மீண்டும் அந்தப் பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார். ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட சீனப் பயணியான யுவான் சுவாங் குறிப்பிட்ட பௌத்த தலமாக அது இருக்கலாம் என அலெக்ஸாண்டர் கருதினார்.

ஹரப்பா, மொகஞ்சதாரோவில் தொடங்கிய தொல்லியல் ஆய்வு

சிந்து சமவெளி அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு: புதிரின் சாவி எங்கே இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

இதற்குப் பிறகு, இந்தப் பகுதி மீது பெரிய கவனம் திரும்பவில்லை. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் புதிய வைசிராய் ஆக நியமிக்கப்பட்ட கர்ஸான், ஏஎஸ்ஐயின் இயக்குநர் ஜெனரலாக ஜான் மார்ஷலை நியமித்தார். இதற்கு சில ஆண்டுகள் கழித்து, ஏஎஸ்ஐயின் தொல்லியலாளரான ஹிரானந்த் சாஸ்திரியை அனுப்பி, ஹரப்பா தலத்தை ஆய்வு செய்யும்படி சொன்னார் ஜான் மார்ஷல். அந்தப் பகுதியை ஆய்வு செய்த ஹிரானந்த், அது பௌத்த தலமல்ல என்றும் அதனால் நாம் நினைத்திருப்பதைவிட பழமையான தலமாக அது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு, தயா ராம் சஹானி என்ற தொல்லியலாளர் தலைமையில் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்டார் ஜான் மார்ஷல். இரண்டு மேடுகள் அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கிடையில் ஹரப்பாவுக்கு தெற்கே இருந்த மொஹஞ்சதாரோ பகுதியும் கவனத்தைக் கவர்வதாக இருந்தது. அந்தப் பகுதியில் ஆய்வு நடத்த ஆர்.டி.பந்தர்கர், ஆர்.டி.பானர்ஜி, எம்.எஸ்.வாட்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 1923இல் ஆர்.டி. பானர்ஜி ஜான் மார்ஷலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மொஹஞ்சதாரோ மிகப் பழமையான ஓர் இடம் எனக் குறிப்பிட்ட அவர், இங்கு கிடைத்த சில தொல்பொருட்கள் ஹரப்பாவில் கிடைத்த பொருட்களுடன் ஒத்துப் போவதாகக் குறிப்பிட்டார். பிறகு, எம்.எஸ்.வாட்ஸும் இரு இடங்களிலும் கிடைத்த சில முத்திரைகள், குறியீடுகள் ஆகியவை ஒத்துப்போவதாக ஜான் மார்ஷலுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, இரு இடங்களிலும் கிடைத்த தொல்பொருட்கள் குறித்த தகவல்களை, ஓரிடத்திற்குக் கொண்டுவரச் செய்து பானர்ஜி, சஹானி போன்றோரையும் இணைத்து விவாதித்தார்.

அந்த விவாதத்தில் சில விஷயங்கள் அவருக்குத் தெளிவாகப் புரிந்தன. அதாவது, ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் ஒரே தொல்லியல் தலத்தின் வெவ்வேறு இடங்கள். தவிர, இந்த இடங்கள் இந்தியாவில் இதுவரை கிடைத்த தொல்லியல் தலங்களிலேயே பழமையானவை, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

அதையடுத்துத்தான் புகைப்படங்களோடு The Illustrated London Newsக்கு எழுதினார். அந்த முடிவுகள்தான் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இதழில் வெளியாயின.

இதற்குப் பிறகு 1924 - 25 ஆண்டுகளில் முறைப்படியான அகழாய்வுகள் அங்கு துவங்கின. 1931க்குள் மொஹஞ்சதாரோவின் பெரும் பகுதியான தொல்லியல் தலங்கள் அகழாய்வு செய்யப்பட்டுவிட்டன. இந்த அகழாய்வு, இந்த வரலாற்றின் துவக்ககாலம் குறித்த காலக் கணிப்பை மாற்றியமைக்க ஆரம்பித்தது.

