WWE, அழகிப் போட்டி, ரியல் எஸ்டேட் என பிசியாக இருந்த டிரம்ப் அரசியலில் நுழைந்தது எப்படி?

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அரசியலுக்கு வரும் முன்பாக அமெரிக்காவின் மிகவும் பகட்டான கோடீஸ்வரராக இருந்தார்.
டிரம்ப் நியூயார்க்கில் ரியல் எஸ்டேட் ஜாம்பவானாக வலம் வந்தார்.
அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முந்தைய 2015 முதல் 2016 வரையிலான பத்தாண்டுகளில் அவரது வாழ்க்கை பற்றி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரவலாக பகிரப்பட்டது.
எனவே அவர் பிரபலமான பிம்பமாக மாறினார். அவரது செல்வாக்கு மற்றும் யதார்த்தமான பிரசார பாணி, அனுபவம் வாய்ந்த பல அரசியல்வாதிகளை தோற்கடிக்க உதவியது. ஆனால் அவரது சர்ச்சை நிறைந்த பதவிக்காலம் அடுத்த தேர்தலில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மிக விரைவில் அவரை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றியது.
ஆனாலும் சளைக்காமல் போராடிய டிரம்ப் தடைகளைத் தாண்டி அரசியல் பிரவேசம் செய்து, 78 வயதில் மீண்டும் அதிபராகியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ரியல் எஸ்டேட் அதிபரின் வாரிசு

பட மூலாதாரம், Getty Images
நியூயார்க் ரியல் எஸ்டேட் அதிபர் பிரெட் டிரம்பின் (ஃபிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப் சீனியர்) நான்காவது மகன் டொனால்ட் டிரம்ப்.
டிரம்ப் 13 வயதில், பள்ளியில் தவறான நடத்தைகளில் ஈடுபட்டதால் ராணுவ அகாடமிக்கு அனுப்பப்பட்டார். குடும்பத்தில் வசதி இருந்த போதிலும், அவர் தனது தந்தையின் நிறுவனத்தில் அடிமட்டப் பணியாளராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் பட்டம் பெற்றார்.
அவரது மூத்த சகோதரர் ஃப்ரெட் (ஃபிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப் ஜூனியர்) விமானியாக முடிவு செய்த பிறகு, தந்தையின் தொழிலை பார்த்துக் கொள்ளும் இடத்திற்கு டிரம்ப் வந்தார்.
டிரம்பின் சகோதரர் ஃப்ரெட் டிரம்ப் குடிப்பழக்கத்தால் 43 வயதில் உயிரிழந்தார். இந்த காரணத்தினால்தான் டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும் மது மற்றும் சிகரெட்டைத் தவிர்த்தார்.
தந்தையின் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு தனது தந்தையிடமிருந்து சிறிய தொகையை (1 மில்லியன் டாலர்) கடனாக பெற்று ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டதாக கூறுகிறார் டிரம்ப் .
நியூயார்க் நகரத்தில் தனது தந்தையின் பரந்த அளவிலான குடியிருப்பு மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிட டிரம்ப் அவருக்கு உதவினார், மேலும் 1971ஆம் ஆண்டில் அவர் வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், அதை `டிரம்ப் அமைப்பு’ என்று மறு பெயரிட்டார்.
கடந்த 1999ஆம் ஆண்டில், அவரது தந்தை காலமானார். டிரம்ப், "தந்தை எனது உத்வேகம்" என்று குறிப்பிடுவது வழக்கம்.
`டிரம்ப்’ என்னும் பிராண்ட்

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், அவரது குடும்ப வணிகம், புரூக்ளின் மற்றும் குயின்ஸில் உள்ள குடியிருப்பு திட்டங்களில் இருந்து முன்னேறி பளபளப்பான மன்ஹாட்டன் திட்டங்களாக மாறியது.
புகழ்பெற்ற ஐந்தாவது அவென்யூ, டிரம்ப் டவரின் இல்லமாக மாறியது, இது அவரின் மிகவும் பிரபலமான சொத்து. பல ஆண்டுகளாக இங்குதான் அவர் வசிக்கிறார்.
`டிரம்ப்’ என்ற பிராண்ட் பெயரைக் கொண்ட பிற சொத்துகள், கேசினோக்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஹோட்டல்கள் - அட்லாண்டிக் சிட்டி, சிகாகோ மற்றும் லாஸ் வேகாஸ் முதல் இந்தியா, துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் வரை அமைக்கப்பட்டன.
