கோவை விமான நிலைய விரிவாக்கம் தாமதமாவது ஏன்? தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா?

பட மூலாதாரம், GPM-A&P
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், மாநிலத்தின் பொருளாதார பங்களிப்பிலும் கோவை, திருப்பூர் நகரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட தொழில் மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையம் கோவை விமான நிலையம் தான்.
இங்கே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் மட்டும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 23 சதவீதம் குறைவு என்கிறது புள்ளி விவரம். இதற்கு வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை குறைந்ததே இதற்குக் காரணம் என்கிறது விமான போக்குவரத்து ஆணையரகத்தின் புள்ளிவிவரம்.
வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரிக்க ஏதுவாக, விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. 2010-ஆம் ஆண்டே நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்?

வெளிநாட்டுப் பயணிகள் சரிவு, உள்நாட்டுப் பயணிகள் அதிகரிப்பு
இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, 2023 ஜூலையில், கோவை விமான நிலையத்தை 18,655 வெளிநாட்டுப் பயணிகள் பயன்படுத்தியிருந்தனர்.
நடப்பாண்டில் அதே ஜூலை மாதத்தில் 14,311 வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இது சென்ற ஆண்டைவிட 23 சதவீதம் குறைவு. ஏப்ரல்–ஜூலை வரையிலான நான்கு மாதங்களைக் கணக்கிடுகையில், இந்த எண்ணிக்கை 74, 251இல் இருந்து 68,714 ஆகக் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, அதே ஜூலை மாதத்தில், சென்ற ஆண்டைவிட, இந்த ஆண்டில் 8.8 % அதிகரித்துள்ளது. நான்கு மாதங்களைக் கணக்கிட்டால் பயணித்த நபர்களின் எண்ணிக்கை 9,38,208-இல் இருந்து 9,71,240-ஆக அதிகரித்துள்ளது.
சரக்குகளைக் கையாளுவதில், இதே நான்கு மாதங்களில், 2,198 மெட்ரிக் டன்னிலிருந்து 3,675 மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது. அதாவது 67% அதிகரித்திருக்கிறது.
வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன?
குறிப்பிட்ட காலகட்டத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்ததே இதற்குக் காரணம் என்பதை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள விமான சேவைகளின் எண்ணிக்கை உறுதிப்படுத்துகிறது.
கடந்த 2023 ஜூலையில் கோவையில் இருந்து 119 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு ஜூலையில் அந்த எண்ணிக்கை 100 ஆகக் குறைந்துவிட்டது. அதே நேரத்தில், உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை 5,568-இல் இருந்து 11.5% அதிகரித்து 6,208-ஐ எட்டியுள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்தை துரிதப்படுத்த கோரிக்கை

