ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு பாகிஸ்தானை நெருங்குகிறதா வங்கதேசம்?

வங்கதேசம் - பாகிஸ்தான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆர்ச்சி அடெண்ட்ரில்லா
    • பதவி, பிபிசி வங்கதேசம்

1971ஆம் ஆண்டு வரலாற்றை புரட்டி பார்த்தால் வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் சிக்கல் நிறைந்திருப்பதை பிரதிபலிக்கும்.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆட்சிக் காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது. குறிப்பாக போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் பிரச்னை வெடித்தது.

தற்போது ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு சூழல் மாறி வருகிறது. வங்கதேசத்தில் நடக்கும் பல மாற்றங்களைப் போலவே, பாகிஸ்தான் உடனான உறவு பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், வங்கதேசத்தில் உள்ள ஒரு அமைப்பு செப்டம்பர் 11-ஆம் தேதியன்று பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் நினைவு நாளைக் கொண்டாடியுள்ளது.

எனவே பாகிஸ்தான் தொடர்பான வங்கதேசத்தின் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் வருமா? வங்கதேசத்தின் மீது பாகிஸ்தானுக்கு ஆர்வம் உள்ளதா? பாகிஸ்தான் உடனான உறவால் வங்கதேசம் எப்படி பயனடையும்?

பேராசிரியர் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்ட போது மற்ற நாடுகளை போலவே பாகிஸ்தானும் வங்கதேசத்திற்கு வாழ்த்து தெரிவித்தது. வங்கதேசத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

வங்கதேசத்தில் நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையர் தற்போதைய அரசாங்கத்தின் ஆலோசகர்களை சந்தித்தார். இது தவிர, கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவர்களையும் அவர் சந்தித்தார்.

வங்கதேசம் - பாகிஸ்தான், ஷேக் ஹசீனா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஷாபாஸ் ஷெரீப் வெளிப்படுத்திய விருப்பம்

வங்கதேசம் - பாகிஸ்தான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், RAHAT DAR/EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு, ஷாபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ் உடனான தனது பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த விருப்பம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் சோஹ்ரா பலோச் பிபிசி பங்களாவிடம், வங்கதேசத்தைப் பற்றிய நேர்மறையான அணுகுமுறைக்கு பாகிஸ்தான் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.

"சில தருணங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும், அந்த பிரச்னைகளை தீர்க்கவும், உறவுகளை மேம்படுத்தவும் விருப்பம் இருந்தால், பரஸ்பர நலன்களை கருத்தில் கொண்டு முன்னேறுவதற்கான அனைத்து இலக்குகளையும் அடைய முடியும்" என்றார்.

பிரபல வங்கதேச எழுத்தாளர் ஃபஹாம் அப்துல் சலாம், கடந்த 15 ஆண்டுகளில், வங்கதேச அரசு பாகிஸ்தான் உடனான உறவை இந்தியாவின் பார்வையில் இருந்து பார்த்ததாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் 1971-ஆம் ஆண்டின் வரலாற்றைச் சுற்றியே இருந்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

`பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்’

வங்கதேசம் - பாகிஸ்தான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் முஜிபுர் ரஹ்மான்

வங்கதேசத்தின் `1971 படுகொலை’ சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவது எப்போதும் ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இதுகுறித்து பலமுறை பேசியுள்ளார், ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் ஜோஹ்ரா பலோச் (Mumtaz Zahra Baloch) கூறுகையில், "1971ம் ஆண்டின் வேதனையான வரலாற்றின் தாக்கம் இரு நாடுகளிலும் உள்ளது. ஆனால் இந்த பிரச்னை இரு நாட்டு தலைவர்களால் தீர்க்கப்பட்டு 1974ல் இது தொடர்பாக ஒப்பந்தமும் எட்டப்பட்டது." என்றார்.

1971 போருக்குப் பிறகு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கான், அதிபர் பதவியில் இருந்து விலக நேரிட்டது, அதன்பின்னர் சுல்பிகர் அலி பூட்டோ ஆட்சிக்கு வந்த போதிலும், இரு நாடுகளுக்கு இடையேயான வெறுப்புணர்வை நிறுத்த முடியவில்லை.

சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்குப் பிறகு, 1974 இல், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச தலைவர்கள் மாறி மாறி இருநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டனர்.

1974-ஆம் ஆண்டு பிப்ரவரி23-ஆம் தேதியன்று, ஷேக் முஜிபுர் ரஹ்மானை அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோ லாகூரில் வரவேற்றார். பாகிஸ்தானில் வங்கதேசத்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, வங்கதேசத்தை பாகிஸ்தான் முறையாக அங்கீகரித்தது.