டிரம்ப் பொழுதுப்போக்கு துறையிலும் கால் பதித்து வெற்றி கண்டார். பொழுதுபோக்கு உலகில் ஒரு நட்சத்திரமாக அவரது எழுச்சி தொடர்ந்தது. அழகுப் போட்டிகள் நடத்தும் உரிமையாளராக, மிஸ் யுனிவர்ஸ், மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் யுஎஸ்ஏ ஆகியவற்றை நடத்துவதில் வெற்றி பெற்றார். பின்னர் என்பிசி சேனலின் ரியாலிட்டி நிகழ்ச்சியான `தி அப்ரெண்டிஸின்’ (The Apprentice) தொகுப்பாளராகவும் இருந்தார்.
14 சீசன்களுக்கு மேல், அப்ரண்டிஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அவரது வணிக சாம்ராஜ்யத்தில் நிர்வாக ஒப்பந்தத்திற்காக போட்டியிட்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்திய "You're fired!" என்னும் வரி "டொனால்ட்" என்ற பெயரை பிரபலப்படுத்தியது.
டிரம்ப் பல புத்தகங்களை எழுதியுள்ளார், திரைப்படங்கள் மற்றும் மல்யுத்த நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். பானங்கள் முதல் ஆடைகள் வரை பல பொருட்களின் வணிகத்தில் ஈடுபடுள்ளார்.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அவரது நிகர சொத்து மதிப்பு குறைந்துள்ளது, ஃபோர்ப்ஸ் கூற்றுபடி, டிரம்பின் நிகர சொத்து மதிப்பு சுமார் $4 பில்லியன்.
டிரம்ப் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் வணிக திவால் நோட்டீஸ்களை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது பல வணிக முயற்சிகள் சரிவை சந்தித்தன.
கூடுதலாக, அவர் தனது வரிப் பதிவுகளைப் பற்றிய விசாரணைகளை தவிர்த்துவிட்டார். டிரம்ப் பல ஆண்டுகளாக வருமான வரி ஏய்ப்பு செய்தார் என்றும், நிதி இழப்புகளை சந்தித்தார் என்றும் 2020-ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் குடும்பம்
டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது வெளியில் விவாதிக்கப்பட்டது, பரவலாகப் பேசப்பட்டது.
அவரது முதல் மனைவி இவானா ஜெல்னிகோவா மிகவும் பிரபலமானவர். அவர் விளையாட்டு வீராங்கனையும் மாடலும் ஆவார். டிரம்ப்-இவானா தம்பதிக்கு டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் ஆகிய மூன்று பிள்ளைகள். 1990-ஆம் ஆண்டில் அவர்களுக்கு விவாகரத்தானது.
விவாகரத்துக்கான அவர்களின் சர்ச்சைக்குரிய சட்டப் போராட்டம் ஊடகங்களில் கிசுகிசு கட்டுரைகளில் இடம்பிடித்தது. மறைந்த இவானா, டிரம்ப் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அந்த கருத்தில் இருந்து அவர் பின்வாங்கினார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான காட்சிகள், டிரம்பைப் பற்றி வெளியான புதிய திரைப்படத்தில் இடம்பெற்றது.
டிரம்ப் 1993-ஆம் ஆண்டில் நடிகை மார்லா மேப்பிள்ஸை மணந்தார். குழந்தை (டிஃப்பனி) பிறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1999-ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் தற்போதைய மனைவி முன்னாள் ஸ்லோவேனியா மாடலான மெலனியா நாஸ். அவர்கள் 2005-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் மகன் பரோன் வில்லியம் டிரம்ப் சமீபத்தில் 18 வயதை நிறைவு செய்தார்.
பாலியல் அத்துமீறல் மற்றும் திருமணம் தாண்டிய உறவு தொடர்பான குற்றச்சாட்டுகள் டிரம்பை பல காலமாக பின்தொடர்கின்றன.
எழுத்தாளர் ஈ ஜீன் கரோலின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டைப் டிரம்ப் நிராகரித்ததன் மூலம், அவரை அவதூறு செய்ததாக இரண்டு வெவ்வேறு ஜூரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிட்டனர். கரோலினுக்கு $88 மில்லியன் தொகையை டிரம்ப் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர். ஆனால் டிரம்ப் மேல்முறையீடு செய்தார்.
2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார்.
மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
அரசியல் குறித்த பார்வை
1980 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், 34 வயதான டிரம்ப் அரசியலை "மிகவும் சராசரி வாழ்க்கை" என்று விவரித்தார். "மிகவும் திறமையான மக்கள்" அதற்கு பதிலாக வணிக உலகத்தை தேர்வு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
1987 ஆம் ஆண்டு அவர் அதிபர் பதவிக்கான முயற்சியை கிண்டல் செய்தார்.
ஆனால் திருப்புமுனையாக, 2000-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் நுழைய நினைத்தார். அடுத்த ஆண்டு தேர்தலில் ரிஃபார்ம் பார்ட்டியின் உறுப்பினராகவும் போட்டியிட நினைத்தார். பின்னர் மீண்டும் 2012-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி பக்கம் சாய்ந்தார்.