பட மூலாதாரம், Special arrangement
கோவையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளின் தேவை அதிகம் இருப்பதாகக் கூறுகிறார், நகரின் பல்வேறு தொழில் அமைப்புகளை ஒருங்கிணைத்துத் துவக்கப்பட்டுள்ள ‘கோயம்புத்துார் நெக்ஸ்ட்’ அமைப்பைச் சேர்ந்த சதீஷ்.
இந்த அமைப்பின் சார்பில், சென்ற ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று, ‘வளர்ச்சியின் சிறகுகள்’ என்ற பெயரில் விமானப் போக்குவரத்து தொடர்பான ஒரு மாநாடு நடத்தப்பட்டது.
அதில், இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான ஏர் ஆசியா, ஏர் அரேபியா, ஃபிளை துபாய், ஓமன் ஏர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்தை விரைவாக முடிக்க வேண்டும், இரு தரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் (Bilateral Air Service Agreement) உள்ள விமான நிலையங்களின் பட்டியலில் கோவை விமான நிலையத்தையும் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையை முன்வைத்ததாக சதீஷ் கூறுகிறார்.
கோவை விமான நிலைய விரிவாக்கம் - என்ன நடந்தது?
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான முதல் புள்ளி கடந்த 2010ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது வைக்கப்பட்டது.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின்போது அன்றைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் இருவரையும் தொழில் அமைப்பினர் பலரும் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக 612.97 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த, தமிழக அரசு சார்பில், கடந்த 2010ஆம் ஆண்டில் அரசாணை (எண்: 259 தேதி: 04–10–2010) வெளியிடப்பட்டது.
ஆனாலும், 2017ஆம் ஆண்டில்தான் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலமெடுப்புக்கு இறுதி அரசாணை (எண்: 22 தேதி: 13–04–2017) வெளியிடப்பட்டது.
அதில், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிலம், தமிழக ஆதி திராவிடர் நலத்துறை நிலம் உள்ளிட்ட 627.89 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த கூடுதல் அரசாணையை அப்போதைய அ.தி.மு.க. அரசு வெளியிட்டு, அதற்காக முதற்கட்ட நிதியையும் ஒதுக்கியது.
தமிழ்நாடு அரசு நிபந்தனை - மத்திய அரசு நிராகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்த 627.89 ஏக்கர் நிலத்துக்குள் இருக்கும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிலமான 148.39 ஏக்கர் நிலத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணியை மேற்கொள்ளலாம் என்று அத்துறையின் சார்பில் தடையின்மைச் சான்று வழங்கப்பட்டது.
அதன் பின்பு, மொத்தமுள்ள பட்டா நிலம் உள்ளிட்ட 558.87 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கப் பணியைத் துவக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, 2023 செப்டெம்பர் 11ஆம் தேதியன்று செயல்முறை ஆணை (Enter upon permission) பிறப்பித்தார்.
ஆனால் அதில் ஒரு முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதாவது, "தமிழக அரசு எடுத்துத் தரும் அந்த நிலத்தை, வேறு எந்த கம்பெனிக்கோ, ஏஜென்சிக்கோ மாற்றக்கூடாது; குத்தகைக்கு விடக்கூடாது; விமான நிலைய ஆணையமே இதை விரிவாக்கம் செய்ய வேண்டும்" என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கையின் படி (NCAP-National Civil Aviation Policy) இந்த நிபந்தனையுடன் நிலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதியது.
விரிவாக்கப் பணிகள் எப்போது துவங்கும்?
கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளின் வெவ்வேறு துறைகளிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் ஷ்யாம் மோகன் பிரபுல் தகவல்களைப் பெற்றுள்ளார்.
ஆண்டுக்கு 25 லட்சத்தில் இருந்து 30 லட்சம் பயணிகள் வரை கையாளும் கோவை விமான நிலையத்தை, ஆண்டுக்கு ஒன்றரை கோடி பயணிகளைக் கையாளும் அளவுக்கு விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதை ஆர்.டி.ஐ. தகவல்கள் தெரிவிப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய ஷ்யாம் மோகன் கூறினார்.
"ஓடுதள விரிவாக்கம், புதிய முனையம், டாக்ஸி பாதை ஆகியவற்றுடன் விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்ய 2022ஆம் ஆண்டிலேயே விமான நிலைய ஆணையம் ஓர் ஆலோசனை நிறுவனத்தை நியமித்தது.
ஜியான் பி மாத்துார் என்ற அந்தக் கட்டுமான ஆலோசனை நிறுவனம், விரிவான திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்துவிட்டது. ஆனால் நிலமெடுப்பு பிரச்னையால், திட்டம் அப்படியே இருக்கிறது. இனியாவது விரிவாக்கப் பணியை வேகமாகத் துவக்க வேண்டும்’’ என்றார்.

பட மூலாதாரம், Kumar
'பெரும் பொருளாதார செலவும் ஏற்படுகிறது'
கோவை, திருப்பூருக்குத் தேவையான விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு, மத்திய, மாநில அரசுகள் மிகமிக மெத்தனம் காட்டுவதாக கூறுகிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் துரைசாமி.
‘சிறு குறு,நடுத்தர மற்றும் பெரும் தொழில்கள் அதிகமுள்ள கோவை, திருப்பூர் , ஈரோடு, சேலம், கரூர் போன்ற மாவட்டங்களிலிருந்து தொழில் முனைவோர், மேலாளர்கள், நிபுணர்கள், என ஏராளமானோர், வெளிநாடுகளுக்குப் பயணித்த வண்ணம் உள்ளனர்.'' என்கிறார்
மேலும் அவர்,'' மருத்துவ சுற்றுலாவிற்காக ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பயணிகள் என இங்கு விமானங்களில் பயணித்து வருவோர் பல லட்சம் பேர் உள்ளனர். ஆனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது வளைகுடா நாடுகளின் வாயிலாக மீண்டும் ஒரு விமானம் மாறிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் காலவிரயம், உடல் அயர்ச்சி மட்டுமின்றி, பெரும் பொருளாதார செலவும் ஏற்படுகிறது.’’ என்கிறார் குமார் துரைசாமி.
‘‘நாட்டின் உள்நாட்டு உற்பத்தியிலும், வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றும் ஒரு மாநிலத்தில், மிக முக்கிய தொழில் கேந்திரமாகவுள்ள கொங்கு மண்டலத்துக்கான விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு, வெளிநாட்டு விமான சேவை அதிகரித்தால் மட்டுமே, தொழில் வளர்ச்சி, அந்நியச் செலாவணி, வேலை வாய்ப்பு என எல்லாமே அதிகரிக்கும். இதற்கு தமிழக எம்.பி.,க்கள் அனைவருமே சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்’’ என்கிறார் அவர்
'வருவாய் அதிகரிக்கும்'
கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் வெளிநாடுகளில் இருந்து நேரடி விமான வசதி இருந்தால் கோவையில் மருத்துவச் சுற்றுலா, ஓட்டல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வருவாய் அதிகரிக்கும் என்கிறார்.
''ஒரு காலத்தில் ஜவுளித்துறையில் மட்டும் அடையாளம் பெற்ற இந்த நகரம், இப்போது உயர்கல்வி, உயர்ரக மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பம்ப் இன்டஸ்ட்ரி, ஆட்டோமொபைல் என்று பன்முகத்தன்மையுடன் வளர்ந்துள்ளது. ஆனால் அதற்கான கட்டமைப்பு, போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை'' என்கிறார்.
மேலும் அவர்,''குறிப்பாக வெளிநாட்டிலிருந்து விமான சேவை இல்லாததால், மருத்துவத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய இடத்திலிருந்து நேரடியாக வந்து, மருத்துவமனைக்குச் செல்லும் வகையில் விமான சேவை இருந்தால்தான், வெளிநாட்டிலிருந்து நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருவார்கள். அப்படி அவர்கள் வரும்போது பல்வேறு துறைகளிலும் வருவாய் அதிகரிக்கும்.’’ என்கிறார்.
'கோவைக்கான விமான நிலையம் மட்டுமில்லை'