பின்னர் அதே ஆண்டு ஜூன் மாதம், சுல்பிகர் அலி பூட்டோவும் வங்கதேசத்துக்கு விஜயம் செய்தார். இந்த நிகழ்ச்சியில், சுல்பிகர் அலி பூட்டோ, "பாகிஸ்தான் மக்கள் உங்கள் முடிவை மதிக்கிறார்கள், வங்கதேசத்தின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்கிறது" என்று கூறினார்.

ஏப்ரல் 1974-இல் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி சுல்பிகர் அலி பூட்டோ வங்கதேச மக்களிடம் பாகிஸ்தானை மன்னித்து, கடந்த காலத்தை நினைவில் கொள்ளாமல் முன்னேறுமாறு கேட்டுக் கொண்டார்.

ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த காலத்தை மறந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கினார் என்ற குறிப்பு 'நியூயார்க் டைம்ஸ்' காப்பக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் இரு தலைவர்களின் தொலைநோக்கு பார்வை இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கான வழியைக் காட்டியது என்று மும்தாஸ் ஜோஹ்ரா பலோச் கூறினார்.

2002 இல், பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் டாக்காவிற்குச் சென்றபோது, 1971 சோக நிகழ்வுகளுக்கு 'வருத்தம்' தெரிவித்தார். ஆனால் வங்கதேசத்தில் இது முறையான மன்னிப்பாகக் கருதப்படவில்லை.

வங்கதேசம் - பாகிஸ்தான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜுல்பிகர் அலி பூட்டோ மற்றும் ஷேக் முஜிபுர் ரஹ்மான்

1971 போரில் உயிரிழந்த அறிஞர் முனீர் சௌத்ரியின் மகன் ஆசிப் முனீர், இந்த சமயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்து, பாகிஸ்தானை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது அவசியம் இல்லை என்று கருதுகிறார்.

1971 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் மக்களிடையே பல்வேறு கருத்துகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை என்றும், ஆனால் அதற்காக அவர்கள் வருத்தப்படவில்லை என்று அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.

ஆசிப் முனீர் கூறுகையில், 1970களில் பாகிஸ்தான் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வங்கதேசத்துக்காக குரல் எழுப்ப முயன்றதாக தெரிவித்தார்.

ஃபஹாம் அப்துல் சலாம் 1998 இல் பாகிஸ்தானுக்குச் சென்ற அனுபவத்தை விவரித்தார். தான் வங்கதேசத்தில் இருந்து வந்ததாக ஒரு டாக்ஸி டிரைவரிடம் கூறியபோது, ​​டிரைவர் அவரிடம் மன்னிப்பு கேட்டதாக அவர் கூறினார்.

"அவர் என் கையைப் பிடித்து 1971-இல் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார். இது என்னை நெகிழ வைத்தது” என்றார் அவர்.

பாகிஸ்தானில் உள்ள அனைவருக்கும் வங்கதேசத்தை பற்றி ஒரே மாதிரியான அணுகுமுறை இல்லை என்பதை ஃபஹாம் அப்துல் சலாம் ஒப்புக்கொள்கிறார், ஆனால் பாகிஸ்தானில் நிச்சயமாக குற்ற உணர்வு இருப்பதாக அவர் நம்புகிறார்.

அவர் கூறுகையில், “1971 அல்லது 1972 இல் அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளை இந்த எல்லா விஷயங்களுக்கும் காரணமாக சொல்ல முடியுமா? உங்கள் தாத்தா செய்த குற்றத்திற்கு நீங்கள் பொறுப்பாவீர்களா?" என்று வினவுகிறார்.

உறவுகளை மேம்படுத்துவதன் நன்மைகள் என்ன?

வங்கதேசம் - பாகிஸ்தான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்துடனான பாகிஸ்தானின் உறவுகள் குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது

பாகிஸ்தான் வர்த்தக மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தின் படி, பாகிஸ்தானியர்கள் வங்கதேசத்தில் தோல், ஜவுளி மற்றும் ஆடை துறைகளில் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளனர்.

வங்கதேசம் பருத்தி, ஜவுளி, ரசாயனங்கள், கனிமங்கள், மின்சார பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவற்றை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதேபோன்று பாகிஸ்தான் சணல் மற்றும் அதன் தயாரிப்புகள், ஹைட்ரஜன் பெராக்சைடு, செயற்கை இழைகள், ஜவுளி மற்றும் மருத்துவப் பொருட்களை வங்காளதேசத்தில் இருந்து இறக்குமதி செய்கிறது.

பாகிஸ்தான் அரசாங்க தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில், வங்கதேசம் பாகிஸ்தானுக்கு 603 மில்லியன் டாலர்களுக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதே நேரத்தில் 655 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில், வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து 83 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்திருந்தது.

வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதை பெரிதும் நம்பியிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. இது மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை. ஆனால் இது பெரிய பிரச்னை இல்லை என்கிறார் தௌஹீத் ஹுசைன்.

