யானை - மனித மோதலில் நாட்டிலேயே கோவை முதலிடம் - என்ன காரணம்?

இந்தியாவிலேயே அதிகளவில் யானை-மனித மோதல் நடக்கும் கோவை
    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

“காலம் காலமாக நாங்கள் குடியிருக்கும் காடுதான் இது. எங்கள் முன்னோர் வாழ்ந்த காலத்தில், எங்களுக்கும் யானைகளுக்கும் இடையே இவ்வளவு மோதல்கள், உயிர் பலிகள் இருந்ததில்லை.

கடந்த வாரத்தில் என் அண்ணனின் மகன் தேவராஜ், இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றபோது, யானை தூக்கி அடித்ததில் அங்கேயே உயிரிழந்துவிட்டான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள்."

வனத்துறை ரூ.10 லட்சம் தருவதாகக் கூறினாலும், 32 வயதிலேயே உயிரிழந்த தேவராஜின் குடும்பத்திற்கு "ஏற்பட்டுள்ள இழப்பை அது ஈடு செய்யுமா?" என்று கேள்வி எழுப்புகிறார் அட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்.

கோவை வனக்கோட்டத்தில் அமைந்திருக்கும் அட்டுக்கல் என்ற இந்த இருளர் பழங்குடி கிராமத்தில் இத்தகைய சம்பவம் நடப்பது இது முதல்முறையல்ல.

இதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் இரு மாதங்களுக்கு முன்னரும், இரு ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரும் இப்படி யானை தாக்கி இறந்ததாக பிபிசி தமிழிடம் வேதனையுடன் கூறினார் ராஜேந்திரன்.

இந்தப் பிரச்னை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், யானை - மனித மோதலைக் குறைக்க, இடத்திற்கு ஏற்றவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் யானை வழித்தட வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழித்தடங்களை இறுதி செய்வதில் தடங்கல் ஏதுமில்லை என்றும் அது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்படும் என்றும் கூறினார்.

 வாட்ஸ் ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

12 ஆண்டுகளில் 147 மனிதர்கள், 176 யானைகள் பலி

கடந்த பத்து ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்தில் யானைகள் தாக்கி 164 பேர் இறந்ததாகவும், இயற்கை மரணம் உட்படப் பல்வேறு காரணங்களால் 200க்கும் மேற்பட்ட யானைகள் இறந்திருப்பதாகவும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பிபிசி தமிழிடம் கூறினார். இருப்பினும் இந்தத் தகவலை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

இதற்கிடையே யானை-மனித மோதல் தொடர்பாக தமிழக வனத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்கள் பெறப்பட்டன.

அவற்றின்படி, 2011–2022 இடையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 109 யானைகள், மனித நடவடிக்கைகளால் பலியாகியிருக்கின்றன.

இந்தியாவிலேயே அதிகளவில் யானை-மனித மோதல் நடக்கும் கோவை
படக்குறிப்பு, ஆண்டுதோறும் யானை-மனித மோதல்களால், சராசரியாக 500 மனிதர்கள், 100 யானைகள் இறக்கின்றன என்கிறது புள்ளிவிவரம்

மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டத் தரவுகளின்படி, இந்தியாவில் இப்போது 29 ஆயிரம் ஆசிய யானைகள் இருக்கின்றன, அவற்றில் 10 சதவீதம், அதாவது 2,961 யானைகள், தமிழ்நாட்டில் உள்ளன.

நாடு முழுவதும் 2010-2020க்கு இடையிலான 11 ஆண்டுகளில், இயற்கையான முறையில் இல்லாமல், 1,160 யானைகள், உயிரிழந்துள்ளன.

அதில் 64 சதவீதம் யானைகள், மின்சாரம் தாக்கியும், மற்றவை ரயில் விபத்து, வேட்டை மற்றும் விஷம் வைத்தல் போன்ற காரணங்களாலும் கொல்லப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் யானை-மனித எதிர்கொள்ளல் காரணமாக, சராசரியாக 500 மனிதர்கள், 100 யானைகள் என்ற அளவில் இழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் மற்றும் சொத்துகள் யானைகளால் சேதமடைகின்றன என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.