கொங்கு மண்டலத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழில் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துத் துவக்கப்பட்டுள்ள கொங்கு குளோபல் போரம் அமைப்பின் துணைத்தலைவர் வனிதா மோகன், ‘‘இது கோவைக்கான விமான நிலையம் மட்டுமில்லை. தொழில் வளம் மிக்க கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகள், சுற்றுலா மாவட்டமான நீலகிரி, இன்னும் சொல்லப்போனால் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்துக்குமான விமான நிலையம் என்பதால், இதை மிகமிக விரைவாக மேம்படுத்த வேண்டியது அவசியம்.''என்கிறார்.
மேலும் அவர், ''இதை தனியாரிடம் ஒப்படைத்தால்தான், பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்களைப் போல, உயர்ந்த தரத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்ற அளவில் மேம்படுத்தப்படும். எக்காரணத்துக்காகவும் இந்தப் பணியை இனியும் தாமதிக்கக்கூடாது!’’ என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

பட மூலாதாரம், Special Arrangement
நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததால், முன்பு நிலத்தை ஏற்றுக்கொள்ள விமான நிலைய ஆணையம் மறுத்து வந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு அந்த நிபந்தனையைத் தளர்த்தியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
விமான நிலைய ஆணையத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு, நிலத்தை ஒப்படைப்பதற்குக் கடிதம் தரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் "விரிவாக்கப் பணியைத் துவக்குவதற்கு இனிமேல் எந்தத் தடையும் இல்லை. இன்னும் ஓரிரு வழக்குகள் உள்ளன.
விரிவாக்கப் பணிக்கான மற்ற வேலைகளைத் துவங்குவதற்கு, இன்னும் சில மாதங்கள் ஆகும். அதற்குள் இந்த நிலங்களையும் எடுத்துக் கொடுத்து விடுவோம்’’ என்றார் கோவை மாவட்ட ஆட்சியர்.
விரிவாக்கப் பணிகள் எப்போது தொடங்கும்?
விமான நிலைய விரிவாக்கப் பணி உடனடியாகத் தொடங்கக்கூடிய பணி இல்லை என்று கூறினார் கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன்.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இன்னும் ஏராளமான கட்டுமானங்களை அகற்ற வேண்டியுள்ளதாக பிபிசி தமிழிடம் பேசியபோது குறிப்பிட்ட செந்தில் வளவன், "அதைச் செய்யும் அதிகாரம் தமிழக அரசின் வருவாய்த் துறைக்கே உள்ளது. மொத்த நிலத்திலும் இதுவரை 25 சதவீதப் பகுதியில்தான் வேலி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
"நிலத்தை முழுமையாக எடுக்க நான்கு மாதங்கள் ஆகலாம். அதன் பின்னர், விரிவாக்கப் பணியைத் துவக்கினால் ஓடுதளம் நீட்டிப்பு, புதிய முனையம் அமைப்பது உள்ளிட்ட எல்லா பணிகளையும் முடிப்பதற்கு மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆகும்.
நிபந்தனையின்றி 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதற்கு தமிழக அரசு கொடுத்துள்ள கடிதத்தை உயரதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டோம். மொத்தம் 627 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய வேண்டியிருப்பதால் பணியைத் துவக்குமாறு, எங்களுக்கு அறிவுறுத்தல் வந்துவிட்டது. விரைவில் பணிகள் துவங்கும்’’ என்றும் அவர் கூறினார்.
கோவை விமான நிலையம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images
தனியாருக்குத் தரக்கூடாது என்ற நிபந்தனையை, தமிழக அரசு தளர்த்திக் கொண்டுள்ளதால், கோவை விமான நிலையத்தை விமான நிலைய ஆணையமே மேம்படுத்துமா, தனியாருக்கு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது நிர்மலா சீதாராமனிடம், பாஜகவின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியைச் சுட்டிக்காட்டி இதுகுறித்து பிபிசி தமிழ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ‘‘தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ள அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். நிதி ஒரு பிரச்னையில்லை.
ஆனால், விமான நிலைய ஆணையமே கோவை விமான நிலையத்தை மேம்படுத்துவதா அல்லது தனியாரிடம் ஒப்படைப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டியது விமானப் போக்குவரத்து அமைச்சகம்தான்" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