வங்கதேசம் - பாகிஸ்தான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானில் 20 லட்சம் வங்கதேச குடிமக்கள் வாழ்கின்றனர்

அமெரிக்கா அல்லது ஐரோப்பாவுக்கு இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதி இருக்கிறது. அதே வேளையில் சீனாவில் இருந்து இந்தியா அதிகமாக இறக்குமதி செய்கிறது. பொருளாதாரம் மற்றும் வணிகத் துறையில் இவை சாதாரண விஷயங்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

அவர் பேசுகையில், “பாகிஸ்தானிடம் இருந்து அதிகளவில் பருத்தி வாங்குவது அவர்களுக்கு லாபம். நாம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் துணிகளுக்கு பருத்தி தேவை. அதனால் தான் அதை பாகிஸ்தானிடம் இருந்து பெறுகிறோம். இந்த விஷயங்கள் உண்மையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன." என்கிறார்.

பாகிஸ்தானில் வங்கதேச வணிகத்திற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஃபஹாம் அப்துல் சலாம் நம்புகிறார். பாகிஸ்தானில் சில விற்பனை நிலையங்களைக் கொண்ட வங்கதேச பிராண்டான 'யெல்லோ' (Yellow) இதற்கு உதாரணம்.

"பாகிஸ்தானில் 20 லட்சத்துக்கும் அதிகமான வங்கதேச மக்கள் வாழ்கின்றனர், அந்த சந்தையையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இயல்பு நிலைக்கு வந்தால், வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்படும் என்பது ஃபஹாம் அப்துல் சலாம் கருத்து.

வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் நிதி மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகரும் சமீபத்தில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேசினார்.

வர்த்தக அம்சத்திற்கு பாகிஸ்தான் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் மும்தாஸ் ஜோஹ்ரா பலோச் கூறியுள்ளார்.

வர்த்தகம், விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் இரு நாட்டு மக்களுக்கும் இடையே ஏற்கனவே உறவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

'சார்க்' மற்றும் ஓஐசி (SAARC and OIC) போன்ற சர்வதேச அமைப்புகளின் உறுப்பினர்களாக இரு நாடுகளும் இணைந்து முக்கியப் பங்காற்ற முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தவிர, இரு நாட்டு மக்களையும் நெருக்கமாகக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது என்றும் பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறினர்.

ஆசிப் முனீரின் கருத்துப்படி, இரு நாடுகளுக்கும் இடையே சமூக மற்றும் கலாசார ஒற்றுமைகள் உள்ளன. பாகிஸ்தானின் இலக்கியம், நாடகம், திரைப்படங்கள் மற்றும் ஆடைகள் வங்கதேசத்தில் அதிகளவில் விரும்பப்படுகின்றன.

ஆனால், தனது பாகிஸ்தான் பயணத்தின் போது, ​​அங்கு வசிக்கும் ஏழை வங்கதேச மக்களை பார்த்த பிறகு, பாகிஸ்தானியர்கள் அவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்ததாக ஆசிப் முனீர் கூறினார்.

"எனவே, இந்த சிந்தனையை மாற்ற வங்கதேசத்தின் தாராளவாத அம்சங்களை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது."

இரு நாட்டு மக்களுக்கும், குறிப்பாக இளம் தலைமுறையினருக்கும் இடையே நட்பு உள்ளது என்றும், இந்த நட்பு பரஸ்பர உறவுகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் மும்தாஸ் ஜோஹ்ரா பலோச் கூறினார்.

இந்தியாவை விட்டு பாகிஸ்தானை நெருங்குகிறதா வங்கதேசம்?

வங்கதேசத்தின் குடிமக்களுக்கான விசா கட்டணத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இது நேரடி விமானங்களைத் தொடங்குவதில் அதன் ஆர்வத்தைக் காட்டுகிறது.

பாகிஸ்தானிய மாணவர்கள் கல்விக்காக வங்கதேசத்தின் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கிறார்கள். அதேபோன்று பாகிஸ்தானிலும் வங்கதேச குடிமக்கள் பணிக்காக தங்கும் இடங்கள் உள்ளன.

ஆனால் வங்கதேசம் மூன்று பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்டிருப்பதால், வங்கதேச மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் அல்லது சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அடிக்கடி பயணிக்கின்றனர்.

பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு இந்தியாவுக்குச் செல்வது கடினம் என்று நினைக்கும் எந்த வங்கதேசக் குடிமகனும் பாகிஸ்தானுக்குச் செல்வதை தவிர்ப்பார்கள் என்று தௌஹீத் ஹுசைன் கூறுகிறார்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் பதற்றம் நிறைந்தவை.

வர்த்தகம், பயணம், வரலாறு என பாகிஸ்தான் உடனான உறவுகளை மேம்படுத்த பல காரணங்கள் இருந்தாலும், இந்த சூழலில் வங்கதேசம் இந்தியாவை முற்றிலும் புறக்கணிக்க முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)