அமெரிக்க மாணவர்களின் ஆய்வு என்ன சொல்கிறது?

இந்தியாவில் யானை-மனித மோதலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி கோவை என்று அமெரிக்காவின் ஹார்வர்டு மற்றும் இண்டியானா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வு கூறுகிறது. கோஹன் எக்ரி, ஸின்ரான் ஹன், ஜிலின் மா மற்றும் சுனந்தன் சக்ரபார்த்தி ஆகிய மாணவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்தியா முழுவதும் 2006இல் இருந்து 2018 வரையிலான 12 ஆண்டுகளில் நடந்த காட்டுயிர் - மனித மோதல்கள் தொடர்பாக, செய்தித்தாள்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வந்த செய்திகளை, தானியங்கியாகச் சேகரிக்கும் ஒரு மென்பொருளை பிரத்யேகமாகப் பயன்படுத்தி, இதற்கான தரவுகளை இவர்கள் திரட்டினர். தரவுகளை இறுதிப்படுத்தி 7 லட்சத்து 58 ஆயிரம் தகவல்களைச் சேகரித்தனர்.

கடந்த 2021 ஜூலையில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆய்வு முடிவில், இந்தியாவிலேயே காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் அதிகம் நடக்கும் பகுதியாக கோவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்குப் பின்பே, கர்நாடகா, அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவிலேயே அதிகளவில் யானை-மனித மோதல் நடக்கும் கோவை
படக்குறிப்பு, யானை-மனித மோதல் என்று கணக்கிட்டால், கோவை வனக்கோட்டம்தான் முதலிடம் பிடிக்கும் என்கிறார், முனைவர் பட்டம் பெற்றுள்ள இயற்கை விவசாயி ஜெயப்பிரகாஷ்.

கோவை வனக்கோட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி 300 கி.மீ., துாரத்துக்கு அமைந்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார், யானை வழித்தடங்கள் குறித்த ஆய்வில் தொழில்நுட்பப் பணிகளை (GIS MAPPING) மேற்கொண்டு வரும் மோகன்.

இயற்கையாகவே, கோவையில் மலையும், மனிதர் வாழும் பகுதிகளும் அருகருகே அமைந்திருப்பது, இந்த மோதலுக்குப் பிரதான காரணம் என்கிறார், ஊட்டி அரசு கலைக் கல்லுாரியின் காட்டுயியிர் உயிரியல் துறைத்தலைவர் ராமகிருஷ்ணன்.

யானை-மனித மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், ஆசிய யானைகள் நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 101 உறுப்பினர்களில் ஒருவர்.

‘அபரிமித வளர்ச்சியால் வந்த ஆபத்து’

‘‘யானைகள் ஆண்டாண்டு காலமாக நடந்து சென்ற பாதைகள், முன்பு மேய்ச்சல் நிலங்களாக இருந்தன. இந்த நிலங்களில், இப்போது ஆழ்துளைக் கிணறு அமைத்து, கரும்பு, வாழை என்று விவசாயம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

மீதமுள்ள பட்டா நிலங்களில், கல்வி நிறுவனம், ஆசிரமம் மற்றும் குடியிருப்புகள் எனக் கட்டுமானங்கள் அதிகரித்துவிட்டன. இதனால், யானையின் பாதை மிகவும் குறுகலாகிவிட்டது” என்கிறார், ராமகிருஷ்ணன்.

இந்தியாவிலேயே அதிகளவில் யானை-மனித மோதல் நடக்கும் கோவை
படக்குறிப்பு, "யானைகள் ஆண்டாண்டு காலமாக நடந்து சென்ற பாதைகள், முன்பு மேய்ச்சல் நிலங்களாக" இருந்ததாகக் கூறுகிறார், ராமகிருஷ்ணன்.