சிந்து சமவெளியும் திராவிடப் பண்பாடும்

சிந்து சமவெளி அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு: புதிரின் சாவி எங்கே இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

"இந்தக் கண்டுபிடிப்பு சிந்துவெளிப் பண்பாட்டின் ஆழத்தையும் அகலத்தையும் மதிப்பிடும்படியான தடயங்கள் பலவற்றை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரங்கள், அந்தப் பண்பாட்டின் பரந்த பகுதி முழுவதும் ஒரே நீள - அகல - பருமன் விகிதத்தில் இருந்த மிகத் துல்லியமான செங்கற்கள், விரிவான வடிகால் வசதிகள், பெரும் குளியல் இடம், தானியக் களஞ்சியம், மென் கற்களால் ஆன முத்திரைகள், செதுக்கப்பட்ட உருவங்கள், குறியீடுகள், மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வரிவடிவங்கள் என்று பல்வேறு அகழாய்வுப் பொருட்களின் மூலமாக வெளிப்பட்ட சிந்துவெளிப் பண்பாடு பண்டைய காலத்தின் புதிய உலகம்" என இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைத் தனது Journey of a Civilization: Indus to Vaigai நூலில் குறிப்பிடுகிறார் சென்னையில் உள்ள Indus Research Centre-இன் ஆலோசகரும் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன்.

தற்போது சிந்து சமவெளி, திராவிடப் பண்பாட்டோடு இணைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. இதற்கான விதையை விதைத்தவர், வங்காளத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனிதி குமார் சாட்டர்ஜி.

சிந்துவெளிப் பண்பாடு கண்டறியப்பட்ட சில ஆண்டுகளிலேயே, இந்தப் பண்பாட்டைக் குறிப்பிட 'ஆரியர் அல்லாத', 'ஆரியர் காலத்திற்கு முற்பட்ட' என்ற சொற்கள் பயன்பாட்டிற்கு வர ஆரம்பித்தது. சிந்து சமவெளி குறித்த தகவல்கள் வெளியான சில மாதங்களிலேயே சுனிதி குமார் சாட்டர்ஜி, தி மாடர்ன் ரிவ்யூ(The Mordern Review) இதழில், Dravidian Origin and the Beginnings of Indian Civilization என்ற கட்டுரையை எழுதினார். இந்தக் கட்டுரை சிந்து சமவெளி நாகரீகத்தையும் திராவிடர்களையும் தொடர்புபடுத்தியது.

அதற்குப் பிறகு, மும்பை புனித சேவியர் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய ஹென்றி ஹீராஸ், சிந்து சமவெளி கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை ஆராய்ந்து, அதை திராவிட மக்களோடு தொடர்புபடுத்திக் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன், வேதகால நாகரீகமும் சிந்து வெளி நாகரீகமும் வேறுபட்டவை என்றதோடு, சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழியே என்று நிறுவப் பல சான்றுகளை முன்வைத்தார்.

சிந்து சமவெளி அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு: புதிரின் சாவி எங்கே இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

"அதற்கு முன் இந்திய வரலாற்றின் துவக்கமாகக் கருதப்பட்டவற்றை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றியமைத்தது. அந்த வகையில் இது மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு. வேத காலத்திற்குப் பிந்தைய வரலாறு என்றால் பௌத்தத்தைப் பற்றி, அதன் கட்டடக் கலைகளைப் பற்றித்தான் பேசினார்கள். ஆனால், மிகப் பெரிய நாகரீகத்தைக் கண்டுபிடித்து, அந்த நாகரீகம் வேத நாகரீக காலத்திற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என நிறுவினார் ஜான் மார்ஷல். இது இந்திய வரலாறு புரிந்துகொள்ளப்படும் விதத்தையே மாற்றியது" என்கிறார் இந்திய தொல்லியல் கழகத்தின் இயக்குநரான அமர்நாத் ராமகிருஷ்ணா.

சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டது, அதற்குப் பிறகு தொடர்ந்த ஆய்வுகள், விவாதங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஜான் மார்ஷலின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்.

