இஸ்ரேல் - ஹெஸ்பொலா மோதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அமெரிக்கா - திரைமறைவில் என்ன நடக்கிறது?

இஸ்ரேல்-ஹெஸ்பொலா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டாம் பேட்மேன்
    • பதவி, வெளியுறவுத்துறை செய்தியாளர், ஐ.நா.

காஸாவில் நடைபெறும் போர், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பிற இடங்களுக்கு பரவிடாமல் தடுப்பேன் என்று அமெரிக்க அதிபர் பைடன் உறுதியை அளித்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் முடிவடைகிறது. அமெரிக்க அதிபராக ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆற்றிய கடைசி உரையில், இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல் குறித்து பேசிய போது அதே உறுதியை மீண்டும் அளித்தார்.

“ராஜிய ரீதியிலான ஒரு தீர்வு இப்போதும் சாத்தியம் தான். சொல்லப்போனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதுதான் ஒரே வழி” என்றார் பைடன். “முழு வீச்சிலான போர் யாருக்கும் நல்லதல்ல” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இஸ்ரேல்-லெபனான் சிக்கல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையே நீடிக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்து, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற பைடனின் கோரிக்கை அரங்குகளில் மட்டுமே ஒலித்தது, களத்தில் கேட்கப்படவே இல்லை. அதே போன்று தான், இந்த கோரிக்கையும் அரங்கில் மட்டுமே கேட்கப்படுகிறது.

திங்கட்கிழமை, இஸ்ரேல் லெபனான் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் தாக்குதல்களில் 500 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா, அந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த வாரம் லெபனானில் நடந்த தொடர் பேஜர் வெடிப்புகளால் பலத்த சேதங்களை சந்தித்த ஹெஸ்பொலா, வடக்கு இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி வீடுகளை நொறுக்கி, தெருக்களைப் பற்றி எரியவைத்துள்ளது.

அமெரிக்கா, அந்த பிராந்தியத்தில் தனக்கு இருக்கும் முக்கியமான நட்பு நாடான இஸ்ரேலை மீண்டும் கட்டுப்படுத்த நினைக்கிறது. தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டாம் என்றும் ஒரு தூதாண்மை முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வற்புறுத்துகிறது. ஆனால் அப்படி ஒரு முடிவை எடுக்க இரு தரப்பும் விரும்பவில்லை அல்லது எடுப்பதற்கான திறன் இல்லை.

இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானின் சேதமடைந்த வீடுகள்

அமெரிக்கா கூறுவதை இஸ்ரேல் கேட்குமா?

ஹெஸ்பொலாவை வீழ்த்தி, தனது நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. காஸாவில் பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்கவே கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலை தாக்கி வருவதாக ஹெஸ்பொலா கூறி வருகிறது. இஸ்ரேல்-ஹெஸ்பொலா விவகாரத்தில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு தீர்மானங்களுக்கு வலுவளிக்கும் வகையில், பல மாதங்களாக அமெரிக்க தூதுவர் அமோஸ் ஹாக்ஸ்டைன் இருதரப்புக்கும் இடையே நடத்திய பேச்சுவார்த்தைகள் ஒன்றுமில்லாமல் போய்விட்டன.

ஒரு புறம், அமைதி நிலவ வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பைடன் பேசிக் கொண்டிருக்கும் போது மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஹெஸ்பொலாவை தொடர்ந்து தாக்குவோம் என்று தனது எக்ஸ் தளத்தில் வீடியோவை பதிவிடுகிறார். “தனது வீட்டு வரவேற்பறையில் ஏவுகணையும் கொல்லைப்புறத்தில் ராக்கெட்டும் கொண்டுள்ள எவருக்கும் வீடே இருக்காது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஹெஸ்பொலாவை தாக்குவதற்கான இஸ்ரேலின் உரிமையை வெள்ளை மாளிகை ஆதரிப்பதாக கூறுகிறது. ஆனால், இஸ்ரேல் தலைமையுடன் அரசியல் உறவுகள் சுமூகமாக இல்லை என்பது கடந்த சில வாரங்களில் மீண்டும் வெளிப்படையாகத் தெரிகிறது. பேஜர் வெடிப்பு தாக்குதல்கள், அதன் பின் நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் முழு அளவிலான போருக்கு வழி வகுக்குமோ என்ற கவலை அளிக்கிறது.

கடந்த வாரத்தில் சிக்கல் எழுந்த போது கூட, பைடன் மற்றும் நெதன்யாஹு இடையில் எந்தவித தகவல் பரிமாற்றம் குறித்த அறிவிப்புகளும் வெளிவரவில்லை. அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதல்களுக்கு பிறகு, அமெரிக்க செயலர் பிளிங்கன் அந்த பிராந்தியத்துக்கு பத்தாவது முறையாக சென்றார். ஆனால் முதல் முறையாக இஸ்ரேலுக்கு அவர் செல்லவில்லை.

இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு

அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாகக் கூறி, இஸ்ரேல் மீது தாக்கம் செலுத்த வெள்ளை மாளிகையால் இயலவில்லை என்று நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் விமர்சகர்கள், கூறி வருகின்றனர். ஆனால் இதை மறுக்கும் அமெரிக்கா இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உதவுவது தனது கடமை என்று கூறுகிறது.

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 11 மாதங்களாக நடைபெற்று வரும் எல்லை தாண்டிய தாக்குதலில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படுவதை நோக்கி நகர்வது தான் என்று பைடன் எப்போதுமே நம்பிவந்துள்ளார். ஆனால் போர்நிறுத்தம் மிக கடுமையாக தடுத்து நிறுத்தப்படுகிறது. இரு தரப்பிலும் போர் நிறுத்தத்துக்கான விருப்பம் இருப்பதாக அறிகுறிகள் எதுவும் இல்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இதை எட்டுவதற்கான ‘அரசியல் விருப்பம்’ இல்லை பிளங்கன் சுட்டிக்காட்டியிருந்தார்.

தான் மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் பலனளிக்கப்போவதில்லை என்பதை அமெரிக்கா மறுக்கிறது. தனது பதவிக்காலம் முடிவடைய நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் பைடன், காஸாவில் போரை நிறுத்த ஒரு முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையை கைவிடவில்லை என்று கூறுகிறது. “இல்லை, அவர் நிச்சயமாக கைவிடவில்லை” என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்ஜேக் சுல்லிவன் கூறுகிறார்.

“இதில் சிரமங்களும் பின்னடைவுகளும் இருந்தன. (இஸ்ரேல்) பிரதமரை சம்மதிக்க வைப்பதில் சில சவால்கள் இருந்தன. ஹமாஸ் தலைவர் சின்வரை சம்மதிக்க வைப்பதில் சவால்கள் இருந்தன. ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வது என உறுதியாக இருக்கிறோம்” என்று சுல்லிவன் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்தார்.

“நியூ யார்க் நகரில் இந்த வாரம், பிற தலைவர்களுடன் கலந்து பேசி காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் குறித்த ஒரு ஒப்பந்தம் ஆகியவற்றை ஏற்படுத்த முயற்சி செய்வார். அதை விட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழு வீச்சிலான போரை தடுத்து நிறுத்தவும் முயல்வார்” என்றார்.

இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன்

திரைமறைவில் என்ன நடக்கிறது?

நியூ யார்க்கில் திரைமறைவில், ராஜதந்திர நடவடிக்கைகள் பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு மூத்த அரசு அதிகாரி, அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதலை தீர்ப்பதற்கான திட்டங்களை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

“சில தீர்க்கமான யோசனைகள் உள்ளன, அவற்றை நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் இந்த வாரம் ஆலோசித்து, இந்த விவகாரத்தில் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

அந்த ‘தீர்க்கமான யோசனைகள்’ என்னவென்று கேட்டதற்கு பதிலளிக்காத அவர், அமெரிக்கா ஹெஸ்பொலாவுடன் நேரடியாக பேசாத போதும், நியூ யார்க்கில் கூடியுள்ள அதன் நட்பு நாடுகள் சில பேசுகின்றன என்று சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு, “ஹெஸ்பொலா என்ன நினைக்கிறது என்பது குறித்து மேலும் தெளிவான பார்வை இருக்கலாம். அதன் மூலம் இந்த யோசனைகளை பரிசோதித்துப் பார்க்கலாம்” என்றார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை அவர் வலியுறுத்தினார். ஹெஸ்பொலாவுடனான மோதலை தீவிரப்படுத்துவது மூலம், ஹெஸ்பொலாவை ஒரு ராஜ தந்திர ஒப்பந்ததுக்கு கட்டாயப்படுத்தலாம் என்றும், அதன் மூலம் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிலைமை கட்டுக்குள் வரும் என்றும் இஸ்ரேல் நம்புவதாக கூறப்படுகிறது. இந்த உத்திக்கு ‘தீவிரப்படுத்துதல் மூலம் மட்டுப்படுத்துதல்’ என்று பெயர்.

“எனக்கு தெரிந்தவரையில், குறைந்தபட்சம் சமீபக் காலத்தில், எந்தவொரு தீவிரப்படுத்தும் நடவடிக்கையும் மட்டுப்படுத்துதல் அல்லது நிலைமை சீராகும் நிலைக்கு இட்டுச் சென்றதாக நினைவில்லை” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)