சில இடங்களில் யானைகள் செல்லவே முடியாத நிலை இருப்பதால் அவை ஊர்களுக்குள் ஊடுருவி வருவதாகக் கூறும் ராமகிருஷ்ணன், 2000க்கு பிந்தைய கட்டுப்பாடற்ற வளர்ச்சி யானைகளின் பாதைகளையும், மேய்ச்சல் நிலங்களையும் குறைத்து பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டது என்கிறார்.

ஓசை என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சூழலியலாளருமான காளிதாசன், இதன் பின்னணியில் இருக்கும் கோவை வனக்கோட்டத்தில் பகுதிவாரியாக உள்ள பிரச்னைகளை விவரித்தார்.

‘‘கோவை வனக்கோட்டத்தில் ஏழு வனச்சரகங்கள் உள்ளன. அவற்றில் சிறுமுகை வனச்சரகம்தான், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வரும் யானைகள் முதலில் நுழையும் பகுதி.

அங்குள்ள பவானிசாகர் அணையில், மழைக்காலத்தில் தண்ணீர் நிற்கும். வறட்சிக்காலத்தில் அணை நீர் வற்றி, நீர் தேங்கும் பகுதிகளில் புல்வெளிகள் பரவியிருக்கும். அவற்றை உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் யானைகள் அங்கே முகாமிடும்” என்றார்.

 சூழலியலாளர் ‘ஓசை’ காளிதாசன்
படக்குறிப்பு, அனுமதியற்ற இடங்களில் விவசாயம் நடப்பதால் யானைகள் துரத்தப்படுவதாகக் கூறுகிறார் 'ஓசை' காளிதாசன்.

ஆனால், சமீபத்திய ஆண்டுகளாக, அந்த இடங்களில் அனுமதியின்றி விவசாயம் நடப்பதால், யானைகள் துரத்தப்படுவதாகக் கூறிய காளிதாசன், அதனால் அவை அங்கு சுற்றியுள்ள வாழைத்தோட்டங்களில் புகுவது வழக்கமாகி வருவதாகத் தெரிவித்தார்.

“சமீபத்தில் ஊட்டிக்கு ஆண்டு முழுவதும் பல லட்சம் வாகனங்கள் செல்கின்றன. காரமடை சரகத்திலுள்ள வனத்துறை சாலையில், தனியார் வாகனங்களை அனுமதிப்பது அதிகரித்துள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

யானை வழித்தடங்களும் நீதிமன்ற உத்தரவும்

யானை வழித்தடங்களில் ஏற்படும் தடைகளே, யானை-மனித மோதலுக்கு முக்கியக் காரணம் என்பதால், அவற்றை மீட்க வேண்டுமென்று சட்டப் போராட்டமும் நடக்கிறது.

சென்னையைச் சேர்ந்த சூழலியலாளர் முரளிதரன், கோவை தடாகம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் "சட்டவிரோதமாக இயங்கி வரும் செங்கல் சூளைகளாலும், அவற்றுக்காக நடந்த அதீத மண் கொள்ளையாலும் யானை வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மூடி, யானை வழித்தடங்களை மீட்க வேண்டும்" என்று 2019ஆம் ஆண்டில் (W.P.27356/2019) மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள யானை வழித்தடங்களையும் மீட்க வேண்டுமென்று மற்றொருவர் அந்த வழக்கில் இணைந்தார். இந்த மனுக்களின் மீதான விசாரணையில், தமிழ்நாட்டில் உள்ள யானை வழித்தடங்களை அடையாளம் காணுமாறு தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சூழலியலாளர் முரளீதரன்
படக்குறிப்பு, அதீத மண் கொள்ளையாலும் யானை வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் முரளிதரன்

‘‘என்னுடைய மனு மீதான உத்தரவின்படியே, அங்கிருந்த செங்கல் சூளைகள் அனைத்தும் மூடப்பட்டன. வழித்தடங்களைக் கணக்கெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, அரசு அதற்காக அமைத்த கமிட்டி கொடுத்துள்ள அறிக்கையில் 42 வழித்தடங்கள் உள்ளன. இந்த 42 வழித்தடங்களுக்கு எதிர்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது” என்றார் முரளிதரன்.