பராக் ஒபாமா அமெரிக்காவில்தான் பிறந்தாரா? என்று அவர் பிறப்பிடத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்திய சதிக் கோட்பாட்டை (Birtherism) மிகவும் வெளிப்படையாக ஆதரித்தவர்களில் டிரம்ப் ஒருவராக இருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை, 2016 வரை அது பொய் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஜூன் 2015 இல் அதிபர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை முதன்முதலில் அறிவித்தபோது "அமெரிக்கர்களின் கனவுகளை மீண்டும் பெரிதாகவும் சிறப்பாகவும் கொண்டு வருவேன்" என்று உறுதியளித்தார்.
அவரது அற்புதமான உரையின் போது, அவர் தனது செல்வம் மற்றும் பொருளாதார வலிமையைப் பற்றி பெருமையாகக் கூறினார், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் அமெரிக்காவிற்கு கடத்துவதாக மெக்சிகோ மீது குற்றம் சாட்டினார். எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு மெக்ஸிகோவை பணம் கொடுக்கச் செய்வதாக உறுதியளித்தார்.
தீவிர ஆதரவாளர்கள் ஒருபுறம், கடுமையான எதிர்ப்பாளர்கள் மறுபுறம் என விவாத மேடை ஊடக கவனத்தை பெற்றது.
விவாத மேடையில் ஆதிக்கம் செலுத்தும் காட்சிகள் மற்றும் சர்ச்சை கிளப்பும் கொள்கைகள் ஆகியவை அபிமான ரசிகர்களையும் கடுமையான விமர்சகர்களையும் சம அளவில் ஈர்த்தது, அத்துடன் பெருமளவில் ஊடக கவனத்தையும் ஈர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
'அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றுவோம்' எனும் பிரசார முழக்கத்தை எழுப்பினார். , ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை எதிர்கொள்வதற்கு குடியரசுக் கட்சியில் இருந்த கடந்த கால போட்டியாளர்களை அவர் எளிதாக ஒன்றிணைத்தார்.
பாலியல் குற்றம் பற்றி தற்பெருமை பேசும் ஆடியோ பதிவு வெளியானது உட்பட புதிய பிரசாரம் சர்ச்சையில் சிக்கியது. அவர் பொதுத் தேர்தல் முழுவதும் கருத்துக் கணிப்புகளில் பின் தங்கியிருந்தார்.
ஆனால் டிரம்ப் ஒரு மூத்த அரசியல்வாதிக்கு எதிரான அவரது அற்புதமான வெற்றியின் மூலம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கினார். அவர் 2017-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதியன்று அமெரிக்க 45வது அதிபராக பதவியேற்றார்.
அதிபர் பதவி

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் பதவியேற்ற முதல் சில மணிநேரங்களில் இருந்தே, அவர் நிகரற்ற நாடகத்தனமான செயல்களை மேற்கொண்டார். வெளிநாட்டு தலைவர்களுடன் வெளிப்படையாக மோதினார்.
பெரியளவிலான காலநிலை மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்து விலகினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதித்தார். பிற கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார்.
சீனாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கினார். வரிவிதிப்புகளில் மாற்றம் செய்தார். அவர், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகளை மறுவடிவமைத்தார்.
ஒரு சிறப்பு ஆலோசகர் 2016 இல் ரஷ்யாவிற்கும் டிரம்ப் பிரசாரக் குழுவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கூறுகளை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்தார். கணினி ஹேக்கிங் மற்றும் நிதிக் குற்றங்கள் போன்ற குற்றங்களில் 34 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். ஆனால் டிரம்ப் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. விசாரணையில் ரஷ்யா மற்றும் டிரம்ப் பிரசாரக் குழு இடையே தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லப்பட்டது.
ஆனால் விரைவில், வரலாற்றில் டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட மூன்றாவது அமெரிக்க அதிபராக மாறினார். எதிர்க்கட்சி போட்டியாளரான ஜோ பைடன் மீது அவதூறுகளை கூற வெளிநாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்திய பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் குடியரசுக் கட்சி தலைமையிலான செனட் அவை அவருக்கு ஆதரவாக இருந்தது.
2020 ஆண்டு தேர்தலின் போது கொரோனா தொற்றுநோய் சூழல் உருவானது.
தொற்றுநோயால் ஏற்பட்ட இறப்புகள் அதிகளவில் இருந்ததால், அமெரிக்கா நெருக்கடியை சந்தித்தது. இதனால் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். உடலில் கிருமிநாசினியை செலுத்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிக்கப்படுமா என்பது பற்றிய ஆராய்ச்சியை பரிந்துரைப்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அவர் விமர்சிக்கப்பட்டார்.