"சிந்து சமவெளி கண்டுபிடிப்பு, அதற்கு முன்பு நாம் அறிந்திருந்த வரலாற்றைப் புரட்டிப்போட்டது. சிந்து சமவெளியை ஜான் மார்ஷல் கண்டுபிடித்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்பதை வைத்துதான் இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஷெர்லக் ஹோம்ஸை போல ஜான் மார்ஷல் செயல்பட்டார். ஹரப்பாவுக்கும் மொஹஞ்சதாரோவுக்கும் இடையில் சுமார் 500 கி.மீ. தூரம் இருந்தது. ஆனால், இந்த இரு இடங்களும் தனித் தனியானவையல்ல, ஒரே கலாசாரத்தின் இருவேறு பகுதிகள் என்பதோடு இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில், பொதுவான ஒரு வர்த்தக மொழி இருக்கிறது எனப் புரிந்துகொண்டார். இந்தப் புரிதலின் அடுத்த கட்டமாக, இது ஒரு நாகரீகம் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்தப் புரிதலின் மூலம்தான் அவர் வேறுபட்டு நிற்கிறார். அவர் அந்த முடிவுக்கு வந்திருக்காவிட்டால், சிந்துவெளிப் பண்பாடு என்பது கிடையாது. இந்தப் புரிதல் வந்ததால்தான் ஜான் மார்ஷல் நினைவுகூரத் தக்கவராக இருக்கிறார்," என்கிறார் அவர்.

சங்க இலக்கியத்தோடு ஒத்துப்போகும் சிந்து சமவெளி வாழ்க்கை

சிந்து சமவெளி அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு: புதிரின் சாவி எங்கே இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

தற்போது தமிழ்நாடு அரசு ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்பதாக அறிவித்திருக்கிறது.

"இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்தியாவில் இப்போது ஏதாவது ஒரு இடத்தில் சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள், ஏதாவது ஒரு இடத்தில் ஜான் மார்ஷலின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்றால் அது தமிழ்நாடுதான். அந்த நாகரீகம் நம்முடையது என தமிழ்நாட்டில் நினைக்கிறார்கள்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில், காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளியில் இருந்த வாழ்க்கையல்ல. ஆனால், சங்க இலக்கியங்களில் காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளி வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது. சிந்து சமவெளி ஒரு புதிர் என்றால், தமிழ்நாடு அதன் சாவி.

தமது கலாசாரத்திற்கு பங்களிப்பு செய்த யாரையும் தமிழ்நாடு மறக்காது. ஜான் மார்ஷலை நினைவுகூர்வதன் மூலம் இந்திய துணைக் கண்ட வரலாற்றின் மீது தனக்குள்ள உரிமையை தமிழ்நாடு உறுதி செய்கிறது" என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்.

சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்னும் சில தீராத புதிர்கள் இருக்கின்றன. அதாவது, சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதில் விவாதம் நீடிக்கிறது.

அதேபோல, சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகள், ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது சித்திர எழுத்துகளா அல்லது வெறும் குறியீடுகளா என்ற கேள்விகள் இன்னமும் விவாதிக்கப்பட்டுவருகின்றன.

பஹதா அங்கமாலி முகோபத்யாய் போன்றவர்கள், சிந்துவெளிக் குறியீடுகள் வர்த்தகக் குறியீடுகள் என்றும் அங்கு பேசப்பட்ட மொழி தொல் திராவிட மொழி என்றும் கருதுகிறார்கள். ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி வரிவடிவம் திராவிட மொழியின் ஒரு தொல்வடிவம் எனக் கருதினார். ஆனால், இந்தப் புதிர், எல்லோரும் ஏற்கும் வகையில் ஒரு முடிவுக்கு வரவில்லை.

Deciphering the Indus Script என்ற நூலை எழுதியவரும் 50 ஆண்டுகளாக சிந்துவெளிக் குறியீடுகள் குறித்து ஆய்வு செய்தவருமான ஃபின்லாந்தை சேர்ந்த அஸ்கோ பர்போலா, 'முற்றிலும் வித்தியாசமான ஒரு தீவிர ஆதாரம் கிடைத்தால் தவிர, சிந்துவெளி எழுத்துகளை முழுவதுமாக வாசித்து அறிவது அனேகமாக முடிவு பெறாததாகவே' இருக்கும் என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)