இந்தியா முழுவதும் யானை வழித்தடங்களை ஆய்வு செய்ய வேண்டுமென, உச்சநீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

யானைகள் பயணிக்க மலை அடிவாரங்களில் இருக்கும் அவற்றின் வலசைப் பாதைகளைக் காக்க வேண்டியது அவசியம் எனக் கூறுகிறார் முரளிதரன்.

"முன்பு இங்கிருந்து நேபாளம் வரை யானைகள் கடந்து செல்லக் காடுகளின் ஊடே தொடர்ச்சியாக வழித்தடங்கள் இருந்தன."

ஆனால், "இப்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்குள் யானைகளின் வாழ்விடம் சுருங்கிவிட்டதாகவும் அதையும் துண்டித்தால் யானைகளின் வலசை பாதிக்கப்படும்” என்றும் கூறினார் முரளிதரன்.

தமிழ்நாடு அரசின் யானை வழித்தடம் பற்றிய வரைவு அறிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், "அதன்படி, பாரதியார் பல்கலைக்கழகம், வனக் கல்லுாரி, சி.ஆர்.பி.எஃப்.,மையம், தனியார் கல்வி நிறுவனங்கள் என நிறைய தடைகள் யானை வழித்தடங்களில் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக" குறிப்பிட்டார்.

யானை - மனித மோதல்

பட மூலாதாரம், TNForestDepartment

தமிழ்நாடு அரசின் வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள 42 வழித்தடங்களில் நான்கு, கோவை வனக்கோட்டத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஓசை காளிதாசன், யானை-மனித எதிர்கொள்ளலைத் தடுக்க சில விஷயங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். அவை,

  • பவானிசாகர் அணைப்பகுதியில் சட்டவிரோத விவசாயம் செய்வதைத் தடுக்க வேண்டும்
  • கல்லாறு பகுதியில் ஊட்டி சாலையில் மேம்பாலம் கட்டி, மேலே வாகனங்களை அனுமதித்து, கீழே யானைகளுக்குப் பாதை ஏற்படுத்த வேண்டும்
  • ஆனைகட்டியில் அதிகரிக்கும் ரிசார்ட்டுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்
  • தனியாருக்கு முன் மாதிரியாக அரசின் வழித்தடத்திலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம், வனக்கல்லுாரி ஆகியவற்றில் யானைக்குக் கூடுதல் பாதைகளை ஒதுக்க வேண்டும். மேலும் "இந்த நிறுவனங்களை வேறு எங்கும் அமைக்கலாம். ஆனால் யானைக்கு வேறு எங்கும் பாதையை ஏற்படுத்த முடியாது,’’ என்றார் காளிதாசன்.

‘அந்நிய களைச்செடிகள் பரவியதும் ஒரு காரணம்’

இந்தப் பிரச்னைகளோடு சேர்த்து, மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவியிருக்கும் ஆக்கிரமிப்புத் தாவரங்களும் ஒரு பிரச்னையாக உருவெடுத்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் காட்டைவிட்டு வெளியே வருவதற்கு, அந்நிய களைச்செடிகள் அதிகம் பரவியதும் ஒரு காரணம் என்கிறார், யானை உடற்கூறாய்வுகளில் பங்கேற்கும் சூழலியலாளர் செந்தில்குமார்.

‘‘கோவை வனக்கோட்டத்தின் பெரும்பாலான மலைப்பகுதிகளுக்கு நான் நடந்தே சென்றிருக்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில் அங்கிருந்த புல்வெளிகள் அனைத்திலும் ‘லன்டானா காமிரா’ என்ற அந்நிய களைச்செடிகள் பரவியுள்ளன. இதனால் யானைகளின் மேய்ச்சல் பரப்பு குறைந்துள்ளது.