டிரம்புக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அக்டோபரில் அவர் பிரசாரப் பணியில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அந்த தேர்தலில், அவர் பைடனிடம் 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
நவம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 க்கு இடையில் தேர்தல் மோசடி மற்றும் வாக்குகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்; இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் தோல்வியடைந்தன.
முடிவுகளை ஏற்க மறுத்து, டிரம்ப் ஜனவரி 6 ஆம் தேதி வாஷிங்டனில் ஆதரவாளர்களைத் திரட்டினார். பைடனின் வெற்றியை காங்கிரஸ் முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் ஆதரவாளர்களை கேபிட்டல் அலுவலகத்தில் ஒன்றிணைய வலியுறுத்தினார்.
அந்த பேரணி ஒரு கலவரமாக மாறியது. அவரது அரசியல் வரலாற்றின் இரண்டாவது பெரிய குற்றச்சாட்டு எழ அந்த நிகழ்வு வழிவகுத்தது.
அரசியல் மறுபிரவேசம்
டிரம்பின் அரசியல் வாழ்க்கை கேபிட்டல் நிகழ்வுக்கு (Capitol attack) பிறகு முடிவுக்கு வந்துவிடும் என்று பலர் நினைத்தனர்.
அவரின் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சபதம் செய்தனர். அவரது நெருங்கிய கூட்டாளிகள் கூட அவரை பகிரங்கமாக ஒதுக்கிவிட்டனர்.
அவர் அதிபர் பதவியேற்பு விழாவைத் தவிர்த்துவிட்டு, தனது குடும்பத்துடன் ஃபுளோரிடாவிற்கு சென்றார். ஆனால் அவருக்கு ஆதரவாக இருந்த விசுவாசமான ஒரு சிலரால், குடியரசுக் கட்சியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டார்.
நீதிமன்றத்திற்கு அவர் பரிந்துரைத்த மூன்று வலதுசாரி நீதிபதிகள் கருக்கலைப்பு உரிமை விவகாரத்தில் ஒரு பழமைவாத கருத்தை உறுதிப்படுத்தினர்.
2022 இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் மோசமான தோல்விக்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போதிலும், டிரம்ப் அதிபருக்கான போட்டியில் முன்னேறினார்.
அவரது கட்சியின் முன்னணி வேட்பாளராக ஆனார்.
அவரது முன்னாள் துணை அதிபர் உட்பட பலர் அவருக்கு எதிராக சவால் விடுத்தனர். ஆனால் டிரம்ப் தடைகளை முறியடித்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார். விவாத மேடையில் பைடனை வெற்றிகரமாக எதிர்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் தேர்தலில் போட்டியிடுகையில், நான்கு கிரிமினல் வழக்குகளில் 91 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்த வழக்குகளை தாமதப்படுத்தும் அவரது உத்தி பெரும்பாலும் வெற்றி பெற்றது.
ஜூலை 13-ஆம் தேதியன்று, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் ஒரு பிரசார பேரணியின் போது 20 வயது இளைஞர் ஒருவர் டிரம்பை கொல்ல முயன்றார். அதில், டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டது.
சில நாட்களுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் வெகுவாக புகழப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அதிகாரப்பூர்வமாக தேர்வானார்.
அதிபர் வேட்பாளராக டிரம்ப் இம்முறையும் பைடனை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
பைடன் வரலாற்று ரீதியாக செல்வாக்கற்ற அதிபர். அவரின் பதவிக் காலம் பல்வேறு பாராட்டுகளையும் சில விமர்சனங்களையும் சந்தித்தது. கொரோனா சூழலுக்கு பிந்தைய பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் அவருக்கு சாதகமாக இருந்தன.
ஆனால் அதிக பணவீக்கம், குடியேற்ற கொள்கைகள், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் குழப்பம் நிலவியது.
பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்கி தனது துணை அதிபர் கமலா ஹாரிஸை ஆதரிக்க தொடங்கியதில் இருந்து, அரசு நிர்வாகத்தின் தோல்விகளுக்கு கமலா ஹாரிஸை காரணம் காட்டி டிரம்ப் விமர்சித்தார்.
கமலா ஹாரிஸ் லட்சக்கணக்கான டாலர்களை நன்கொடையாக திரட்டியிருந்தாலும், இருதரப்புக்குமான போட்டி மதில் மேல் பூனை என்ற நிலையில் தான் உள்ளது என்பதை தேசிய கருத்துக்கணிப்புகள் பிரதிபலிக்கின்றன.
அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நவம்பர் 5-ம் தேதி "நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேதி" என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