இதுவும் விவசாய நிலங்களில் யானைகள் ஊடுருவ முக்கியக் காரணம். அவற்றை முற்றிலுமாக அழிக்க, அரசு சிறப்பு நிதி ஒதுக்கி 5 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக முயற்சி எடுக்க வேண்டும்’’ என்று செந்தில்குமார் வலியுறுத்துகிறார்.

சூழலியலாளர் செந்தில்குமார்
படக்குறிப்பு, காடுகளின் தரம் குறைந்ததும் யானைகள் வெளியில் வரக் காரணம் என்கிறார், சூழலியலாளர் செந்தில்குமார்.

களப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று வலியுறுத்தும் ஓசை காளிதாசன், ‘‘தமிழக வனத்துறையில் 40 சதவீத பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஐந்தாயிரம் ஏக்கர் பரப்புள்ள காட்டை இருவர் கவனிக்க வேண்டியுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள வேட்டைத் தடுப்புக் காவலர்களை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி நிரந்தரப்படுத்த வேண்டும்,’’ என்கிறார்.

ஆனால், கோவை வனக்கோட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இருப்பதால், களப்பணியாளர்களுக்குக் குறைவில்லை என்கிறார், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்.

அகழி வெட்டுதல், தொங்கும் சோலார் வேலி அமைத்தல், செயற்கை நுண்ணறிவு கேமராக்களால் ரயில்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை ஏற்கெனவே மேற்கொண்டு வருவதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அரசு என்ன செய்யப் போகிறது?

யானை வழித்தடங்களை தமிழ்நாடு அரசு இறுதி செய்தாலும், அதிலுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, வனமாக அறிவிக்கப்படுமா, காடுகளின் தரம் உயர்த்தப்படுமா, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்ற பல கேள்விகளை, மாநில வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.

‘‘யானை வழித்தடங்களை இறுதி செய்வதில் தடங்கல் ஏதுமில்லை. கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்படும். அந்த வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்து வருகிறோம். மேகமலையில், சில இடங்களைக் கையகப்படுத்தி, வனமாக மாற்றியுள்ளோம்.

யானை-மனித மோதல் எல்லா மாநிலங்களிலும் இருக்கும் பிரச்னைதான். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான நடவடிக்கைளை மேற்கொள்ள முடியாது. அகழி, தொங்கும் சோலார் வேலிகள், ரயில் தடங்களுக்கு அருகில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் என பகுதிக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார் அமைச்சர் மதிவேந்தன்.

யானை வழித்தடத்தில் உள்ள அரசு கட்டுமானங்கள் மற்றும் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி வனத்துறையிடம் ஒப்படைத்து யானை வழித்தடமாக மாற்ற வாய்ப்புள்ளதா என்று பிபிசி தமிழ் வினவியபோது, "எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான நடவடிக்கையை எடுக்க முடியாது. ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கையாண்டு வெவ்வேறு வகையான தீர்வுகளைக் காண முடியும்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் மதிவேந்தன்
படக்குறிப்பு, யானை வழித்தடங்களை இறுதி செய்வதில் தடங்கல் ஏதுமில்லை என்கிறார், அமைச்சர் மதிவேந்தன்

மேலும் அவர் கூறுகையில், ‘‘வனப்பகுதிக்குள் நீர்நிலைகளை உருவாக்குதல், மெய்ப்புலம் என்ற திட்டத்தில் மேய்ச்சல் நிலங்களை அதிகப்படுத்துதல், தடம் என்ற திட்டத்தின் மூலம் யானை-மனித மோதலைத் தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பத்து ஆண்டுகளில் 23 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக வனப்பரப்பை அதிகரிக்க, 11 ஆயிரத்து 500 சதுர கி.மீ., பரப்பளவில் 260 கோடி நாட்டு மரங்களை நடவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 2,300 பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

இவற்றோடு சேர்த்து, யானைகளும் மனிதர்களும் இயைந்து வாழ வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் ஆசிய யானைகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் ராமகிஷ்ணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)